Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Monday, October 29, 2012

சின்மயி விவகாரமும் சமகால இணையச் சூழலும்.....ஒரு கழுகுப் பாய்ச்சல்...!

வலைப்பதிவுகளும், சமூக இணைவு தளங்களும் வருங்காலத்தில் என்ன மாதிரியான மாற்றத்தை இந்த சமூகத்தில் விதைக்கவிருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாய் நம்மைச் சுற்றிலும் நிறைய நிகழ்வுகள் நடைபெறத்தொடங்கிவிட்டன. அரசியல் கட்சிகளின் அதிரடித் தாக்குதல்களுக்கு உள்ளாகி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் வலைப்பக்கங்களும், அவற்றின் இணையதள ஆதரவுப் பக்கங்களும் என்று களை கட்டிக் கொண்டிருக்கும் தமிழ் வலையுலகில்....

தனித்துப் பறக்கும் கழுகுகளின் பயணம் சற்றே சிரமம்தான் என்றாலும்....அந்த சிரமத்தை மிகப்பெரிய வரமாகவே நாம் கருதுகிறோம்.

சின்மயிக்களின் வசீகரக் குரல்கள் சினிமாப் பாடல்களில் நம்மை வசீகரித்தாலும் சமூகம் நோக்கிய அவர்களின் பார்வைகள் கர்ண கொடூரமானவைகள்தான். அதிகார சக்திகள் இணையத்தை ஆக்கிரமித்து சாமானியர்களின் கருத்துக் குரல்வளைகளைப் பிடித்து இரத்தம் குடிக்கும் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பினாலும், கருத்துக்களை பகிர்வதில், விவாதிப்பதில் அப்படியாய் விவாதிப்பவர் உச்ச பட்ச நாகரீகத்தை பின்பற்ற வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டில் யாதொரு மாற்றமும் இல்லை.

நமக்கு எதிரே நம்மோடு யார் வாதிடுகிறார் என்பதைப் பொறுத்து நமது கருத்துப் புலிகள் பாய வேண்டுமே அன்றி சின்மயிக்கள் போன்ற அரசியல், சமூக விசால பார்வைகள் இல்லாத பிள்ளைப் பூச்சிகளின் மீது பாய்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற எமது நிலைப்பாட்டினையும் இங்கே வலுவாக பதிய விரும்புகிறோம். வார்த்தைகளின் விளையாட்டை நஞ்சாக்க தெரிந்த சகோதரி சின்மயி கட்டி விட்ட பெருங்கதைகளை எப்படி இணைய புலனாய்வுக் காவல்துறை ஏற்றுக் கொண்டது? சின்மயி போன்ற பிரபலமல்லாதவர்களின் குரல்களுக்கு இதே போன்ற அழுத்தங்களை  கொடுக்குமா என்பது போன்ற கேள்விகள் நம்மை புருவம் உயர்த்த வைக்கின்றன.

பெண்களின் மீது கரிசனம் காட்டுகிறேன் பேர்வழி என்று ஆதாரமற்ற பாலியல் புகார்களைக் கையிலெடுத்துக் கொண்டு  சாமானியர்களைச் சிறையிலடைத்து வாழ்வை அழிக்கும் போக்குகள் அதிகாரவர்க்கத்தால் கருத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவால் என்பதையும் நாம் இங்கே உணரவேண்டும்.

சாதியைப் பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் என்ன மாதிரியான அறிவின் உயரத்தில் அவர் இருந்திருக்கிறார் என்பதை நாம் தெளிவாக உணரும் அதே நேரத்தில் ஒரு மீனவனின் உயிரை அவன் மீன் பிடித்தொழிலோடு தொடர்புபடுத்தி உணர்ச்சியும் வலிகளும் கொண்ட மனித உயிரை துச்சமென எண்ணி அவர் பகிர்ந்திருக்கும் கருத்துக்களை முக்காலமும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதோடு வன்மையாகக் கண்டிக்கவும் தக்கது என்பதை இச்சமயத்தில் பதிவு செய்து கொள்கிறோம்.

அன்பான தமிழ் உறவுகளே....

இணைய உலகத்தை ஆதிக்க, அதிகார, மதவாத, சாதீய சக்திகள் ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கின்றன. தவறான கருத்துக்கள் மிகையாக மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யப்படுகின்றன. சரிகளையும், தவறுகளையும் ஏதோ ஒரு நிலைத்தகவலையோ அல்லது புறணி பேசும் கட்டுரையையோ வைத்து நீங்கள் முடிவு செய்து விடாதீர்கள். இணையம் கடந்து பல ஊடகத்தகவல்களையும் வாசித்து, கேட்டு உண்மைச் செய்தியை அறிய உங்கள் மனசாட்சியிடம் கேள்விகள் கேட்டு பிறகு முடிவுகளை எடுங்கள்.

இங்கே புள்ளி விபரங்கள் கொடுப்பவர் எல்லாம் புத்தர்கள் அல்ல... மாறாக புள்ளி விபரங்களை வைத்துக் கொண்டு அரைக்கிலோ அரிசி கூட நம்மால் வாங்கவும் முடியாது. செய்திகளை வாங்கிக் கொள்வதிலும், வெளியிடுவதிலும் மனசாட்சியோடு நில்லுங்கள். இந்த சமூகம் வெகு விரைவான சீர்கேட்டினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை நாம் ஒன்று கூடித்தான் மாற்றியாக வேண்டும். பொதுவெளியில் அநாகரீகமாய் பேசுபவர்களையும், பொறுமை இல்லாதவர்களையும், சட்டையை மடித்துக் விட்டு நாக்கை மடித்துக் கொண்டு கண் உருட்டி கோபம் காட்டும் பொறுமை இல்லாதவர்களையும்...

உல்லாச ஓய்வுகளுக்காய் மலைத் தோட்டங்களில் மாளிகைகளைக் கட்டிக் கொண்டு அங்கே பஞ்சு மெத்தையில், குளிர் காற்றை வாங்கிக் கொண்டு நம்மை, நமது பிள்ளைகளை இருளில், புழுக்கத்தில் தொழிலற்றுப் போகவேண்டும் என்று சபித்தவர்களையும், தத்தமது குடும்பத்திற்காய் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டவர்களையும், இனத்தின் பெயர் சொல்லி பரந்து விரிந்த மானுட சமூகம் நாமென்ற எண்ணத்தை குறுக்கி, நம்மை வெறி கொள்ளச்செய்து ஒன்று கூடச் சொல்பவர்களையும்.... நமக்கு அரசியல் தலைவர்களாக, வழிகாட்டுபவர்களாக கொண்டிருக்க வேண்டிய துர்பாக்கிய சூழல் இங்கே இப்போது நிலவிக் கொண்டிருக்கிறது.

உயிர் பயத்தில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு எல்லாம் தீவிரவாத முத்திரை குத்தப்படுகிறது, தேசத்துரோகிகள் என்ற பட்டம் சுமத்தப்படுகிறது. தண்ணீர் கேட்டு பிச்சைக்காரர்களாய் நாம் கதறினாலும் கொடுக்காத கல் நெஞ்சக்காரர்களை நாம் எனது தேசத்தவன்  என்று கூறிக் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியிருக்கிறது. இங்கே வேசம் போட்டு பிச்சை எடுக்கும் பணக்காரர்கள் தங்களின் சேமிப்பு போதவில்லை என்று ஏழைகளின் அரை வயிற்றுக் கஞ்சிகளையும் திருடிக் கொள்கிறார்கள்.

சாதாரண மக்களாகிய நாம் எப்போதும் மயக்கத்தில் இருக்கிறோம்.

விழித்தெழுங்கள் எம் பிள்ளைகளே....!!!!!! கட்டற்ற நமது இணையப் பெருவெளியில் அறிவாயுதம் ஏந்திச் சீறிப்பாயுங்கள்....!!!!! அறநெறிக்கு எதிராய் அகங்காரத்தோடு கருத்துக்களை பரிமாறும் எவராயிருந்தாலும் வார்த்தைகளால் அவர்களின் அகங்காரம் என்னும் குரல்வளையில் எழுத்து வாள்களைப் பாய்ச்சுங்கள்..

முறையற்ற அரசியல் பேசும் யாவராய் இருந்தாலும்..... இது எமது இடம்.. எமது மொழி....நெறியற்ற பண்பாடற்ற கருத்துக்களை இங்கே பேசாதீர்கள்... மேலும்.....பொய்ச்செய்திகளை உங்களின் அதிகாரத்தால், ஆணவத்தால் எம்மக்களிடம் பரப்புரை செய்யாதீர்கள் என்று விழி உருட்டி.....மீசை முறுக்கி.....அளப்பரிய கருத்துக்களால் அதட்டி வெளியேறச் சொல்லுங்கள்...!

தமிழ் வலைப்பதிவுலகமும், சமூக இணைவுத்தளங்களும் எம் பிள்ளைகளுக்கான களங்கள்....!!!!! இங்கே நச்சினை விதைப்பவர்கள் எவராய் இருப்பினும் எம் பிள்ளைகளின் அறிவுச் சுடரில் எரிந்தே போவீர்கள் என்ற எச்சரிக்கையை கற்றறிந்த மூத்தோரே நீவிர் கடை பரப்பிப் போடுங்கள்...! நல்ல அரசியலுக்கு பரப்புரைகள் தேவையில்லை உம்மின் செயல்களின் விளையும் நன்மைகள் பேசும் உம்மின் பெரும்புகழ் பற்றி என்று நயமாய் எடுத்துக் கூறுங்கள்.

சரியில்லாத கருத்துக்களை பதிவு செய்யும் ஆதிக்க சக்திகளை, அதிகார மனிதர்களை அறிவால் விரட்ட இக்கணமே சூளுரை கொள்வோம்....!தெளிவான கற்றறிந்த அறிவுச் சமூகத்தின் பிரதிநிதிகள் நாங்கள் என்று அறிவார்ந்த நமது ஆக்கங்களால் வெளிப்படுத்திக் கொள்வோம்.....என்ற சூளுரையோடு சமகாலச் சூழலுக்கான எச்சரிக்கையாய் இந்தக் கட்டுரையை உங்களிடம் சமர்ப்பித்து தற்காலிகமாய் வாய் மூடிக் கொள்கிறோம்.


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



Saturday, September 01, 2012

பதிவுலகத்தின் மாயக் கனவுகள்...!

 
 
 
பதிவுலகம் எனப்படும் மாய உலகில் பல்வேறுபட்ட கருத்துக்களை கூகிள் கொடுத்த இலவச பக்கங்களில் எழுதிக்கொண்டிருப்பவர்களும் சரி, இலவச பக்கங்களில் இருந்து ஏதோ ஒரு டொமைனுக்குள் தாவிக் குதித்து எழுதிக் கொண்டிருப்பவர்களும் சரி, ஒட்டு மொத்த இந்த மாயா உலகத்திற்கு என்று மையப்புள்ளி என்று எதுவுமே கிடையாது. கொள்கையின் அடிப்படையில் ஒரு சார்பு கொண்டு நிற்கவும் முடியாது என்பதும் வேதனையான உண்மை.

அ, என்று தட்டச்சி ஆ என்று எழுதும் போதே ஏதோ ஒரு சித்தாந்தக் கொட்டிலுக்குள் அடைபட்டுக்கொள்கிறான் அப்பாவி தமிழன். கொள்கை, சித்தாந்தம் என்பதெல்லாம் சூழ்நிலைகள் ஏற்படுத்திக் கொடுக்கும் மாயங்கள் என்பதை எடுத்துச் சொல்ல முடியாத வகையில் அறிவு ஜீவிகளுக்கென்று ஒரு கொள்கையும் பார்வையும் இருந்து விடத்தான் செய்கின்றன.. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைகளை அறிவுசார் எம் தமிழ் சமூகம் வெகுண்டெழுந்து ஓரணியாய்  நின்று தீர்த்து விடமுடியாமல் பல மனோதத்துவ ரீதியான கட்டுப்பாடுகளை நம் முதுகில் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டே இருக்கிறோம்.

மனிதர்கள் உணர்வு பெற்று விடக்கூடாது என்பதில் கொள்ளையடிப்பவர்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். அறியாமை என்பதை அழித்துப் போட அனுபவமும், ஆத்மார்த்த பார்வைகளும், விசால அறிவும் தேவைப்படுகிறது. எழுத வரும் ஒருவன் சுயமாய் சிந்தித்து, பின் உண்மையை உணர்ந்து தனக்குச் சரி என்று படுவதை இங்கே பதிவுகள் என்ற பெயரில் பதிகிறான். அது சில நேரங்களில் சமூக நலத்திற்காயும், பெரும்பாலும் தன் தன்முனைப்பை கூர் தீட்டிக் கொள்ளவும் பயன்பட்டுப் போகிறது.

படைப்பாளி என்பவன் எப்போதும் தான் எப்போதும் படைக்கிறேன் என்ற மமதைகள் கொண்டவன். கட்டுக்களற்ற தன் சுதந்திரத்தை கற்பனைக் குதிரையை விரட்டி விட்டு இலக்குகளின்றி பயணப்பட்டு, விதிமுறைகளைத் தாண்டி வாழக் கற்றுக் கொண்டவன். இவனை அடக்கவும் முடியாது. யாருக்கு கீழேயும் நின்று அவர் கூறுவதை  நீ கேட்டுக் கொள் என்று கட்டுப்படுத்தவும் முடியாது. தனக்கு மேலே இருப்பவர் ஏதோ ஒரு வகையில் சிறப்புற்றிருக்கிறார் என்றால், இவன் வேறு விதத்தில் சிறப்பானவனாய் இருக்கிறான்.

எழுத்தை மையப்படுத்தி ஒரு அமைப்பை உருவாக்குவதில் இருக்கும் மனோதத்துவ ரீதியிலான சங்கடம் இதுதான். 

எழுத்தை மையப்படுத்தாமல் சமூகத்தை மையப்படுத்தி சமூக அவலங்களை மையப்படுத்தி ஒன்று கூடுதல்தான் தற்போதைய பதிவுலகத்தின் தேவை என்று கழுகு கருதுகிறது. ஒவ்வொரு மனித மூளையும் ஒரு சிறையறை. ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பாடத்தைச் சொல்லிச் சென்றிருக்கும். அந்த அனுபவ வீச்சில் கருத்துக்களில் மாறுபாடு வருவது இயல்பாய் இருகையில்.. எழுத்தை மையமாக, அதாவது எழுதுபவனின் சிந்தனையை மையமாக வைத்து, அகத்தை பேசு பொருளாய் வைத்து இணைவது என்பது சாத்தியமே இல்லதா ஒன்று என்றாலும்....நம்மைச் சுற்றி நிகழும் பிரச்சினைகளை அதன் மூலத்தை அறிந்து அது அடுத்த தலைமுறையினரைச் சென்றடையா வண்ணம்....

நேர்மையான சமூகப் பார்வைகள்  கொண்டவர்களை அடையாளம் கண்டு இணைதல் என்பது மிக எளிது. என்ன ஒன்று தத்தமது சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி பரண்மேல் போட்டு விட்டு.... பொதுநலம் என்ற ஒரு தொலைநோக்குக் கண்ணாடியை நாம் எடுத்து  அணியவேண்டும். 

வர்க்க, பேத விளையாட்டுக்களை களைந்தெறிய தோற்றுவிக்கப்பட்ட சித்தாந்தங்கள் இந்திய திருநாட்டில் மண்ணை கவ்வி இருக்கின்றன. இந்தியாவின் பிரச்சினை பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமானது  மட்டுமல்ல. அதையும் கடந்து மதம், சாதி, இனம் என்று ஏதேதோ விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சாமானியர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேச, எழுத அப்படி எழுதுபவர்களோடு கரம் கோர்க்கவே முடியாத பிரபலங்களைக் கொண்டதுதான் இந்த பதிவுலகம் என்னும் போது....

பிரபலம் என்ற வார்த்தை குப்புற விழுந்து மண்ணைக் கவ்வித் தோல்வியடைகிறது. எழுதத் தெரிந்தவன், தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டு எழுதத் தெரியாதாவர்களை ஒழுங்காய் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறான். அவன் தான் கற்றுக் கொடுத்து அரவணைத்துக் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற உண்மையை அவன் தலைக்கனம் மறக்குமிடத்தில் அவன் எழுதிய அத்தனை படைப்புகளும் தெருச்சாக்கடையில் கலந்து விடுகிறது. புதிய பதிவர்களை ஊக்குவித்து ஒரு சிறு பின்னூட்டம் போட்டு ஆதரவளிக்க முடியாத புரையோடிப் போன மனிதர்கள் எல்லாம் நாளைய இந்தியா என்றும் இளையர் முன்னேற்றம் என்றும் பேசுவதைப் பார்த்து....தெருமுனைச் சாக்கடையில் கிடக்கும் பன்றிகளும் ஏசும்.

தெரிந்தவனுக்கும் தெரியாதவனுக்கும் இருக்கும் இடைவெளியை தெரியாதவன் எப்படி நிரப்புவான்? கடந்து போனவனே கை கொடுத்து கூட்டிச் செல்லவேண்டும். தோளோடு தோள் சேர்த்து அரவணைத்து அன்பு மொழியில் வழிகாட்டவேண்டும். என்னை புகழும் பட்சத்தில் எனக்கான உறவுகளாய் தெரியும் கோடி தலைகள், என்னை யாரென்றே கண்டு கொள்ளாத போது எனக்கு கோபம் வருகிறது. அந்த கோபத்தில் அவர்களை எள்ளி நகையாடவும் தோன்றுகிறது.

ஆமாம்....எழுத்தினை மையமாக வைத்து இங்கே யாரும் ஒன்று கூட முடியாது. ஒன்று கூடத் தேவையுமில்லை. தத்தமது செருப்புகளை வாசலில் விட்டுவிட்டுதானே வீடுகளுக்குள்ளும், கோயில்களுக்குள்ளும் செல்வது போல

ஈகோ என்னும் தன்முனைப்பினை கழற்றி விட்டு விட்டு....சமூக மேம்பாடு என்னும் ஒரு நன்மைக்காக  கண்டிப்பய் நாம் ஒன்று சேரலாம்.

ஏதேதோ இலக்குகளைக் கடந்து விட்டு சுயமாய் சிந்தித்து நான்கு வரிகள் எழுதலாம் என்று வந்துவிட்டோம்....இங்கே ஊர் கூடி சமூக விழிப்புணர்வுக்காய் தேர் இழுக்கலாம்.... சரியான புரிதலோடு...

ஆனால் என்ன ஒன்று ஊர் கூடவே கூடாது, உணர்வு பெற்று விடக்கூடாது என்று பலரின் தலை கனத்த கனவுகள் அதை எப்படியேனும் தடுக்கவே முயல்கின்றன...

பார்க்கலாம்...காலத்தின் பதில்களை நாமா எழுதுகிறோம்...? பல சூழல்களின் கூட்டுதானே அதனை தீர்மானிக்கிறது.
 
 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 
 

Wednesday, August 29, 2012

ஏன் கொண்டு வரமுடியாது சமூக மாற்றத்தை...? இணைய உலகம் பற்றிய ஒரு பார்வை!

விளைவுகளையும், தாக்கங்களையும், மாற்றங்களையும் கொடுக்காத பேச்சும், எழுத்தும், கூட்டமும் புதிதாய் மனிதர்களை மட்டும் நமக்கு அறிமுகப்படுத்துவதோடு நின்று போகின்றன. கெட் டூ கெதர் என்றழைக்கப்படும் மனிதர்கள் கூடி அளவலாவும் நிகழ்வுகள் வாழ்வியலின் தேவைகள்தான் என்றாலும் அவை ஒரு போதும் வாழ்க்கைகான தீர்வுகளைச் சொல்லி விடுவதில்லை. 

கேளிக்கைகள் எல்லாம் கடும் அயற்சியான வேலைகளுக்கு நடுவேயான நாம் எடுத்துக் கொள்ளும் ஓய்வுகள். அவை புத்துயிர் அளித்து மேலும் உற்சாகமளிக்கும் என்றாலும் முழுமையான ஓய்வுகள் நம்மை சோம்பேறியாக்கி விடும் என்பதும் உண்மை. இணைய தளங்களில் கருத்துக்களைப் பதிய வரும் அத்தனை பேரும் சமூக மாற்றத்தை விரும்பிதான் வருகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது...! நம் சமூகத்திற்கு இன்னமும் என்ன வேண்டும்...? எல்லாம் சரியாய்த்தானிருக்கிறது என்று கருதும் ஒரு சாராரும், இங்கே பேசி சமூகத்தை சரி செய்ய முடியுமா என்று  கேள்வி கேட்கும் மற்றொரு சாராரும்.....

ஏதோ ஒரு தாக்கத்தில் இங்கே பரிபூரண சுதந்திரத்தோடு வரும் நமது வீட்டுப் பிள்ளைகள் எல்லோரும் கை கோர்த்து தெளிவுகளைச் செய்தியாய் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குப் புரியவைத்து தானும் விளங்கி ஒரு தெளிவான சமூகத்தை கட்டமைப்பதில் ஒரு சிறு துரும்பாய் இருக்கலாமே என்று எண்ணும் எங்களை போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

தனிமனிதர்கள் எப்போதும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற ஆசை உடையவர்கள். இது தவறல்ல இயற்கையே...! தங்களைப் பிரபலபடுத்திக் கொள்ள செய்யும் ஒவ்வொரு காரியத்தினூடேயேயும் ஒரு சமூக பிரஞை இருந்து விட்டால், கேளிக்கைகளைத் தாண்டி ஏதேனும் ஒன்றை நாம் செய்தவர்களாகி விடுகிறோம். மனித சக்தி என்பது அளப்பரியது. சரிகளை நேரே பார்க்க பரந்த மனமும், சரியான புதியவைகளை ஏற்றுக் கொள்ளும் தெளிவும் உள்ள மனிதர்கள் ஒன்று சேரும் போது அங்கே பிரமிக்கத் தகுந்த அளவில் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன.

மகாத்மா காந்தி தன்னிடம் சமூகம் பற்றிய ஒரு பார்வையைக் கொண்டிருந்தார். அதை கருத்தாய் வெளிப்படுத்திய போது அதில் கவரப்பட்ட மனிதர்கள் தங்களை அவரின் கருத்தோடு ஐக்கியப்படுத்திக் கொண்டனர். ஆர்ப்பாட்டம் இல்லாமல் கருத்துக்கள் செயலாய் மாறி ஒட்டு மொத்த இந்தியாவிலும் புரட்சித் தீ பரவியது. அந்த புரட்சியால் என்ன, என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்றெல்லாம் நாம் இங்கே விளக்க வேண்டிய அவசியம் இல்லை.....இன்றைய நமது பேச்சு, எழுத்து , கருத்து சுதந்திரத்திற்கெல்லாம் அதுவே ஆணி வேராய் இருக்கிறது.

இன்று நாம் பேசிக் கொண்டிருகும் மையப்பொருளான இணைய உலகத்தில், கீழ் தட்டு மற்றும் சாதரண நடுத்தர வர்க்கத்து மக்களின் அன்றாட பிரச்சினைகளை பற்றி அலச யாரும் முன் வருவதில்லை. இங்கே நாம் பேசிக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் எல்லாம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடக்கும் அநியாயங்களை பற்றியும், சொகுசுப் பேருந்தில் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்யும் போது  ஏற்பட்ட பிரச்சினையைப் பற்றியும், ஷாப்பிங் மால்களில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றியும்தானே..? இதை எல்லாம் விடுத்தால் உலக அரசியலையும், உள்ளூர் சொகுசு அரசியலையும் நமது வசதிக்கு ஏற்றார் போல சார்ந்து நின்று கொண்டு அதன் சரி, தவறுகளைப் பேசுவோம்....

அண்ணா நகர் வளைவினைக் கடந்து நேரே செல்கையில் இரண்டு மீட்டர் நீளத்துக்கு கணுக்கால் அளவு மழைத்தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு பள்ளமாயிருக்கிறதே..? சராசரி மனிதர்கள் அந்த சாலையில் கால் நனைத்து நடந்து போகிறார்களே...? பேருந்துகளும் ஆட்டோக்களும் பரத நாட்டியம் ஆடியபடி அந்த பள்ளத்தைக் கடந்து போகிறதே....? இதை யார் சரி செய்வக்டு...?திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ராஜாகடை ஸ்டாப்பிங்கில் இருந்து அஜாக்ஸ் பஸ் ஸாண்ட் வரை சாலையின் இரு புறமும் இடித்து போட்டு குவித்துக் கிடக்கும் கட்டிடங்களின் கழிவுகளை யார் அப்புறப்படுத்துவது என்று என்றேனும் ஒரு கூட்டம் போட்டு யோசித்து பார்க்கவோ, விவாதிக்கவோ செய்திருப்போமா? தெரு முனைகளில் மூத்திரம் கழிக்கும் மனிதர்களுக்கு அது எப்படி சரி என்று தோன்றுகிறது ....? இது தவறு என்று யார் அவர்களுக்குச் சொல்வது...?

தண்ணீர் இல்லாமல், காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் செத்துப் போய்கிடக்கிறதே? ஏன் இப்படி ஆனது..? விவாசயம் இல்லாவிட்டால் அந்த விவசாயி வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வான்... என்றெல்லாம் இணையத்தில் உள்ளவர்கள் சிந்தித்துப் பார்த்தாவது இருக்கிறோமா?

சாமனியனின் பிரச்சினைகள் அப்படியேதான் இருக்கின்றன. மேல் தட்டு வர்க்கத்தின் பிரச்சினைகள் தான் இன்று சமூகப்பிரச்சினைகளாய் பார்க்கப்பட்டு இணையத்தில் பெரும்பாலும் விவாதிக்கப்படுகின்றன. அன்றாட வாழ்க்கையில் ஒரு சாமனியனின் சங்கடங்கள் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சீமான்களின் கூடாரமாய் இது போய்க் கொண்டிருப்பது நம சமூகத்தினைப் பிடித்திருக்கும் பெரும் பிணி. திணிக்கப்பட்ட சாபக்கேடு....!

தமிழகம் முழுதும் இணையத்தில் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். எழுதுகிறார்கள், கிண்டல் செய்கிறார்கள்..., சிரிக்கிறார்கள், அரசியல் பேசுகிறார்கள், சமூக கருத்துக்களைச் செம்மையாய் சொல்லவும் செய்கிறார்கள்....பேஸ் புக்கிலும், ட்விட்டரிலும், பொங்கி எழவும்  செய்கின்றனர்...., கூடிப் பேசி மகிழ்ந்து மனித உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் செய்கின்றனர்.... கூடுகின்றனர் பின் பிரிகின்றனர்.....அவ்வளவுதான்....

மனித சக்தி என்பது வெறுமனே கூடிப் பிரிய மட்டுமல்ல, ஒன்று கூடி தவறுகளை நேர் செய்ய, கருத்துகளாய் பற்றி பரவ, புதிய கருத்துக்ளை பதிய.....விவாதிக்க, மேற்கொண்டு அறிவின் துணை கொண்டு பயணம் செய்ய... 

உறவுகள் ஆத்மார்த்தமனவை...இதில் எள் அளவும் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது, ஆனால் அதே உறவுகள் அறிவுப்பூர்வமானவையாய் மாறும் போது நாம் விரும்பும் மாற்றங்களை  சர்வ நிச்சயமாய் நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும்.  கழுகு ஆத்மார்த்தமான உறவுகளைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் வெறுமனே அந்த உறவுகளை ஏதோ ஒன்றின் சந்தைப்படுத்துதலுக்காய் பயன்படுத்திக் கொள்ளாமல், அறிவார்ந்த நிகழ்வுகளை கட்டியமைக்கும் மிகப்பெரிய சக்தியாய் பார்க்கவும் செய்கிறது.

இனியும் நாம் வெறுமனே கூடி பிரிந்து அந்த நினைவுகளை அசைபோடுவதோடு நின்று போகக் கூடாது....அதனையும் கடந்து இந்த சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற பேராசையை பெருங்கனவை.... கிடைத்திருக்கும் வாய்ப்பான இந்த சமூகத் தொடர்பு சாதனம் மூலம் உங்களிடம் சேர்ப்பிக்கிறோம். மாற்றம் என்ற வார்த்தையைத் தவிர எல்லாம் மாறும் என்றார் மார்க்ஸ்.. 

நாம் கருத்துக்களாய் இன்று பகிர்ந்து கொண்டிருக்கும் நெருப்புக்கள் பற்றும் இடத்தில் சரியாய் பற்றிக் கொள்ளத்தான் செய்யும், மீண்டும் மீண்டும் நம்மை புறக்கணிக்கும் மனிதர்களின் மனங்கள் ஒரு கட்டத்தில் கூர்மையாய் நம்மைப் பற்றி சிந்திக்கத்தான் செய்யும்.....

அந்த நாளில் ஓராயிரம் கழுகுகள் சுதந்திரவானில் கட்டுகளின்றி தங்களின் பார்வையின் கோணத்தை சரியாய் மாற்றி....சத்தியம் எதுவென்று அறிந்து கொள்ளவும் செய்யும்....!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 

Friday, August 24, 2012

என்ன செய்து கிழிக்கப் போகிறோம் நாங்கள்...? ஒரு கழுகு பார்வை...!

 
 
 
இந்த சமூகத்தினூடே வாழ்வதற்கான தகுதியாய் மீண்டும் மீண்டும் உரக்க சப்தமிட்டு தனது இருப்பை உறுதி செய்ய வேண்டிய நிலைமை பலருக்கு இருக்கிறது. கூட்டம் சேர்ந்து கொண்டு, தன்னை கடந்து செல்லும் மனிதர்களை எல்லாம் கிண்டல் செய்து சிரிக்கும் புரையோடிப்போன மனோநிலையை ராஜ குணமாக எண்ணிக் கொண்டு தத்தமது புஜபலம் காட்ட முஷ்டியை எப்போதும் முறுக்கி நிற்கிறார்கள்.

நான் யார் தெரியுமா..? என்று கோபத்தோடு மீசை முறுக்க நிறைய பணமும், நிறைய ஆட்களும், நிறைய அதிகாரமும் அவர்களுக்கு தேவையாய் இருக்கிறது. மேலே சொன்ன எதுவுமே இல்லாமல் அவர்கள் இருக்கும் போது நீங்கள் யாரென்ற கேள்வியை யாரும் கேட்டு விட்டால் என்ன பதில் சொல்வது என்று தெரியாதே, அவமானம் பிடுங்கித் தின்று விடுமே என்ற காரணத்தால் தகுதி என்ற பெயரில் தெருக்குப்பைகளை எல்லாம் எடுத்து தத்தமது தலைகளில் ஏற்றிக் கொள்கிறார்கள்.

நீங்கள் என்ன செய்து கிழித்து விட்டீர்கள் என்று யாரையும் நாம் கேட்பதற்கில்லை. ஏனென்றால் அப்படியான கேள்வியை கிழித்துக் கொண்டு நாங்கள் என்ன செய்து கிழித்தோம் என்ற மாபெரும் அரக்க கேள்வி எங்களின் சுயத்தை சுட்டெரிக்கச் செய்கிறது. கோடி பேர் எம்மை சுற்றி எமக்கானவர்கள் என்று குரல் கொடுத்த போதிலும் நாம் யாரென்ற அருகதையை நாம் தப்பாமல் எப்போதும் நினைவுக் குறிப்பில் ஏற்றிதான் வைத்திருக்கிறோம்.

கழுகு சமூகப் பிரச்சினைகளுக்காக போராடி களம் சென்றதா..? இல்லையா...? என்று இன்று ஆராய்ச்சி செய்து விமர்சிக்க காத்துக்கிடக்கும் கூட்டத்திற்கும் கழுகிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தெரியாத விடயங்களை புதிதாக சொல்லும் போது மூளை அதை ஏற்றுக் கொள்வதில்லை. மனம் புதிய விசயங்களை பார்த்து எப்போதும் பயம் கொள்கிறது. கெட்டது என்றாலும் பழக்கப்பட்ட விசயங்களையே மீண்டும் மீண்டும் செய்ய விரும்புகிறது. இதனாலேயே நாம் பேசும் பொருளின் மையம் வரை செல்ல பலருக்கு மிரட்சியாய் இருக்கிறது.

எப்போதும் நாம் சார்ந்திருக்கும் இடம் சரியாய் இருக்கிறதா என்று உற்று நோக்கி தம்மையும் தம் சுற்றுப்புறத்தையும் சரியாய் வைத்துக்கொள்ள எல்லாவிதமான சூழல்களையும் உருவாக்கிக் கொடுப்பதும், அப்படியாய் உருவான சூழல்களை சரியா என்று ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்வதும்தான் பகுத்தறிவின் உச்சம். எனக்குப் பிடிக்கிறது என்று கண்மூடித்தனமாய் என் மூளையை எங்கெங்கோ மேயவிட்டுக் கொண்டு யாருக்கோ எதற்கோ கொடி பிடிக்கிறேன் அதில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நலம் பயக்கட்டும் என்று பார்க்கும் குறுகிய பார்வைகள் தீயிட்டுக் கொளுத்தப்படவேண்டியவை.

இணையத்தில் கட்டுரைகளை எழுதினால் இணையம் வரை வர இயன்றவர்கள் வாசிக்க முடியும் எனும் பொழுது, இணையத்தின் பயன்பாடுகள் எப்படி எல்லாம் இருக்கலாம், எந்த மாதிரியான கருத்துக்களை நாம் பதிவதின் மூலம் நாளைய சமூகம் பயன்பெற முடியும் என்பதையே  முழுமையான கொள்கையாக கழுகின் பாலகாண்டம் கொண்டிருக்கிறது.

தமிழ் என்று எம் பிள்ளைகள் நாளை இணையத்தின் தேடு பொறியினை அழுத்தும் போது அங்கே ஆபாசங்களும், தலைக்கனங்கள் கொண்டவர்களின் மோதல்களும், தவறான அரசியல் வழிகாட்டுதல்களும், சுய தம்பட்டங்களும், வன்முறைகளும், இன்ன பிற கேடு கெட்ட விசயங்களும் இருந்து விடக் கூடாது என்ற எங்களின் பொறுப்புணர்ச்சிக்குப் பெயர்தான் கழுகு என்று கொள்க;

இணைய உலகிற்குள் நாம் அடியெடுத்து வைத்த காலத்தினை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இன்று நிறைய வலைப்பதிவர்கள் அல்லாத நிறைய பேர்கள் இணையத்தின் வலைப்பக்கங்களை வாசிப்பதையும் கருத்துரைகளை இடுவதையும் பரவலாக நாம் காணமுடிகிறது. எந்த பதிவின் முதல் பின்னூட்டமாக வடையையோ அல்லது சுடு சோற்றையோ  யாரும் இடுவதில்லை. கூட்டமாக நின்று சரியில்லாததை முன்னெடுப்பவர்கள் எல்லாம் இன்று மதம் என்ற ஒரு அடைப்பிற்குள்ளும், அரசியல் என்ற அடைப்பிற்குள்ளும், சாதி என்ற அடைப்பிற்குள்ளும் நின்று கொண்டு தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்பினை தூக்கி நிறுத்தவும் முயன்று கொண்டிருக்கிறனர்.  சரிகளைச் சந்தைப்படுத்தும் இவர்களின் நோக்கம் சரி என்றாலும் தவறுகளை தாம் சார்ந்திருக்கும் அமைப்பிடம் கூறி சரிப்படுத்த முயலாமல் தவறுகளுக்கும் சரி என்னும் சாயத்தைக் கொடுக்க பகீரத பிரயத்தனம் செய்யும் இவர்களின் அறியாமையைத் தான் நாம் மழுங்கிப்போன விழிப்புணர்வு என்கிறோம்.

தமிழர் மண்ணிலிருக்கும் ஒரு முதுபெரும் அரசியல்வாதி பேஸ்புக் கணக்கைத் துவக்கி இருக்கிறார் என்றால் அவரிடம் கருத்து ரீதியாக முரண்பாடுகள் கொண்ட இணைய வேங்கைகள் தெளிவான எதிர்கருத்துக்களை அவரின் பக்கத்தில் கேள்வியாய்க் கேட்டு சரியான பதிலை பெற முயன்றிருக்கலாம், மழுப்பனான பதில்களுக்காக மீண்டும் கேள்விகளை எழுப்பி இருக்கலாம். சரியான பதில்களைச் சுட்டிக்காட்டி பாராட்டியும், தவறான பதில்களை சாடியும் பரப்புரைகள் செய்திருக்கலாம்....

இவையெல்லாம் விடுத்து ஏகவசனத்தில் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி தங்களின் சீற்றத்தை கொட்டிய என் தமிழ்சமூகத்தின் முறையற்ற கோபமும், பண்பாடற்ற அறிவும் தான் எப்போதும் நம்மை சிறுமைப்படுத்தி நமது இலக்கை அடையவிடாமல் செய்திருக்கிறது என்பதை அறிக; பொதுவெளியில், அதுவும் இணையத்தில் இருக்கும் உரிமையினையும் சுதந்திரத்தையும் சரியான வகையில் பிரயோகம் செய்ய இன்னமும் யாரும் அறியவில்லை.  கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொதுவெளியில் இன்று இது போன்ற அயோக்கியத்தனங்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவை.

தொழில்நுட்ப வசதிகள் மூலம் நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளலாம், பார்த்துக் கொள்ளலாம், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஒரு ஆச்சர்யத்திலிருந்து நம் சமூகம் இன்னும் வெளியே வரவே இல்லை. இப்படியான மாயாஜால படம் பார்க்கும் உணர்வினை விட்டு வெளியே வந்தால்தான் இதன் முழுமையான பயன்பாடுகள் புரியும்.

இணையப் பெரு அரக்கன் பல வழிகளில் இன்று விசுவரூபம் எடுத்து நிற்கிறான். இங்கே ஒரு கட்டுக்குள் நின்று சிந்திக்கும் சுயநல போக்குகள் இன்றி சுதந்திர மனப்பான்மையுடன் கருத்து பகிரும் ஒவ்வொருவரும் மெல்ல மெல்ல கைகோர்க்க துவங்கியின்றனர். பாரம்பரியமாய் பதிவுலகத்திற்கு என்று இருந்த கோட்பாடுகளும் வெற்றுச் சண்டைகளும் முகஸ்துதி பாடுதல்களும் இன்று உடைந்து சரிய ஆரம்பித்திருக்கின்றன.

எழுத்து என்னென்ன மாற்றங்களைச் இந்த சமூகத்தின் மீது திணித்திருக்கிறது என்பது வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் தெளிவாய் பொறிக்கப்பட்டிருக்கிறது. சரியான பயன்பாட்டோடு நாம் பயணிக்கையில்.... இன்றைய நமது நிகழ்வுகளும் வரலாறாகிப் போகும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை...!
 
  (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 
 

Friday, August 17, 2012

சமூக பிரச்சினைகளும் இணைய அட்டைக் கத்திகளும்,...!

வாழ்க்கையின் தடம் எங்கே ஆரம்பித்தது..? எங்கே செல்கிறது...? என்ற பிரஞைகள் அற்றுப் போய் வயிற்றுப் பிழைப்புக்காய் தினமும் அலாரம் வைத்து எழுந்து, அலுத்துக்கொண்டு உடல்வலியோடு படுக்கையில் சரியும் கோடாணு கோடி மக்களில் மிகையானவர்களுக்கு அன்றாடம் கணிணியைத் தட்டி பார்க்கும் வாய்ப்போ, இணையத்தில் காலம் மறந்து அமர்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு தத்தமது மேதாவித் தனத்தை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வாய்ப்போ கிடையாது.

தன் முனைப்புக்களைத் தீட்டிக் கொள்ளும் களமாய்ப இன்று ஒரு கோர வடிவம் எடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் இணையப் பெருவெளியில் விர்ச்சுவல் மனிதர்கள் அரசியல் பேசுகிறார்கள், சமூக நலம் பேசுகிறார்கள், சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் தயிர் கடையும் மத்தை வைத்துக் கடைந்து அங்கே ஜனநாயக வெண்ணையையும் கடைந்தெடுக்கிறார்கள். மதவாதிகள் மூச்சிறைக்க பிரச்சாரம் செய்கிறார்க்ள், சாதிகளின் பெயர் சொல்லி ஏதோ ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் படம் போட்டு, அவர் என் சாதி என்று வெட்கமில்லாமல் பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள், தட்டச்சுக்களிள் அரிவாள் தூக்கும் வீரர்களும், வார்த்தைகளை தடம் புரட்டி வாசிப்பவனின் மனோநிலையைப் புரட்டிப் போடும் துர்வார்த்தை விற்பன்னர்களும் அணிவகுத்து நிற்கின்றனர்....

ஆமாம்.. இங்கே நிரம்ப, நிரம்ப பதிவர்கள் இருக்கிறார்கள், கருத்துக்களை பதிந்து, பதிந்து கையொடிந்து போகாத குறையாய்  தட்டச்சு  தாராளமாய் தங்களின் நேரம் போக்குகையில் மறக்காமல் தங்கள் அறைகளின் ஏ.சி சரியாய் வேலை செய்கிறதா என்றும் சரி பார்த்துக் கொள்கிறார்கள்.

எங்களுக்கெல்லாம் சமூகப் பிரஞை இருக்கிறது.... நாங்கள் விழிப்புணர்வு செய்கிறோம் என்பன போன்ற வார்த்தைகள் எல்லாம்  இப்போது எங்களிடம் சலித்துப் போன சாம்பாராய் துர்நாற்றம் வீசுகிறது. எதார்த்தம் சட்டை காலரை பிடித்து சுடுவெயிலில் முகம் காட்டி, பிளாட் பார்ம் ஓரத்தில் கசங்கிக் கிடக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும், தெருவோரம் பூ விற்கும் அக்காவின் ஏழ்மையினையும், கோவிலடியில் பிச்சை எடுக்கும் அழுக்குச் சட்டைப் பிள்ளைகளையும், காலையிலிருந்து நள்ளிரவு வரை ஷேர் ஆட்டோ ஓட்டும் அண்ணன்களின் வியர்வைத் துளியில் படிந்திருக்கும் சோகங்களையும், கரடு முரடான ஒட்டுப் போட்ட பிச்சைக்காரனின் உடையாய் விரிந்து கிடக்கும் நகரத்து சாலைகளையும், அந்த சாலைகளில் இன்னமும் முழங்கால் அளவு தேங்கிக் கிடக்கும் மழை நீரையும், கணுக்கால் அளவு தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரையும், சுருங்கிப் போய் தெருக்குத் தெரு வைக்கோல் பொம்மைகளாய் அதிகாரத்தை பிரயோகம் செய்தால் எந்த கரை வேட்டி வந்து நொந்து போன வாழ்க்கையை இன்னமும் பிய்ந்து போக வைக்குமோ  என்று பயந்த படியே காவல் காக்கிறேன் பேர்வழி என்று வலம் வரும் காவலர்களையும்.....

ஜனநாயகத்தில் ஆழமான நம்பிக்கைக் கொண்டவர்களாக காட்டிக் கொண்டும், தங்களை எல்லாம் பேரரசர்களாகக் கருதிக் கொண்டும் தமிழகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட அனுபவத்தை ஆயுதமாக்கி கையில் வைத்துக் கொண்டு மக்களை மிரட்டும் அரசியல்வாதிகளையும், கோவிலுக்குள் அதிகாரிகள் என்ற பெயரில் மக்களை அடக்குமுறை செய்து கையூட்டுப் பெற்று கடவுளை சொடுக்குப் போட்டு வரச்சொல்லி தரிசனம் கொடுக்கச் சொல்லும் மனிதர்களையும் பார்க்கும் போது....

இணையத்தில்  பொழுது போகாமல் உலகம் பேசும் வேடிக்கை மனிதர்களிடம் நாமும் நேர விரையம் செய்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றத்தான் செய்கிறது. இரு பெரும் கட்சிகளை பற்றிப் பேசியும், ஈழத்தின் சோகத்தினை பேசியும் மேதாவிகள் உலகம் புள்ளி விபரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கையில்தான் தமிழகத்து தமிழனும், ஈழத்து தமிழனும் வயிற்றில் அமிலம் சுரக்க அடுத்த வேளை உணவைப் சுபிட்சமாய் பெறுவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.

அரசியல் பகடிகளையும், அம்மாவின் ஆட்சியையும், டெசோ மாநாடுகளை பற்றியும்  சராசரி மனிதர்களுக்கு யாதொரு கவலையும் கிடையாது என்றும் சொல்லலாம் அது பற்றிய விபரங்கள் தேவையில்லை என்றே யாரும் பேசுவது கூட கிடையாது என்றும் சொல்லலாம். அரசியல் செய்ய ஒரு கூட்டம் அவர்கள் நம்மை ஆளவும் செய்வார்கள். பொழுது போக்குக்காய் சினிமா எடுக்க ஒரு கூட்டம் இவர்கள் அரசியல் செய்யவும் செய்வார்கள், என்று சுற்றி சுற்றிப் பின்னப்படும் வலைகளை அறுத்தெறியத் தெரியாமல் ஏதோ ஒன்றைச் செய்து பணம் சம்பாரித்து நாமும் இன்ஸ்டால்மென்டில் ஒரு  கார் வாங்கி மெளண்ட் ரோட்டில் ஓட்டி சென்று விட வேண்டும் என்ற ஆவலில் தலை தெறிக்க  நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

சமூக அவலங்களைப் பற்றி இணையத்தில் பேசி பிரயோசனம் இல்லை. ஏனென்றால் இணைய வெளியில் இருப்பவர்களுக்கும் சமூகத்துக்கும் யாதொரு தொடர்பும் பெரும்பாலும் இல்லை. ஒரு வேளை அரசியல் செய்வதற்காய் ஏதேனும் தொடர்புகள் இருக்கலாம் என்றாலும் ஆத்மார்த்த தொடர்புகள் அறவே இல்லை என்பதை இந்தக் கட்டுரை அறுதியிட்டுக் கூறுகிறது. விதி விலக்காய் எல்லா இடத்திலும்  மனிதர்கள் இருக்கலாம் என்பது போல ஆத்மார்த்த மனிதர்கள் இங்கேயும் இருக்கலாம் என்ற கூற்றினையும் உறுதியாய் இந்தக் கட்டுரை நம்புகிறது.

இனி என்ன.....

நாம் பேசப் போகும் சமூக விழிப்புணர்வு என்பது.....முதலில் இணையத்தில் முறையற்று முழங்கிக் கொண்டிருக்கும் சமூக விரோத ஓநாய்களின் குரல்வளைகளை கவ்விப் பிடித்து இரத்தம் குடிப்பதை போன்றுதான் இருக்கும்....

இங்கே ஓராயிரம் விசயங்களை கேளிக்கையாக நாம் பேசலாம் ஆனால் ஒரு முரண்பட்ட நச்சு கொடும் விதை முளைத்து அது இணையத்தைக் கையாளும் அடுத்த தலை முறைக்கு தவறான பாதையைக் காட்டி விடக் கூடாது....

தொடர்ந்து சிறகடிப்போம்...!


 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Tuesday, May 15, 2012

பேஸ்புக் மற்றும் வலைப்பூக்களில் நடக்கும் அத்துமீறல்கள்...! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!




இந்நேரம் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்கள் யாரேனும் பெண்களால் நடத்தபெற்று இருக்குமெனில் எத்தனை சமூக நல கொம்புகள் சேவை செய்ய வந்திருக்குமென்று நாம் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை. 

மேலே நாம் கூறியிருக்கும் வரிகள் சட்டென்று கடந்த நொடியில் எமது புத்தியில் உதயமாகி இந்த நொடியில் எழுதப்பட்டது அல்ல. கடந்த மூன்றாண்டுகளாக சமூக வலைத்தளங்களினூடே தொடர்ந்து பயணித்து, கவனித்து அந்த கவனிப்பை கிரகித்து ஆராய்ந்து, அந்த தெளிவிலிருந்து வந்து விழுந்தவை. மொக்கையாய் எழுதும் பெண்களின் வலைத்தளத்திற்கு பின்பற்றுபவராய் சேருவதில் இருந்து, எவ்வளவு கேவலமாய் எழுதி இருந்தாலும் அதை ஆகா ஓகோ  என்று கருத்துரை வழங்குவது, வழிய, வழிய சென்று பாரட்டுவது, அம்மா என்று கவிதை எழுதி விட்டால் அழுது புரண்டு கண்ணீர் விடுவது, 

தெருவில் கிடந்த முள் குத்திவிட்டது என்று ஒரு பெண்மணி எழுதி விட்டால் அதை வாசித்து விட்டு சமூகத்தின் மீது வஞ்சம் கொண்டு வசை பாடி தீர்ப்பது என்று.....எதிர் பாலின ஈர்ப்பு, குறையில்லாமல் இன்றைய இணைய உலகில் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பசித்திருப்பவனுக்கு உணவு கொடுக்கவும், தவித்திருப்பவனுக்கு தாகம் தீர்க்கவும் எவரது கைகளும் நீள்வது என்பது இப்போது நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு போய்விட்டது, கூடவே கூட்டணி அரசியலும் ஒன்று கூடி நின்று நியாயங்களுக்கு அநீதியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. சமூகத்தில் பொறுப்புடன் இருக்கிறார்கள் என்று நாம் மதிக்கும் பெரிய மனிதர்கள் கூட வலைப்பூக்களிலும், பேஸ் புக்கிலும் ஏன் எப்போதும் பெண்களின் வாசல்களில் விழுந்து கிடக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

வலைப்பூக்கள் எல்லாம் பழங்கால நாடக மேடைகள் என்றால் பேஸ்புக்கில் அல்ட்ரா மாடர்ன் சினிமாவையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் அளவிற்கு அஜால் குஜால் விசயங்களுக்கு குறைவே இல்லாமல்தான் இருக்கிறது. ஒரு பெண் பேஸ் புக் புரபைலில் ஏதேனும் ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டுவிட்டால் அங்கே நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு கருத்திடுபவர்களில் பெரும்பாலானவர்கள் கருத்தை விட அதை வெளியிட்ட பெண்ணை கவரவே முயலும் கேவலம் தினந்தோறும் நிகழ்ந்தேறிக் கொண்டுதானிருக்கிறது.

ஆண்கள் என்றால் எப்போதும் பெண்கள் எதை எழுதினாலும், எந்த புரபைல் பிக்சர் மாத்தினாலும் நம்மிடம் வளைய வளைய வருவார்கள் என்று நினைக்கும் சில பெண்கள் தங்களின் க்ளோசப் சாட்களை பேஸ்புக்கிலேற்றி விட்டு....எத்தனை பேர் தன்னை வர்ணிக்கிறார்கள் என்று கவனித்து உள்வாங்கிக் கொண்டு உள்ளுக்குள் புளகாங்கிதம் அடைந்து கொண்டுமிருக்கிறார்கள். நீங்கள் அழகாயிருக்கிறீர்கள்....என்பது தொடங்கி இன்னும் ஐ...லவ் யூ வரைக்கும் கருத்துரைகள் நீண்டு கொண்டே செல்ல 351 வது கருத்தில் அப்புகைப்படத்தை ஏற்றிய அம்மணி  வந்து லவ் யூ ஆல் என்று ஒற்றை வரியில் போட்டு விட்டு....ஒரு ஸ்மைலியை தட்டிச் செல்வார்.....

அதற்கு பின் தான் 350 கருத்துக்கள் இட்ட எம் மறத்தமிழர் கூட்டம் ஜென்ம சாபல்யங்கள் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடும். 

போதாக் குறைக்கு ஏதேனும் ஒரு குழுமப் பக்கத்தை பேஸ்புக்கில் உருவாக்கி விட்டு அதில் நம்மை கேட்காமலேயே இணைத்து விடுவதும், கவிதைகள், கட்டுரைகள், புகைப்படங்களை ஏற்றி விட்டு ஒரு 4000 பேரை டேக் செய்து விட்டு நடுவில் நம்மை நிற்கவைத்து ஒவ்வொரு பிடிக்காத விசயத்தால் விலாசவும் செய்கிறர்கள். இவர்களுக்குப் பயந்து கொண்டு நாம் செக்கியூரிட்டி செட்டிங்கில் போய் அதை இதை செய்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

முன் அனுமதி என்னும் வார்த்தைக்கு இணயத்தில் அர்த்தமே கிடையாது என்பதோடு மட்டுமில்லாமல் அர்த்தங்களை விளங்கிக் கொள்ளாமல் கருத்திடும் இயந்திர மனிதர்களும் இயங்கும் இடமாய் பேஸ் புக் ஆகி விட்டது. ஒரு குழந்தை இறந்து விட்டது என்று வருத்தம் தெரிவித்து வெளியிடப்பட்ட முதல்நிலை செய்திக்கு....மிகவும் அருமை....வாழ்த்துகள் என்ற ரீதியில் கருத்திடுபவர்களை எந்தக் கணக்கில் நாம் சேர்ப்பது...?

இது ஒரு பக்கம் என்றால் இணயத்தின் அசுர வளர்ச்சியை கணக்கிட்ட அரசியல் கட்சிகளின் அதிவேக ஊடுருவலால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தனிப்பட்ட அரசியல் பக்கங்கள் தொடங்கப்பட்டு, செவிகள் கிழிந்து போகும் அளவிற்கு பிரச்சார வியூகங்கள் வரிசைகட்டி நிற்பது ஒருபக்கமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

எந்த கட்சியையும் சாராமல், அந்த அந்த சூழலை மனதிலாக்கிக் கொண்டு தேவை மற்றும் அவசியத்தின் பொருட்டு முடிவு எடுப்பவர்களை எல்லாம் பச்சோந்திகள், நடுநிலை நாய்கள் என்றெல்லாம் விமர்சித்து பொது வெளி என்ற நாகரீகத்துக்கு எல்லாம் பாடை கட்டும் ஒரு கூட்டமும் மனிதர்கள் என்ற பெயரில் உலாவிக் கொண்டிருக்கிறது.

ஒரு மனிதன் ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தக் கட்சிக்காரர்களின் நியாயம். அப்படி சாரமல் இருந்தால்........அ என்னும் கட்சியை நீங்கள் விமர்சித்தால் நீங்கள் ஆ என்னும் கட்சியின் ஆதரவாளர் என்றும்....., ஆ என்னும் கட்சியை விமர்சித்தால் நீங்கள் இ என்னும் கட்சியின் ஆதரவாளர் என்றும்....முத்திரை குத்தப்படுவீர்கள். எது எப்போது எனக்கும் இந்த சமூகத்துக்கும் தேவையோ அப்போது நான் அதன்படி முடிவெடுத்துக் கொள்வேன் என்று சத்தியம் பேசினீர்களேயானால்....நீங்கள்...நடுநிலை சொம்பு என்ற முத்திரை குத்தப்படுவீர்கள்....

இதில் என்ன கொடுமை என்றால்.....தமிழர்களுக்காக போராடும் எந்த ஒரு கட்சியும், சாதி அரசியலையும், மத அரசியலையும் விட்டு இன்னமும் வெளியே வராததுதான்...., சீமான் போன்ற தமிழ்ச் சிங்கங்கள் ஏன் நித்தியானந்தா போன்ற சமூக விரோதிகளைப் பற்றி பேசி கடும் போராட்டங்களை முன்னெடுப்பதில்லை....? சமூக அநீதிகளைக் கூட தங்களின் வசதிக்கு ஏற்றார்போல பார்ப்பவர்களைத்தான் இன்று நம்மைச் சுற்றி நாம் வைத்திருக்கிறோம்.

பெரியாரோடு எல்லாம் முடிந்து போய் விட்டது போலும்.....? கழகங்களுக்கு கூட திராவிடம் என்னும் வார்த்தை அரசியல் என்னும் காத்தாடி பறக்க தடவப்படும் வெறும் மாஞ்சாதான் போல....

மொழியைக் காக்க, இனத்தை காக்க, வேறு நாட்டுக்காரனையும், வேறு மாநிலத்துக்காரனையும் இழுத்துப் போட்டு உதைப்பேன் என்பதும், அறிக்கைகள் விடுவதும், மேடையில் நரம்பு புடைக்க பேசுவதுமாய் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த அவலங்கள்.....இப்போது இணையவெளியிலும்...! 

நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

சிந்திக்கவே இடம் கொடுக்காமல் கருத்து திணிப்புச் செய்யும்....இப்படியான அரசியல் கூட்டங்களும், எப்போதும் பெண்கள் பின்னால் திரியும் மறவர் கூட்டம் ஒரு பக்கமும், காதல் வரிகளை எழுதுகிறேன் பேர்வழி என்று ஏதேதோ எழுதி இளைஞர்களை தடுமாறச் செய்தும் அல்லது எப்போதும் ஆண்களை திட்டி ஆணாதிக்கம் என்று விமர்சிக்கவும் செய்யும் பெண்களுமாய்.....

பயணித்துக் கொண்டிருக்கும் இன்றைய இணைய உலகம்....நாளை நம் பிள்ளைகள் எல்லாம் வந்து அமரப் போகும் ஒரு ஒரு சக்தி வாய்ந்த இடம் என்பதை எப்போதேனும் நாம் எண்ணிப் பார்த்திருக்கிறோமா....?

குறையாய் இருக்க வேண்டியவை எல்லாம் மிகையாய் இருப்பதால், மிகையாய் இருக்க வேண்டிய நல்லவைகள் குறையாய் இன்று ஆங்காங்கே கவனிப்பாரற்று கிடக்கின்றன......அதை கவனிக்க வேண்டியதும், கவனிக்கச் சொல்லி பரப்புரைகள் செய்வதும் ஒவ்வொரு மனிதரின் சமூகக் கடமை என்ற கருத்தினை வலுவாக பதிந்து கட்டுரையை நிறைவு செய்கிறோம்.


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes