Showing posts with label கல்வி உதவி. Show all posts
Showing posts with label கல்வி உதவி. Show all posts

Monday, May 14, 2012

கழுகின் பயணமும் காலத்தினாலான ஒரு சிறு உதவியும்....!

செய்யும் செயல்கள்கள் செம்மையாய் இருக்கும் பட்சத்தில் அதன் விளைவுகளும் செம்மையாய் இருக்கும் என்ற மூல உண்மையை கழுகு தெளிவாகவே உணர்ந்திருக்கிறது. பலன்கள் அதன் நீட்சியில் விளையும் நன்மைகள் என்று எதையும் எமது தலைகளில் எடுத்துக் கொள்ளாமல் அடுத்த அடுத்த செயல்களை நோக்கியே நாம் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.



கடந்த பத்து வருடங்களில் இணையப் பயன்பாடும், பயனீட்டாளர்களும் எவ்வளவு அதிகரித்து இருக்கின்றனர் என்பதை நாம் கணக்கில் கொண்டு அடுத்த இருபது வருடத்தில் பயனீட்டாளர்கள் விகிதம் எப்படி இருக்கும் என்ற யோசித்துப் பார்த்தோமானால், சுமார் 15 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும் இளையர்கள் மிகுந்த ஒரு சக்தி மிகுந்த தகவல் தொடர்பு சாதனமாக இணையதளங்கள் அசுரத்தனமாய் வளர்ந்து சமூகத்தின் மிகையான செயல்பாடுகளை தீர்மானிக்கும் ஒரு நவீன களமாயிருக்கும் என்பதில் யாதொரு ஆச்சர்யமும் இல்லை.

விழிப்புணர்வுக்காய் கழுகு என்னும் ஒரு தளத்தை நாம் நிறுவி அதனை தொடர்ச்சியாக இயக்கிக் கொண்டிருக்கும் கடந்த மூன்று வருடங்களில் இணையப் பயனீட்டாளர்களில் 0.05% தான் கழுகின் ஆழமான சமூக விழிப்புணர்வு என்னும் கொள்கையை புரிந்து கொண்டு எமக்கு ஆதரவும், பேருதவியுமாய் இருக்கிறார்கள். கழுகின் நிலைப்பாட்டினை விளங்க முடியாதவர்கள் பெரும்பாலும் நம்மை ஏளனப்படுத்தியும், உதாசீனப்படுத்தியும் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டுமிருந்தாலும், நமது பொறுப்பு என்பது நம்மை கேலிக்குரியவராய் பார்ப்பவருக்கும் புரிதலை உண்டு பண்ணி அரவணைத்து செல்ல வேண்டுமென்பதாகவே இருக்கிறது.

இப்படியான கழுகின் பெரும் பயணத்தில்....

பொறியியல் கல்லூரியில் பயிலும் அமுதா என்னும் மாணவி தனது கல்வியைத் தொடர பண உதவியின்றி இருக்கிறார் என்ற செய்தியை கழுகு தோழமை திருமதி. கெளசல்யா கழுகு குழுமத்தில் பகிர்ந்திருந்தார். இதன் தொடர்ச்சியாய் இது பற்றிய ஒரு கட்டுரையை நாம் கழுகிலும் வெளியிட்டு சகோதரி அமுதாவிற்கு உதவி செய்ய விரும்புபவர்களை கழுகு குழுமத்தை தொடர்பு கொள்ளலாம் என்ற வேண்டுகோளையும் வைத்தோம்.

இதோ.. இன்று நமது உதவியை சிறு பணமாய் திரட்டி அதை சகோதரி அமுதாவின் கல்விக்காக அவரது கல்லூரியில் செலுத்தியும் விட்டோம்.

உதவி என்று அறிந்த உடன் உடனடியாய் தனது பெரும் பங்களிப்பு இதில் இருக்க வேண்டும் என்றெண்ணி முதல் தொகையை கொடுத்ததில் இருந்து, எல்லோரிடமுமிருந்து வந்த தொகைகளை தனது வங்கிக் கணக்கில் இருத்தி தேவையான பணம் சேர்ந்தவுடன் அதை டி.டியாக எடுத்துக் கொண்டு போய் திருநெல்வேலியிலிருக்கும் சகோதரி அமுதாவை நேரடியாக சந்தித்து அவரது கல்லூரியில் அதை செலுத்தியது வரை எங்கள் கழுகு குழும குடும்பத்தின் தலைவர் அன்புக்குரிய அப்பா திரு. சீனா ஐயா அவர்களின் பணி அளப்பரியது.

வெற்றுத் துப்பாக்கிகளை வைத்து வெடித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய மாயா உலகான இணையவெளி சீனா ஐயா போன்ற சமூக நற்சிந்தனையாளர்களை கொண்டிருக்கிறது என்பதை எண்ணி நாம் நிச்சயமாக பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். 

" சொல்வது யாருக்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "

என்ற குறளுக்கு இணங்க கழுகு குழுமத்தால் இந்த உதவியைச் செய்து முடிக்க முடிந்தது என்பதற்கு பின்னால் சீனா ஐயாவின் முயற்சியும் உழைப்பும் இருந்ததை மறுக்கவே முடியாது.

குழுமம் கடந்து இந்த செய்தியை கழுகு இணையத்தளத்தில் வாசித்து விட்டு உடனடியாக நம்மைத் தொடர்பு கொண்டு எப்படி? எங்கே? நான் உதவி செய்யவேண்டும் என்று கூறுங்கள் என்று கேட்டு அதே போல உதவி செய்த அண்ணன் திரு. ஓ.ஆர்.பி. ராஜா அவர்களுக்கும் கழுகு குழுமத்தின் சார்பிலும், சகோதரி அமுதாவின் சார்பிலும் எங்களது அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணன் ஓ.ஆர்.பி.ராஜா போன்ற முகம் தெரியாமல், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உதவிகளைச் செய்பவர்களால்தான் இன்னமும் நமது சமூகத்தில் மனிதநேயமும், மானுடப் பிரியமும் இருக்கிறது என்பது அடிக்கடி உறுதி செய்யப்படுகிறது என்ற கருத்தினையும் ஆழமாக பதிவு செய்கிறோம்.

அதே போல பிரச்சினையை நம்மிடம் அடையாளம் காட்டி அதன் பிறகு நேரடியாக இந்த உதவி சகோதரி அமுதாவிற்கு சென்று சேர வேண்டும் என்று பிராயசைப்பட்டு நமது செயல்பாடுகளுக்கு உறுதுணையாய் இருந்த தோழமை கெளசல்யா அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த செயல் நிறைவேற முழுமையான பங்களிப்பை அளித்து உறுதுணையாய் இருந்த, எங்கள் குழுமத் தோழமைகளின் புரிந்துணர்வாலும் ஒத்துழைப்பாலுமே இந்த சிறிய உதவியை எங்களால் செய்ய முடிந்தது என்பதையும் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

கழுகு தனது விழிப்புணர்வு பயணத்தில் தொடர்ந்து  சிறகடிக்கும்  அதே நேரத்தில் சமுகத்தின் அவலங்களையும் பிரச்சினைகளையும் தொடர்ந்து தனது வாசகர்களுக்கும், பொது நல விரும்பிகளுக்கும், சமூக நல ஆர்வலர்களுக்கும் அடையாளம் காட்டவும் செய்யும் என்ற உறுதியோடும் முழுமையான மன நிறைவோடும் இக்கட்டுரையை நிறைவு செய்கிறோம்...!

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

 

Tuesday, November 01, 2011

கல்விக்கு கை கொடுப்போம்....! கல்வி உதவி பற்றி ஒரு பகிர்வு...!

பதிவுகள் மூலமாக விழிப்புணர்வூட்டும் கழுகின் சீரிய பயணத்தில் நாம் ஆங்காங்கே சில வாழ்வியல் யதார்த்தங்களையும் மனிதர்களையும் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் உணர்ந்தே இருக்கிறோம் 

செய்திகளை பரிமாறி அதன் மூலம் உண்மையை உணரச் செய்வதோடு மட்டுமில்லாமல், மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும் எமது வாசகர்களுக்கு எடுத்துக் காட்டி, அதற்கு எமது பங்களிப்பு என்ன என்கிற அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோம்......

சகோதரி அமுதா தூத்துக்குடியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் கணிணித் துறை இளங்கலை பட்டம் பயின்று வருகிறார். மேற்கல்வி கற்பதற்கு ஏற்றதொரு புறச்சூழல் அமையப் பெறாத காரணத்தால் சகோதரி வங்கியில் கல்விக் கடனாக ஒவ்வொரு செமஸ்டருக்கும் ரூபாய். 28,000/ பெற்று வருகிறார், ஆனால் அவரின் ஒரு செமஸ்டருக்கான செலவு ரூபாய் 45,000 ஆகிறது. ஒவ்வொரு செமஸ்டரிலும் ரூபாய் 17,000 செலுத்தி படிப்பை தொடர சிரமப்  படும் சூழலில் இருக்கிறார்.

எமது குழுமத் தோழமை கெளசல்யாவின் மூலம் இச்செய்தியை அறிய முடிந்தது. இதனை கழுகு குழுமத்தில் பகிர்ந்து இயன்றவர்களை வலியுறுத்தல்கள் எதுவும் இன்றி சுயவிருப்பத்துடன் உதவிகளைச் செய்யச் சொன்னோம். மேலும் இதனை வலைப்பூவில் இட்டு மிகைபட்ட பேர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று தீர்மானித்ததின் விளைவு இந்த கட்டுரையாய அமைந்துள்ளது.

கல்விக்காய் போராடும் போது அங்கே வறுமை வந்து வழக்கு தொடுப்பதை எப்படியான பார்வையாக பதிவது என்ற கவலையில் வார்த்தைகள் எல்லாம் தயங்கி தயங்கி களமிறங்குகின்றன. தாய் மட்டுமே உள்ள சகோதரி அமுதாவின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு கூட பொருள் ஈட்டும் படியாக வேறு யாரும் இல்லை என்ற கூடுதல் செய்தி நம் இதயத்தை கனக்க வைக்கத்தான் செய்தது.

வறுமை என்பதின் சீற்றம் இளமையில் வந்து மோதும் போது அதனை முழுத் தெம்புடன் எதிர் கொள்வது சிரமம் என்று அறிந்துதானோ அவ்வை பாட்டி...

" கொடிது கொடிது வறுமை கொடிது...
 அதனினும் கொடிது இளமையில் வறுமை "

என்று எழுதி வைத்து சென்றிருப்பாரோ என்ற எண்ணம் நம்மை சம்மட்டியால் அடிக்கத்தான் செய்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஏன் இந்தியா முழுவதும் ஓராயிரம் அமுதாக்கள் இப்படி இருக்கலாம், எல்லோருக்கும் சென்று உதவும் புறச்சூழலையும், வசதியையும் வாழ்க்கை எல்லோருக்குக் கொடுத்து விடவும் செய்யாது.

நமது வாழ்வின் போக்கில் எதிர்படும் இது போன்ற செய்திகளை உள்வாங்கிக் கொண்டு நம்மால்  ஆன உதவிகளை சிறு சிறு தொகையாக இருந்தாலும் சக்திக்கு ஏற்றவாறு கொடுத்து சிலரின் வாழ்க்கையின் வெளிச்சத்தை உண்டாக்கும் ஒரு காரணியாக நாம் இருக்கலாம்.

சகோதரி அமுதாவின் கல்வி உதவிக்கு இயன்ற உதவியை செய்ய விரும்புபவர்கள்  கழுகிற்கு மின்னஞ்சல் செய்து உங்கள் விருப்பத்தை தெரிவிப்பதன் பேரில் எங்கள் குழும தோழமையின் வங்கி கணக்கு விபரங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அதன் பிறகு நீங்கள் பணம் அனுப்பிய விபரத்தை கழுகு மின்னஞ்சலுக்கு தெரிவித்து விட்டீர்களேயானால், மொத்தமாய் பணத்தை சகோதரி அமுதாவின் கல்லூரியில் நேரிடையாக நாம் அதை செலுத்தி விட்டு அதற்கான ரசீது மற்றும் பணம் அனுப்பியவர்கள் விபரம் எல்லாவற்றையும் ஒரு தனிப்பதிவில் இட்டு முழுவிபரங்கள் தெரிவிக்கிறோம்.

இப்போது கூட இந்த செமஸ்டர் வரைக்குமான அவரின் தடங்கலை சரி செய்யவே கழுகு முயல்கிறது. மீதமுள்ள செமஸ்டருக்கான பணத்தை இன்னும் சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கு அடையாளம் காட்டி அவர்கள் மூலம் செய்து முடிக்கவும், தற்போது கிடைக்கும் கூடுதல் பணத்தை கல்லூரியில் முன்பணமாக செலுத்தவும் கழுகு திட்டமிட்டு இருக்கிறது.


கழுகு மின்னஞ்சல் முகவரி: kazhuhu@gmail.com

உள்ளன்போடு இதனை வாசித்து உதவி செய்யப் போகும் அனைவருக்கும்   கழுகின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes