Wednesday, December 29, 2010

வரலாற்றின் பக்கங்களில்...

முன் பின் முரணுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒற்றை பயணத்தில் கழுகு எட்டிய உயரத்திலிருந்து சற்றே தலை திருப்பி தாம் கடந்து வந்த திசையினை பார்க்கிறது. கவர்ச்சி அரசியலும், வன்கூட்டுகளும், பிரபலங்கள் என்று சொல்லிக் கொள்பவர்களையும் கூறப்படுபவர்களையும் தாண்டி.........சுயதன்மை என்ற ஒரு முகம் கொண்டு வானில் சிறகடிக்க முடிவு செய்த நிமிடங்கள் எத்தகையவை............?

அரசியலும், மதங்களும், தற்பெருமை ஆர்வாலர்களும் நிரம்பிக் கிடக்கும் ஒரு தேசத்தின் குப்பைகளை கழுகு தனியாக அள்ளிவிடும், சமுதாய கோணல்களை சரிசெய்து தமிழ் திரையின் அதிரடி நாயகனைப் போல தன்னை வரித்துக் கொண்டும் நகரவில்லை மாறாக பேசும் சக்தி இருக்கும் எமது நா.......நல்லன பேசட்டுமே........, பார்க்கும் சக்தி கொண்ட எமது கண்கள் நேர்நோக்கில் விரிவாய் பார்க்கட்டுமே...சத்தியங்களை எதிர் கொள்ளட்டுமே......, வலிவு கொண்ட எமது கரங்கள் ஒர் குப்பையாவது எடுத்து களையட்டுமே................என்ற சிறுபொறி எண்ணமானதோ.....அல்லது எண்ணம் பொறியானதோ.........அந்த நொடியில் கழுகுக்கு சிறகாய் வந்தவர்கள்தான் தம்பி செளந்தரும், விஜயும்..........


மெல்ல மெல்ல சிறகு விரித்த எமக்கு எதார்த்த வானத்தில் ஆங்காங்கே சிராய்ப்புகளும், வலிகளும், மறுத்தல்களும் வந்து கொண்டுதான் இருந்தன.......எங்கேயோ படித்திருக்கிறோமே வாழ்க்கையின் தேவைகள் இலைகளில் வைத்து பரிமறப்படுவது இல்லை எப்போதும் ஆனால் தேடித்தான் போராடித்தான் பெறவேண்டும். மயில்கள் எப்போதும் இறகுகள் போட்டதாக சரித்திரம் இல்லை.........அதை பிடித்து அழுத்தி பிய்த்தால்தான் உண்டு.......


வழமையில் ஊறிய யாமும் மயிலின் இறகுகளுக்காக காத்திருந்து விட்டது தெள்ளத்தெளிவாக புலப்படும் இவ்வேளையில் இறகுகளை கொணரும் உத்தி பளிச்சென்று எமது புத்தியில் உரைக்கிறது. சமுதாய நலம் கொண்டவரெல்லாம் எம்மை சீராட்டுவர், பொதுநலம் கொண்ட மனங்கள் எல்லாம் எமக்கு தாயாய் பாலூட்டும், தீ போன்ற சிந்தனைகள் கொண்டவரெல்லாம்.....எமது அடுப்பின் நெருப்பாய் இருப்பர் என்ற எண்ணம் ஏற்பட்டது அது பொடிப்பொடியான போதுதான் தெரிந்தது........இங்கே நீதியும் நேர்மையும் கலர்காகித பூக்கள்...........கூட்டத்தில் யாம் எதார்த்த பூவை வைத்துக் கொண்டு கூவியதால் எம்மையும் சராசரி வரிசையில் நிற்க வைத்த இந்த சமுதாயம் அதே நேரத்தில்...

எம்மை மறுத்தது
எம்மை வெறுத்தது..................

இதன் நீட்சியில் யாம் கேலிப்பொருளாய்ப் போன அதே நேரத்தில் பதிவுலனின் மிக அற்புதமான படைப்பாளிகளின் ஆதரவுக்கரங்கள் எம்மை அரவணைத்ததும், கழுகின் நிகழ்வுகளுக்கு எமது நண்பர்கள் கூட்டம் பாசக்கரம் நீட்டியதும் மறுத்தல்களுக்குள் வராது.

பணிச்சுமைகள் எமது இலகினை அடையும் நேரத்தை வேண்டுமானால் குறைத்திருக்கலாம் ஆனால் தழலாய் எம்முள் எரியும் எமது இலக்கு எப்போதும் மாறது. அது எப்போதும் மனித நலம் பேணும்..........., யாம் வாய் திறந்து மூடினால் அதிலிருந்து வெளிப்படும் அக்னி எப்போதும் அறியாமையைப் பொசுக்கி எம்மக்களின் விழிப்புணர்வுக்கு வெளிச்சமாய் இருக்கும் என்பதை அறுதியிட்டு.....அதையே...வரும் வருடத்தின் எமது தீர்மானமாக்குகிறோம்.

வருடங்கள் எப்போதும் நம்மை உருட்டி வரலாறுகளை எழுதிச் சென்று கொண்டே இருக்கின்றன.........கற்கால மனிதனாய் வந்தான் மாண்டு போனான், மன்னர்கள் வந்தார்கள், வியாபாரிகள் வந்தார்கள், அறிஞர்களும் தத்துவ ஞானிகளும், ஆன்மீகவாதிகளும், சராசரி மனிதர்களூம் காலங்கள் தோறும் தோன்றி தோன்றி அழிந்து கொண்டே இருந்தார்கள்.................வருடங்கள் மனிதர்களை விழுங்கி வரலாறாய் செரித்து வெளியே போட்டது...........

நாமும் நகர்கிறோம்.........நாளைய தலைமுறை எடுத்து திருபிப் பார்க்கும்போது வரலாற்றின் பெரிய பக்கமாய் நாம் இல்லாவிட்டாலும் ஒரு தூசு அளவிலாவது இருக்க முயற்சி செய்வோம்..........!

கழுகு இன்னும் பொலிவோடு, இன்னும் தெளிவோடு....வித்தியாச விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தாங்கி........வரவிருக்கிறது......தங்கு தடையின்றி.........

மலரப்போகும் புத்தாண்டுக்காக எமது வாழ்த்துக்களைக் கூறி ஒப்பற்ற ஒரு சமுதாயத்தின் வேர்களாய் இருப்போம் எமது பயணத்தில் இணைந்து இருங்கள் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் என்ற வேண்டுகோளையும் வைக்கிறோம்...............!







(கழுகு இன்னும் உயர பறக்கும்)

Sunday, December 26, 2010

அஞ்சலி....



உறங்கிக் கொண்டிருந்த
நீ விழித்ததேன்...?
உறக்கத்திலிருந்த
எம்மைக் கவிழ்ந்திருந்த
இமைகளோடு கவிழ்த்து
நீ கொண்டு போனதும் ஏன்?

வாழ்க்கையை உன்னில்
கொடுத்து உன் காலடியில்
கிடந்த பொழுதினில்
எம்மீது காதல் கொண்டாயோ
ஆழிப் பேரலையே...
எம் உயிர் அழித்த ஆழப்பேரலையே....

எல்லாப் பொழுதுகளையும்...
விடிய வைத்தது இயற்கை
விடியலைக் கொன்றழித்து...
யுகங்களாய்ப் பசிக்கவைத்திருந்த
உன் வயிற்றின் பசியடக்கினாய்...
எம்மின் உயிர் நசுக்கினாய்...!

சாந்தமாய் நின்ற உன்
கட்டவிழ்ந்த நொடியில்..
ஏன் அலையே எம்மிடம் சொல்லவில்லை
ஏன் கடலே சைகைகள் செய்யவில்லை...
உன்னில் உப்புச்சுவை குறைந்ததென்று
எம்மவரின் கண்ணீரைக் கடன்
கேட்டது எப்படி நியாயம் ஆகும்?

வாழ்க்கையை வாரி வாரி.....
வழங்கிவிட்டு வஞ்சகமின்றி..
மொத்தமாய் உயிர் குடித்தது
யுத்தமரபில்லையே இயற்கையே
எம் உயிர் அழித்த செயற்கையே...!

கருப்பு தினத்தை எமக்கு...
வழங்கிய கரிப்பு அரசனே...
வாழ்வையும் சாவையும் பங்கிட்டுக்
கொடுத்த வள்ளலே...
இயற்கையின் இளவலே....
நீ யுத்தங்கள் செய்வதில்..
எமக்கு முரண்கள் இல்லை...
ஒரு பகுத்தறிவோடு நீ ...
பகலிலாவது வந்திருக்கலாமே...?


கண்ணீரில் இருந்து கரிக்கும் உப்பின் சுவையோடு ஒரு போரிட்டு வீழ்த்த எண்ணும் ஒரு வித மடமை கோபமும் ஆத்திரமும் கலந்து எம்மில் கொப்பளிப்பது வழமையாகிப்போனது. ஓராயிரம் முறை அதை இயற்கையின் சீற்றமென்று அறிவியலும் ஆன்மீகமும் கட்டியம் கூறினாலும் எமது மூளைகள் அதைச் சடுதி நேரம் கூட செவி கொடுத்துக் கேட்கப் போவதில்லை...


ஆண்களையும் பெண்களையும் ஈவு இரக்கமின்றி பச்சிளங்குழந்தைகளையும் பெண்களையும் மொத்தமாய்த் தின்று தீர்த்தது கடல்....விடியலில் ஊதப்பட்டது ஒரு மரண சங்கு.... விடிந்த பொழுதில் பறவைகள் எல்லாம் மனிதர்களின் கதறலைப் பார்த்து வாயடைத்துப் போயிருந்தன.....


சூரியனின் வெட்கத்தில் அந்தப் பகல் பொழுது முழுதும் குளிரால் நிரம்பியே வழிந்தது....கரையில் கனவுகளோடு கண்ணயர்ந்திருந்த மனிதர்களின் உயிர் குடித்த திருப்தியில் வரலாற்றின் சோகத்தை வெற்றிக்கரமாய் எழுதிவிட்டு மெளனமாய்த் தன்னுள் திரும்பிப் போய்விட்டது வங்காள விரிகுடா....


கூக்குரல்களின் பின்னால் கணவனை இழந்த மனைவியும், மனைவியை இழந்த கணவரும், பிள்ளைகளை இழந்த பெற்றோரும்.. இன்ன பிற உறவுகளும் கதறிய படி உடல்களைத் கரையெங்கும் தேடித் தேடி அலைந்த காட்சிகளில் வங்காள விரிகுடாவே வெட்கித் தற்கொலை செய்திருக்க வேண்டும்...

வாழ்க்கையின் ஓட்டத்தை எது தீர்மானிக்கிறது? விடிந்தால் இது செய்யலாம் அது செய்யலாம் என்று கணக்குகள் போட்ட மனிதர்களின் மூளைகள் எல்லாம் ஒரு இரவின் உறக்கத்தோடு ஜல சமாதியாக்கப்பட்டது என்ன நியாயம்...?


மனிதர்களாய் நின்று பார்த்தால் கடவுள் என்ற ஒன்று இல்லையோ? கடல் அரக்கன் இப்படி அடாவடி செய்து விட்டானே, இவனை என்ன செய்யலாம் என்ற ரீதியில் கோபமும், இழந்து விட்ட உறவுகளுக்காகவும் கொத்துக் கொத்தாய்ப் போன முத்துப் பிள்ளைகளின் உயிருக்காகவும்.......அழுகையும் ஆத்திரமும் வருகிறது....


இயற்கையின்படி பார்த்தால் இது ஒரு நிகழ்வு...எல்லாம் தன்னைத்தானே சமப்படுத்த இயற்கையின் ஒரு அணுகுமுறை இது....! கொள்ளைக் கொள்ளையாக மீன்களையும் நான் தான் கொடுத்தேன்..உமது வீட்டின் விளக்குகளில் ஜென்மங்களாய் நான் தான் எண்ணெயாயிருந்தேன்...


என்னை அப்போது சீராட்டி இப்போது திட்டும் உங்களின் எண்ணங்கள் தான் இயற்கைச் சீற்றங்களின் காரணி என்று சொல்லாமல் சொல்லி மெளனமாய் சொல்லி மீண்டும் வேலையைச் செய்வதில் எந்தப் பாராபட்சமும் காட்டாமல் செயல் செய்து கொண்டிருக்கும் கடலுக்கு இது ஒரு நிகழ்வு..........


சப்தங்களின்றி.....விவாதங்கள் தொலைத்து.......ஆழிப்பேரலையில் உயிர் துறந்த அத்தனை உறவுகளுக்கும் அஞ்சலிகள் செய்வோம்........மேலும் எதிர் வரும் காலங்களில் இயற்கைச் சீற்றம் மட்டுமின்றி எந்த விதமான தீங்குகளும் இன்றி வாழ....நேர்மறையான எண்ணங்கள் கொள்வோம்...!

என் பூமி செழிக்கட்டும்......! எம் மக்கள் வாழட்டும்...!


(கழுகு இன்னும ....உயர பறக்கும்)
 
 

Saturday, December 11, 2010

திருமதி. மனோ சாமிநாதன் சிறப்பு பேட்டி...!





விளக்கங்கள் தெளிவுகள் எல்லாம் பெரும்பாலும் ஆரோக்கியமான விவாதங்களிலும் அனுபவங்களிலும் இருந்து பெறப்படவேண்டியவையே என்பது நிதர்சனமான ஒன்று. நான் சொல்வதுதான் இறுதி உண்மை என்று நம்பும் மூளைகள் சர்வ நிச்சயமாய் ஆராயப்படவேண்டியவை.




ஏதேதோ கருத்துக்கள் கொள்கிறோம்.. என்ன என்னவோ செய்கிறோம்...ஆனால் அனுபவசாலிகளின் வார்த்தைகளில் இருக்கும் உண்மைகளை எப்போதும் ஆராய்வதில்லை. தெளிவைத் தேடி நாமும் நமது சிறகினை விரித்தோம்.... பரந்த வானில் ....வந்திறங்கிய இடம் அமீரகத்தில் சார்ஜா....




திருமதி. மனோ சாமிநாதன் மூத்த பதிவர், முன்னாள் பத்திரிக்கையாளர், ஓவியர், 30 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியாவை நேசிக்கும் ஒரு அற்புதமான இல்லத்தரசி.




சமகாலத்தில் பதிவுலகில் விவாதித்துக் கொண்டிருக்கும் கலாச்சரம் மற்றும் லிவ்விங் டு கெதர் பற்றியெல்லாம் அம்மாவிடம் கேட்டோம்...தாய்ப்பாசத்தோடு அவர்களின் பல அலுவல்களுக்கும் இடையில் நமது கேள்விகளுக்கு புன்முறுவலோடு பதிலளித்தார்....வாழ்வின் பல அர்த்தங்கள் பிடிபட்டன.. எமக்கு..


இதோ உங்களுக்காக அவரின் அற்புதமான பேட்டி.....


பதிவுலகில் நீங்கள் எப்படி நுழைந்தீர்கள்...?


என் ஒரே மகன் கல்லூரியில் மேற்படிப்பை முடித்து, பின்னர் பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல நேர்ந்த போது, பிரிவு ஏற்படப்போவதை எண்ணி சிறிது கலக்கமாகவே இருந்த நேரம்! அப்படிப்பட்ட கலக்கம் எதுவுமில்லாமல் என் மனதை திசை திருப்ப என் மகன் இண்டர்னெட் பற்றி விளக்கி ஒரு பிரபல வலைத்தளத்தில் சமையல் பிரிவில் எனக்கென ஒரு பிரிவு 2004-ல் ஏற்படுத்திச் சென்றார். இதுதான் தொடக்கம்.
அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது 11 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது!

Blogs எல்லாம் பரவலாக இல்லாத நேரம் அது. வருடங்கள் செல்லச் செல்ல எனக்கென தனியாக ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க ஆர்வமும் துடிப்பும் இருந்து கொண்டேயிருந்தன. இருந்தாலும் குடும்ப வேலைகள், தொடர் பிரயாணங்கள் எல்லாம் அந்த ஆர்வத்தை தடுத்துக்கொண்டே இருந்தன. திடீரென்று சென்ற மார்ச் மாதம் தான் அப்படியே எல்லா வேலைகளையும் போட்டு விட்டு திடீரென்று எனக்கென
www.muthusidharal.blogspot.com
www.manoskitchen.blogspot.com


என்ற இரு வலைத்தளங்கள் தொடங்கினேன்.

உங்கள் பார்வையில் பதிவுலகம்?


அருமையாக, ஆரோக்கியமாக இருக்கிறது! எண்ணற்ற மனிதர்களுக்கு, அவர்களுக்குள் அடக்கி வைக்கப்பட்ட திறமைகள் எல்லாம் வெளிக்கொணர்வதற்கு ஒரு சிறந்த வடிகாலாக இருக்கிறது! ஒவ்வொரு அறிவுப்பேழையிலிருந்தும் எத்தனை எத்தனை முத்துக்கள் சிதறுகின்றன! அவற்றின் பிரகாசம் பிரமிக்க வைக்கிறது! வெளியுலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்களை விட எத்தனையோ சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் இங்கே இருக்கிறார்கள்!!


உங்களின் வாசிப்பு பற்றி ஒரு கேள்வி - தாங்கள் விரும்பி படிக்கும் எழுத்தாளர் யார்?


இதில் ஒருத்தரை மட்டும் குறிப்பிட முடியாது. சிறு வயதில் படிப்புடன் கூடவே மனதில் லட்சியங்கள், சத்தியம், நேர்மை எல்லாவற்றையும் அகிலனும் நா.பார்த்தசாரதியும் விதைத்தார்கள். கல்கியும் கிருஷ்ணாவும் எழுதும் ஆர்வத்தை என்னுள் விதைத்தார்கள்.
நல்ல எழுத்து என்பது காலத்தால் அழிவதில்லை. எப்போது எடுத்தாலும் அப்போதுதான் புதிதாகப் படிப்பதுபோல மனதில் ஆர்வம் பிறக்க வேண்டும். அந்த வகையில் என்றுமே என் ஆதர்ச எழுத்தாளர் திரு. கல்கி அவர்கள்தான்.


உங்களை கவர்ந்த சில வலைப்பூக்கள் சில?


இவைதான் என்னைக் கவர்ந்தவை என்று என்னால் இனம் பிரிக்க முடியவில்லை. மனித நேயம், அறிவு, கலைகள் இவற்றைப் பிரதானமாகக் கொண்ட வலைப்பூக்களை நான் மிகவும் ரசிக்கிறேன்




வெளிநாட்டில் 30 வருடத்திற்கு மேல் இருக்கும் நீங்கள் தாய் நாட்டையும் தாய் வீட்டையும் எந்த அளவு மிஸ் பண்ணியிருக்கீங்க....?
நிறைய! நம் ஊரில் விடியற்காலை நேரத்தில் பயணம் செய்யும்போது வழி நெடுகத் தென்படும் பசுமை கொஞ்சும் வயல்களும் பனித்துளிகள் மறையாத இலைகளும் மரங்களும், சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரும், இல்லங்களுக்கு வெளியே கண்ணைக்கவரும் பளிச்சென்ற கோலங்களும்- இந்த அழகெல்லாம் வேறெங்கு கிடைக்கும்?


பொருளாதாரத் தேடல்களுக்காகவும் குடும்பக் கடமைகளுக்காகவும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தாய் நாட்டின்மீது பாசமிருக்கும் ஒவ்வொருத்தருக்கும் இந்தத் தவிப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது!
இங்கு வந்த பின் தொடர்ந்து வரும் கடமைகள், காரணங்கள் இந்த புதைகுழியிலிருந்து அத்தனை சீக்கிரம் விடுபட்டு தாய் நாட்டை நோக்கி பறந்துவிட முடியாமல் தடுக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்!
‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா’ என்ற ஒற்றை வரிதான் உங்கள் கேள்விக்கான சரியான பதில்!




அமீரகத்தில் வசிக்கும் உங்களுக்கு...நம்நாட்டு கலாச்சரத்தை பேணுவதில் இங்கே சிக்கல்கள் உள்ளனவா?


நம் நாட்டுக் கலாச்சாரத்தைப் பேணுவதில் இங்கு எந்த சிக்கல்களுமில்லை.



வெகு நாள் வெளிநாட்டில் இருந்திருக்கிறீர்கள்..உங்களின் இந்த வாழ்க்கை நமது கலாச்சாரத்தை மறக்கடித்திருக்கிறதா?





தாய் நாட்டுப்பற்று இருக்கும் யாருக்குமே நம் நாட்டின் வேர்களான கலாச்சாரத்தை மறப்பதென்பது இயலாத காரியம். வெளி நாட்டில் அதிகம் படித்திருக்கும் என் மகன்கூட தமிழ்நாட்டில் இறங்கி விட்டால் கட்டாயமாக தமிழில்தான் பேசுவார் யார் அவருடன் ஆங்கிலத்தில் பேசினாலும்!


லிவ்விங் டூ கெதர் பற்றி நிறைய பதிவுகள் வந்து விட்ட இந்த வேளையில் ....அனுபவம் மிகுந்த உங்களின் பார்வை மற்றும் வழிகாட்டல் என்ன அம்மா?


சென்ற கேள்விக்கும் இந்தக் கேள்விக்கும் எத்தனை பொருத்தம் பாருங்கள். நம் நாட்டில்தான் நமது கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. மேலை நாட்டுக்கலாச்சார்த்தில் நாம் கற்றுக் கொள்ள, சுத்தம் பேணுதல், time management, குறித்த நேரத்தில் தன் வேலையைத் தானே செய்தல்-இப்படி எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை விடுத்து இந்த மாதிரி தேவையில்லாத நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத விஷயங்களைத்தான் நாம் கற்றுக்கொள்கிறோம்! அவர்கள் எப்பொழுதோ நமக்கு ‘நமஸ்காரம்’ சொல்லப் பழகி விட்டார்கள். நாமோ அவர்களைப் பார்த்தால் கை குலுக்குகிறோம். இப்படித்தான் கலாச்சாரம் மாறுகிறது..


திருமணம் என்ற பந்தமின்றி, எந்தக் கை விலங்குகளுமின்றி சேர்ந்து வாழ்வது, விரும்பும்போது அல்லது மனங்கள் ஒத்து வராதபோது அந்த வாழ்க்கையை விட்டு விலகுவது என்பது இப்போது பரவலாக நடந்து வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணமே இன்றைய தலைமுறையில் குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுத்து வரும் அளவுக்கு மீறிய சுதந்திரமும் செல்லமும்தான். வாழ்க்கையின் அருமையான விஷயங்களான அன்பு, நெறி, மனிதப் பண்புகள், தர்ம நியாயங்கள்- இவற்றையெல்லாம் சொல்லி அவர்கள் வளர்க்கப்படுவதில்லை.


கண்கூடாக நிறைய இல்லங்களில் இதை நான் பார்க்கிறேன். இளைஞர்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. தனி மனித சுதந்திரம், தனி மனிதக் கொள்கைகள் என்று பேசி இவர்கள் பாதையை இவர்களே நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இதில் திருமண வாழ்க்கையைப் பற்றியும் அதன் சிறப்புகளைப்பற்றியும் அவர்களுக்கு எப்படிப் புரியும்?


உங்கள்கால குழந்தை வளர்ப்பிற்கும் தற்போதைய குழந்தை வளர்ப்பிற்கும் இடையே என்ன மாற்றங்கள் இருக்கின்றன?


முன்பெல்லாம் குடும்ப வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும் விட குழந்தைக்குத்தான் முதலிடம் இருந்தது. இப்போதோ, வாழ்க்கை முன்னேற்றம், சொகுசான வாழ்க்கை இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு இரண்டாம் பட்சமாகி விட்டது.


எங்கள் காலத்தில் குழந்தைகள் இயற்கையான சூழ்நிலையில் வளர்ந்தார்கள். ஆரோக்கியமான உணவு, குதூகலமான விளையாட்டுக்கள், பெரியவர்களின் அன்பான கண்டிப்பும் அறிவுரைகளும் அமைந்த சூழ்நிலை, பாசம், அன்பு கலந்த குடும்ப அமைப்பு-இவைகளில் 90 சதவிகிதம் இன்றில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆரோக்கியமான உணவு கூட பின்னுக்குத் தள்ளப்பட்டு empty food எனப்படும் பர்கரிலும் பிஸ்ஸாவிலும் இன்றைய குழந்தைகள் காலத்தை கழிக்கின்றார்.


இன்றைக்கு குழந்தைகளுக்கு விளையாட நேரமே கிடைப்பதில்லை. அந்தளவுக்கு படிப்புச் சுமை. அதோடு, பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் மற்ற விஷயங்களிலும் சிறக்க வேண்டுமென்று சின்னஞ்சிறு வயதிலேயே குழந்தைகள் மீது பாட்டு, டான்ஸ், மற்ற பயிற்சிகள் என்று திணிப்பதால் அவர்களுக்கு மரம், பறவை என்று வெளியுலகைப் பார்த்து ரசிக்கவும் குதூகலித்து தன் வயதுப் பிள்ளைகளுடன் விளையாடவும் சந்தர்ப்பங்களே கிடைப்பதில்லை.


பெரும்பாலான இல்லங்கள் பெரியவர்கள் இல்லாமல் தனித்திருப்பதால் அவர்களிடமிருந்து கிடைக்ககூடிய பாசம், அறிவுரைகள், அனுசரணை எல்லாவற்றையும் இன்றைய குழந்தைகள் இழந்து வருகிறார்கள். இதனால் அவர்களுடைய மன வளர்ச்சியும் உடல் வலிமையும் நிறையவே குறைந்து வருகிறது!


குழந்தைகள் அவர்களின் விருப்பத்தில் தன்னிச்சையாகவே விடுதல் சரியா? இல்லை பெற்றோர் குடும்பம் என்ற போக்கில் வளரது சரியா ?


சென்ற கேள்விக்கான பதிலிலேயே இதற்கான கருத்தும் இருக்கிறது. பொதுவாய் ஒரு குழந்தை ஐந்து வயது வரை செல்லமாக வளர்க்கப்பட வேண்டும். [ இந்தக் காலக் குழந்தைகளுக்கு அறிவுக்கூர்மை அதிகம். அதனால் மூன்று வயதிலிருந்தே சற்று கண்டிப்பாக வளர்க்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது] ஐந்திலிருந்து 15 வயது வரை நிச்சயம் குழந்தைகள் அன்பான கண்டிப்புடனும் அறிவுரைகளுடனும் வழி நடத்தப்பட வேண்டும். 15 வயதிலிருந்து அவர்களைத் தோழியாக/தோழனாக மதித்து நடக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.


இல்லத்தரசியாகஇருக்கும் நீங்கள்... - உங்கள் அனுபவத்திலிருந்து...நீங்கள் இல்லத்தரசிகளுக்கு பொதுவாக சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?


ஆண்களுக்கு வீடு உலகத்தில் ஒரு பகுதிதான். பெண்களுக்கு வீடே உலகம்’ என்று ஒரு புகழ் பெற்ற பழமொழி இருக்கிறது. அந்த வீடு ஒரு கோவிலாக, ஆரோக்கியமானதாக, ஆனந்த மயமானதாக, மற்றவர்கள் மதிக்கத்தகுந்ததாய், புகழக்கூடியதாக அமைய வேண்டும். இது முக்கியமாக இல்லத்தரசிகள் கையில்தான் இருக்கிறது.


கனவனின் பசி அறிந்து உணவளிக்கும் மனைவி அவன் இதயத்துக்கு நெருங்கியவளாகிறாள் என்பது முதுமொழி. இது இன்றைய பெண்கள் நிறைய பேருக்குத் தெரிவதில்லை.
மொத்தத்தில் ஒரு நல்ல மனைவி என்பவள் கணவனுக்கு துன்பம் வரும்போது ஆறுதல் தருபவளாய், இடுக்கண் நேரும்போது நல்லதொரு மந்திரியாய், பாசத்தில் அன்னையாய் அமைவதிலே தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது. இல்லத்தரசி அப்படி அமைந்து விட்டால் அந்த வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு நிச்சயம் வெகு சிறப்பான வாழ்க்கை அமையும்.




பெண் அடிமைத்தனம் இன்னும் இருக்கிறதா..?


இல்லங்களளவில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில்கூட இன்னும் பெண் அடிமைத்தனம் இருக்கத்தான் செய்கிறது. ஆணும் உலகமும் பெண்ணை அடிமையாக நடத்துவது ஒரு புறம் இருக்கட்டும், பெண்ணே இன்னும் தன்னை மற்றவர்களுக்கு அடிமையாகத்தான் நினைத்துக்கொள்கிறாள். சில சமயம் அந்த அடிமைத்தளையிலிருந்து விடுபட விரும்பாமலும் இருக்கிறாள்.


தற்போது மாமியாராக இருக்கும் உங்கள் அனுபவம் என்ன? மருமகளாக நீங்கள் இருந்த போது உங்கள் அனுபவம் என்ன?


நல்ல மருமகளாக இருக்க முடிந்ததென்றால் நல்ல மாமியாராக இருப்பது சிரமமில்லை என்று நினைக்கிறேன். பெரிய கூட்டுக்குடும்பத்தில் மருமகளாகப் புகுவதில் ஏகப்பட்ட அக்னிப்பரீட்சைகள், பாசப்போராட்டங்கள் இருக்கும். அத்தனையும் அனுபவங்கள். எதெல்லாம் சின்ன வயதில் கிடைக்கவில்லையோ, அதெல்லாம் என் மருமகளுக்குக் கிடைக்க வேண்டும், அன்பு, சினேகம் எல்லாம் தந்து அவளை என் மகளாக நடத்துவதை விடவும் என் சினேகிதியாக நடத்த வேண்டும் என்று மாமியாராகும் முன்பேயே முடிவு


செய்திருந்ததால் அதைக் கடைப்பிடிப்பதில் சிரமம் இருந்ததில்லை. மற்ற உறவுகளிடையே பாலன்ஸ் செய்து, மாமியார், மாமனாரிடம் நல்ல பெயர் எடுப்பதை விட, நெருங்கிய உறவுகளிடையே [ மகன், மருமகள்] பாலன்ஸ் செய்து உறவுகளை கட்டிக்காப்பதுதான் அதிக சிரமமான விஷயம். அதை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருப்பதாகத்தான் கருதுகிறேன்..


அற்புதமாய் ஓவியம் வரையும் திறமை கொண்டுள்ளீர்கள்..எப்படி வந்தது இந்த ஆர்வம்?


விபரம் தெரியாத வயதிலிருந்தே வரையும் ஆர்வம் இருந்தது. பள்ளிப்பருவத்தில் ஓவியர் வினுவும் கோபுலுவும் மானசீக குருக்களாக அமைந்தார்கள். பின் மாதவனும் நடராஜனும் ஆதர்ச ஓவியர்களாய் மனதில் பதிந்தார்கள். நானாகப் பார்த்து வரையக்கற்றுக் கொண்டதுதான் எல்லாமே! பின்னாளில் பத்திரிக்கைகளில் வரைந்ததும் நிறைய கற்றுக்கொண்டதும்- எல்லாவற்றுக்குமே பின்பலம் என் கணவர்தான்!


அமீரக வாழ்க்கை எப்படி இருக்கிறது ?


அமீரக வாழ்க்கை கிட்டத்தட்ட புகுந்த வீட்டு வாழ்க்கை மாதிரி. உறவினர்களுக்கும் மற்றவர்களுக்கும் மற்றும் நலிந்தவர்களுக்கும் இங்கு வந்த பிறகுதான் கை நிறைய பொருள் தந்து உதவ முடிந்திருக்கிறது. வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது. பணமென்ற ஒன்றினால் சந்தோஷங்களுடன் நிறைய பாடங்களும் அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன.
மற்றபடி இங்கு இருப்பது கிட்டத்தட்ட நம் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி.




தலைமுறையினருக்கு தாங்கள் சொல்லவிரும்புவதது என்ன?


அன்பு, நேர்மை, உண்மை, கருணை-இந்த தாரக மந்திரங்களினால் எந்த சிகரத்தையும் தொடமுடியும். சிகரங்களைத் தொடுவது மட்டும் வாழ்க்கையில்லை. நம்மைப் பெற்றவர்களின் மனங்குளிர என்றென்றும் அவர்களை கவனித்துக் கொள்வதில்தான் வாழ்வின் மன நிறைவு இருக்கிறது!





(கழுகு இன்னும ....உயர பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes