சுற்றி நிகழும் அக்கிரமங்களை பார்த்து மெளனமாய் எத்தனை காலங்கள்தான் பயணிப்பது...! வெகுண்டு எழும் மானுட கூட்டம் ஒன்று சேர்ந்து திரும்பிப் பார்த்தால் எரிந்தே போய் விடாதா தீமைகள். தம்பி ரமேஷின் தீமைக்கு எதிரான் அக்னி அம்பு இதோ...பற்றியெறியட்டும் மனித மனங்கள்....அதில் அழிந்தே போகட்டும் தீமைகள்.....
சென்ற வாரம் அதிர்ச்சியான இரு சம்பவங்கள் படித்தேன் அதுபற்றி இங்கு பார்ப்போம்.....
சம்பவம் 1:
நெடுங்காலம் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவர் இறந்தாலே நமக்கு மனசு பதறும்...யாரோ ஒருவரின் தவறால்....அங்க அவயங்கள் சீர்குலைந்து ஒருவர் இறந்தால்....நினைக்கவே நடுங்குகிறது மனது.....
சென்னையைச் சேர்ந்த தையல் தொழிலாளியான ராம்நாத்தின் 21 வயது மனைவி குணசுந்தரி இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார்...அதற்காக கொடுக்கப்பட்ட மருந்துகளில் ஒன்று அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்த, அவரது உடல் முழுவதும் கொப்புளங்கள் வந்து கண்பார்வை மங்கி....மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்திருக்கிறார்...பத்திரிகைகளில் வெளியான அவரது புகைப்படங்களைப் பார்த்தாலே பகீரென்றது.
அவருக்கு ஒவ்வாமை வந்து இறந்ததற்கு மருத்துவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்காதீர்கள்...அவருக்கு அந்த மருத்துவர் பரிந்துரைந்த "கோம்பி ஃபிளேம்" என்ற மருந்து...1997 ஆம் ஆண்டே இந்தியாவில் தடை செய்யப்பட்ட மருந்து.....அதற்கு சில ஆண்டுகள் முன்பே அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருக்கிறது....பொறுப்பான ஒரு மருத்துவர் இப்படி தடை செய்யப்பட்ட ஒரு மருந்தினை பரிந்துரைக்கலாமா...அவர்கள் உயிருக்கு கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதானா.....21 வயதில் உயிரை இழந்த அவர் செய்த தவறுதான் என்ன?
அவருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும் ஒரு இரண்டு மாத குழந்தையும் இருக்கிறது...அந்தப் பிஞ்சுகள் செய்த தவறுதான் என்ன?
ஆனால் தவறு செய்த மருத்துவர்களைக் குறை கூறக் கூடாதாம்...வரிந்து கட்டிக்கொண்டு அந்த மருத்துவருக்கு ஆதரவாக மருத்துவக்கூட்டம் திரண்டு....இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கைவிரித்துவிட்டார்கள்.......
தவறு செய்யும் மருத்துவர்களை விட்டுக்கொடுக்காமல் மற்ற மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்தால்...அவர்கள் எப்படி பொறுப்பாக வைத்தியம் பார்ப்பார்கள்.....
தயவு செய்து நல்ல மருத்துவர்கள் மோசமான மருத்துவர்கள் பக்கம், அவரும் மருத்துவப்பட்டம் பெற்றவர் என்ற ஒரே காரணத்திற்காக சாயாதீர்கள்...நீங்கள் மருத்துவரானது மக்களுக்குக்காகத்தான்...அவர்களை துச்சமாக நினைத்து நடந்து கொள்ளாதீர்கள்...
சம்பவம் 2:
ஆப்கனில் ஆயிஷா என்ற பெண்ணையும் அவளது தங்கையையும் அவர்களது தந்தையே அடிமை போல இன்னொரு உறவினரிடம் ஒப்படைத்து இருக்கிறார். 12 வயதில் ஆயிஷா பூப்பெய்தியதும் அந்த குடும்பத்தில் ஒருவனுக்கே அவளை கட்டிக் கொடுத்திருக்கின்றனர். அவன் செய்த கொடுமைகளைத் தாளாமல் வீட்டை விட்டு தப்பி வந்தாள். தப்பி வந்தது குற்றம் என அவளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் நம் (கலாச்சார) காவல் நண்பர்கள்.
அவளை அவரது தந்தை மீட்டு அவரது வீட்டிற்கு கூட்டிச் சென்றிருக்கிறார்...சிறிது நேரத்தில் அங்கு வந்த அவளது கணவனும் அவனது உறவினர்களும் செய்த செயல்தான் கொடுமையின் உச்சம்...கொஞ்சமும் ஈவு இறக்கமின்றி...அவளது காதையும், மூக்கையும் அறுத்திருக்கிறான் அந்தக் கயவன்...இந்த காலத்திலும் இப்படியா? என்ற கேள்வியை விட...நாம் எவ்வளவு மோசமான கால கட்டத்தில் வாழ்கிறோம் என்ற பயமே அதிகம் வருகிறது.
முகத்தில் ஒரு முகப்பரு வந்தாலே நம்மால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை...அது சரியாகும் வரை தவித்துவிடுகிறோம்...முகத்தில் மூக்கும் இல்லை காதும் இல்லை என்றால்...எப்படி இருக்கும்...நினைத்தாலே நடுங்குகிறது... பெண்களை கிள்ளுக்கீரையா கருதும் இந்தக் கயவர்களை என்ன செய்யலாம் சொல்லுங்கள்?
அந்தப் பெண்ணுக்கு 18 வயதே பூர்த்தியாகி இருக்கிறது..இந்த சம்பவம் நடந்து 9 மாதங்கள் முடிந்துவிட்டன. காதையும் மூக்கையும் இழந்து தவிக்கும் ஆயிஷா எப்படியும் தனக்கு ஆபரேசன் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். தொட்டதெற்கெல்லாம் தற்கொலைக்கு முயலும் சிலரிடம் இவரது கதையைச் சொன்னால்..அவர்களுக்கு அந்த எண்ணம் இனி எழுமா?
இப்போது ஆபரேசனுக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் ஆயிஷா பூரண குணம் பெற பிரார்த்திப்போம்.....எந்த கொடுமைக்கும் இறுதியில் நம்மால் செய்ய முடிவது இது மட்டும்தான் இல்லையா..
பாருங்கள் இந்த விசயத்தில் ஒருவருக்கு மறுவாழ்வு அளிக்கப்போவதும் மருத்துவர்கள்தான்....மருத்துவர்கள் நல்லது செய்தால்...அதையும் உலகம் போற்றவும் தயங்காது..அதே போல அவர்கள் தவறு செய்யும் போது அதைத் தவறு என்று ஏற்றுக்கொள்ளக் கூட மருத்துவ உலகம் தயங்குவது ஏன்? விலை மதிக்க முடியாத உயிர் என்றால் இவர்களுக்கு அவ்வளவு இளக்காரமாகவா இருக்கிறது?
கழுகிற்காக
பிரியமுடன் ரமேஷ்...