Showing posts with label கழுகு அரசியல். Show all posts
Showing posts with label கழுகு அரசியல். Show all posts

Tuesday, December 18, 2012

பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு சரியா? ஒரு எதார்த்தப் பார்வை...!


சுற்றி நிகழும் ஓராயிரம் சூழல்களையும் உள்வாங்கிக் கொண்டு சரியான தெளிவுகளை வாசகர்களிடம் கொண்டு செல்வதையே நாம் வழமையாகக் கொண்டிருக்கிறோம். மிகைப்பட்ட நம்மைச் சுற்றிய முரண்களைப் பற்றி எழுதுவது கைப்புண்ணிற்கு கண்ணாடி வைத்து காட்டுவதைப் போன்ற தேவையற்ற நிகழ்வாகி விடும் என்பதாலேயே பல நேரங்களில் அடர்த்தியான மெளனத்தை சுமந்த படியே நாங்கள் சிறகடிக்க வேண்டியும் இருகிறது.

சமீபத்தில் நாம்  அறிந்த  ஒரு விடயத்திலிருக்கும் முரணை எழுத்தாக்கி உங்களிடம் சேர்க்கும்  விதமாய் எங்களின் கழுகு குழுமத்தில் விவாதித்த செய்தியின் சாரம்சத்தை கட்டுரையாக்கி இருக்கிறோம்...! கட்டுரையின் மையக்கருத்திலிருந்து மாறுபடும் நண்பர்களின் ஆரோக்கியமான கருத்துரைகளை நாங்கள் வரவேற்பதோடு....நேர்மையான  விவாதங்கள் மேலும் பல புதிய கதவுகளை திறந்து விடும் என்பதையும் திண்ணமாய் நம்புகிறோம்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு பணி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கான ஓட்டெடுப்பு நேற்று ராஜ்யசபாவில் வெற்றி பெற்றிருக்கிறது.. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இச்சூழலில் மசோதாவை நிறைவேற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனது ஒட்டரசியலில் வென்றும்  இருக்கிறது.

இட ஒதுக்கீடு வழங்குவதிலேயே மறு சீரமைப்பு தேவைப்படும் ஒரு சூழல் இப்போது உருவாகிப் போயிருப்பதை தெளிவான பார்வைகள் கொண்டோர் யாரும் மறுக்க முடியாது. டாக்டர் அம்பேத்கார் எழுதிய சட்டம் 25 ஆண்டுகளுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்ற ரீதியில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 25 ஆண்டுகள் முடிந்த பின்னால் அந்த சூழலை ஆராய்ந்து அப்போதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் பொதுப்பிரிவினர் அளவிற்கு சமமாய் இல்லாவிடில் மேலும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு இந்தச் சட்டத்தை நீட்டிக் கொள்ளாம் என்றுதான் அம்பேத்கார் எழுதிய சட்டம் சொல்கிறது.

ஆனால் 25 வருடங்கள் கழிந்த பின்னால் உண்மையான ஆய்வுகள் செய்து இச்சட்டம் நீட்டிக்கப்படாமல் ஓட்டரசியலுக்காய் தொடர்ச்சியாய் மத்திய அரசால் பத்து பத்து ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.....

உண்மையில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களில் யாரெல்லாம் இட ஒதுக்கீடு பெற்றர்களோ அவர்களின் குடும்பங்களே தொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுபவர்களாக இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக ஒரு சாரார் மட்டுமே இட ஒதுக்கீட்டினைப் பெற்றுக் கொண்டு தங்கள் பிரிவில் இருக்கும் மற்றவர்களுக்குத் தடையாகவும் இருக்கிறார்கள்...

உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டின் மூலம் ஐஏஎஸ் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது பிள்ளைகள் மட்டுமே  இனி அந்த இட ஒதுக்கீட்டை அடையக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள், ஏனெனில் அவர்கள் அந்தப் படிப்பிற்கு என்னென்ன தேவையோ அதனை மிகத் தெளிவாக தங்கள் பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே பயிற்றுவித்து விடுகின்றனர். (ஆரம்பத்தில் முற்பட்ட வகுப்பினர் இப்படிச் செய்து தங்கள் வகுப்பினர் மட்டுமே அரசுப் பணிகளில் நீக்கமற நிறைந்திருந்தது போல)

ஆனால் அதே வகுப்பைச் சேர்ந்த இது வரையிலும் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்திராத ஒரு தினக்கூலியின் பிள்ளை இந்த முன்னேறிய ஆதிதிராவிடர்களின் பிள்ளைகளோடு போட்டி போட்டு அந்த ஐஏஎஸ் பதவியை அடைய முடியாத நிலை தான் இன்று உள்ளது.

ஆகவே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை இது வரை அந்த பலனை அனுபவித்தவர்களின் வாரிசுகள் இனி மேல் பொதுப் பிரிவுக்கு மாறி விட வேண்டும் என்ற வகையில் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும். மற்ற எந்த வகுப்பினரின் இட ஒதுக்கீட்டிற்கும் இதை பொதுவான சட்டமாக மாற்ற வேண்டும்..

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், எந்த வகையான இட ஒதுக்கீடாக இருந்தாலும் அது அந்தந்த சமூகத்தினரின் முதல் தலைமுறையினருக்கு மட்டுமே என்பதை சட்டமாக இயற்ற வேண்டும்.  இட ஒதுக்கீட்டையே இப்படியாய் திருத்தம் செய்ய வேண்டும் என்ற பார்வையை உங்களுக்காக நாங்கள் பகிரும் இந்த வேளையில் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் எபதை எப்படி  ஏற்று கொள்வது என்று நீங்களே கூறுங்கள்...?

இந்தச் சட்டத்தினால் அரசுப் பணியாளர்கள் மத்தியில் மனநிலை சமச்சீர் கெட்டுப் போய், அரசு இயந்திரம் ஒட்டு மொத்தமாக முடக்கப்படும் பெரும் ஆபத்து இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு அதிகாரியின் கீழே குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்து அவரிடம் வேலை பயின்ற ஒருவர், இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு சமமாகவும், அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரை வேலை வாங்கும் உயரதிகாரியாகவும் தகுதியின் அடிப்படையில் இல்லாமல், சலுகையின் அடிப்படையில் உயரும் போது, அரசுப் பணியாளர்கள் 82 சதவிகிதத்தினர் மத்தியில் ஒருவித கோபத் தீ ஏற்படும். அது ஒரு வித ஒத்துழையாமையை ஏற்படுத்தி அரசு எந்திரம் அப்படியே ஸ்தம்பித்துப் போகவும் வழி வகுக்கும்.

மேலும் தகுதியின் அடிப்படையில் இல்லாமல், சலுகையின் அடிப்படையில் ஒரு துறையின் அதிகாரியாக உயரும் ஒருவர், எப்படி அவசர காலங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? அனுபவம் இல்லாத முடிவுகளால் முழுக்க முழுக்க முரண்பட்ட அசாதரண சூழல் ஏற்பட்டுப் போய்விடாதா?

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவரில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு அரசு சலுகைகள் கண்டிப்பாய் கிடைக்க வேண்டும் என்பதில் நமக்கு யாதொரு மாற்றுக் கருத்துகளும் இல்லை என்பதை வலுவாக பதிவு செய்யும் அதே நேரத்தில் இது போன்ற பதவி உயர்வுக்கெல்லாம் இட ஒதுக்கீடு என்று ஓட்டரசியலுக்காய் அரசியல் கட்சிகள் நடத்தும் குட்டிக் கலாட்டாக்கள் அரசையும், அரசு நிர்வாகத்தையும், அதன் விளைவுகள் கடுமையாய் மக்களாகிய நம்மையும் பாதிக்கப் போவது உறுதி....!


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


Wednesday, July 13, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்...


கழுகு ஆபிஸ் வாசல்ல வெயிட் பண்றேன்னு சொன்ன பயல எங்க காணோம்.? அட நான் யாருன்னு கேக்குறீங்களா.....? பெசல் கழுகு ரிப்போர்ட்டருங்க.. யார்கிட்டயும் சொல்லீறாதீங்க.!! உள்ள நியூசு நியூசுன்னு போட்டு கொல்றாய்ங்க. நம்ம கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் கனகு டீ குடிக்க வாரேனு சொன்னான். அடிக்கடி டீக்கடையில் வடையோட சேத்து ஊர மெல்லுறது எங்க பயக வயக்கமுங்க..என் பேரு என்னனு கேக்குறீகளா. ரிப்போர்ட்டர் ரெங்குன்னா தெரியாத ஆளே இல்ல இப்புடி கேட்டு புட்டீகளே.! அந்தா கனகு வந்துட்டான். அடிக்கடி பேசிக்கிட்டே இருப்போம்.. ! நீங்க கூச்சப்பட்டாம கேட்டுகிட்டே இருங்க..சரிதானுங்களே!!!!

ரி.ரெங்கு: யோவ் கனகு..வாய்யா சீக்கிரம்..ஊரெல்லாம் சுத்தி சேதி சேத்து சேந்து மண்டை வெடிச்சுடும் போல இருக்கு.....என்னம்மோ கலைஞர் குடும்பத்தை பழிவாங்கத்தான் ஆட்சிய பிடிச்ச மாதிரி அம்மா திமிரா இருக்க மாதிரில்ல நீ நிறுத்தி நிதானமா வர்ற....

கனகு: ஆமாங்கரேன்....என்னமோ அழிச்சாட்டியமா ஊடகத்தை வச்சு எல்லாத்தையும் சாதிச்சுப் புட்டு கடைசில ஊடகம் நினைச்சா என்ன வேணா செய்யலாம்னு கலிஞர் சொல்ற மாதிரி சம்பந்தம் இல்லாம பேசாதய்யா ரிப்பு...!

ரி. ரெங்கு: சரி அத்த விடு.. டீ சொல்லு முதல்ல..! என்னய்யா உங்க தலிவரு உடம்ப தேத்திகிட்டு வந்துட்டாரு போல...மறுபடியும் ராணாவா....?????

கனகு: கிண்டல் பண்றீராய்ய நீர்.? ஒரு விசயத்த சொல்றேன் கேளும். அவர் சென்னையில் இருக்கும் போதே படு சூப்பராகிட்டாரு. இங்க இருந்து உடம்ப தேத்துறதுகுள்ள ஊரே அவர பாக்க வந்து தொல்லை கொடுக்கும்னு சொல்லிட்டுத்தான்...சிங்கப்பூர்ல போய் ரெஸ்ட் எடுத்தார். ராணா கண்டிப்பாய் உண்டு ஓய்...!!!

ரி.ரெங்கு: என்ன ஓய்.. நீர் இப்போ ரிப்போர்ட்டர் ஆயிட்டீரு....!!! உம்ம தலைவரு ராணா எல்லாம் நடிக்கட்டும் எந்திரன் பார்ட் 2 எல்லாம் நடக்குறது கஷ்டம்னு தெரியுமா உமக்கு...! சன் பிக்சர்ஸ ஒழிச்சு கட்டிட்டுத்தான் மறுவேலை செய்யணும்னு எல்லா டிப்பார்மெண்டையும்...உலுப்பி விட்டிருக்காங்களாம் முதல்வர்....

கனகு: என்னத்த உலுப்பி விடுறாங்களோ தெரியல.! இந்துத்துவா பேஸ விட்டு வெளில வந்த கொஞ்சம் நல்லா இருக்கும். வீடு வீடுக்கு மாடு தரேன்னு அறிவிச்சதுக்கு அப்புறம் நம்ம ராம கோபாலன் சாமி நாட்டு பசுவா கொடுக்க சொல்லியிருக்காரு. தெய்வீகத்தன்மையோட....எப்டி உள்ள வர்றார் பாருங்க..

ரி.ரெங்கு: ஊர் பேச்சு பேச்சா இருக்கட்டும்..டீய குடியும்யா....ஈ விழுந்துடப் போகுது.!! உனக்கு தெரியுமா இலவசத்த கொடுக்குறேன் பேர்வழின்னு ரூபாய். 4,200 கோடி வரிச்சுமைகள ஏத்தி விட்டு இருக்காங்க நம்ம சி.எம்.

கனகு: எப்டி பாத்தாலும் மக்களுக்கு பழைய ஆட்சிய தூக்கினதுல சந்தோசம்தான் ஓய்..!!! ஒரு குடும்பம் மட்டும் வாழ்றதுக்கு ஒரு நாட்டையே கொடுக்க முடியாதுல்லயா? இதுல ஒரு விசயம் பாரும்....காங்கிரஸ்காரனுக்கு இது வரைக்கும் லாஜிக் படி பாத்தா ஒரு இழப்பும் இல்லை...நோகாம நொங்கு சாப்டிட்டு இருக்கான்..

ரி.ரெங்கு: அவன் எல்லாம் புத்திசாலி ஓய்..!!! கூட்டணி வலுவா இருக்குனு வலுவாவே திகார்குள்ள தூக்கி வக்கிறான் பாரு எல்லாரையும்... நீ வேணா பாரு பார்லிமெண்ட் எலக்சன் வர்றப்ப தி.மு.கவுக்கு ஆப்பு அடிச்சுட்டுட்டு அ.தி.முக கூட்ட கூட்டணி வைக்கிறானா இல்லையான்னு....?

கனகு: ஹி ஹி...ஹி அப்போ சீமான் என்ன செய்வார்? மறுபடி கலைஞருக்கு சப்போர்ட் பண்ணுவாரா? எலக்சன் நேரத்துல எரிமலையா வெடிச்ச மனிசன்..புஸ்வானமா ஒடுங்கிட்டாரேய்யா....?

ரி.ரெங்கு: அதுல்ல ஓய் இப்ப காமெடி..வடிவேலு தூது மேல தூது விட்டுட்டு இருக்காராம் அம்மாவுக்கு...சமயம் பாத்து அம்மா கால்ல விழுந்து....அந்தாளு விசயகாந்தாம்மா எனக்கு எதிரி. உங்கள பத்தி ஒண்ணியும் பேசல தெய்வமேன்னு கால்ல விழுறதா பிளான்...

கனகு: அட காலுல இருக்கிறவனயே காமெடியன் மாதிரி பாப்பாங்களே அவுங்க. இந்த காமெடியன என்ன பண்ணுவாங்களோ.!? ஆமாம், என்னயா ஆனாரு கேப்டன் சவுண்டே இல்லையே....இப்போ எல்லாம்?

ரி.ரெங்கு: ஓ அதுவா.. பண்ருட்டியார கட்சிப் பணிகள எல்லாம் பாத்துக்க சொல்லிட்டு அவரு லுங்கிய கட்டிக்கிட்டு ஓய்வெடுக்கிறாரு ஓய்.....! 5 வருசம் அம்மா ஓய்வெடுத்துட்டு ஆட்சிக்கு வரலையா அதே மாதிரி அவரும் வந்தாலும் வந்திடுவாரு....

(க்ளாஸில் டீ காலியானதும்...)

அய்யய்யோ உன்கிட்ட பேசிகிட்டு கிடந்தா ஊரு உலகத்து நியூஸெல்லாம் பேசிகிட்டே கிடந்திடுவேன். உன்ன போல கம்ப்யூட்டர தட்டுற பொலப்பு இருந்தாலும் பரவால.நாளைக்கு போடுறதுக்கு நியூசோட வரலேன்னா கொன்னே புடுவான் அந்த எடிட்டரு......... டீக்கு காச கொடுத்திடு அப்பாலிக்கா பாப்போம்...சரியா ! போயி உருப்படியா நாளைக்கு போடப் போற கட்டுரைய நீ ரெடி பண்ணு.....வரட்டா.....

கனகு: உம்ம டீக்கு காசு கொடுக்க இப்படி ஒரு அலப்பறையா.!? சரி ஓய்...கெளம்பு! கெளம்பு...பொழப்ப பாப்போம்...! பாய்!


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes