Friday, April 29, 2011

ஒரு ஜனநாயக யுத்தம்....!!!!


கூகிள் இலவசமாய் வலைப் பூக்களை வழங்குகிறது. ஒரு உத்வேகத்தில் உருவாக்கப் பட்ட கழுகின் ஆரம்ப கால தருணங்களில் ஈழப்போர் நடந்து கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக எம் மக்கள் குண்டடி பட்டு இறந்து கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளும் கிளிநொச்சியில் ஆரம்பித்து ஆனையிறவுலிருந்து ஒவ்வொன்றாக இழந்து பின் தங்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அதிக ஈழச் செய்திகளை இணையத்தில் வாசித்து வாசித்து அங்கே நிகந்து கொண்டிருந்த கொடுங்காட்சிகளை சகிக்கவொண்ணமல் இயலாமையை எழுத்தாக்கிப் பார்த்த போது கழுகு என்ற குழந்தை  ஜனித்திருந்தது.


அவ்வபோது சமுதாயத்தில் நிகழும் அட்டூழியங்களையும், அதர்மங்களையும் வெறுமனே பார்த்து சகித்துச் சென்று கொண்டிருக்க வேண்டியதுதானா? ஏதேனும் எம்மக்களுக்கு பகிர வேண்டாமா என்ற சிந்தித்த போது இணையத்தில் எழுதி என்ன செய்ய முடியும் என்று சில எதிர்மறைக் கருத்துக்களை சந்திக்க வேண்டிய சூழலும் எமக்கு வந்தது. பிறகு ஆழ யோசித்ததில் ' இதைச் செய்து என்ன பண்ண முடியும் ? ' என்ற வாக்கியத்தை நமது எல்லா செயல்களுக்குமே கேள்வியாக்கிப் பார்த்தோமானால் எதுவே செய்யாமல் சவமாய் ஒரு மூலையில் சமைந்து கிடக்கவேண்டியதுதான்....என்ற ஒரு எண்ணமும் சூரியக் கதிராய் எம்முள் பளிச்சிட்டது.


ஒத்த கருத்துள்ள இதயங்கள் ஒன்று சேர்ந்த பொழுதில் ஒரு கொள்கை ஒன்று நமக்கு வேண்டுமே என்று சம்மட்டியால் அடித்த நினைவுகளை சமன் செய்து.... அந்த கொள்கைக்கு....

                                              " சமூக விழிப்புணர்வு "


என்று பெயரிட்டு அந்த ஒற்றை எண்ணத்தை விதைகளாய் தூவ ஆரம்பித்தோம். இங்கே மனித தலைகள் வழி நடத்தாது மாறாக கருத்துக்கள் வீரியமாய் மனிதர்களை வழி நடத்தும் என்ற எமது எண்ணத்தையும் பகின்றோம். கழுகின் இறகுகள் எல்லாம் பலம் பெற, பலம் பெற, மெல்ல மெல்ல எமது சிறகசைத்து எல்லையில்லா வானத்தின் மீதேறி ஒரு வீரப்பார்வையை யாம் பார்த்த கணம்...காலங்கள் கடந்தும் எமது தோழர்களின் சிந்தனைகளுக்கு உரமூட்டுமென்பது திண்ணம்.


கட்டுரைகளை சமைத்ததோடு வலுவான கட்டுரைகள் எங்கெல்லாம் பதிவுலக ஏகாதிபத்தியத்தால் ஒதுக்கப்பட்டு கிடந்ததோ அவற்றையெல்லாம் கழுகு தனது அலகினால் கொத்தி எடுத்து வந்து அனைவரின் பார்வைகளிலும் கிடத்தியது. விமர்சனம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்கள் நடந்த பொழுதெல்லாம் கழுகு தனது பிடரி சிலிர்க்க சண்டையேதும் செய்யாமல் கோபப் பார்வை பார்த்தே தீர்வுகளை இயம்பியிருக்கிறது.


எம் தோழர்களின் எழுத்துக்களிலும் எண்ணங்களிலும் இருந்த மெருகினை, அவர்களின் சிந்தனா சக்திகளை எல்லாம் கழுகின் வளர்ச்சிக்காக கொடுத்த போது இரு கண்ணிலும்  நீர் பெருக தலை வணங்கி தன் நன்றிகளை தெரிவித்து கழுகின் ஜீவனுள்ள உயிர்களாய் அவர்களை பாவித்திருக்கிறது, பாவிக்கிறது...


கழுகு விவாதக்குழுவின் அமைப்பில் தீரமுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கருத்து வேங்கைகள் எல்லாம் உற்சாகமாய் கழுகோடு ஒண்றினைந்து விழுப்புணர்வு போரில் கழுகாய் மாறி  சூழல்களின் முரண்பாடுகளுக்கு தீர்வு சொல்ல...கழுகு இதோ உங்கள் முன் விஸ்வரூபம் எடுக்கும் நிகழ்வுக்கு முந்தைய படியில் நிற்கிறது....!


கடந்த வருடத்தின் ஜூலை மாதத்தில் பிறந்த கழுகின் கரங்கள் இந்த வருடத்தில் வலுப்பட்டு போனதற்கு முழு முதற்காரணம் எமது விவாதக் குழு தோழர்கள்...! இதோ ஒட்டு மொத்த இறகுகளும் ஒன்று சேர்ந்து 100 என்ற இலக்கினை சாதாரண ஒரு எண்ணிக்கையாக மட்டுமே பார்த்து கடந்து கொண்டிருக்கிறோம். இந்த நூறில் ஒன்று கூட விழலுக்கு போகவில்லை, இந்த நூறில் ஒன்றில் கூட  பகட்டில்லை.. இந்த நூறில் எந்த வியாபார யுத்தியும் இல்லை.. இந்த நூறில் எந்தப் பொய்களும் இல்லை..இந்த நூறில் எந்த ஒரு கொடுக்கல் வாங்கலும் இல்லை... இந்த நூறும்....


" விழிப்புணர்வு இறகுகள் கூடி எம்மின் சிறகுக்கு வலு கொடுத்த ..ஆயுதங்களாய் மாறிய அற்புதம் மட்டும் நடந்தேறியிருக்கின்றது "


ஒரு ஐந்து பேருக்காவது யாம் பயன் பட்டிருபோமென்றால் ஒரு ஐந்து பேரின் புத்திக்குள் புது விசங்களை கொடுத்திருப்போமென்றால்...ஒரு மைக்ரோ மில்லி மீட்டர் மனித மூளைகளை நகர்த்தியிருக்கிறோமென்றால்...........அது எமது இமாலய வெற்றி..!

இதோ கழுகு சிலிர்த்து நிற்கிறது உங்கள் முன்...! 


திக்குகளெட்டும் முரசு கொட்டி செவிகள் கிழிய அறிவிக்கிறோம்...எமது விழிப்புணர்வு போர் கம்பீரமானது....!!! இங்கே எமது சமுயாத்திற்கு எம்மால் இயன்றதை சர்வ நிச்சயமாய் செய்வோம்... என்ற செய்தியினை!!! '


கழுகு விவாதக் குழு நண்பர்கள் அனைவருக்கும், சமுதாய விழிப்புணர்வில் ஆர்வம் கொண்டு எம்மை வலுப்படுத்த புறத்திலிருந்து அரவணைக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் கழுகின் சிரம் தாழ்ந்த நன்றிகளை காணிக்கையாக்கி....


எமது சிறகடிப்பினை தொடர்கிறோம்...!!!!!




(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)


Wednesday, April 27, 2011

பள்ளி நிர்வாகங்கள் யோசிக்குமா?



நாட்டின் வளர்ச்சியை நிர்ணயம் செய்ய ஏதேதோ திசைகளில் திட்டங்களைத் தீட்டுவதை விட பள்ளி பிள்ளைகளுக்கான வழிகாட்டுதலை ஒரு பள்ளி நிர்வாகமும் பெற்ற்றோரும்  சிரத்தையெடுத்து செய்தல் வேண்டும். நாளைய தேசத்தை நிர்மாணம் செய்யப் போகும் தேசத்தின் குடிமக்கள் உருவாகும் ஒரு இடமாக பள்ளிகள் இருப்பதன் பின் புலத்தில் ஒரு  கல்வி நிலையத்தின் செயல்பாடுகளும் முடிவுகளும்தான் இருக்கின்றன..!

இதோ இந்த கட்டுரையை வாசியுங்கள்.. உங்களுக்கான புதியதோர் செய்தி காத்திருக்கிறது.


பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு, கோடைக்கால விடுமுறை என்று தான் பேரு.. ஆனா, குடுப்பாங்க பாருங்க சம்மர் ப்ரஜெக்டுனு....  அது உண்மையிலேயே பிள்ளைகளுக்குத்தானா? இல்லை பெற்றோர்களுக்காவென்றே தெரியவில்லை. இப்போ சந்தேகம் என்னவென்றால், இந்த வகையான ஆக்டிவிட்டீஸ்கள் எல்லாம் நம்முடைய பிள்ளைகளின் கிரியேட்டிவிட்டியை அதிகரிக்கின்றதா? இல்லை அது ஒரு சுமையாக மட்டும் அமைந்து விடுகிறதா என்பதே..
அதற்காக பள்ளி ஆசிரியர்களைக் குறை கூற விருப்பமில்லை.. ஆதங்கமெல்லாம் கொஞ்சம் இந்த ஆக்டிவிட்டீஸ்கள் கொஞ்சம் பிள்ளைகளுக்கு இண்டெரெஸ்டிங்காகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நல்லது. சரி


இந்த மாதிரியான ப்ராஜெக்டுகளை நம்ம பிள்ளைகளையே செய்ய வைப்போம் என்று நன்கு பயிற்சி கொடுத்து.. பாப்பா.. இங்க பாரும்மா.. இந்த படத்தை இப்டி cut பண்ணி ஒட்டுமா என்று அவர்களையே செய்ய வைத்துக் கொண்டு சென்றோம் என்றால், அங்கு அதற்குத் தகுந்த மதிப்பெண்கள் கிடைப்பதில்லை.. மாறாக 99% யார் மிகச் சரியாக செய்து கொண்டு வந்திருக்கிறார்களோ அவர்களுக்கே அதிக மதிபெண்கள்.. இது நியாயம் தானே என்று விசாரித்துப் பார்த்தோமானால், அதன் பிண்ணனியில் பெற்றொர்களின் பங்கே அதிகம் இருக்கும். இப்படி இருக்கும் பட்ச்சத்தில் அந்த ஆக்டிவிட்டிகளின் நோக்கம் சரிவர நிறைவேறவில்லை என்று தானே அர்த்தம்.




இதில் பெற்றோர்களையும் குறை சொல்ல முடியாது.. ஏனென்றால் அத்தகைய நெருக்கடிக்குள் பாடத்திட்டங்கள் இருக்கிறது.. குறிப்பாக இந்த மாதிரியான Extra curricular activities எல்லாம் அப்படி இருக்கிறது என்றே சொல்லலாம். ஆதலால் பள்ளி நிர்வாகிகளே..  ஆசிரியர்களே.. பிள்ளைகளின் வயதுக்குத் தகுந்த மாதிரியான vocation project களைக் கொடுங்கள்.
இப்போது பெரிய பெரிய CBSE syllabus கொண்ட பள்ளிகளில் செமஸ்டர் முறையில் தேர்வுகளும், மதிப்பெண்களும் வழங்குகிறார்கள். இதில் பார்த்தால் அதிகப்படியான மதிப்பெண்கள் இருக்கிறது acadamics தவிர்த்து..
இந்த மாதிரியான ஆக்டிவிட்டீஸ்களுக்கே வழங்குவதால் தான் இத்தனை பிரச்சனைகளும் என்று தோன்றுகிறது






நல்ல வசதியுடைய பெற்றோர்கள், மிகச் சிறப்பான முறையில் அதிக பணம் செலவழித்து இந்த ப்ராஜெக்டுகளை submit செய்கிறார்கள்… ஆனால் அப்பொழுது தான் கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளை இந்த மாதிரியான பெரிய பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்களின் நிலையும் பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது…அதனால்.. இந்த முறையால்.. எங்கே சமத்துவம் இருக்கிறது? பிள்ளைகளின் திறமையை மட்டும் பொறுத்தல்லவா மதிபெண்களும் முன்னிரிமைகளும் வழங்கப்பட வேண்டும். மாறாக இங்கு பெற்றோர்களின் பின்புலத்தைப் பொறுத்தும் அல்லவா அமைந்து விடுகிறது இத்தைகய பாடத் திட்டங்களால்..



சரி.. இது தான் இப்படி என்றால்.. போட்டிகள் என்று ஒன்றை நடத்துகிறார்கள்.. அதிலும் பெற்றோர்களின் ஆளுமையே அதிகமாக இருக்கும். இப்படித்தான்.. திருச்சியில் உள்ள ஒரு பெரிய பள்ளியில்… அதுவும் LKG மாணவர்களுக்கிடையே நடந்த ஒரு போட்டிக்கு… அவனுடைய பெற்றோர் ஒரு லாரி நிறைய.. அப்போட்டிக்குத் தேவையான(?) supporting equipments கொண்டு வந்து இறக்கி விட்டார்கள்… இந்த ஆடம்பரங்கள் எவ்வகையில் நியாயம்? அங்கு கூடி இருக்கும் மற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன நிலையயும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. இங்கு அந்த பெற்றோர்களை எவ்வகையிலும் குறை சொல்ல முடியாது.. அது அவர்கள் பிள்ளையின் பால் கொண்ட பாசம்.. இதை நிர்வாகமும் எப்படி அனுமதிக்கிறது எனபது வியப்பாகவே இருக்கிறது..



ஆதலால்.. எமது ஆதங்கமெல்லாம்.. பள்ளி நிர்வாகிகளே.. ஆசிரியர்களே.. மாணவர்களின் திறமையையும் அறிவுத் திறனையும் பொறுத்தே மட்டும் பிள்ளைகளை வகைப்படுத்துங்கள்.. Extra curricular activities என்ற பெயரில்.. பெற்றோர்களின் பின்புலம் பண வசதி போன்ற காரணிகள் அதனுள்ளே வராமல் இருத்தல் நலம்.. இக்கட்டுரையின் நோக்கம் பள்ளிகளையோ, ஆசிரியர்களையோ குறை கூறுவதற்காக அல்ல… மாறாக புதிய பாடத்திட்ட வழிமுறைகளியோ.. ப்ராஜெக்டுகள் ம்ற்றும் acadamics தவிர்த்த ஆக்டிவிட்டீஸ்கள் கொடுக்கும் போது எங்கள் பிஞ்சுகளின் மனநிலையையும் கருத்தில் கொள்ளுங்கள்.. என்றே யாம் இந்தக் கட்டுரையின் வாயிலாக எங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் மனதளவில் பிஞ்சு மனங்களுகிடையே வேறுபாடுகள் புகுத்தப் படாமல் காத்து நல்ல இளைய சமுதாயம் படைப்போம்..


உயரட்டும் கல்வியறிவு.. வாழிய இந்தியா..




கழுகிற்காக
 மகேஷ்வரி

 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Thursday, April 21, 2011

எங்கே செல்கிறது நடுத்தர வர்க்கம்...? ஒரு அலசல்...!








"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்"....., "வரப்புயர.....குடிஉயரும்" என்ற பழம் பெறும் கவிஞர்களின் பாடல்களையும், "பசியோடு இருப்பவனுக்கு மீனை தருவதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க" சொன்ன புதுமை சிந்தனையளர்களின் எண்ண்ங்களை போற்றி அதற்கு மாற்றுக் கருத்து கொண்டிராத தலைவர்களை, ஆட்சியளர்களாக பெற்றிருந்த.., பெற்று இருக்கின்ற நம் தமிழகத்தின் தற்பொழுதைய நெற் கள்ஞ்சியமாம் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் உழவும், தொழிலும் படும் பாடு இருக்கின்றதே...!

ஏன்..? அங்கு விளைச்சலுக்கு என்ன பஞ்சம்?

முன்பு போல் இல்லை என்றாலும் "கைப்புள்ள"  ஸ்டைலில் கர்நாடகா காரனை மிரட்டி.! உருட்டி..! கெஞ்சி...! கடைசியாக அழுது..! கொஞ்சம் தண்ணீரும்; ஐந்தாறு வருடங்களாக பொய்க்காமல் பெய்யும் வானத்தின் தயவில் கொஞ்சம் தண்ணீரும்; உடனடி மின் இணைப்பு மற்றும் நூறு சதவீத இலவச மின்சாரம் காரணமாக இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயி கூட போர் செட் வைத்துக் கொண்டு துண்டு விழாத தண்ணீர் பட்ஜெட் போட்டு விவசாயம் செய்கிறார்களே... பிறகென்ன குறைச்சல் இந்த மாவட்ட உழவுக்கும், அதைச்சார்ந்த தொழிலுக்கும்..!?

யார் செய்த புண்ணியமோ, தற்பொழுது தமிழகத்தில் சரியாக இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களும் இடையிடையே உள்ளாட்சி தேர்தல்களும் வருவதால், சராசரியாக ஒரு விவசாயி வாங்கும் நான்கு விவசாய கடன்களில் ஒன்று ஓட்டு அரசியலுக்காக தள்ளுபடி செய்யப்பட்டு விடுகின்றது. இந்த ஆண்டு முதல் வட்டியே இல்லாத கடனும் கொடுக்கப்படுகின்றது.

ஒரு விவசாயி சொந்தமாக நிலம் வைத்திருந்தாலே போதும், அந்த சிட்டாவை (Kissan credit card) வைத்து எந்த ஒரு தேசிய வங்கியிலும் அல்லது கூட்டுறவு வங்கியிலோ "கைமாற்றாக" (வட்டி இல்ல எனும் பொழுது 'கடன்' என்று எப்படி சொல்ல முடியும்) பணம் பெற்று விவசாயம் செய்து, மகசூல் நெல்லை விற்று தன்னுடைய லாபத்தை எடுத்துக் கொண்டு "கைமாற்றை" திரும்ப செலுத்தி விடலாம்.

இயற்கை இடற்பாடுகள் (அதிக மழை-வெள்ளம் அல்லது வறட்சி) நடுவில் வந்து பயிருக்கு குந்தகம் ஏற்பட்டால்..?

...இருக்கவே இருக்கிறது வெள்ள/வறட்சி நிவாரணம்! ஏக்கருக்கு இவ்வளவு என்று ஆளும் கட்சியும், எதிர் கட்சிகளும் அறிக்கைப் போரில் பேரம் நடத்தி ஒரு நல்ல தொகை கிடைத்து விடுகிறது. போதாக்குறைக்கு பயிர் பாதுகாப்பு திட்டமும் உண்டு.

சரி... விளைச்சலுக்குப் பின் விற்பது எப்படி?

மாநில அரசே ஆங்காங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (DPC) அமைத்து விளைந்த நெல்லை வாங்கிக்கொள்கிறது. இந்திய தொலைக்காட்சிகளிளேயே முதன் முறையாக என்பது போல்.. தமிழக அரசு இந்த வருடம் நெல்லுக்கு இது வரை இல்லாத உச்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 10.50 என்று நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறது. எனவே தனியார் வியாபாரிகள் ஒரு கிலோ நெல்லுக்கு ரூ 10.50 க்கு மேல் விலை கொடுத்தால் தான் விவசாயிகளிடம் நெல் வாங்க முடியும்.

விவசாயி என்ற ஒருவருக்கு சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ விளை நிலம் இருந்தாலே போதும்...

வட்டியில்லாத மூலதனம் (working capital) கொடுக்க ஆள்(bank) ரெடி! வானம் பொய்த்தாலும், கர்நாடகாகாரன் கைவிரித்தாலும் சரி..! பயிர் வளர்ச்சிக்கு தேவையான "சக்தி" (supporting power) அதாவது "தண்ணீர்" - இலவச மின்சாரத்தால் இயக்கப்படும் போர்செட் மூலம் கிடைத்து விடுகிறது.இப்போது அந்த போர்செட் மோட்டாரும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தற்போதைய செய்தி. இடையில் வெள்ளம்/வறட்சி யால் பாதிப்பு ஏற்பட்டால், வெள்ளம்/வறட்சி நிவாரண நிதி மூலம் அதுவரை போட்ட பணத்திற்கு பங்கமில்லை என்ற "Lowest Risk Factor" உள்ள தொழிலாக இருக்கினறது...!

அப்படி என்றால் விவசாயத்திற்கு ஒரு விவசாயி என்னென்ன செலவு செய்ய வேண்டும்?

ரொம்ப சிம்பிள்:

1. விதை நெல் காசு கொடுத்து வாங்க வேண்டும் ( அதையும் இலவசமாக அரசே கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு விட்டது. எனவே வரும் சட்டசபை தேர்தலில் முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இது கண்டிப்பாக இடம் பிடித்து யார் ஆட்சிக்கு வந்தாலும் செயல் படுத்தப்பட்டு விடும்.)

2. உரம், பூச்சி மருந்து - காசு கொடுத்து வாங்க வேண்டும். (அனேகமாக அடுத்த பொதுத்தேர்தலில் இதற்கும் ஒரு விடிவு கிடைத்து விடும்).தற்போது உரமானியமும் நிலுவையில் உண்டு.

3. விதை விதைப்பில் ஆரம்பித்து அறுவடை வரை உள்ள வேலைகளை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும்.

இந்த மூன்று இனங்களுக்கு தான் தற்பொழுது விவசாயம் செய்ய ஒரு விவசாயி செலவிட வேண்டும். தன் கை காசையோ, உறவினர்களிடம் கடனாகவோ அதற்கு வாங்க தேவை இல்லாமல் வட்டி இல்லா கடன் வங்கிகள் கொடுத்து விடுகின்றன. நடுவில் ஏதாவது இழப்பு ஏற்பட்டாலும் நிவாரண நிதி அல்லது கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஈடு செய்யப்பட்டு விடுகின்றது.

இந்த மூன்று செலவினங்களில் முதல் இரண்டும் இன்னும் ஐந்தாறு வருடங்களில் கண்டிப்பாக இலவசமாக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம். மூன்றாவது செலவினமான விவசாய தொழிலாளர்களின் கூலி தான் தற்பொழுது அவர்களுக்கு உள்ள ஒரே பிரச்சினை!

அதில் என்ன பிரச்சினை? இது நூறு நாள் வேளை திட்டம், ஒரு ரூபாய் அரிசி மற்றும் இன்னபிறவால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கே ஏற்பட்டுள்ள  அதி முக்கிய பிரச்சினை. இதைப் பற்றி விலாவாரியாக வேறொரு பதிவில் பார்ப்போம்.

தற்பொழுது மிக முக்கியமான ஒரு பிரச்சினைக்கு வருவோம். பிரச்சினை என்றால் அது விவசாயிகளுக்கோ, விவசாய தொழிலாளர்களுக்கோ இருப்பது அல்ல. ...பிறகு?

விவரம் புரியாமல் இவர்களைப் பார்த்து பரிதாபபட்டுக் கொண்டு, மேலேயும் போக முடியாமல் கீழேயும் இறங்க முடியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும், உண்மையிலே பரிதாபத்திற்குறிய நடுத்தர வர்க்க சீமான்களுக்கு (நினைப்பில்) உள்ள பிரச்சினையை தான் தற்பொழுது பேசப் போகிறோம்.

ஒரு குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் பெறும் பங்கு வகிப்பது உணவு பொருட்கள் தான். அதுவும் தென் இந்தியாவை பொருத்தவரை அரிசி மட்டும் தான். விவசாய தொழிலாளர்கள் மற்றும் பிற பாட்டாளி இனத்தவர் அனைவரும் அரசின் ஒரு ரூபாய் அரிசியையே உபயோகித்துக் கொள்கிறார்கள். விவசாயிகளோ விளைச்சலில் ஒரு பகுதியை தங்கள் தேவைக்கு ஒதுக்கிக் கொள்கிறார்கள். ஆனால் பரிதாபத்துக்குறிய மேதாவிகளான நடுத்தர வர்க்கம்....?!

ரேஷன் அரிசி நன்றாக இருந்தால் கூட அதை வாங்கி உபயோகிப்பதில் ஒரு மானப் பிரச்சினை இருக்கிறது. தன் உரிமையை தான் பெறப்போவதில் அப்படிஎன்ன மானப்பிரச்சனை என்பதே புரியாத ஒரு வர்க்கம் அந்த நடுத்தர வர்க்கம்.

ரூ 10.50 க்கு அரசினால் கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ நெல்லை அரைத்து பகுத்தால் அரை கிலோ அரிசி தான் தேறும். ஆகவே ஒரு கிலோ அரிசியின் விலை ரூ21/= ஆகிறது. நெல்லை அரிசியாக மாற்றும் பொழுது ஏற்படும் உற்பத்தி இழப்பு (depriciation), இடம் மாறும் செலவு (logistic expenses), அரவை தொழிலாளர் கூலி, பேக்கிங் செலவு, மீண்டும் சந்தைப்படுத்தும் செலவினம், அதற்கும் மேல் குறைந்த பட்சம் 2 லிருந்து 5 சதவீத லாபம் எல்லாம் சேர்த்தால் ஒரு கிலோ அரிசியின் விலை கிட்டத்தட்ட ரூபாய் 26 லிருந்து ரூ. 27/= வரை ஆகிவிடுகிறது.

இந்த அரிசியை கடைக்காரர்கள் ஒரு லாபம் வைத்து விற்கும் பொழுது ரூ. 30/= ம் அதற்கு மேலும் செல்கிறது. ஆகவே மேற்படி அறிவுஜீவி நடுத்தர சீமான்கள் இந்த அரிசியை வாங்கி உபயோகித்து விட்டு விவசாயிகளுக்காகவும், விவசாய கூலிகளுக்காகவும் பரிந்து பரிதவித்து விவாதம் நடத்திக் கொண்டிருப்பார்கள்.

தாங்கள் யார்? எந்த குழுவில் (நிலையில்) இருக்கின்றோம்? என்னென்ன கோரிக்கைகளை அரசிடம் வைக்க வேண்டும்? என்று எதுவுமே தெரியாமல், அது பற்றி எந்த முயற்சியையும் இது வரை எடுக்காமல் எல்லா வகையான கூலி தொழிலாளர்கள் மற்றும் பாட்டாளி மக்களையும் விட மிக அதிகமாக மாடு போல் உழைத்து உண்மையான பரிதபத்திற்கு உரியவர்களாக அரசாங்கத்தின் சலுகைகளுக்கும், பாதுகாப்பிற்கும் நியாயமான தகுதி உள்ளவர்களாக இருந்தும் ஏமாளிகளாகவே இருக்கின்றார்கள்.

விவசாயிகள், பாட்டாளிகள், தொழிலாளிகள் என்று விதவிதமான பெயர்களில் உள்ளவர்களுக்கு அரசாங்கம் அள்ளிவிடும் இலவச திட்டங்கள் அனைத்துமே சுற்றி வளைத்து இந்த நடுத்தர சீமான்களையே தாக்கும்.

மேலே எடுத்துக் கொண்ட "அரிசி" என்ற விஷயம் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'  என்பது போல் தான். நியூட்டனின் முதல் விதிப்படி "சக்தி" (Energy) மட்டுமல்ல..., ஒரு நாட்டின் பொருளாதாரமும் ஆட்சியாளர்கள் நினைப்பது போல் திடீர் என்று ஏற்றவோ, இறக்கவோ முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொருளாதாரப் புழக்கம் போலியாக அல்லது செயற்கையாக உருவாக்கப்ப்ட்டால் அது கண்டிப்பாக வேறொரு இடத்திலிருந்து சுரண்டி எடுக்கப்பட்டதாகத்தான் இருக்க முடியும்.

அதாவது விவசாயிகளுக்கு (1) கடன் தள்ளுபடி, (2) வெள்ள நிவாரணம், (3) வட்டி தள்ளுபடி, (4) இலவச மின்சாரம், இதற்கெல்லாம் மேலாக (5) அதிக விலை நிர்ணயித்து கொள்முதல்.... இவை அனைத்தையும் ஈடு செய்வதற்கு கலியுக கர்ணன்கள் - ஆன இந்த நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் இன்னும் அதிகமாக தன் குடும்பத்தினர் அனைவரையும் சேர்த்துக் கொண்டு உழைக்க வேண்டும். வேறுவ்ழியில்லை?

மின்சார தட்டுப்பாடு இவன் தலையில். பெட்ரோல் வாராவாரம் ஏறித்தொலைத்தால் இவன் தலையில். அதனால் ஆட்டோ கட்டணம் முதல் ஆயாக்கடை ஆப்பம் வரை விலை ஏறினால் அதுவும் இவன் தலையில். 60000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டால்  அந்த அரசு இழப்பை தன் தலையில் பகிர்ந்து கொள்வது இவன். எல்லாவற்றுக்கும் நடுத்தர வர்க ஏமாளி சுமக்கும்போது இவனுக்காக வாதாட மத்திய அரசிலோ மாநில அரசிலோ எவரும் இல்லை. மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகள் காபந்து செய்யப்படுவர். மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில்  பாட்டாளிகளுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் சாதகமான விஷயங்கள் பிரித்து மேயப்படும். பாவம் நடுத்தர வர்க்கம் அனாதை ஆனந்தன் ஆகிவிட்ட நிலை என்பது அவனுக்கே தெரியவில்லை இன்னமும்.

இது தான் சரியான நேரம்..! பொறுமையின் எல்லைக்கோட்டிற்கு வந்தாகி விட்டது. இதற்கு மேல் ஒரு அடி சென்றாலும் "ஏமாளி" என்ற முத்திரை குத்தப்பட்டுவிடும்.

"ரொம்ப நல்லவன், எவ்வளவு அடித்தாலும் தாங்குறான்டா..!" என்ற வடிவேலுவின் பிரசித்தி பெற்ற காமெடி வசனத்திற்கு சொந்த்க்கார்களாகி விடுவார்கள் இந்த அறிவுஜீவிகள்.

அறிவுஜீவிகள் என்று அடிக்கடி இவர்களை அழைப்பது கிண்டலும் அல்ல பொய்யான வார்த்தையும் அல்ல. ஏனென்றால் இவர்கள் தோளில் தான் ஒட்டு மொத்த இந்தியாவின் படைப்பாற்றலும் பொருளாதாரமும், எதிர் காலமும், இன்ன பிற இத்தியாதிகளும் ஏற்றப்பட்டிருக்கின்றன.

இலக்கில்லாமல் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் அறிவாற்றலை ஒரு சில மணித்துளிகளாவது நிதர்சன நிலையை உணர செலவிட வேண்டும். அப்பொழுது தான் இந்தியாவின் பொருளாதாரம் சமநிலையில் இல்லாமல் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு ஒரு பக்கம் சோம்பேறிகளையும் மறு பக்கம் மிக அதிக உழைப்பால் களைத்து, அதற்கேற்ற வளர்ச்சி இல்லாமையால் விரக்தி மனநிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தையும் கொண்ட ஆபத்தான இந்திய கட்டமைப்பை தவிர்க்க இயலும். 

ஆக இந்த கட்டுரையின் முக்கிய சாராம்சமே இனி நடுத்தர வர்க்கம் நடுத்தெரு வர்க்கமாக ஆகும் சூழலில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய கேள்வி.அந்த கேள்விக்கான திரியை இந்த பதிவின் மூலமாக பற்றவைத்தாகிவிட்டது. இனி இதை விவாத பொருளாக்கி ஆவண செய்வது நடுத்தர வர்கத்தினரின் முக்கிய கடமையாகும். 


கழுகிற்காக



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes