Thursday, February 20, 2014

ஏழு தமிழர்கள் விடுதலை....விஸ்வரூபமெடுத்திருக்கும் தமிழக அரசு..மிரட்சியில் மத்திய அரசு...!இங்கே ஒரு விசயத்தை நாம் அனைவரும் தெளிவாக உணர வேண்டும். சட்ட சபையில் இவ்வளவு ஆணித்தரமாக மத்திய அரசுக்கு சவால் விட்டு தமிழக முதல்வர் விதி எண். 110ன் கீழ் ஒரு  அறிக்கையை அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு வாசித்தார் என்பதை தயவு செய்து யாரும் சாதரணமாக கடந்து சென்று விடாதீர்கள்...! இதில் அரசியல் இருக்கலாம் ஆனால் மத்திய அரசினை எதிர்த்து சட்டத்தின் போக்கில் போய் நியாயத்தை மனசாட்சியோடு அணுகி அதுவும் மத்திய அரசுக்கு மூன்று நாட்கள் கெடு வைத்து அவர் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு....

சுதந்திர இந்தியாவில் எந்த கொம்பனும் இதுவரையில் செய்யாத ஒன்று. இதற்காக முதலில் நாம் மாண்புமிகு முதல்வர் அவர்களைப் பாரட்டியே ஆகவேண்டும். இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ஏகாதிபத்தியத்தை தன் காலில் அணிந்துகொண்டு செயல்படும் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களில் இருக்கும் ஆதிக்க ஊடகங்களும்.....ராஜிவ் கில்லர்ஸ் என்றுதான் பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றவர்களை இன்னமும் சித்தரித்து விவாதங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 23 ஆண்டுகள் ராஜிவின் மரணத்திற்குப் பிறகு இன்று ஊடகங்கள் அபாரமாய் வளர்ச்சியடைந்து அவற்றின் பரிணாமம் வலுவான சமூக இணைவு தளங்கள் வரை சீறிப்பாய்ந்திருக்கிறது. அதாவது செய்தித்தாள்களைப் பார்த்தும் அரசு வானொலிகளைக் கேட்டும், தூர்தர்சன் செய்திகளைப் பார்த்தும்  ஏகாதிபத்திய மத்திய அரசின் வர்ணிக்கப்பட்ட செய்திகளை மட்டுமே நாம் அறிந்து முடிவெடுக்க வேண்டிய காலச் சூழல் இப்போது கிடையாது. அது எப்போதும் நம்மை அடிமைப்படுத்தி முட்டாளாக வைத்திருக்க காங்கிரஸ் மற்றும் இன்ன பிற கட்சிகளுக்கு தற்காலத்தில் பெரும் பின்னடைவைக் கொடுத்து அவர்களின் பொய் முகமூடிகளை கிழ்த்தெறியவும் செய்திருக்கிறது.

ராஜிவ் கொலை வழக்கு எவ்வளவு அபத்தமாய் செயல்பட்டிருக்கிறது என்பதை இன்றைக்கு அந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் கொடுத்திருக்கும் நேர்காணல் வாக்கு மூலங்களிலிருந்தும், எழுதிய புத்தகங்களில் இருந்தும் தமிழகத்தின் தென் கோடியில் குக்கிராமத்தில் இருக்கும் மனிதர்களும் அறிந்து கொள்ள முடியும். இணையத்தை தட்டி தேடினால் விலாவாரியாக அந்த வழக்கில் எத்தனை பொய்கள், பேட்டரி வாங்கிக் எதற்குக் கொடுத்தோம் என்று தெரியாத ஒரு அப்பாவி இளைஞன் எப்படி தூக்கு கொட்டடி வரை கொண்டு வரப்பட்டான் என்பதை எல்லாம் இன்று நாம் அகில உலக ஊடக வளர்ச்சியின் உதவியினாலேயே அறிந்து கொன்டோம். பேரறிவாளனிடம் வாக்குமூலம் வங்கிய புலனாய்வுத் துறை அதிகாரியே சொல்கிறார் நான் பொய் வாக்குமூலம் எழுதினேன் பேரறிவாளன் குற்றம் செய்தேன் என்று ஒத்துக் கொள்ளவில்லை என்று....

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு கை கட்டி வாய் பொத்தி கேளாதது போல் இயங்கும் மத்திய ஏகத்திபத்திய காங்கிரஸ் அரசு இன்று தமிழக அரசின்  7 பேர்களையும் விடுதலை செய்யும் முடிவுக்கு கண்டம் தெரிவித்திருக்கிறது. இது சட்டத்தை மீறிய செயல் என்று வாய் பேசத்தெரியாத கைப்பாவையாய் 10 வருடம் ஆட்சி செய்த இந்தியப் பிரதமர் சொல்கிறார். ராகுல் காந்தி கொந்தளிக்கிறார்.....தமிழக காங்கிரஸ்காரர்கள் லபோதிபோவென்று குதிக்கிறார்கள், பச்சைத் தமிழன் ப.சிதம்பரம் அவர்களை நீதிமன்றம் இன்னும் விடுவிக்கவில்லையே என்று தன் எட்டப்ப கொம்பினை மெல்ல நீட்டுகிறார்....

என்னதான் நடக்கிறது இந்தியாவில்...? 

இதுவரையில் போதனை செய்யப்பட்ட மூளைச்சலவை செய்யப்பட்ட மிருகமாய் நாம் எல்லோம் வாழ்ந்து விட்டோமா? இந்தியம் என்பதே நம்மை அடிமைகளாக வைக்க ஆதிக்க சக்திகள் போட்டு வைத்த பெருந்திட்டமா? வட இந்தியர்கள் ஏன் செலக்டிவாக பேசுகிறார்கள்? 23 வருடம் சிறையில் அடைத்து வைத்திருந்தற்குப் பெயர் தண்டனை இல்லாமல் என்ன புடலங்காய்? குற்றம் செய்கிறோம் என்று தெரிமலேயே ஒரு சூழலுக்குள் இருந்தவர்களை மிரட்டி மிரட்டி எழுதப்பட்ட தீர்ப்புகள் ஏன் இன்னும் தீக்கிரையாக்கப்படவில்லை....? யார் சந்திராசுவாமி? சுப்ரமணிய சுவாமிக்கும் இதற்கும் என்ன தொடர்பு? ராஜிவ் கொல்லப்பட்ட போது ஏன் வேறு முக்கிய தலைவர்கள்  சொல்லி வைத்தாற் போல அவருடன் இல்லாமல் போனார்கள்...? இப்படியான கேள்விகள் எல்லாம் உங்களுக்கும் எனக்கும் எழுந்தால் நாம் மடையர்கள்....நாம் முட்டாள்கள்...கேள்வி கேட்க திரணியற்ற ஜந்துக்கள்  என்று கருதிக் கொள்ளுங்கள்.

தமிழக முதல்வர் பிப்ரவரி 18 ஆம் தேதி கூறப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிர்க்குப் பிறகு சட்ட வல்லுனர்களோடு  கலந்தாய்வு செய்து தமிழக அரசு விரும்பினால் விடுதலை செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றப் பரிந்துரையை ஏற்று, காலம் தாழ்த்தி காங்கிரஸ் அரசும் மீண்டும் நீதிக்கு குழி தோண்டிவிடுமோ என்ற ஒரு அச்சத்தில் மத்திய அரசுக்கு கெடு வைத்து ஒரு உன்னதமான முடிவெடுத்து அதை ஏழரை கோடி தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் மன்றத்தில் அறிவித்திருக்கிறார்....

தமிழக முதல்வராய் வேறு யாரேனும் இந்தச் சூழலில் இருந்திருந்தால் ஜெயலலிதா எடுத்த முடிவை எடுத்திருப்பார்களா  அல்லது மாட்டார்களா என்பதை எல்லாம் தமிழக மக்களின் மனசாட்சிக்கே விட்டு விடுவோம். இந்தியா என்னும் நாடு காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானது அல்ல தோழர்களே.... , அது நேரு குடும்பத்தின் பெருஞ்சொத்தும் கிடையாது, இந்தியா பல்வேறு பிராந்தியங்களின் தொகுப்பு. இப்படி இருந்தால் நன்றாயிருக்கும் என்றெண்ணி பல பிராந்தியங்கள் ஒன்றிணைந்து இருக்கும் ஒரு சுதந்திர குடியாட்சி கொண்ட பெரும்நாடு. அது ஏன் எப்போதும் ஒரு கட்சிக்கும், ஒரு குடும்பத்திற்கும் ஆதரவாகவும் அவர்களை அண்டியும் இருக்கும் படி மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் நமது கேள்வி...?

மத்திய அரசினை எதிர்த்து செயல்படுகிறோம்....அதுவும் வட இந்திய ஆதிக்க முதலைகளையும், தமிழர் விரோத மனிதர்களையும் எதிர்த்து நாம் ஒரு அறிவிப்பு வெளியிடப்போகிறோம்....இதனால் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றெண்ணிதான் ஒரு உறுதியான முடிவினை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா எடுத்திருக்கிறார்...! மூவர் தூக்கிற்காக பலர் போராடி இருக்கிறார்கள் இதில்  என்ன ஜெயலலிதா மட்டும் பெரிதாய் செய்திருக்கிறார் என்று கேள்வி கேட்கும் நெஞ்சங்களே......

போராடியது அனேகர். அதை செயற்படுத்தி அதற்கான முழு முதற் விளைவுகளையும் எதிர் கொள்ளபோவது தமிழக முதல்வரும், நாம் தேர்ந்தெடுத்திருக்கிற இந்த தமிழக அரசும்தான் என்பதைக் கவனத்தில் கொள்க; ஏழு பேரின் விடுதலை சரியாய் செயல்பட்டு அவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்களேயானால் அதன் பலனை அறுவடை  செய்யப் போவது அதிமுக அரசுதான் என்னும் அதே வேளையில்....

இதனால் ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு அதற்கான விளைவுகளையும் பெறப்போவது ஜெயலலிதா அம்மையாரும் அவருடைய கட்சியும்தான் என்பதையும் உணர்க;

அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் கடந்து தமிழர் விடுதலைக்காக, நீதிக்காக தமிழக அரசு மத்திய அரசுடன் ஒரு யுத்தத்தை தொடங்கி இருக்கிறது என்று கருதி அதற்கு தமிழர்களாகிய நாம் இந்த அரசின் தோளோடு தோள் நின்று அவர்களின் முயற்சிகளுக்கு எல்லாம் ஆதரவு தெரிவித்து அப்பாவி தமிழர்கள் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்வோம்...! 

இது தமிழனாய் பிறந்த நம் அத்தனை பேருக்கும் இருக்கும் தலையாய கடமை என்பதை அழுத்தம் திருத்தமாக கழுகு பதிவு செய்து கொள்கிறது.


       கழுகு
 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

2 comments:

BKCJEM said...

சகோதரரே இந்த பதிவை என் ப்ளாக் லும் பதிவிடலாமா

puduvaisiva said...

I agree with your point of view bro

why we create face book to support our CM ??

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes