தமிழ் வலைப்பதிவுகளைச் எல்லாம் சங்கமித்து ஒரு இடத்தில் திரட்டிக் கொடுக்கும் மையமாக தமிழ்த்திரட்டிகள் இருக்கின்றன. திரட்டிகள் தமிழ் வலைப்பதிவுகளைச் சேகரித்து உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்களின் விழிகளுக்கு நல்ல கருத்துக்களையும் கட்டுரைகளையும் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதுவே திரட்டிகள் தொடங்கியதின் மையக்கருவாய் இருக்க வேண்டும் என்று நாங்கள் கணித்த போது திரட்டிகள் தங்களின் நிர்வாகச் செலவுகளை மீட்டெடுக்க கொஞ்சம் வியாபார யுத்தியோடு விளம்பரங்களையும் இன்ன பிற திட்டங்களையும் செயல்படுத்தினால் அவை எப்போதும் செழித்து நிற்கும் என்றும் எமக்குள் ஒரு எண்ணம் தோன்றிய காலங்களும் உண்டு.
தமிழின் முன்ணனி திரட்டிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் திரட்டிகள் இன்று எந்த நோக்கத்துக்காக தங்களின் செயலினைத் தொடங்கின என்பது திரட்டிகளை நடத்தும் முதலாளிகளுக்கே தெரியும்....ஆனால் அவை சர்வ நிச்சயமாய் சமீப காலங்களில் தமிழ்மணம் போன்ற முதன்மைத் திரட்டிகள் நல்ல எழுத்துக்களை மேலெடுத்து வந்து எம் சமூகத்துக்கு நல்ல வாசிப்பனுபவங்களை கொடுக்க கூடிய படைப்புக்களை தங்களின் முன்னணி வரிசையில் வைப்பதில்லை என்ற கடும் குற்றச்சாட்டை இந்தக் கட்டுரை வைக்கிறது.
நாங்கள் திரட்டிகள், எங்களால் இவ்வளவுதான் முடியும், எங்களுக்கு தணிக்கை செய்யவும், நல்ல கட்டுரைகளை மேலெடுத்துக் கொண்டு வந்து காட்டவும் நேரமும், பொருளும் இல்லை என்று வாதிட்டு எமது குற்றச்சாட்டை உடைத்தெறியவும் முயலாலாம். பயனில்லாத கூட்டு அரசியலை முன்னிலைப்படுத்திக் கொண்டு எப்போதும் காழ்புணர்ச்சி எழுத்துக்களை கரடு முரடாக எம் சமூகத்து பிள்ளைகளிடம் தங்களின் வலைப்பூக்களின் மூலமும், இணையத்தளங்கள் மூலமாகவும் எடுத்துச் செல்லும் பொறுப்பில்லாத மனிதர்களை கட்டுப்படுத்தவும் தடை செய்யவும் ஏன் இந்த திரட்டிகளால் இயலவில்லை? என்பதுதான் எமது கேள்வி!
உங்களின் வியாபார நோக்கில் எமக்கு எள் முனையளவும் உறுத்தல்கள் இல்லை... பொருளாதாய உலகில் பொருளின் தேவையும் அவசியமும் அதன் சீற்றமும் நாம் அறியாதது இல்லை. ஆனால் தவறான எழுத்துக்களை, மானுட சமூகத்தை உடைத்துப் போட்டு தமிழ் சமூகத்தின் எழுத்துக்களின் களம் இப்படித்தான் இருக்கும் என்று பொதுவாக உலகத்தீர் அடையாளம் சொல்லக் கூடிய கறுப்பு எழுத்துக்களை கூட்டு சேர்ந்து வாக்குகள் அளித்து முன்ணனி வரிசைக்கு கொண்டு வரும் போது...
நிர்பந்தப்படுத்தி வாசிப்பாளனின் விழிகளுக்குள் விசம் பரவி அது மூளையை சிதைக்கிறது என்ற மனோதத்துவ நிகழ்வை எப்படி மறந்தீர் எம் தமிழ்த் திரட்டிகளின் நிர்வாகிகளே...? உமக்கு வசதி இருந்தால் வந்து வாசித்து செல்லுங்கள்.... எமது திரட்டிகள் எமது கொள்கைகள் என்று நீங்கள் எம்மிடம் எதிர்வாதம் செய்வதை எந்தக்காரணம் கொண்டும் எம்மால் ஏற்க முடியாது.
பொதுவில் வந்த பிறகு சரியான விளைவுகளைக் கொடுக்காத எழுத்துக்களை கடைப்பரப்பி அதை முன்னணி, வைரம், மகுடம் என்று அடையாளம் கொடுத்து, சாதி, இன, மத அரசியல் பாகுபாடுகளும் காழ்ப்புணர்ச்சிகளும் கொண்ட கட்டுரைகளைத் தொடர் பரப்புரை செய்யும் குற்றத்திற்காக இணையத்தையே முடக்குமளவிற்கு நமது தேசத்தில் சட்டமும் நீதியும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
சமீபகாலத்தில் தமிழ் மணத்தின் மகுடத்தை எட்டிப்பிடிக்கும் கட்டுரைகளில் 99% தனிமனித தாக்குதல் நடத்தும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் சமூக விரோத கட்டுரைகளாக இருப்பதை எப்படி தமிழ் மணம் நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறது எமக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தமிழமணம் நல விரும்பிகளுக்கும் அது ஆச்சர்யமே...!
குறைந்த பட்சம் மகுடத்தில் ஏறும் கட்டுரைகளையவது தமிழ் மணம் நிர்வாகம் வாசித்து தணிக்கை செய்ய முடியாதா என்ன?
மனித உணர்வுகளைத் தூண்டும் படி ஒருவர் எழுதுகிறான், வக்கிர உணர்வுகளைத் தூண்டுவது போல இன்னொருவர் எழுதுகிறார், மத உணர்வுகளை புண்படுத்தும் படி ஒருவர் எழுதுகிறார், மனிதநேயத்தை வெட்டிச் சாய்க்கும் படி ஒருவர் எழுதுகிறார், எப்போதும் சக பதிவர்களை தனது தொழில்நுட்ப அறிவினை காட்டி மிரட்டி ஒருவர் பகிரங்கமாக எழுதுகிறார்....
இப்படி எழுதுபவர்கள் எல்லாம் ஒன்று கூடி நின்று திரட்டிகளில் வாக்களித்து தன்னை முன்னிலைப்படுத்தி மேலெழும்பி தமிழ்ச்சமூகத்தின் அடையாளக் கொம்புகள் என்று தங்களின் கோரப்பற்களைக் காட்டுவதால் நல்ல எழுத்துக்கள் மேலே எழும்பி வரமுடிவதில்லை என்பதை.வருத்தத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது
இது எமது சமூகத்து வளரும் பிள்ளைகளை சீரழித்து சரியில்லாத ஒரு பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்பதை எப்படி நாம் கண்டு கொண்டே மெளனித்து நடப்பது?
பூனைக்கு மணி கட்டுவது வேண்டுமானல் எலிகளுக்கு பிரச்சினையாய் இருக்கலாம்......ஏனெனில் எலிகளுக்கு பூனை என்றால் பயம், ஆனால் பூனைகளுக்கு மணி கட்டுவதில் புலிகளுக்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்பதை பூனைகள் அறிந்து கொண்டால் சரிதான்.
எந்த ஒரு திரட்டிக்கும் நாம் எதிரானவர்கள் கிடையாது... ஏனெனில் திரட்டிகள் கொடுத்த உத்வேகத்திலும் உற்சாகத்திலும் அந்த ஜனநாயகத்தை சரியாகப் பயன்படுத்தி மேலெழும்பிப் பறப்பவர்கள்தான் நாமும்....அந்த நன்றியுணர்ச்சியும், அன்பும் எம்மிடம் எப்போதும் உண்டு என்றாலும்....
சமீபகாலங்களில் திரட்டிகளை ஆக்கிரமிக்கும் அத்துமீறல் அடாவடி அனாவசிய கும்பல்களை அடையாளம் கண்டு அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை திரட்டி நிர்வாகிகளிடம் இந்தக் கட்டுரை அன்போடு வைக்கிறது.
அதோடு மட்டுமில்லாமல் வேறு இணையப்பத்திரிக்கைகளில் வரும் நல்ல விசயங்களைச் செய்திகளை நகலெடுத்து தங்களின் வலைப்பூக்களில் பகிரும் தோழர்களை எல்லாம் தடுக்காமல், வாசிக்க வாய்ப்பில்லாதவர்கள் வாசிக்க வேண்டி பகிர்கிறார்கள் என்ற நல்நோக்கையும் நாம் உணரவேண்டும். அப்படி பிரதி நகல் எடுத்து வெளியிடும் தோழர்கள், கறுப்பு எழுத்துக்களை எழுதும் பூனைகளை விட எவ்வளவோ மேலானவர்கள் என்பதையும் அறிக;
இவையெல்லாம் கேட்க நீ யார்...? என்று கேட்கும் குரல்வளைகளுக்கு நாம் சொல்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.......
நன்மையை யார் வேண்டுமானலும் சொல்லலாம்....நீதியைப்பற்றி யார் வேண்டுமானலும் பேசலாம்....!
பொதுவில் நடக்கும் சமூகதீங்குகளை உணர்தலும் அதன் கறைகளை களைதலும் விழிப்புணர்வு என்னும் உணர்ச்சியின் சீற்றம் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
செம்மையான சமுதாயத்தின் அங்கமாவோம்...! பொறுப்புள்ள தமிழ் குடிமக்களாவோம்....! செழுமையான சமுதாயத்தைப் படைப்போம்...!
கழுகு
பின் குறிப்பு: இந்த பதிவினை பகிரவிரும்பும் நண்பகள் தத்தம் வலைப்பதிவுகளில் இதை பகிர்ந்து நிறைய பேரிடம் இதை கொண்டு சேர்க்கவும். நமது வலுவான குரல் சரியான மாற்றத்தை விளைவிக்கும்.
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


Monday, February 06, 2012
கழுகு

