Monday, October 10, 2011

அணுமின் நிலையங்கள் நிஜத்தில் தேவைதானா? மாற்று வழிகள் பற்றிய ஒரு பார்வை...!


அணுமின் உற்பத்தி மட்டுமே நம் மின்தேவைகளை பூர்த்தி செய்யமுடியும் என்ற பொய்யான மாயையில் திளைக்கிறது அரசாங்கம். அதன் விளைவுகளை துளி கூட சிந்திக்காமல் பாதுகாப்பானது, பாதுகாப்பானது என்று  மட்டும் ஒப்புவிக்கிறது. அவர்கள் பேச்சின் உண்மை கல்பாக்கம் மின் நிலையத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையிலேயே தெரிந்து விட்டது. இன்னும் அணுமின் நிலையத்தை கட்டிக் கண்டு அழ வேண்டும் என்றால் என்ன செய்ய? அத்தோடு பல ஆண்டுகளாக அணுமின் சக்தி துறை உற்பத்தி செய்த லட்சணம்  
இனி மாற்று வழிக்கு வருவோம்.


முதலில் நம் கண்ணில் படுவது சூரிய ஒளியில் மின்சாரம். இதற்கு ஆகும் செலவு என்பது மற்றவற்றில் இருந்து இரண்டு மடங்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால்  கிராமப்புற மக்கள் பயன்படுத்துவது இதுதான். அங்கு என்ன அம்பானியா இருக்கிறார்கள்? முன்னதாக தெருக்களில் எல்லாம் கூட இந்த வகை விளக்கை அமைத்தார்கள். இதற்கு ஆகும் முதலீடு மட்டுமே அதிகம்.மற்றபடி இதை பராமரிப்பது எளிது,அத்தோடு அதிக பின் விளைவு இல்லாத ஒன்று இதுவே. மத்திய அரசே ஒரு திட்டம் அமைத்து இது குறித்த விழிப்புணர்வை ஓரளவிற்கு பரப்பி வருகிறது. இது நாம் காலத்தால் மறந்து விட்ட பொதிகை தொலைக்காட்சியில் கூட முன்னர் ஒளிபரப்பப்பட்டது. அதாவது ஒரு வீட்டுக்கு அடிப்படை மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய 5 லட்சம் ஆகும். இதில் அரசே மானியமாக இரண்டு லட்சம் வேறு தருகிறது. மீதிக்கு வங்கி மூலம் கடன் பெறலாம். தனியொரு குடும்பத்துக்கு இது அதிகம் என்றாலும் அரசாங்கம் நினைத்தால் இது எளிது.

இது போக பல சாதனங்கள் சூரிய ஒளியில் இயங்கும் வண்ணம் வந்துவிட்டது. பெங்களூரு நகரில் பெரும்பாலும் சூரிய ஒளி மூலம் மட்டுமே வாட்டர் ஹீட்டர்கள் செயல்படுகிறது. இது போக பல இடங்களிலும் சூரிய ஒளியில் இயங்கும் அடுப்புகள் வந்து விட்டன.
Harish Hande  என்ற கர்நாடக இளைஞர் செய்த முயற்சி இந்தியாவில் பிற்படுத்த பகுதிகளில் 120,000 வீடுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் கிடைத்து உள்ளது. இவர் இந்த முயற்சிக்கு பெற்ற விருதுகள் ஏராளம். இவரின் முயற்சிகளை பின் தொடர்ந்தாலே நாம் சூரிய ஒளியில மின்சாரம் மூலம் தன்னிறைவு அடைய முடியும். 
சரியாக கூறுவது என்றால் 60 km x 60 km உள்ள இடத்தில் 1,00,000 MW மின்சாரம் நாம் உற்பத்தி செய்ய முடியும். இது எத்தனை நம் அணு உலைகளை விட பல மடங்கு அதிகம். இந்தியாவில் உள்ள பாலைவனப் பகுதி மட்டும் 2,08,110  km. இதில் மட்டுமே நாம் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய இயலும். 
கொஞ்சம் யோசித்து பாருங்கள் அணு உலை, அதன் விளைவுகள், கடல் நீர் பிரச்சினை, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது என எல்லாவற்றையும் நாம் யோசிக்க வேண்டும். 
நான் முன்னர் கூறியது போல தனியொரு குடும்பம், ஒரு அரசாங்கம் என எவர் வேண்டும் என்றாலும் உற்பத்தி செய்யும் அளவுக்கு வசதி உள்ளது தான் சூரிய ஒளியில் மின்சாரம். கைக்கடிகாரம் தொடங்கி, வாட்டர் ஹீட்டர் வரை வந்து நிற்கும் இந்த வசதி ஏன் வீடுகளுக்கு பயன்படுத்த முடியாது ? 
ஒரு அரசு நினைத்தால் இதை நிறைவேற்ற முடியும். கடந்த ஆண்டுகளில் (2000 இல்) இருந்தததை விட Photo Voltaic(PV) cellவிலை இப்போது பாதி ஆகி விட்டது.  அத்தோடு இதன் மூலம் மின்சாரத்தை நாம் சேமிக்க உதவும் லித்தியம் பாட்டரிகள் Recycle செய்யும் வண்ணம் இப்போது உருவாக்கப்படுகின்றன.

தனியார் மூலம் இந்த சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க ஆவது பற்றிய ஒரு குறிப்பு: படிக்க

இந்தக் கணக்கு தனியார் சொல்வது. மூலப்பொருள்கள் விலை மாறப்போவது இல்லை, உற்பத்தி இதுவரை சொல்வது எல்லாம் உண்மை. அணு மின் போல பொய் அல்ல. வேறு என்ன வேண்டும்  
 அணு மின்சாரத்திற்கு ஆரம்பத்தில் எவ்வளவு செலவு செய்கிறோம். அதை பராமரிக்க எவ்வளவு  முதலில் அணு மின் கழிவுகளை எங்கு கொண்டு எறிய போகிறோம்? இதை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்களும் செலவுகளும் எந்தக்கணக்கில் அடங்கும்? என்று அரசாங்கம் கணக்கிட்டால் சூரிய ஒளி மின் உற்பத்தி இதில் பாதி கூட வராது.

அணு உலை அமைக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தி வேண்டும் என நிர்ணயிக்கும் அரசாங்கம்அதை உற்பத்தி செய்கிறதா? என்றால் இதுவரை இல்லை. ஆனால் செலவு மட்டும் பன்மடங்கு ஆகும்.


நாம் கையேந்தும் அமெரிக்கா கூட இந்த தொழில்நுட்பதுக்கு வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இந்தியாவில் இது பெரும்பாலும் தனியார்கள் கையில் மட்டுமே உள்ளது. நிலக்கரி மூலம் பெறப்படும் அனல்மின்சாரம் ரொம்ப நாள் வராது சூரிய ஒளி ஒன்றும் தீரக்கூடியது இல்லை. ஒரு வேலை இதிலும் தனியார் தான் கொழிக்க வேண்டும் என்பது அரசின் எண்ணமாக இருக்கலாம். 

இரண்டாவது நதி நீர் இணைப்பு. நதி நீர் இணைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நதி நீர் இணைப்பின் போது நிறைய அணைகள் கட்டப்பட வேண்டும். அதிலிருந்து செய்யப்படும் உற்பத்தி போதாதா? ஓட்டு அரசியல் மட்டுமே செய்யும் கட்சிகள் இதை செய்யுமா?
 மூன்றாவது காற்றாலை. இதனால் நட்டம் தான் என்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் நம் மாநில அரசு தமிழக காற்றாலை உற்பத்தியை முழுவதுமாக பயன்படுத்தி இருந்தால் மின் தட்டுப்பாடே நம் மாநிலத்துக்கே வந்து இருக்காது. விலை அதிகம் என்று கூறி அதை மறுத்து, வாங்கிய மின்சாரத்தை ஒழுங்காக கொண்டுவரத் தெரியாமல் அதிலும் இழப்பு.


உற்பத்தியை மட்டும் கவனத்தில் கொள்ளும் அரசாங்கம் ஒழுங்காக சேமிக்கிறதா மின்சாரத்தை உற்பத்தி செய்த மின்சாரத்தை கடத்தி செல்லும் மின்கம்பிகள் சக்தியற்று இருப்பதால் பாதி இழப்பு வருகிறது. நம் உற்பத்தியில் பாதி இழப்பிலேயே போய் விடுமானால் இனி உற்பத்தி செய்வதை மட்டும் எந்த லட்சணத்தில் சேமிக்கப் போகிறோம்? ஆனால் சூரிய ஒளியினை பயன்படுத்தினால் கண்டிப்பாக சேமிக்க வேண்டும். இதை மற்றவற்றுக்கும் பின்பற்றும் எண்ணம் அரசுக்கு வரும். 


சூரியஒளி மின்சாரம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கின்றது. நீரோ காற்றோ குறிப்பிட்ட பருவகாலத்தில்தான். நிலக்கரியோ என்றுவேண்டுமானாலும் தீர்ந்துவிடும்.

சூரிய ஒளியோ இப்பூமி உள்ள மட்டும் நமக்கு கிடைக்கும் வற்றாத வளம். இதை பயன்படுத்த அரசு முன் வரவேண்டும். இதற்கு நாம் அரசை தூண்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனக்கூறி கட்டுரையை நிறைவு செய்வோம்.

கழுகிற்காக  பலே பிரபு



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)



Saturday, October 08, 2011

சிறகடிக்கும் கழுகின் பயணத்தில்...!


கழுகென்னும் பறவையை நாம் நமது இலச்சையாய் கொண்டிருப்பதின் பின்புலத்தில் வெறுமனே கழுகு என்றொரு பதம் கொள்வோம் என்ற விடயம் எம்மிடமில்லை, ஆனால் உயரப்பறக்கையில் எல்லைகள் என்னும் மாயா வெளிகள் உடைந்து போய் ஒற்றைப் பூமிதான் நமது கண்களுக்குத் தெரியும் என்ற உண்மையின் படி

பூமி தாண்டிய அகண்ட வெளியில் சிறகுகள் விரிப்பது போல நாமும் மனம் விரித்துப் பார்க்கையில் மானுட மனங்களுக்குள் மட்டுமே பிரச்சினைகள் இருப்பதும், இயற்கையில், இந்த பூமி சுழலும் சுழற்சியில் எதுவும் குற்றங்கள் இல்லாதிருப்பதையும் நாம் தெளிவாக உணர முடியும். உயரப் பறக்கையில் கிடக்கும் அற்புத உணர்வை ஜீவராசிகளில் கழுகு என்னும் பறவைக்கு அந்த இயற்கை அளித்திருக்கிறது.

மானுடராகிய நமக்கு சிறகென்ற ஒன்று தனித்தில்லாவிட்டாலும் மனமென்ற ஒரு அற்புத சூட்சும வஸ்தினை அதே இயற்கை நமக்கு கையளித்திருக்கிறது. சிறகு விரித்து பறப்பது போல உயர்ந்த எண்ணங்கள் கொண்டிருந்தால் உயரப் பறக்கும் மாயம் நிகழ்ந்தேறியே விடும்.

அப்படியான சீற்றமிகு உயரப் பறத்தலில், சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகள் எல்லாம் அறுபட்டுப் போக இயல்பில் மிளிரும் மானுடராய் நாம் மிளிர முடியும். கழுகு ஏன் படைக்கப்பட்டது? எங்கே நகர்கிறது? இதற்கு ஒரு குழுமம் என்று ஒரு கூட்டம் அவசியமா? யாரெல்லாம் கழுகு என்ற  புத்தியில் இருக்கும் கேள்விகளை ஒவ்வொன்றாய் நாமே எமது மூளைகளுக்குள் போலியாய் எழுப்பி அதற்கான பதிலை இக்கட்டுரையின் மூலம் பகிர்கிறோம்.

காலமெல்லாம் மானுட சிந்தனைகள் எல்லாம் ஏதோ ஒரு கொட்டடியில் அடைபட்டு குறிப்பிட்ட ஒரு சித்தாந்தத்தை, மதத்தை, சாதியை, கோட்பாடுகளை இறுகப் பிடித்துக் கொண்டு அதை வலியுறுத்தியே நகர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படியான நகர்தல் தவறென்று நாம் கூறவில்லை, ஆனால் இப்படியாய் ஒரு சித்தாந்தத்தை வலுவாய் நம்பி நகர்கையில் வேறொரு கொட்டடியில் இருக்கும் நல்ல கருத்தினை நாம் உற்று நோக்கா வண்ணம் நாம் சேர்ந்திருக்கும் அல்லது சார்ந்திருக்கும் கொள்கைகள் நம்மைக் கிடுக்குப் பிடி போட்டு தடுத்து விடுகிறது.

ஏனேனில் உலகம் பரந்தது, விரிந்தது உண்மை இதுதானென்றும், அதற்கான வழி ஒன்றுதானென்றும் முடிவெடுத்து நகர்தல் முற்றிலும் சரியான விடயமல்ல. கோடையில் பருத்தித் துணிகளை அணியவும், குளிர்காலத்தில் கம்பளித் துணி அணிவதும் இயற்கை நமக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள். நல்ல கருத்துக்கள் எங்கே இருக்கிறதோ அவற்றை எல்லாம் தேடி எடுத்து வந்து நாமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் அறியச் செய்வதுதான் சத்தியமான அறிவு.

காந்தியடிகளின் சத்திய சோதனையை வாசிக்கும் ஒரு மனிதன், வெறுமனே கோட்சே குற்றவாளி என்று கூறுவது ஒரு கோட்பாட்டில் சிக்கி ஒரு மனிதரால் ஈர்க்கப்பட்டு அதனால் எடுக்கும் ஒரு கருத்து நிலை, ஆனால் அதே மனிதன் கோட்சேவையும் படித்து உணர்ந்து, நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?  என்று அவன் கூறும் நிலைப்பாட்டை வாசித்து, சீர் தூக்கிப் பார்த்து, இல்லை இல்லை கோட்சே கூறுவதில்  தவறு இருக்கிறது இதை ஏற்க இயலாது அல்லது கோட்சே சொல்வது சரிதான் என்று மகாத்மாவையோ அல்லது கோட்சேவையோ சாராமல் எடுக்கும் முடிவுதான் சரியானது. 

இதைத்தான் நாம் விழிப்புணர்வு என்கிறோம்.

ஒரு செயலைச் செய்கிறோம்... சரி, ஏன் செய்கிறோம்? இது சரியா? என்ற தொடர் கேள்வியை மனதுக்குள் ஒவ்வொருவருக்கும் எழச் செய்து தத்தம் பார்வைகளை தெளிவாக்கிக் கொள்ளுங்கள் என்கிறோம். விழிப்பு நிலையில் ஒரு மனிதன் இருப்பானே ஆனால் அவனுக்கு வழிகாட்ட யாரும் தேவையில்லை. 100 குழந்தைகளை ஒரு பேருந்தில் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டும் ஒரு ஓட்டுனரின் பொறுப்புணர்ச்சியோடு ஒவ்வொரு மனிதனும் தன்னை உற்று நோக்க, உற்று நோக்க, உண்மை என்ன என்று கேள்வி கேட்க கேள்வி கேட்க... அங்கே வழிகாட்ட யாரும் தேவையில்லை.

கழுகு இப்போதும் சரி, எப்போதும் சரி பொருள் உதவி கேட்டு யாரிடமும் வரப்போவதில்லை. அதே நேரத்தில் உதவுதல் என்பதை ஒரு தன்னிச்சை நிகழ்வாக நிகழ்த்திக் காட்டவிருக்கிறோம் என்பதையும் அறிக. காலில் கொசு கடிக்கும் போது  எப்படி ஒரு மின்னல் வேக கட்டளையை மூளை நிறைவேற்றி நமது கரம் சென்று அந்த கொசுவை எப்படி அடிக்கிறதோ அதுபோல இயங்குகிறோம் என்ற எந்தவித கர்வமும், வெளிப்பாடும், விளம்பரமும் இல்லாமல் ஒவ்வொரு மனிதரையும் துன்பப்படும் எல்லா மனிதருக்கும் இயன்ற வரையில் உதவச் செய்ய செம்மையான பார்வை கொண்டவராக செய்யப்போகிறோம்.

அதற்கு...

ஒவ்வொரு மனிதரும் தத்தம் இருப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறோம். உங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள், மறுக்கப்படும்ந் நீதிக்காக ஒன்று சேருங்கள் வெகுண்டெழுங்கள், அப்படியாக நாம் வெகுண்டெழுந்து போராடி தேடும் நீதியைக் கொண்டு வாழ்வின் தரத்தை மேம்படுத்துங்கள்...

கண்டிப்பாய், உங்களை உங்கள் குடும்பத்தை, பிள்ளைகளை நேசியுங்கள், அவர்களுக்காக கடுமையாய், நேர்மையாய் உழையுங்கள். சர்வ நிச்சயமாய் பொருளதார பலம் பெருங்கள். பொருள் ஈட்ட, அறிவு வேண்டும், அறிவு என்பது விசாலமான பார்வை, விசாலமான பார்வைக்கு புரிதல் வேண்டும் புரிதல் என்பது விழிப்புணர்வு என்று கொள்க என்கிறோம்.

அய்யா பெரியாரால் துவங்கப்பட்ட திராவிடர் கழகம் ஒரு விழிப்புணர்வு இயக்கம்தான். அது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்றுதான் அய்யா விரும்பினார். ஆன்மீக, பொருளாதார, சமூக விழிப்புணர்வை அய்யா கொணர நினைத்தார், கொணர்ந்தார். அறிஞர் அண்ணா அதிலிருந்து பிரிந்து ஜனநாயகம் கொடுத்திருக்கும் அரசியல் என்னும் ஆயுதத்தை பயன்படுத்தி மக்களுக்கு நலம் செய்ய வேண்டும் என்று அரசியல் களம் கண்டார் வெற்றி வாகை சூடினார்.

இருவரின் செயலும் முழு விழிப்பு நிலையில்தான் நிகழ்ந்தேறியது. இன்று அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்ய இருக்கும் ஒரு களம் என்பதை எல்லோரும் மறந்திருக்கின்றனர். முழுமையான விழிப்புணர்வுள்ள ஒரு சமுதாயத்தில் மக்கள் பணி செய்ய வருகிறவர்கள் மக்களைக் கண்டு நடு நடுங்கிப் போவார்கள் என்பதினால் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் விழிப்புணர்ச்சியோடு சேர்ந்து அன்றாட வாழ்க்கையில் சுமூகமான இயங்கு நிலையில் எல்லோரும் செழித்து வாழும் ஒரு சுய ஒழுக்க விழிப்புணர்வினையும் பற்றி கழுகு இடைவிடாது பேசுகிறது.

நீங்களும் நானும் சமூகத்தினை பார்த்து விமர்சிக்கும் முன்னால், நம்மை தாண்டி மூன்றாம் மனிதனை பார்த்து கை நீட்டி ஏதேனும் சொல்வதற்கு முன்னால் நம்மை உற்று நோக்கி சரி செய்து கொள்வோம். பொருளாதார தன்னிறைவினை நானும் நீங்களும் பெறாமல் நம்மைச் சுற்றி கடன்களை வைத்துக் கொண்டு யாரோ ஒரு ஏழைக்கு எப்படி உதவி செய்வது? முதலில் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்...!

நம்முடைய பிரச்சினைகளின் மூலம் என்ன? கல்வியா? செல்வமா?சமூக அநீதியா? சமூக கட்டமைப்பா? அல்லது நமது சோம்பேறித்தனமா? இதை முதலில் அறிய வேண்டும். எப்படி அறிந்து கொள்வது?  எப்படி சரிப்படுத்திக்கொள்வது? என்று கேள்வி கேட்கையில் தனிமனிதன் சரியானால் சமூகம் சரியாகும் என்ற பதிலையும் உணர்வாய் பெற முடிகிறது.

கழுகு...சமூக பிரஞை கொள்ளச் சொல்கிறது. ஒவ்வொரு நமது செயலுக்கும் நம்மை பொறுப்பேற்கச் செய்கிறது, அதற்காய் உங்களின் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தச் சொல்கிறது.அநீதிகளை கண்டு வீறு கண்டு எழச் சொல்கிறது.

வலைப்பூ என்னும் நவீன அறிவியலின் அற்புதமான களம் யாரோ ஒரு இருவர் இன்று அல்லது நாளை மட்டும் கண்டு செல்லப் போகும் இடமல்ல..., காலங்கள் கடந்தும் கூகிளில் வந்து தலைப்பிட்டுத் தேடும் போது நாம் எழுதியதெல்லாம் வரிசையில் வந்து விழப்போகிறது. அதனை நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாசிக்கப் போகிறார்கள். உலகமெல்லாம் இருக்கும் தமிழ் மக்கள் எப்போதும் வாசித்துக் கொண்டேதானிருக்கப் போகிறார்கள்...

இங்கே நாம் பதிந்து வைத்து விட்டுப் போகும் செய்தி என்ன? என்பதிலும் கழுகு விழிப்புணர்வோடு இருக்கச் சொல்கிறது. இருக்கிறது.

நீவீர் கட்டுரை செய்து சமுதாயம் மாறிவிடுமா? என்று கேள்வி கேட்பவர்களை எல்லாம் தத்தம் மனசாட்சிகளை உற்று நோக்கி காலெமெல்லாம் கருத்துக்களே ஆட்சி செய்து வருகின்றன என்ற உண்மையைப் பகின்று வலுவான கருத்துக்களின் களத்தில் உங்களின் பங்களிப்பினை அளிக்க...
கழுகு விவாதக் குழு உங்களை வருக வருக என்றும் வரவேற்கிறது...!

நாம் கொள்ளா விடில்  பின் யார் கொள்வார் சமூக பிரஞை? என்ற உணர்வோடு ஒப்பற்ற இந்த ஊடகத்தினை சரியாய் பயன் படுத்தி அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் கருத்துக்களின் களஞ்சியமாக்க வேண்டாமா என்ற ஆதரக் கேள்வியை உங்கள் முன் வைத்து கட்டுரையை நிறைவு செய்கிறோம்.

கழுகு விவாதக் குழுவின் விதிமுறைகளை அறிய இங்கே அழுத்தவும்... 

கழுகு விவாதக் குழுவில் இணைய இங்கே அழுத்தவும்....  இங்கே அழுத்தவும்





(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Thursday, October 06, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (6.10.2011)





பஞ்ச்: 1


சட்ட மன்றத் தேர்தல் கூட்டணி சந்தர்ப்பாவாத கூட்டணி அப்டீன்னு விஜகாந்த் சார் சொல்லியும் ஜெயலலிதா அம்மாவும் சொல்லித் தெரிய வேணாம். ஆட்டோமேட்டிக்கா மக்களுக்கே தெரியும். இதுல விஜகாந்த் சார் பெருமை வேற நேத்து ஒரு ஆள் இன்னிக்கு 29 ஆள்னு வாய்ச்சவடால் வேற, ரெண்டு கட்சிய சேந்த ஆளுகளும் சேந்து போட்ட ஓட்டுல ஜெயிச்சிருக்கோம் அதுக்கு காங்கிரஸ் எதிர்ப்பும், திமுக ஆட்சியின் அதிருப்தியும் சேந்து உதவுனுச்சுன்னு இவுங்களுக்கு எல்லாம் தெரியும இல்லை தெரியாத மாதிரி ஆக்டிங்கா?

தனிப்பட்ட முறையில சினிமாவுல நடிச்சத தவிர வேறு எதை அரசியல் அடையாளமா விஜயகாந்துக்கு சொல்ல முடியும்? கொஞ்சம் அடக்கி வாசிங்க விஜகாந்த் சார் குறைஞ்ச பட்சம் உள்ளாட்சித் தேர்தல் முடியுற வரைக்கும்...முதல்வர் சீட் ரொம்ப பக்கத்துல இருக்குற மாதிரி நீங்க நினைச்சுகிட்டு இருக்கறது தப்புன்னு மக்கள் சீக்கிரம் புரிய வைப்பாங்க!

பஞ்ச்: 2

போன ஆட்சியில மின்வெட்டுக்கு காரணம் திமுக அரசுன்னு குத்தம் சொன்ன மக்கள் இப்போ தொடரும் அதே மின்வெட்டுக்கு அதிமுக அரசுதான் காரணம்னு சொல்லிகிட்டு இருக்காங்க, போன ஆட்சியில இது அதிமுக அரசியல் செய்ய உதவுனுச்சு ஆனா இப்போ திமுகவுக்கு  குத்திக்காட்ட உதவுது.

ஆக மொத்தம் மொத்தமா மின்வெட்ட போக்குறதுக்கு என்ன வழின்னு தெரியாம விழி பிதுங்கி நிக்குது தற்போதைய அதிமுக அரசு. வெளிச்சந்தையில மின்சாரத்த வாங்கப் போறதா அறிவிச்சு இருக்குற அரசு, தெலுங்கான போராட்டதுனால ஆந்திராவுல இருந்து கிடைக்கவேண்டிய மின்சாரமும், மழை பாதிப்பால ஒரிசாவுல இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரமும் கிடைக்கல அதனால 1026 மெகாவாட் மின்சாரம் குறைவா கிடைக்குதுன்னு மூக்கை சிந்த ஆரம்பிச்சு இருக்கு.மின்சாரப் பற்றக் குறைய நிரந்தரமா தீத்து வச்சுதுன்னா கண்டிப்பா அது மக்கள் மனசுல ஏத்தி வச்ச விளக்கா அடுத்த எலக்சன்ல கூட ஜெயிக்கிறதுக்கு உதவும்...

பார்க்கலாம்...அடிப்படை மக்கள் பிரச்சினையை ஆளும் அதிமுக அரசு எப்டி சமாளிக்குதுன்னு!

பஞ்ச்: 3

பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீருக்குள்ள 11 ஆயிரம் சீனப் பாதுக்காப்பு படையினர் முகாமிட்டு இருகாங்களாம். பாகிஸ்தான் அங்க நிறைய கட்டிட வேலைகள் எல்லாம் செஞ்சுகிட்டு இருக்காம் அதுக்கு உதவ சீனா தன்னோட பொறியாளர்களை அனுப்பி வச்சு இருக்காம். அந்த பொறியாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பா பாதுகாப்பு படை வீரர்களையும் அனுப்பி இருக்காம்.

நம்மாளுங்க எல்லாத்தையும் வேடிக்கை பாத்துகிட்டே இருப்பாங்க. ஏன்னா நாட்டுக்குள்ள இவனுக இருக்க முடியாம பண்ணி வச்ச வேலைய பாக்குறதுக்கே நேரம் பத்தலையே....! ராச தந்திரம், ராச தந்திரம்னு சொல்லி மேல இருக்குன சீனாக்காரனயும் கவனிக்கிறது இல்லை, பக்குதுல இருக்குற பாகிஸ்தான் காரனையும் கவனிக்கீறது இல்லை, காலுக்கு கீழ இருக்க இலங்கைகாரனையும் வளத்து விட்டாச்சு...!  மூணு பேரு சுத்தி வளச்சு  அடிக்கப் போறானுக அப்ப என்ன பண்ணும் நம்ம பாதுகாப்பு அமைச்சகம்னு பாக்கணும்...?

கொசுறு: சிதம்பரம் ஐயா தேக்கடியில இருக்காப்ல, ஒய்வெடுத்துகிட்டு...!

பஞ்ச்: 4

திராவிட  மற்றும் தேசிய கட்சிகளோடு இனி கூட்டு இல்லைன்னு ராமதாஸ் ஐயா சொல்லியிருக்கிறத பாக்கும் போதும் கொஞ்சம் ஓவராவே புல்லரிக்குது. மக்கள் மத்தியில பாட்டாளி மக்கள் கட்சின்ற ஒரு கட்சிக்கு நம்பிக்கை வர இன்னும் அதிக நாள் ஆகும் ராமதாஸ் சார். அதோட இல்லாம வட மாவட்டங்கள்ள குறிப்பிட்ட சாதிய  வச்சு நீங்க பண்ற அரசியல விட்டு கொஞ்சம் வெளில வர்றதோட மட்டும் இல்லாம மொத்த தமிழகத்தையும் நீங்க கவர் பண்ண தென் மாவட்டத்துக்கு எல்லாம் அடிக்கடி வரணும்...

ஏதோ ஒரு புதிய மாற்றுக் கட்சி வராதன்னு துடிச்சுகிட்டு இருக்குற தமிழனுக்கு யாராச்சும் தீனி போட மாட்டங்களான்ற ஆசை இருக்குற வரைக்கும் உங்களுக்கு சான்ஸ் இருக்கு பட்... அடுத்த எலக்சன்ல நீங்க திமுக கூடவோ அதிமுக கூடவோ கூட்டு வைக்காம இருக்கணும்? அம்புட்டுதேன்..!

பஞ்ச்: 5

அதாவது ஊழ்வினைப் பயன் அப்டீன்றது ஏதோ மறு ஜென்மத்துல வந்து உறுத்தும் அப்டீன்ற மாதிரி எல்லோரும் நினைச்சுகிட்டு இருக்காங்க ஆனா அப்டி எல்லாம் இல்லை உடனே உடனே உறுத்தும்ன்றதுக்கு சாட்சியா காங்கிரஸ் கட்சிய நாம சொல்லலாம்.

திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளரா சுஜாதான்னு ஒரு அம்மாவ தங்கபாலு அறிவிச்சு முடிச்ச் உடனே அந்தம்மா கேக்குதாம் யார கேட்டு என்ன அறிவிச்ச? நான் தான் விருப்ப மனுவே கொடுக்கலையேன்னு...! சரின்னு சொல்லிட்டு இப்போ விஜயா சேகர்னு ஒரு அம்மாவ இப்போ வேட்பாளரா அறிவிச்சு நிறுத்தி இருக்காங்க..., இதுல என்ன காமெடின்னா இந்த அம்மாவும் விருப்ப மனு கொடுக்கலையாம்...

ஆக மொத்தம் விபரம் தெரிஞ்ச காங்கிரஸ்காரங்களே இந்த தேர்தல் விட்டு ஒதுங்கி இருக்கறது நல்லதுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல...ஆனா தங்கபாலு சார் மட்டும் கண்ண மூடுனா மீண்டும் காமரஜார் ஆட்சியை அமைப்போம்ன்ற காங்கிரசோட தார்மீக கனவ கண்டுகிட்டு இருகாரு போலா...!

கொசுறு: ஆமா...சத்தியமூர்த்தி பவன்ல ஏதோ சண்டையாமே....தங்ஸ் சார்?



கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Wednesday, October 05, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (5.10.2011)


 
 
 
ஆயுதபூஜை விடுமுறை பற்றி பேசிக்கொண்டே டீ கடைக்கு சென்றனர் ரெங்கும் கனகும்... டீ கடை அண்ணாச்சியை காணாமல் தேடினர்..  டீ கடையின் உள்ளே சுத்தம் செய்து கொண்டு இருந்த அண்ணாச்சி வெளியே வர..

கனகு : என்ன அண்ணாச்சி இன்னைக்கு டீ இல்லையா.. என் பொண்டாட்டி தான் டீ போட்டு தர மாட்டுறா நீங்களும் இப்படி ஏமாத்திட்டீங்களே..

அண்ணாச்சி : இன்னைக்கு ஆயுத பூஜை இல்லையா... அதான் கனகு அண்ணே டீ கடை லீவ்... கவலை படாதீங்க நான் பிளாஸ்க்ல உங்களுக்கு டீ போட்டு வைச்சு இருக்கேன்..

ரெங்கு : என்ன கனகு போதுமா..???

கனகு : ம்ம அண்ணாச்சின்னா நம்ம அண்ணாச்சி தான் ... சரி சரி நீ உன் திருவிளையாடலை தொடங்கு... 

ரெங்கு : காந்தி ஜெயந்திக்கு அந்த கடை லீவான்னு ஒரே சந்தேகமா இருந்துச்சு.... அந்த அளவுக்கு பிளாக்ல சரக்கு ஓடுச்சு கனகு..

கனகு : இது எப்பவும் நடக்குறது தானே இப்போ தேர்தல் வேற... சொல்லவா வேணும்..

ரெங்கு : அது மட்டும் இல்லை இப்போ டாஸ்மார்க்ல வருமானம் குறைஞ்சு போச்சாம்..

கனகு : அட என்னப்பா எல்லாவனும் திருந்திட்டானா இல்லை வேற எவனாவது தனி கடைய தொறந்து போட்டானா..!!!

ரெங்கு : அதெல்லாம் ஒன்னும் இல்லை கனகு... இப்போதைக்கு யாரும் தனி கடை போடல... டாஸ்மார்க்ல தனியா ஒரு ட்ராக் ஓட்டுறாங்க. டாஸ்மார்க் ஊழியர்கள் வருமானம் எப்படி குறையுதுன்னு கண்டுபிடிக்க போறாங்களாம். சீக்கிரமே ரெய்டு நடக்கும்ன்னு வேற பேசிக்குறாங்க...

கனகு :  கண்டு பிடிப்பாங்கங்களா...!! எப்படி.... குடிச்சுட்டு போறவங்களை கூப்பிட்டு சரக்கு ஒரிஜினலா இல்ல.. டூப்ளிகேட்டா-ன்னு  கேப்பாங்களா..??

ரெங்கு : சரி அதவிடு..இந்த கேப்டன் சொல்றார் அவர்கட்சி கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்கினா அவர் கேப்பாராம்..??

கனகு : என்னய்யா சொல்ற அவர் பங்கு கேப்பேன் சொல்லியா ஓட்டு கேக்குறார்..??

ரெங்கு : அட கனகு அவர் லஞ்சம் வாங்கினா தட்டி கேப்பேன் சொல்றார்..

கனகு : கவுன்சிலர் ஆக்கினா தானே ஒருத்தர் கவுன்சிலர் ஆகுறதுக்கு முன்னாடியே லஞ்சம் வாங்கி வேட்பு மனுவை வாபஸ் வாங்கப் போனாரே அவர என்ன செய்யப் போறார்..கேப்டன்..

ரெங்கு : இந்த மாதரி எல்லாம் கேட்டா அவர் நாக்க கடிச்சிட்டு பஞ்ச் டைலாக் பேசுவார் கனகு உனக்கு தேவையா..??

கனகு : அந்த கொடுமைய கேக்க நான் ஆள் இல்லப்பா

ரெங்கு : திமுகவும் காங்கிரஸும் கூட்டணி வைச்சு இருக்காங்க தெரியுமா கனகு..

கனகு : எந்த தேர்தல்லய்யா...?? வர போற பாராளுமன்ற தேர்தல்லய்யா..??

ரெங்கு : இல்லை கணக்கு இந்த உள்ளாட்சி தேர்தல்ல தான்...??

கனகு : என்னய்யா சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல .... நைட் அடிச்ச சரக்கு இன்னும் தெளியலையா..??

ரெங்கு : காரைக்குடி நகராட்சில 36 வார்டுல 27 திமுகவும் 9 காங்கிரஸும் கூட்டணி வச்சி கிட்டாங்களாம்.... இப்படின்னு காங்கிரஸ்காராங்களே சொல்றாங்க...  இந்த உடன்பாட்டுக்கு நம்ம ப,சி தான் காரணமாம்..

கனகு : பாருய்யா எப்படி எல்லாம் யோசிக்குறாங்கன்னு.. ஆமா இந்த விஷயம் நம்ம சீமான்க்கு தெரியுமா..??  தெரியலைன்னா யாரவது சொல்லுங்கப்பா அவர் இப்போ சும்மா தான் இருக்கார்..!!

ரெங்கு : பாவம்யா வைகோ தன்னுடைய தாம்பரம் நகராட்சி வேட்பாளர் வாபஸ் வாங்கியது கூட தெரியாம அவருக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கார்...

கனகு : அட கொடுமையே.. பிரச்சாரம் பண்ணும போது ஒவ்வொரு அரை மணி நேரமும் வேட்பாளர் இருக்காரான்னு பாத்துக்கணும் போல... பாவம் அவரு நல்ல மனுசன்ய்யா அவங்க கட்சிகாராங்களே இப்படி செய்யலாமா...?

ரெங்கு : ஆமா கனகு ஊழல் செய்யாம ஜெயிலுக்கு போன ஒரே அரசியல்வாதி இவர் தான்.. இவர் மேல கேஸ் வேற போட்டு இருக்காங்க தேர்தல்விதி முறைய மீறிட்டார்ன்னு..

கனகு : பாருய்யா இதுலயே தெரியலையா அவர் ரொம்ப நல்ல மனுசன்னு...??

ரெங்கு : எப்படியா சொல்ற..

கனகு : பின்ன தேர்தல் கமிஷன் நியாயமான முறையில் தான் செயல்படுதுன்னு சொல்றாரே... அப்போ அவர் நல்லவர் தானே..??

ரெங்கு : சத்தியமூர்த்தி பவன்ல ஒரு சிறைச்சாலை கட்டலாம் போல... சும்மா சும்மா சிறை வைக்குறாங்க.

கனகு : என்னய்யா சொல்ற நம்ம ப,சி விசயம் பார்த்தியா??

ரெங்கு : இது வேற சிறை கனகு.. இளைஞர் காங்கிரஸ் சிறை வச்சிட்டாங்க... இது எந்த கட்சிலயாவது இப்படி நடந்து இருக்கா..??

கனகு : அப்போ அவங்க கட்சில இருக்க இளைஞர்கள் ஓட்டு எல்லாம் கிடைக்காதா..??

ரெங்கு : அது இருந்தா தானே கிடைக்குறதுக்கு... ரெண்டு நாளா இளைஞர் காங்கிரஸ் சத்திய மூர்த்தி பவன்ல ஒரே ஆர்ப்பாட்டம் நடத்திட்டு இருக்காங்க..

கனகு : அந்த கட்சில அவ்வளவு பேர் இளைஞர்களா..?? நேத்து எங்க வீட்டு பக்கத்தில் ஒரு காங்கிரஸ் மீட்டிங் பார்த்தேன் மொத்தம் 50 பேர் கூட இல்லையே...    

ரெங்கு : ஓஓஓஓ... கனகு உன் மன தைரியத்தை நான் பாராட்டுறேன்... நீ காங்கிரஸ் மீட்டிங் எல்லாம் பாக்க ஆரம்பிச்சிட்டே .....பார்த்து.... கொஞ்ச நாள்ல நீயும் அந்த கட்சில சேர்ந்திட போற.. அந்த கட்சியில் ஈஸியா கிடைக்குறது..உறுப்பினர் கார்டு மட்டும் தான்....!!

கனகு : யோவ் யோவ் நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா.. நான் டீய குடிச்சிட்டு கிளம்புறேன்...!!



கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 

Monday, October 03, 2011

நீங்கள் தான் தலைவர்....! தலைமைத்துவ பண்புகள் பற்றிய பார்வை...!


புறத்தில் ஆயிரம் நடக்கலாம் நண்பர்களே, எல்லா செயல்களையும் நாம் பயணத்தின் வழியே காணும் காட்சிகளைப் போல கண்டு கொண்டு நமது பயணத்தில் கவனத்தைச் செலுத்துவோம். இலக்குகள் இல்லா வாழ்க்கையில் வெறும் மனிதனாகத்தான் வாழ்ந்து மரிக்க முடியும்...!


ஆனால்....

இலக்குகள் கூடிய வாழ்க்கையில் ஒரு தலைவனாக வாழ்ந்து மரிக்க முடியும். நாமெல்லாம் எரியும் கனவுகளை இலக்குகளாக கொண்ட வேங்கைக் கூட்டம்...! ஆங்காங்கே இயன்றவரை எல்லோருக்கும் வழிகாட்டும் காட்டப் போகும் சீரிய பண்பினைக் கொண்டவர்கள்.


அறிவினைக் கொண்டு நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து கட்டுக் கோப்புடனும், ஜனநாயகத்துடனும் அறிவு சார் பயணம் மேற்கொண்டிருக்கும் நாம். தலைமைத்துவம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்போம்.


எ மேனேஜர் அட்மினிஸ்ட்ரேட்ஸ்....பட் த லீடர் இன்னோவேட்ஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒரு அதிகாரியால் நிர்வாகத்தை மட்டும்தான் செய்ய முடியும் ஆனால் ஒரு தலைவன் உருவாக்குகிறான். அவன் புதிது புதிதாய் சீரிய எண்ணங்களை படைத்து அதை செயலாக்குகிறான்.


தலைமைத்துவ பண்பு என்பது நமது குணநலன்களை நாம் சீர்தூக்கி நம்மை நாமே மாற்றிக் கொள்வது. ஒரு அலுவலகத்தில் இரு மேனேஜர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் இருவருமே அற்புதமான நிர்வாகிகள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்...இருவரில் யார் தலைமைத்துவப் பண்பினைக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தேர்களேயானால்.....


அதே அலுவலகத்தில் கடை நிலை தொழிற்சாலை பணியாளர் வராத அன்று அந்த வேலை தேங்கிக் கிடக்கும், அது புரடக்டிவிட்டியை பாதிக்கும் என்று தெரிந்தவுடன் வேறு ஆளும் கிடைக்கவில்லை என்று எண்ணிக் கொண்டு கோபத்தில் அடுத்த நாள் அந்த தொழிலாளியை கூப்பிட்டு  தண்டனை கொடுப்பவர் மேனேஜர் மட்டும்தான்.....


ஆனால்.. .இன்னொருவர்....

அந்த தொழிலாளி வராத அன்று அந்த வேலைத் தேக்கத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்டு தனது டையை கழட்டி தூர எறிந்து விட்டு கை சட்டையை மடக்கி விட்டு.....அந்த தொழிலாளியின் வேலையைப் போய் தொழிற்சாலையில் செய்து விட்டு அடுத்த நாள் அந்த தொழிலாளி வந்தவுடன்....அவர் வராததால் எந்த மாதிரியான இழப்பு ஏற்பட்டது என்று விளக்கி, இனி அத்தியாவசியமான விடுமுறை என்றால் முன் கூட்டியே தெரிவித்தால் நிர்வாகம் வேறு ஒருவரை அந்தப் பணியில் ஈடுபடுத்த ஏதுவாக இருக்கும் என்றூ கூறி.. நெக்ஸ் டைம் ரிப்பீட் ஆகாம பாத்துக்கோங்க என்று தோளில் கை போட்டுக் கூறி விட்டு....அந்த தொழிலாளியின் வீட்டில் உள்ளவர்களின் நலனையும் சேர்த்தே விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்....


அவர் வெறும் மேனேஜர் அல்ல....................ஒரு தலைவரும் கூட....!


1) ஒரு அதிகாரியானர் கட்டுக்கோப்பான நிர்வாகத்தைச் செய்கிறார்...


2) ஒரு தலைவன்...அதனை மென்மேலும் வளர்த்துகிறான்...


3) ஒரு அதிகாரி....ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனிலும் சிஸ்டத்திலும் நம்பிக்கையா இருக்கிறார்....


4) ஒரு தலைவன்...........மனிதர்களை நம்புகிறான்...

5) ஒரு அதிகாரி அதிகாரத்தை மட்டுமே கணக்கில் வைத்துக் கொள்கிறார்..


6) ஒரு தலைவன்...நம்பிக்கையை மட்டுமே கணக்கில் வைத்துக் கொள்கிறார்


7) ஒரு அதிகாரி சரியான செயலை மட்டும் செய்கிறார்....


8) ஒரு தலைவன்..செய்யும் செயல்களில்ள் எல்லாம் சரியானதாய் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்..!



தலைமைத்துவத்தின் ஆச்சர்யமான ஒரு பண்பு... என்ன தெரியுமா? விட்டுக் கொடுத்துப் போவது....!


விட்டுக் கொடுத்தலில் ஒரு மிக முக்கியான விடயம் இருக்கிறது. யாருக்கு விட்டுக் கொடுக்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்...


அகங்காரம் கொண்டிருப்பவர்களை அகங்காரத்தாலேயே சிறுமைப்படுத்தி அந்த அகங்காரத்தை நொறுக்கிப் போட்டு இது எல்லாம் ஒன்றும் இல்லை என்று காட்டியே ஆக வேண்டும். அந்த இடத்தில் விட்டுக் கொடுக்கிறேன் பேர்வழி என்று விட்டுக் கொடுக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான்....


மாயையில் தன்னை யாரோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் கர்விகளுக்கு அது இன்னமும் பூஸ்ட் ஆகிவிடும். இயல்பில் குற்றமில்லாமல் புரிதலினால் கோபமாய் இருப்பவர்களிடம் அவர்களின் குணநலனை கருத்தில் கொண்டு மேலும் நம்மை புரிந்து கொள்ளும் படி விட்டுக் கொடுத்தால் எதிராளியின் பண்பு இன்னும் மெருகேறி புரிதலை பலப்படுத்தும்.


ஒரு தலைவன் எப்போதும் தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்காக, தன்னை நம்புவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறான் என்று சொல்வதை விட தன்னை  முன்னிலைப்படுத்துவதை தவிர்க்கிறான் என்றே சொல்ல வேண்டும்.


ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம், தலைமையில் இருக்கும் ஒரு மனிதன் தானே ஆக்கவேண்டும் என்று பிடிவாதமாகவும், தன்னுடைய கருத்துக்களே மிகச்சிறந்தது என்ற ஒரு மன ஓட்டமும் கொண்டிருந்தால் அவனால் புதிய மூளைகளில் இருந்து பிறக்கும் ஆக்கப்பூர்வ கருத்துக்களை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது.


ஒரு நல்ல தலைவன் தன் சுகத்தை மட்டும் எண்ணுவது இல்லை, எந்த ஒரு செயலாய் இருந்தாலும் தனக்கும் தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கும், சமுதாயத்திற்கு நலம் பயக்கும் செயல்களையும் எப்போதும் ஆதரிப்பவனாகவும் அப்படியான கருத்துக்களையும் செயல்களையும் செட்பவர்களையும் அடையாளம் கட்டுபவனாகவும் இருக்கிறான்.


எல்லோரும் நினைப்பார்கள்...... எதிரியை வீழ்த்தி விடுவது அல்லது மாற்றுக் கருத்தை வாதிட்டு தன் கருத்தை நிலை நிறுத்துவது மட்டுமே வெற்றி என்று....


அல்ல அல்ல....

ஏற்றதொரு கருத்து அல்லது வடிவம் அல்லது செயல் வரும் போது அதை ஆதரித்து வழி விட்டு அதை செய்ய எல்லா உதவிகளையும் செய்வது தலைமைத்துவ பண்புகளில் தலையாயது...!


ஒரு வண்டியை ஓட்டி ரோட்டில் செல்பவனுக்கு தன்னுடைய வண்டி மற்றும் தன்னைப் பற்றிய கவலைதான் இருக்கும்.. 

ஆனால் 

ட்ராபிக் போலிஸ்காரருக்கோ எல்லா வண்டியும் ஒழுங்காய் செல்ல வேண்டும் என்ற எண்ணமிருக்கும்....


இப்படியான எண்ணங்களால் ஒரு தலைவன் எப்போது வித்தியாசப்படுகிறான்....!


ஆனால் அகங்காரமும், கர்வமும் தன்னைப் பற்றி எப்போதும் ஒரு மாயமான மேலான கருத்து என்னும் சுப்பிரியாட்டி காம்ப்ளெக்ஸ் இருக்கும் மனிதர்கள் தலைமையில் இருப்பார்கள். சூழல் அதை ஏற்படுத்தி இருக்கும்...ஆனால் அவர்கள் ஒரு போதும் தலைவர்கள் ஆக மாட்டார்கள்.. அல்லது மக்களால் வெறுக்கப்படவே செய்வார்கள்.


பதவி என்பது வேறு பண்பு என்பது வேறு....! பதவியில் அதிகாரம் இருக்கும்.. ஆனால் பண்போடு கூடிய தலைவனுக்கு மக்கள் ஆதர்வு எப்போதும் இருக்கும்...!


கர்வம் பற்றியும் அகந்தை பற்றியும் வரும் நாட்களில் காணலாம்...!


(இன்னும் பேசுவோம்...)



கழுகிற்காக






(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes