Thursday, April 21, 2011

எங்கே செல்கிறது நடுத்தர வர்க்கம்...? ஒரு அலசல்...!








"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்"....., "வரப்புயர.....குடிஉயரும்" என்ற பழம் பெறும் கவிஞர்களின் பாடல்களையும், "பசியோடு இருப்பவனுக்கு மீனை தருவதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க" சொன்ன புதுமை சிந்தனையளர்களின் எண்ண்ங்களை போற்றி அதற்கு மாற்றுக் கருத்து கொண்டிராத தலைவர்களை, ஆட்சியளர்களாக பெற்றிருந்த.., பெற்று இருக்கின்ற நம் தமிழகத்தின் தற்பொழுதைய நெற் கள்ஞ்சியமாம் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் உழவும், தொழிலும் படும் பாடு இருக்கின்றதே...!

ஏன்..? அங்கு விளைச்சலுக்கு என்ன பஞ்சம்?

முன்பு போல் இல்லை என்றாலும் "கைப்புள்ள"  ஸ்டைலில் கர்நாடகா காரனை மிரட்டி.! உருட்டி..! கெஞ்சி...! கடைசியாக அழுது..! கொஞ்சம் தண்ணீரும்; ஐந்தாறு வருடங்களாக பொய்க்காமல் பெய்யும் வானத்தின் தயவில் கொஞ்சம் தண்ணீரும்; உடனடி மின் இணைப்பு மற்றும் நூறு சதவீத இலவச மின்சாரம் காரணமாக இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயி கூட போர் செட் வைத்துக் கொண்டு துண்டு விழாத தண்ணீர் பட்ஜெட் போட்டு விவசாயம் செய்கிறார்களே... பிறகென்ன குறைச்சல் இந்த மாவட்ட உழவுக்கும், அதைச்சார்ந்த தொழிலுக்கும்..!?

யார் செய்த புண்ணியமோ, தற்பொழுது தமிழகத்தில் சரியாக இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களும் இடையிடையே உள்ளாட்சி தேர்தல்களும் வருவதால், சராசரியாக ஒரு விவசாயி வாங்கும் நான்கு விவசாய கடன்களில் ஒன்று ஓட்டு அரசியலுக்காக தள்ளுபடி செய்யப்பட்டு விடுகின்றது. இந்த ஆண்டு முதல் வட்டியே இல்லாத கடனும் கொடுக்கப்படுகின்றது.

ஒரு விவசாயி சொந்தமாக நிலம் வைத்திருந்தாலே போதும், அந்த சிட்டாவை (Kissan credit card) வைத்து எந்த ஒரு தேசிய வங்கியிலும் அல்லது கூட்டுறவு வங்கியிலோ "கைமாற்றாக" (வட்டி இல்ல எனும் பொழுது 'கடன்' என்று எப்படி சொல்ல முடியும்) பணம் பெற்று விவசாயம் செய்து, மகசூல் நெல்லை விற்று தன்னுடைய லாபத்தை எடுத்துக் கொண்டு "கைமாற்றை" திரும்ப செலுத்தி விடலாம்.

இயற்கை இடற்பாடுகள் (அதிக மழை-வெள்ளம் அல்லது வறட்சி) நடுவில் வந்து பயிருக்கு குந்தகம் ஏற்பட்டால்..?

...இருக்கவே இருக்கிறது வெள்ள/வறட்சி நிவாரணம்! ஏக்கருக்கு இவ்வளவு என்று ஆளும் கட்சியும், எதிர் கட்சிகளும் அறிக்கைப் போரில் பேரம் நடத்தி ஒரு நல்ல தொகை கிடைத்து விடுகிறது. போதாக்குறைக்கு பயிர் பாதுகாப்பு திட்டமும் உண்டு.

சரி... விளைச்சலுக்குப் பின் விற்பது எப்படி?

மாநில அரசே ஆங்காங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (DPC) அமைத்து விளைந்த நெல்லை வாங்கிக்கொள்கிறது. இந்திய தொலைக்காட்சிகளிளேயே முதன் முறையாக என்பது போல்.. தமிழக அரசு இந்த வருடம் நெல்லுக்கு இது வரை இல்லாத உச்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 10.50 என்று நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறது. எனவே தனியார் வியாபாரிகள் ஒரு கிலோ நெல்லுக்கு ரூ 10.50 க்கு மேல் விலை கொடுத்தால் தான் விவசாயிகளிடம் நெல் வாங்க முடியும்.

விவசாயி என்ற ஒருவருக்கு சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ விளை நிலம் இருந்தாலே போதும்...

வட்டியில்லாத மூலதனம் (working capital) கொடுக்க ஆள்(bank) ரெடி! வானம் பொய்த்தாலும், கர்நாடகாகாரன் கைவிரித்தாலும் சரி..! பயிர் வளர்ச்சிக்கு தேவையான "சக்தி" (supporting power) அதாவது "தண்ணீர்" - இலவச மின்சாரத்தால் இயக்கப்படும் போர்செட் மூலம் கிடைத்து விடுகிறது.இப்போது அந்த போர்செட் மோட்டாரும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தற்போதைய செய்தி. இடையில் வெள்ளம்/வறட்சி யால் பாதிப்பு ஏற்பட்டால், வெள்ளம்/வறட்சி நிவாரண நிதி மூலம் அதுவரை போட்ட பணத்திற்கு பங்கமில்லை என்ற "Lowest Risk Factor" உள்ள தொழிலாக இருக்கினறது...!

அப்படி என்றால் விவசாயத்திற்கு ஒரு விவசாயி என்னென்ன செலவு செய்ய வேண்டும்?

ரொம்ப சிம்பிள்:

1. விதை நெல் காசு கொடுத்து வாங்க வேண்டும் ( அதையும் இலவசமாக அரசே கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு விட்டது. எனவே வரும் சட்டசபை தேர்தலில் முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இது கண்டிப்பாக இடம் பிடித்து யார் ஆட்சிக்கு வந்தாலும் செயல் படுத்தப்பட்டு விடும்.)

2. உரம், பூச்சி மருந்து - காசு கொடுத்து வாங்க வேண்டும். (அனேகமாக அடுத்த பொதுத்தேர்தலில் இதற்கும் ஒரு விடிவு கிடைத்து விடும்).தற்போது உரமானியமும் நிலுவையில் உண்டு.

3. விதை விதைப்பில் ஆரம்பித்து அறுவடை வரை உள்ள வேலைகளை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும்.

இந்த மூன்று இனங்களுக்கு தான் தற்பொழுது விவசாயம் செய்ய ஒரு விவசாயி செலவிட வேண்டும். தன் கை காசையோ, உறவினர்களிடம் கடனாகவோ அதற்கு வாங்க தேவை இல்லாமல் வட்டி இல்லா கடன் வங்கிகள் கொடுத்து விடுகின்றன. நடுவில் ஏதாவது இழப்பு ஏற்பட்டாலும் நிவாரண நிதி அல்லது கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஈடு செய்யப்பட்டு விடுகின்றது.

இந்த மூன்று செலவினங்களில் முதல் இரண்டும் இன்னும் ஐந்தாறு வருடங்களில் கண்டிப்பாக இலவசமாக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம். மூன்றாவது செலவினமான விவசாய தொழிலாளர்களின் கூலி தான் தற்பொழுது அவர்களுக்கு உள்ள ஒரே பிரச்சினை!

அதில் என்ன பிரச்சினை? இது நூறு நாள் வேளை திட்டம், ஒரு ரூபாய் அரிசி மற்றும் இன்னபிறவால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கே ஏற்பட்டுள்ள  அதி முக்கிய பிரச்சினை. இதைப் பற்றி விலாவாரியாக வேறொரு பதிவில் பார்ப்போம்.

தற்பொழுது மிக முக்கியமான ஒரு பிரச்சினைக்கு வருவோம். பிரச்சினை என்றால் அது விவசாயிகளுக்கோ, விவசாய தொழிலாளர்களுக்கோ இருப்பது அல்ல. ...பிறகு?

விவரம் புரியாமல் இவர்களைப் பார்த்து பரிதாபபட்டுக் கொண்டு, மேலேயும் போக முடியாமல் கீழேயும் இறங்க முடியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும், உண்மையிலே பரிதாபத்திற்குறிய நடுத்தர வர்க்க சீமான்களுக்கு (நினைப்பில்) உள்ள பிரச்சினையை தான் தற்பொழுது பேசப் போகிறோம்.

ஒரு குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் பெறும் பங்கு வகிப்பது உணவு பொருட்கள் தான். அதுவும் தென் இந்தியாவை பொருத்தவரை அரிசி மட்டும் தான். விவசாய தொழிலாளர்கள் மற்றும் பிற பாட்டாளி இனத்தவர் அனைவரும் அரசின் ஒரு ரூபாய் அரிசியையே உபயோகித்துக் கொள்கிறார்கள். விவசாயிகளோ விளைச்சலில் ஒரு பகுதியை தங்கள் தேவைக்கு ஒதுக்கிக் கொள்கிறார்கள். ஆனால் பரிதாபத்துக்குறிய மேதாவிகளான நடுத்தர வர்க்கம்....?!

ரேஷன் அரிசி நன்றாக இருந்தால் கூட அதை வாங்கி உபயோகிப்பதில் ஒரு மானப் பிரச்சினை இருக்கிறது. தன் உரிமையை தான் பெறப்போவதில் அப்படிஎன்ன மானப்பிரச்சனை என்பதே புரியாத ஒரு வர்க்கம் அந்த நடுத்தர வர்க்கம்.

ரூ 10.50 க்கு அரசினால் கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ நெல்லை அரைத்து பகுத்தால் அரை கிலோ அரிசி தான் தேறும். ஆகவே ஒரு கிலோ அரிசியின் விலை ரூ21/= ஆகிறது. நெல்லை அரிசியாக மாற்றும் பொழுது ஏற்படும் உற்பத்தி இழப்பு (depriciation), இடம் மாறும் செலவு (logistic expenses), அரவை தொழிலாளர் கூலி, பேக்கிங் செலவு, மீண்டும் சந்தைப்படுத்தும் செலவினம், அதற்கும் மேல் குறைந்த பட்சம் 2 லிருந்து 5 சதவீத லாபம் எல்லாம் சேர்த்தால் ஒரு கிலோ அரிசியின் விலை கிட்டத்தட்ட ரூபாய் 26 லிருந்து ரூ. 27/= வரை ஆகிவிடுகிறது.

இந்த அரிசியை கடைக்காரர்கள் ஒரு லாபம் வைத்து விற்கும் பொழுது ரூ. 30/= ம் அதற்கு மேலும் செல்கிறது. ஆகவே மேற்படி அறிவுஜீவி நடுத்தர சீமான்கள் இந்த அரிசியை வாங்கி உபயோகித்து விட்டு விவசாயிகளுக்காகவும், விவசாய கூலிகளுக்காகவும் பரிந்து பரிதவித்து விவாதம் நடத்திக் கொண்டிருப்பார்கள்.

தாங்கள் யார்? எந்த குழுவில் (நிலையில்) இருக்கின்றோம்? என்னென்ன கோரிக்கைகளை அரசிடம் வைக்க வேண்டும்? என்று எதுவுமே தெரியாமல், அது பற்றி எந்த முயற்சியையும் இது வரை எடுக்காமல் எல்லா வகையான கூலி தொழிலாளர்கள் மற்றும் பாட்டாளி மக்களையும் விட மிக அதிகமாக மாடு போல் உழைத்து உண்மையான பரிதபத்திற்கு உரியவர்களாக அரசாங்கத்தின் சலுகைகளுக்கும், பாதுகாப்பிற்கும் நியாயமான தகுதி உள்ளவர்களாக இருந்தும் ஏமாளிகளாகவே இருக்கின்றார்கள்.

விவசாயிகள், பாட்டாளிகள், தொழிலாளிகள் என்று விதவிதமான பெயர்களில் உள்ளவர்களுக்கு அரசாங்கம் அள்ளிவிடும் இலவச திட்டங்கள் அனைத்துமே சுற்றி வளைத்து இந்த நடுத்தர சீமான்களையே தாக்கும்.

மேலே எடுத்துக் கொண்ட "அரிசி" என்ற விஷயம் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'  என்பது போல் தான். நியூட்டனின் முதல் விதிப்படி "சக்தி" (Energy) மட்டுமல்ல..., ஒரு நாட்டின் பொருளாதாரமும் ஆட்சியாளர்கள் நினைப்பது போல் திடீர் என்று ஏற்றவோ, இறக்கவோ முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொருளாதாரப் புழக்கம் போலியாக அல்லது செயற்கையாக உருவாக்கப்ப்ட்டால் அது கண்டிப்பாக வேறொரு இடத்திலிருந்து சுரண்டி எடுக்கப்பட்டதாகத்தான் இருக்க முடியும்.

அதாவது விவசாயிகளுக்கு (1) கடன் தள்ளுபடி, (2) வெள்ள நிவாரணம், (3) வட்டி தள்ளுபடி, (4) இலவச மின்சாரம், இதற்கெல்லாம் மேலாக (5) அதிக விலை நிர்ணயித்து கொள்முதல்.... இவை அனைத்தையும் ஈடு செய்வதற்கு கலியுக கர்ணன்கள் - ஆன இந்த நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் இன்னும் அதிகமாக தன் குடும்பத்தினர் அனைவரையும் சேர்த்துக் கொண்டு உழைக்க வேண்டும். வேறுவ்ழியில்லை?

மின்சார தட்டுப்பாடு இவன் தலையில். பெட்ரோல் வாராவாரம் ஏறித்தொலைத்தால் இவன் தலையில். அதனால் ஆட்டோ கட்டணம் முதல் ஆயாக்கடை ஆப்பம் வரை விலை ஏறினால் அதுவும் இவன் தலையில். 60000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டால்  அந்த அரசு இழப்பை தன் தலையில் பகிர்ந்து கொள்வது இவன். எல்லாவற்றுக்கும் நடுத்தர வர்க ஏமாளி சுமக்கும்போது இவனுக்காக வாதாட மத்திய அரசிலோ மாநில அரசிலோ எவரும் இல்லை. மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகள் காபந்து செய்யப்படுவர். மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில்  பாட்டாளிகளுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் சாதகமான விஷயங்கள் பிரித்து மேயப்படும். பாவம் நடுத்தர வர்க்கம் அனாதை ஆனந்தன் ஆகிவிட்ட நிலை என்பது அவனுக்கே தெரியவில்லை இன்னமும்.

இது தான் சரியான நேரம்..! பொறுமையின் எல்லைக்கோட்டிற்கு வந்தாகி விட்டது. இதற்கு மேல் ஒரு அடி சென்றாலும் "ஏமாளி" என்ற முத்திரை குத்தப்பட்டுவிடும்.

"ரொம்ப நல்லவன், எவ்வளவு அடித்தாலும் தாங்குறான்டா..!" என்ற வடிவேலுவின் பிரசித்தி பெற்ற காமெடி வசனத்திற்கு சொந்த்க்கார்களாகி விடுவார்கள் இந்த அறிவுஜீவிகள்.

அறிவுஜீவிகள் என்று அடிக்கடி இவர்களை அழைப்பது கிண்டலும் அல்ல பொய்யான வார்த்தையும் அல்ல. ஏனென்றால் இவர்கள் தோளில் தான் ஒட்டு மொத்த இந்தியாவின் படைப்பாற்றலும் பொருளாதாரமும், எதிர் காலமும், இன்ன பிற இத்தியாதிகளும் ஏற்றப்பட்டிருக்கின்றன.

இலக்கில்லாமல் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் அறிவாற்றலை ஒரு சில மணித்துளிகளாவது நிதர்சன நிலையை உணர செலவிட வேண்டும். அப்பொழுது தான் இந்தியாவின் பொருளாதாரம் சமநிலையில் இல்லாமல் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு ஒரு பக்கம் சோம்பேறிகளையும் மறு பக்கம் மிக அதிக உழைப்பால் களைத்து, அதற்கேற்ற வளர்ச்சி இல்லாமையால் விரக்தி மனநிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தையும் கொண்ட ஆபத்தான இந்திய கட்டமைப்பை தவிர்க்க இயலும். 

ஆக இந்த கட்டுரையின் முக்கிய சாராம்சமே இனி நடுத்தர வர்க்கம் நடுத்தெரு வர்க்கமாக ஆகும் சூழலில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய கேள்வி.அந்த கேள்விக்கான திரியை இந்த பதிவின் மூலமாக பற்றவைத்தாகிவிட்டது. இனி இதை விவாத பொருளாக்கி ஆவண செய்வது நடுத்தர வர்கத்தினரின் முக்கிய கடமையாகும். 


கழுகிற்காக



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

5 comments:

Chitra said...

இலக்கில்லாமல் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் அறிவாற்றலை ஒரு சில மணித்துளிகளாவது நிதர்சன நிலையை உணர செலவிட வேண்டும். அப்பொழுது தான் இந்தியாவின் பொருளாதாரம் சமநிலையில் இல்லாமல் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு ஒரு பக்கம் சோம்பேறிகளையும் மறு பக்கம் மிக அதிக உழைப்பால் களைத்து, அதற்கேற்ற வளர்ச்சி இல்லாமையால் விரக்தி மனநிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தையும் கொண்ட ஆபத்தான இந்திய கட்டமைப்பை தவிர்க்க இயலும்.


...well-written.

ஷர்புதீன் said...

:)

இப்படி அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!)

ஷர்புதீன் said...

உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

இராஜராஜேஸ்வரி said...

இவர்கள் தோளில் தான் ஒட்டு மொத்த இந்தியாவின் படைப்பாற்றலும் பொருளாதாரமும், எதிர் காலமும், இன்ன பிற இத்தியாதிகளும் ஏற்றப்பட்டிருக்கின்றன.//
அந்த முதுகெலும்பை பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும்.

Madhavan Srinivasagopalan said...

//ஆக இந்த கட்டுரையின் முக்கிய சாராம்சமே இனி நடுத்தர வர்க்கம் நடுத்தெரு வர்க்கமாக ஆகும் சூழலில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய கேள்வி. //

கொஞ்ச நஞ்சம் இருக்குற காச கொடுத்து விலை நிலம் வாங்கி விவசாயம் பண்ண வேண்டியதுதான்..
இலவசத்துக்கு இலவசம்.. வட்டி இல்லாத கடன்..
மகசூல் நல்ல இருந்தா லாபம்..
இல்லாவிட்டால் கடன் தள்ளுபடி..

யோசனை எப்படி ?
(மைன்ட் வாய்ஸ் : மாதவா.. எப்படிட இந்தமாதிலாம் யோசிக்கற ?
என்னவோ போடா..!)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes