Monday, July 02, 2012

எழுத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான்கள்...! ஒரு உஷார் பார்வை...!ஒரு மாதிரியான தற்பெருமைகள் நிறைந்த புகழ்ச்சிகளை விரும்பும் ஒரு உலகத்தில் நாம் இருக்கிறோம் என்பதைப் பற்றி எப்போதேனும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

எழுத்து என்பது வரம், எழுத்து என்பது தவம், கல்வி என்பது மற்றவர்களுக்கு சென்று சேர வேண்டிய அறிவு அல்லது புரிதல். படைப்பவன் ஒரு பிரம்மா, அந்த படைப்பால் வழி காட்டுதலால் வாழ்க்கை ஒளிர வேண்டும் என்றெல்லாம் நினைத்து அப்படியே இங்கே உலாவும் மனிதர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை காலம் சுக்கு நூறாய் உடைத்துதான் போட்டு விடுகிறது.

இணைய உலகில் தன்னைத் தானே உலக மகா எழுத்தாளர்கள் என்று புகழ்ந்து கொள்ளும்  மனிதர்கள் முதல், சமூக அக்கறை என்ற லேபிளை நேரே நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்டு மனித தெளிவின்மைகளைப் பகடைக்காய் ஆடும் மனிதர்கள், மற்றும் நீலப்பட ரேஞ்சுக்கு எழுத்துக்களில் விரசத்தை தூண்டி விட்டு லேகியம் விற்று சம்பாரிக்கும் வியாபாரிகளென்று நீண்டு கொண்டே இருக்கும் பட்டியல் மிகப்பெரியது.

அலங்காரங்களால், மனித மனம் வசீகரம் கொள்ளும் விடயங்களை எழுத்தில் நிரப்புதல் தவறல்ல, ஆனால் அதன் விளைவுகள் என்ன மாதிரியாய் இருக்கும் என்ற ஒரு பொறுப்புணர்ச்சி இல்லாத களமாய் சம கால எழுத்துலகம் ஆகிப் போனது வரலாற்றில் பெரும் பிழையை ஏற்படுத்தியே தீரும்.

எதை எழுதலாம், எதை எழுதினால் வியாபாரம் ஆகும் என்று யோசிப்பது தவறில்லை அதற்காக பத்திரிக்கை துறையினரும், தனியார் தொலைக்காட்சித் துறையினரும் செய்யும் அதே யுத்தியை தனி மனிதர்கள் எழுதும் வலைப்பூக்களில் அரங்கேற்றிக் கொள்வது அவமானத்தின் உச்சம்.

பெரும் புரட்சியாளராய் என்னைக் காட்டிக் கொண்டு, என்னை பின் தொடருங்கள் மக்களே என்று போர்க்கொடியை எழுத்துக்களால் நான் ஏற்றும் போதே என் அருகதையையும் உற்று நோக்க வேண்டும் என்ற ஒரு நியாயத்தை ஏன் என்னால் கடை பிடிக்க முடியவில்லை..? இப்படியாய் நாங்கள் எங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம் இதில் இருக்கும் சத்தியத்தை உணருங்கள் வாசிப்பாளர்களே.. என்று தொடை தட்டி நேர்மையான பகிர்தலைச் செய்ய முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் எழுத்துக்கள் பயணிப்பது.....ஆரோக்கியமான விடயமா?

மனிதனின் புறத்தை மாற்ற முயல்வது ஒரு தோற்றுப் போன வழிமுறை.... அது எப்போதும் மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று சொல்பவனைத் தலைவனாக்கி விட்டு மிச்சமுள்ளோரை தெருமுனையில் பிச்சைக்காரனாய், புத்தி கெட்டவனாய் எப்போதும் யாரையோ எதிர்பார்த்து நிற்கும் ஒரு கையாலாகாதவனாய் நிறுத்தி வைத்து விடுகிறது.

மனிதர்களின் அகமாற்றம் இதற்கு நேர்மாறானது. 

குப்பைத் தொட்டியை தெருவில் வைப்பது வரைக்கும் புறமாற்றமென கொண்டால் குப்பைகளை தெருவில் இடாமல் குப்பைத் தொட்டியில் இடவேண்டும் என்று ஒருவனை நினைக்கவைப்பது அகமாற்றம். ஒருவன் தனக்குள் விழிப்படைந்தால்தான்....புறத்தை அவன் செம்மையாக வைக்க முடியும். இதை உணராத சமகால சமூகம் சீர்திருத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ஒரு மனிதனை உள்ளுக்குள் முழுமையாக உறங்க வைத்து விட்டு வெளியே விழிக்கச் சொல்கிறது.

உள்ளுக்குள் உறக்கம் கலைக்கும் யுத்தியை இவர்கள் அறிந்திருக்கவில்லை ஏனெனில் சமூக மாற்றத்தை விளைவிப்பதாய் கூறும் எவரும் சத்தியத்தில் உள்ளுக்குள் விழித்திருக்கவில்லை. 

இதன் விளைவுதான் சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள்.

முழு விழிப்போடு ஒவ்வொரு குடிமகனும் இருந்த பொழுதில் இந்த தேசம் மிளிர்ந்தது. மன்னர்களும், சக்கரவர்த்திகளும் பேரரசர்களும் அதிகாரத்தால் தங்கள் நிர்வாகத்தை நடத்தினாலும் தமது தேசத்தின் குடிமக்களை முழு விழிப்பு நிலையில் வைத்திருந்தனர். அந்த விழிப்பு நிலையால்தான் பண்டைய தமிழகத்தில் மிகப்பெரிய வணிகப் பெருக்கம் இருந்தது, போர்களில் தமிழன் வெற்றி வாகைகள் சூடினான், பிரமாண்ட கற்கோயில்களை கற்பனைக்கும் எட்டமுடியாத வண்ணம் ஆக்கிக் கொடுத்தான்...

தொழில் நுட்ப வளர்ச்சிகள் இல்லாமல், இயந்திரங்களின் பயன்பாடுகள் அறவே இல்லாமல், மனித வளத்தால் மட்டுமே நம்மால் சிறப்பாக இருக்க முடிந்தது. இதற்கு முழு முதற்காரணமாய் நான் வழிகாட்ட என்னைச் சுற்றிலும் முட்டாள்கள் இருக்க வேண்டும் என்ற வக்கிர அரசியல் அங்கே இருந்திருக்கவில்லை. மனிதவளம் மேம்படாத ஒரு சமூகம் தொழில் நுட்பத்தையும் அறிவியலையும் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்யும்...? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்...?

இதற்கான பதிலாய்த்தான் சமகாலத்தில் நவீன தகவல் தொடர்பு சாதனத்தில் நமது பயன்பாடுகள் இருக்கின்றன. வலைப்பூக்கள் தனி மனிதர்களால் எழுதப்படும் ஒரு களம். இங்கே வியாபரம் செய்வது தவறில்லை, தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் குற்றமில்லை.. வணிகமும், பொருளாதாரமும் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்யும் ஆனால் எப்படி வணிகம் செய்கிறோம்...? எதை வணிகம் செய்கிறோம் ? நம்மை முன்னிலைப் படுத்திக் கொள்ள எந்த மதிரியான முன்னெடுப்புக்களைச் செய்கிறோம்....?என்பதுதான் இங்கே மில்லியன் டாலர் கேள்வியாகிறது..!

மனதில் தோன்றுபவைகளை எல்லாம் எழுதிப் பார்க்கும் ஒரு சாரார், சமூக அக்கறைகளை எழுத்தில் கொண்டு வந்து ஏதோ ஒன்றை இந்த சமூகத்துக்குச் சொல்லிச் சொல்ல விரும்பும் சிலர், இதை இதை எழுதினால் வசீகரப்படும், இதற்கு கூட்டம் நிறைய வரும் என்று எழுத்தில் விசத்தை கலக்கும் ஒரு கூட்டம், 

எது எப்படி இருந்தாலும் நான் என்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்பும் ஒரு பிரிவினர், அற்புதமாய் கதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் தங்களின் உணர்விலிருந்து பிரதிபலித்து உருவாக்கும் படைப்பாளிகள் ஒரு பக்கம், மனிதன் விரும்புவது கேளிக்கைகளையும், அடுத்தவர் வாழ்க்கை பற்றிய அந்தரங்க செய்திகளையும், எப்போதும் மறைக்கப்பட்ட காமத்தையும்தான் என்று அதை அரங்கேற்றிக் கொள்ளும் வேறு சிலர்...

என்று தனி மனிதனின் ஆக்கங்கள் ஒரு மிகப்பெரிய காட்டாறாய் இயங்கிக் கொண்டிருக்கையில் வாசிக்கும் வாசிப்பாளன் தனது வயது, அனுபவம், மற்றும் புரிதலுக்கு ஏற்ப தனக்கு தேவைபடும் விடயத்தை இங்கே தேர்ந்தெடுக்கிறான்..

அன்பின் உறவுகளே...

இணையத்தை இன்று மிகுதியாக பயன்படுத்துபவர்கள் இளையர்கள், 18ல் ஆரம்பித்து 30வயதுக்குள் இணையத்தை பயன்படுத்துபவர்களின் விகிதாச்சாரம் அதிகம். சரியான வழிகாட்டுதல் தேவையான இந்த பருவத்தில் தனக்கு அறிமுகமாகும் இணையத்தில், தற்போது தமிழில் மிகுதியானவர்கள் பார்க்கும் ஒரு ஊடகமாய் இந்த வலைப்பூக்கள் இருக்கின்றன...

வழிகாட்டுதல் தேவையான இந்த இளையர்களுக்கு எதை நாம் பகிரப் போகிறோம்...? நமது தலைக்கனத்தையா...? நாம் மிகைப்பட்டபேர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்ற தன்முனைப்பையா? பரபரப்பு அரசியலையா? நடிகர், நடிகைகளின் அந்தரங்கத்தையா?  காமக்கதைகளையா? இல்லை சமூகத்தால் எப்போதும் விலக்கப்பட்ட தவறான விடயங்களை நான் செய்தேன் என்ற திமிரையா? 

நாம் தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம். நான் செய்கிறேன் நீ யாரடா கேள்வி கேட்க என்று அத்து மீறுபவர்களின் குரல்வளைகளை முடக்கிப் போடவேண்டிய சமூகக் கடமை இன்றைய இணைய பயன்பாட்டாளர்களிடம் சர்வ நிச்சயமாய் இருக்கிறது. இது பொதுவெளி..இங்கே உச்சபட்ச நாகரீகம் தேவைப்படுகிறது.

அசிங்கங்களையும், அடாவடியையும் அத்து மீறலையும் தவறான வழிகாட்டுதலையும் பொதுவெளியில் நிகழ்த்தி விட்டு இது எனது வலைப்பூ, எனது சொந்த விருப்பம் என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை ஆனால் அது என் சமூகத்துப் பிள்ளைகளைக் கெடுக்கிறது எனும் பொழுது.. உக்கிரமான நமது கேள்விகளுக்கு பதிலளிக்கும் சமூகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்...!

எமது விதைகள் முளைக்காமலேயே போகட்டும்....ஆனால் அவை ஒருபோதும் ஒரு விஷச் செடியாய் முளைத்து பரவுவதில் எமக்கு யாதொரு உடன்பாடும் இல்லை...என்பதை அனைவரும் அறியச் செய்வோம் எம் தோழர்களே...!

மனிதர்களின் அகவிழிப்பும், புரிதலும் கூர்மையாக இருப்பின்....மோடி மஸ்தான்களின் மாயஜாலங்கள் எல்லாம் அழிந்து ஒழிந்து போகும் என்பது  நிதர்சனம்....!

 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)6 comments:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

யோசிக்கவைத்த பகிர்வு. நன்று

வவ்வால் said...

கழுகு,

குப்பைகள் பெருக காரணம் குப்பையை ஆராதிக்கும் மனம் உள்ளவர்களால் தான், எனவே மேலும் குப்பை கொட்டப்படுகிறது.

சந்தேகமிருந்தால் ,குப்பையஔ எழுதுபவர்களின் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை பாருங்கள் மிக அதிகம் இருக்கும். எனவே குப்பையை கொட்டுபவரை விட அதனை வெட்கமின்றி ஆதரிப்பவர்களே முதல் குற்றவாளி.

எழுதுபவர்கள் சுய ஒழுக்கத்தினை விட அதனைப்படிப்பவர்கள் சுய ஒழுக்கமே முதலில் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

Anonymous said...

//அசிங்கங்களையும், அடாவடியையும் அத்து மீறலையும் தவறான வழிகாட்டுதலையும் பொதுவெளியில் நிகழ்த்தி விட்டு இது எனது வலைப்பூ, எனது சொந்த விருப்பம் என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை ஆனால் அது என் சமூகத்துப் பிள்ளைகளைக் கெடுக்கிறது எனும் பொழுது.. உக்கிரமான நமது கேள்விகளுக்கு பதிலளிக்கும் சமூகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்...!//

சிந்திக்கத் தூண்டும் பதிவு .... அனைவரும் இதனைப் படித்தல் அவசியம்

saidaiazeez.blogspot.in said...

//நான் வழிகாட்ட, என்னைச் சுற்றிலும் முட்டாள்கள் இருக்க வேண்டும் என்ற வக்கிர அரசியல்//
well said.
நமக்கு யார் தலைவன் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. இதுவே முதல் தவறு!
ஒரு காலத்தில் சீர்மிகு சென்னையில் ஓடிய கூவம் ஆற்றில் மீன்பிடி தொழிலும் படகுப் போக்குவரத்தும் செம்மையாக நடந்தது. ஆனால் இன்றோ அந்த ஆறு சென்னைக்கே ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது. இதற்கு நாமும் ஒரு காரணமாகியுள்ளோம்.
அதேபோல இணையமும் இன்று நாறிக்கொண்டு வருகிறது.
வாருங்கள் அதை தூர் வாரி, செம்மைபடுத்தி,
நாம் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்வோம்.

Selvakumar said...

எது குப்பை, எது கீழ்த்தரம், எது அசிங்கம் என்பதற்கான வரையறையை செய்வது யார்? அதற்கான உரிமையை அவருக்கு யார் தந்தது? உங்களுக்கு புனிதமான சம்பிரதாயம் மற்றவருக்கு அசிங்கமாக, மூடத் தனமாக இருக்கலாம். இதுதான் உலக இயல்பு. இணையம் என்பது பொது வழி. அங்கு உங்கள் பார்வையில் சாக்கடையும் ஓடும். சந்தனமும் ஓடும். நீங்கள் சரியானது என்று நம்புவற்றை தேர்ந்தெடுக்கவும் அதை மற்றவருக்கு அறிவுருத்தவம் உரிமை உண்டு. அனால் குப்பை என்று நீங்கள் நம்புவதை ஒழிக்க நினைத்தால் அது தவறானதாகும்.

saidaiazeez.blogspot.in said...

மிகச்சரியாக கூறினீர்கள் திரு செல்வகுமார்.

நான் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறேன் நண்பரே!

அதாவது என் குழந்தைகள் எவையெல்லாம் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறேனோ அவையெல்லாம் என்னை பொருத்தவரை குப்பைகளே!

அதே போல உங்கள் வீட்டு பெரியவர்களும் எண்ணுவர். உங்கள் வீட்டு பெண்கள் எவையெல்லாம் பார்க்க/படிக்க விரும்பமாட்டீர்களோ அவைகளும் குப்பையேயன்றி வேறென்ன?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes