Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

Monday, September 17, 2012

புலவர். சா. இராமாநுசம் அவர்களுடன் ஒரு பேட்டி..



வயதில் மூத்தவன் என்றாலும் வலைப்பதிவுகள் எழுதுவதில் நான் இளையவன் தானே என்று கூறி பேட்டியை முடித்துக் கொண்ட தமிழ்ப் புலவர் ஐயா. இராமாநுசம் அவர்களிடம் இளைய தலைமுறையினர் மட்டும் இன்றி பெரியவர்களுமே கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. காலத்தின் போக்கில் கவிஞர்கள் கட்டுகளின்றி உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளை புதுக்கவிதைகள் என்ற பெயரிலும், பின் நவீனத்துவ கவிதைகள் என்ற பெயரிலும் நிறையவே  எழுதத் தொடங்கிவிட்டாலும் தமிழ் இலக்கண மரபினை உள்ளடக்கி எழுதப்படும் மரபுக் கவிதைகள் எப்போதுமே வாசிக்க சுகமாய்த்தான் இருக்கும். 

மொழியின் வளமையினை எடுத்தியம்பும் மரபுக் கவிதைகளைப் தமிழ் வலையுலகில் படைக்கும் ஐயா இராமநுசம் அவர்கள் பல காரணங்களுக்காகப் போற்றப்படவேண்டியவர். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ் வலைபபதிவர் திருவிழாவை வெற்றிக்கரமாய் நிகழ்த்திக் காட்டிய மிக முக்கியமானவர்களில் இந்த 81 வயது இளைஞரும் அடக்கம். தமிழ்ப் பதிவர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு சங்கம் ஒன்று தொடங்க வேண்டும் என்ற ஐயாவின் எண்ணத்தை கழுகு மிகப்பெரிய கருத்துப் புரட்சிக்கான விதையாய்ப் பார்க்கிறது. வயதும் அனுபவமும் எப்போதும் இளையரை வழி நடத்தும் என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்த ஐயா இராமானுசம் அவர்களின் பேட்டி இதோ உங்களுக்காக...
1)  வலைப்பதிவுகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது ஐயா?

வலைப்பதிவு  என்று, ஒன்று இருப்பதோ,அதுவும் நமக்கென சொந்தமாக வலையொன்று தொடங்கலாம் என்பதோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை நான் அறியாத ஒன்றே.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் என் உயிரினும் மேலான என் துணைவி, என்னை விட்டு  மறைந்த பின் என் வாழ்வேமுற்றிலும் முடங்கிப் போய்விட்டது. என் நிலை கண்டு வருந்திய என் இளைய மகள் என்னை ஆற்றுப் படுத்த,என துயரின் வடிகாலாக, இவ் வலையைத் தொடங்கிக் கொடுத்ததோடு,உரிய பயிற்சியும் தந்தாள்

2) தமிழ் புலவர் படிப்பினை நீங்கள் தேர்ந்தெடுக்க காரணம்..?

  1- தமிழ் மீது நான்  கொண்டிருந்த பற்று 
  2-இயற்கையாகவே கவிதை எழுதும் ஆற்றல்.
  3- அக்காலக் கட்டத்தில் வீறு கொண்டு விளங்கிய திராவிட                           இயக்கங்களின் தாக்கம். 
  4 என் சொந்த வாழ்வில் ஏற்பட்ட சில சூழ்நிலை மாற்றங்கள்.

3) தமிழர்கள் தமிழில் பேசுவதை பெருமையாக நினைக்காமலிருக்க காரணம் என்ன?

இதற்குப் பதில் சொல்வது என்றால் நீண்ட கட்டுரையே எழுத வேண்டும் ஒன்றா, இரண்டா பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

தமிழ் வாழ்க! இந்தி ஒழிக எனப் போராடி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் தாய் மொழியாகிய தமிழுக்கு உரிய முக்கியத்தைத் தராமல்,மறைமுகமாக ஆங்கிலமொழி மோகத்திற்கே துணை       நின்றதே முக்கிய காரணம். அதன் விளைவாக பட்டித் தொட்டி முதல் மாநகரங்கள் வரை மழலையர் பள்ளி தொடங்கி  மேல்நிலைப் பள்ளி வரை ஆங்கில மொழியில் போதனா முறைப் பள்ளிகள் புற்றிசல் போல் 
வளரத் தொடங்கின. 

மேலும்   அப்பா, அம்மா என்று குழந்தைகள் அழைப்பதை விட மம்மி, டாடி என்று அழைப்பதையே பெருமையாகக் கருதும் பெற்றோர்களும்                    

ஊடகங்களான செய்தித் தாள்களும் தொலைக்காட்சி பெட்டிகளும் கூட முக்கிய காரணங்கள் என்று சொன்னால் மிகையல்ல! இன்னும் பல இதுபோல உள!
           

4) மரபுகளை உடைத்து எழுதப்படும் கவிதைகளை பற்றி தங்கள் கருத்து..?

இது, காலத்தால் ஏற்பட்ட மாற்றம்! இன்று மரபுக் கவிதைகள் எழுதுவோர் குறைந்துவிட, புதுக்கவிதை எழுதுவோர் மிகுந்து விட்டனர்  நல்ல மரபுக் கவிதைகளை எழுதும் சிலர்கூட  புதுக்கவிதை எழுதுவதைக் காண்கிறோம். இது காலத்தின் கட்டாயம் போலும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே என்பதுதானே இலக்கணம்! எனவே இதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

5) அறிவியலை அறிய தமிழ் மொழி அவ்வளவு வளமானது அல்ல என்று கூறுபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...?

இக் கூற்று சரியானதல்ல! தமிழ் மொழிபோல் சொல்வளம் மிக்க மொழி வேறு எதுவுமில்லை! நம்முடைய முயற்சியற்ற தன்மை, ஆங்கிலம் தான் ஏற்றது என்ற பெரும்பான்மை மக்களின் குருட்டுத் தனமான எண்ணம் தனித்தமிழ் ஆர்வலர்களின் விட்டுக் கொடுக்காத முரட்டுப் பிடிவாதம்!
               இப்படி எத்தனையோ காரணிகளால் ஏற்பட்டுள்ள, நம்முடைய இயலாமைக்குத் தமிழை இவ்வாறு கூறுவதை ஆணித்தரமாக மறுப்பதோடு வன்மையாக கண்டனம் செய்கிறேன்.

6) பதிவுலகம்....உங்கள் பார்வை என்ன?

 இன்று பதிவுலகம் மக்களால் கவனிக்கப் படும்ஒன்றாக ஆகிவிட்டது  கருத்து சுதந்திரம் தமக்கு இருக்கின்ற காரணத்தினால் பதிவர் தடம் மாறி கண்டபடி எழுதுவதோ, நாகரிக மற்ற வார்த்தைகளை எழுதுவதோ தவிர்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்
        
7) பதிவர் சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதின் காரணம் என்ன?

இதற்கு நான் பதில் சொல்வதை விட ஓராண்டுக்கு முன் நான் எழுதிய பதிவை உரிய பதிலாக இங்கே வெளியிடுகிறேன்.
        
         பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?

     
அன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே!
          வணக்கம்!
விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் போல வலைவானில் ஒளிவிடும் நம் வலைகளுக்கு விரைவில் அரசின் கட்டுப்பாடு வருகின்ற சூழ்நிலை உருவாகி வருகிறது   அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதுவரை சுதந்திரமாக எழுதிவந்த, நம் கருத்துகளை அடக்கவும் ஒடுக்கவும்  முற்படலாம். அதனால்  சிலர் இன்னலுக்கு ஆளாகலாம் அவற்றை  எதிர்கொள்ள நமக்குள் ஒற்றுமை வேண்டும். இதற்கென ஓர் அமைப்பை,இயக்கத்தை உருவாக்கி சட்ட திட்டங்களை அமைத்து சங்கப்பதிவுப் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும்

தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும் என்று சொல்வார்கள். நீண்ட காலம் தொழிச்சங்க வாதியாகவும் தலைவனாகவும்  நான் பணியாற்றி உள்ளதால் இவ்வாறு, அமைப்பு இருக்குமானால் நம் உரிமைகளை எப்படி பாதுகாக்க முடியும் என்பதை அறிவேன்

"உலகத் தமிழ் வலைப் பதிவாளர்கள் சங்கம்" என்றோ அல்லது வேறு,( அனைவரின் கருத்துக்கு ஏற்ப)   பெயரிலோ செயல்படலாம்
       
8) பல அணியாய் இருக்கும் பதிவர் சங்களை விட.. ஒரே சங்கம் தமிழகம் முழுதும் என்று  கொண்டு வந்துவிட்டால் அதனால் என்ன மாதிரி பலன்கள் கிடைக்கும்...?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கேற்ப, நாம் அனைவரும்  ஒரே அமைப்பின் கீழ் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வரும் எதிர்ப்புகளை எதிர் கொள்ள இயலும். இல்லையெனில் பிரித்தாளும் சூழ்ச்சிக் காரர்களால் நாம் முறியடிக்கப் படுவோம்


9) தங்கள் அனுபவத்திலிருந்து இளைய தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?

இன்றைய இளைய தலைமுறையினருக்கு, நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும், சேவை மனப் பான்மையும் கட்டாயம் தேவை  மேலும் நாடு முன்னேற, நாம் நாட்டுக்கு என்ன செய்தோம் என்று எண்ண வேண்டுமே தவிர, நாடு நமக்கு என்ன செய்தது என்று, கேட்கக் கூடாது என்பதே!


10) பதிவர் சங்கத்தை வேண்டாம் என்று எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது

 கட்டுண்டோம்! பொறுத்திருப்போம் காலம்  மாறும்.


11) பதிவர் சங்கம் மூலம் என்ன சாதிக்க முடியும்..?? பதிவர் சந்திப்பில் வெறும் கூடி கலைவது மட்டும் போதுமா..
    
இதற்குரிய பதிலை மீண்டும் சொல்வது, கூறியது கூறலாகும்.

அடுத்தது நாங்கள் நடத்திய முதல் பதிவர் சந்திப்பே கூடிக்கலையும்  ஒன்றாக இல்லையே! கவிதை நூல் வெளியீடு கவியரங்கம் என்றுதானே    நடத்தினோம்.

12)  தற்போது நடந்த பதிவர் சந்திப்பில் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அதை மிகுதியானவர்களிடம் நீங்கள் கொண்டு சேர்த்திருக்கலாமே....?

சிலரைப் போல நீங்களும் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டீர்களோ என்றே கருத வேண்டியுள்ளது. 

தற்போது நடந்த பதிவர் சந்திப்பும் அதன் மாபெரும் வெற்றியும் முன்னின்று நடத்திய நாங்களே எதிர் பாராத ஒன்று, ஏதோ மூன்றுபேர் என் இல்லத்தில் கூடி நான்,மதுமது,மின்னல்)திட்டமிட்டுப் போட்ட விதை முளைத்து ஆலமரமாகத் தழைக்கும் என்று கனவிலும் கருத வில்லை.  சென்னைப் பித்தனையா அவர்களையும் கலந்து, திட்டமிட்டே   நாளைக்குறிப்பிட்டு  பதிவர் சந்திப்புக்கு வருக என, எங்கள் வலைகள்     வழியாக அழைப்பும் கொடுத்து வருபவர் தங்கள் பெயர்களைப் பதிய      வேண்டினோம். காரணம் வருபவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி      செய்வதற்காக.

பொதுவாக, பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டினோமே தவிர, தனிப்பட்ட முறையில் நாங்கள் யாரையும் அழைக்கவில்லை.அப்படி ஓர் எண்ணம் எங்களுக்குத் தோன்ற வில்லை என்பதே உண்மை.

மற்றபடி, யாரையும் புறக்கணிக்கவோ, உதாசீனப்படுத்தவோ எள்ளவும் எண்ணவில்லை. மேலும் தங்களின் ஆதங்கம் நியமானது என்றாலும் தங்கள் கழுகு குழுமத்தைச் சார்ந்த, இங்குள்ள, யாரேனும் ஒருவர் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு இது பற்றி விளக்கியிருந்தால் மிக, சிறப்பாக இருந்திருக்குமே! நாங்களும் வரவேற்று வாழ்த்தியிருப்போமே!

 இது, தங்கள் கேள்விக்குரிய பதில் மட்டுமல்ல என், தன்னிலை விளக்கமாக எடுத்துக்கொள்ளும்படி, தங்களையும், தவறாகப் புரிந்து கொண்டுள்ள சிலரையும் வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்
                                      
    
13) பதிவர்களிடையே ஒற்றுமை இருக்கிறதா..? அல்லது ஒன்று சேர்க்க முடியுமா.?

பதிவர்களிடையே ஒற்றுமை இருக்கிறதா..?  இவ்வாறு ஆய்வு செய்வதே உள்ள ஒற்றுமைக்கு ஊறு செய்வதாகும் என்பதே என் கருத்தாகும்! வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தானே சனநாயகம். பயிரிட நினைக்கும் விவசாயி களை முளைக்குமே என்று கவலைப்பட இயலுமா?
           நம்பிக்கை தானே வாழ்கை! முயற்சி திருவினையாக்கும் என்பதை மறக்கலாமா?! முயல்வோம் வெற்றி பெறுவோம்!

14) வலைப்பூக்களில் எழுத வந்த பின் ஏன் எழுத வந்தோம் என்று எண்ணி இருக்கிறீர்களா?

ஆம்! சில நேரங்களில் நினைத்ததுண்டு .காரணம், உள்ளமல்ல! உடல்!  முதுமையின் காரணமாக முகுவலி வரும்போது மட்டுமே இவ்வாறு தோன்றுவதுண்டு
   
15) பதிவுலகத்தில் இருப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கிறதா? குறைகிறதா..?

என்னைப் பொறுத்தவரையில், பதிவுலகத்தில் இருப்பதால் மன அழுத்தம் முற்றிலும் இல்லை என்றே சொல்லவேண்டும்! இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இன்று நான் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஆதாரமாக இருப்பதே பதிவுலகம்தான்!

நான் உண்ணும் உணவோ, உட் கொள்ளும் மருந்தோ காரணமல்ல, என் உயிரினும் இனிய வலையுலக அன்பு உறவுகள் என்பால், (மறுமொழி வாயிலாக) காட்டும் பரிவும், பற்றும், பாசமும்,நேசமும் தான் என்பதை இங்கே உரைக்கக் கடமைப் பட்டுள்ளேன்

முடிவாக, என்னைப் பல கேள்விகள் கேட்டு, முடிந்தவரைபதில் சொல்ல வைத்த தங்களை, நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான 

வயதில் மூத்தவனாக நான் இருந்தாலும் வலைப்பதிவில் இளையவன்
தானே! அவ்வண் இருக்க எதற்காக என்னைத் பேட்டிகாண, முனைந்தீர்கள்! புரியவில்லை! என்னிலும் தகுதி வாயந்த, தரம் மிகுந்த மூத்த பதிவர்கள் பலரிருக்க என்னை.........! புரியவில்லை!

                           காரணம் எதுவாகினும், உங்களுக்கு உளங்கனிந்த நன்றி! நன்றி!



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Monday, June 04, 2012

மணிஜியுடன் ஒரு கலக்கல் பேட்டி....!


பதிவுலகம் என்னும் மாயா உலகில் எழுத்துக்களால் கிடைக்கும் நட்புக்கள் அந்த மாயக்கட்டினை உடைத்து தூர எறிந்து விடுகின்றன. ஆமாம்... மணிஜி  மாதிரி அனுபவமிக்க மனிதர்கள் மாற்றுக் கருத்துக்களை பகிரும் போது கூட உதட்டில் புன்னகையை ஏந்தி அன்புடனே இதைப் பகிர்கிறார்கள். இணைய நட்பு வட்டத்தில் யாராலும் மறுக்க முடியாத நேசத்துக்குரிய மணிஜி அவர்களிடம் இருந்து புதிய பதிவர்கள் மட்டுமல்ல நிறைய பழைய பதிவர்களுமே கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன.

பேட்டிக்காக நாம் மணிஜி அண்ணனை அணுகிய போது தோளில் கை போட்டு சாகவாசமாய் நம்மோடு பேசத் தொடங்கினார்...பேட்டி கொடுக்குமளவிற்கு நான் இன்னும் வளரவில்லையே என்று அவர் கூறியது அவரின் இயல்பான மனோநிலையை எடுத்துரைத்தாலும், தண்டோரா என்னும் வலைப்பூ மூலம் அன்றும் இன்றும் என்றும் கலக்கும் மணிஜியின் படைப்பாற்றல் திறன் என்னவென்று அவரை வாசித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்...! இதோ மணிஜியின் கலக்கல் பேட்டி உங்களுக்காக...

மணிகண்டன்..........அன்பு மணிஜி ஆனது எப்போது எப்படி?

என்னிடம் ஒரே ஒரு கதர் ஜிப்பா இருக்கிறது என்பதை தவிர எனக்கும் ஜீக்கும் எந்தவித ஸ்நானப்ரார்ப்தியும் இல்லை.. பெயர் சுருங்குதல் பிரபலத்தின் அடையாளம் என்ற விதிப்படி மணிஜி ஆகி விட்டேன்:-)

உதவி இயக்குனராய் இருந்த நீங்கள் தனியாய் திரைப்படம் இயக்கும் இலக்கை விடுத்து விளம்பர உலகத்திற்கு மாறியது ஏன்?

சினிமா ஒரு மாயக்கிணறு.. கற்பனையில் நீச்சலடிக்க சுகமாக இருக்கும்.... எல்லோராலும் ஜெயிக்க முடிவதில்லை.. திருமணம் ஆகிவிட்டதால் , தாக்கு பிடிக்க முடியாமல் சினிமாவை விட்டு வெளியேறும் சூழல்.. லட்சியம் என்ற வெங்காயத்தை நான் கண்ணீருடன் உரிக்கலாம்.. ஆனால் நம்பி வந்தவளுக்கு என்ன தலையெழுத்து!!

உதவி இயக்குனராய் இருந்த போது உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் என்ன...?

ஜீவிதம் ஒரு ராகம் என்று ஒரு மலையாளப்படம்.. வயநாட்டில் படபிடிப்பு.. பிரேம் நசீரின் மகன், சாதனா நடித்தது.. மம்பட்டியான் முதலில் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமானப்படம்.. திடீரென்று தயாரிப்பாளரை காணவில்லை.. என்னோடு சேர்த்து 4 உதவி இயக்குனர்கள்.. அத்துவான காட்டில் நிற்கிறோம். கையில் சல்லிக்கூட இல்லை.. கொலைப்பட்டினியோடு ஒரு டெம்போவில் கெஞ்சி கேட்டு பாலக்காடு.. அங்கிருந்து வித்தவுட்டில் சென்னை.. (சென்னை வந்தும் பட்டினிதான் என்பது தனிக்கதை)

முதல் முதலாய் நீங்கள் இயக்கிய குறும்படம் எது...? 

டிஜிடல் சினிமா மேக்கிங் என்றொரு க்ராஷ் கோர்ஸ் படித்தேன்.. நவீன தொழில்நுட்பங்களை அப்டேட் செய்து கொள்ள.. அது முடித்தவுடன் ஒரு குறும்படம்.. அதாவது பிராஜெக்ட் படம் செய்தேன். மிஸ்ஸிங் லெட்டர்ஸ் என்பது படத்தின் பெயர்.. நாம் இருவர்..நமக்கு இருவர்  என்பது நமக்கு ஒருவர் ஆனது.. எதிர் காலத்தில் நாமே இருவர்.. நமக்கேன் இன்னொருவர் என்று ஆனால்? அதுதான் கரு . அத்தை ,மாமா, சித்தப்பா என்கிற உறவுகள் அழியும் நிலையை பிரதிபலிக்க முயற்சித்திருந்தேன்.. அந்தப்படத்தின் சிடி காப்பி என்னிடம்(இப்போது) இல்லை.. மிஸ்ஸாகி விட்டது:-)


குறும்படங்கள் எந்த அளவிற்கு சமூகத்தில் தாக்கத்தை உண்டு பண்ண முடியும் என்று நினைக்கிறீர்கள்...?

ஆத்மதிருப்தி.. எல்லோருக்கும் விமானம் ஓட்ட ஆசைதான்.. ஆனால் சாத்தியமா? ஆனால் எல்லோராலும் காத்தாடி விடமுடியும்.. குறும்படமும் அப்படித்தான்.. சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றால் , முடியாது என்பதுதான் என் கருத்து.. பரவலாக எல்லோரையும் குறும்படங்கள் சென்று அடைவதில்லை என்பதினால் இருக்கலாம்.. 

குறும்படங்களை காண்பதற்கு இணையம் மட்டுமே உதவுகிறது என்று வைத்துக் கொண்டால் அது வெகு ஜனங்களிடம் சென்று சேர முடியாது தானே?

உண்மைதான்.. ஆனால் தமிழ் ஸ்டூடியோ போன்ற அமைப்புகளின் பணி மகத்தானது.. அது போல இன்னும் நிறைய அமைப்புகள் குறும்படங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தால் வரும் காலத்தில் சாத்தியமாகலாம் 

எதிர் காலத்தில் திரைப்பட இயக்குனர் ஆகும் திட்டமிருக்கிறதா? 

நிச்சயம்.. ஒரு நல்ல படத்தை எடுப்பேன்.. ஆனால் நிச்சயம் ஓடாது.. 

விளம்பர நிறுவனம் நடத்தி இருக்கிறீர்கள்...அதனால் இந்த கேள்வி ....ஒரு நல்ல விளம்பரம் ஏதோ ஒரு கெட்ட பொருளைக் கூட விற்று விட முயலுகிறதே இதில் என்ன தர்மம் இருப்பதாக நினைக்கிறீர்கள்...?

நாய் வித்த காசுதான்..

வலையுலகத்திற்குள் எப்படி நுழைந்தீர்கள்....?

நான் வலையுலகத்துக்கு வருவதற்கு காரணம் தமிழ் ஸ்டுடியோ திரு அருண் தான்.. பின் ஜாக்கிசேகர்.. . இப்போது அவர்கள் வருத்தப்படக்கூடும்.. ஆனாலும் அவர்களுக்கு என் நன்றிகள்!!

தற்போது படைப்பாளிகள் என்றாலே மேதாவிகள்...மற்றும் வெகு ஜன சாதரணர்களுக்கு அன்னியமானவர்கள் என்பது போல நடந்து கொள்கிறார்களே இது பற்றி உங்கள் கருத்து...?

:-))))))))
இலக்கியவாதிகள் என்ற பெயரில் சராசரி வாசகனை குழப்பத்தில் ஆழ்த்தும் எழுத்துக்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்..?

தலைகீழாகத்தான் பார்க்கிறேன்..அதாவது சரக்கடித்த ஃபீலிங்கோடு

வலைப்பூக்கள், சமூக இணைய தளங்கள் இவற்றின் வளர்ச்சி எதிர்காலத்தில் சமூகத்தை பாதிக்குமா?

இனிமேலும் பாதிக்க ஏதாவது மீதி இருக்கிறதா? இப்போதே கற்பழிப்புவரை முகப்புத்தகம் வந்து விட்டது

மிக மிக முக்கியமான கேள்வி.......தங்கள் இளமையின் ரகசியம் என்ன?

மனம் போல் வாழ்க்கை.. (ஆனாலும் இந்த கேள்வி நெம்ப ஓவர்)

நீங்கள் பார்த்து வியக்கும் மனிதர் யார்?

கமல்ஹாசன்

முதல் முறையாக கேமராவை தொட்டுப் பார்த்த போது என்ன நினைத்தீர்கள்..?

நான் உதவி இயக்குனராக இருக்கும்போது கேமராவை தொட அனுமதியில்லை.. மீறி வ்யூ ஃபைண்டரில் பார்த்தால் அபராதம் கூட உண்டு. முதல் முறை கேமராவை தொட்டபோது , உண்மையில் காதலியின் முதல் ஸ்பரிசத்தை விட சுகமாக இருந்தது

அரசியலில் ஈடுபடும் எண்ணமிருக்கிறதா?

ஜீனியர் விகடன் கழுகார் நீங்கள் இல்லையே பாஸ்:-)

பணிச்சுமையையும் சமாளிக்கிறீர்கள்... இணையத்திலும் சிக்சர் அடிக்கிறீர்கள் எப்படி...?

பணிச்சுமை என்று இல்லை.. என் வேலையை நான் மிக விரும்பி செய்கிறேன். மேலும் அது எனக்கு ஆகாரமும், ஆதாரமும்.. இணையத்தில் சிக்ஸர் என்பதெல்லாம் டூ மச்.. நண்பர்களுடன் இணைந்திருப்பது மிகவும் பிடித்த விஷயம்.. உட்கார்ந்த இடத்தில் இருந்து அது இணையத்தில் சாத்தியமாகிறது.. 

ஜாலியாக இருப்பதற்கு டிப்ஸ் கொடுங்களேன்....?

ஜாலியாக இருங்கள்..

இணைய உலகத்திற்குள் நீங்கள் வந்ததால் பெற்றது என்ன? இழந்தது என்ன?

ஒன்றையும் இழக்கவில்லை.. ஆனால் நிறைய பெற்றிருக்கிறேன். நட்பு, அன்பு..கொஞ்ச(ம்) காதல்:-)

தற்போது வலைப்பூவில் எழுதுவபர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?

உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் எழுதுங்கள்.. வாசிப்பவர்கள் அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்வார்கள்..
                                                                                      --
                                                                             
 (கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes