Showing posts with label பஞ்ச். Show all posts
Showing posts with label பஞ்ச். Show all posts

Thursday, January 19, 2012

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (19.1.2012)




பஞ்ச் : 1

தமிழகத்துல ஆட்சி மாற்றம் நடந்ததுக்கு காரணம் நடராசன் ஐயாதானுங்களாமே...?  அவரு மனசு வச்சிதான் கலைஞர் கூட போன வருசம் இருந்து இருப்பாருன்னு நினைக்கிறேன். யாருக்கும் கட்டுப்படாத ஒரு தலிவராம் நடராசரு... ஆனா ரெண்டே ரெண்டு பேருக்கு மட்டும் பயப்புடுவாராம்...ஒண்ணு நம்ம பழ. நெடுமாறன் ஐயா..... ரெண்டாவது அவுரு கல்யாணம் கட்டுன அம்மிணி...

தஞ்சாவூர்ல கொதி கொதின்னு கொதிச்சு இருக்காரு நடராசரு, ரெண்டு உலக்கு அரிசிய போட்ருந்தா கொதிச்ச கொதிப்புல பொங்கி சாப்டு இருக்கலாம் போலருக்கே...! அம்மாவுக்கு பூசாரிங்க எல்லாம் ஒண்ணு கூடி மந்திரிச்ச மந்திரிப்புல லவக்குனு ஒடன் பொறவா சகோதரிய வெளிய அனுப்பிடுச்சு.. இப்போ நடராசன் & கோ தைய தக்க தைய தக்கானு வெறி கொண்ட மாறி குதிக்க ஆரம்பிச்சுடுச்சு...

தானை தலைவர்களால் நிரம்பிக் கிடக்கும் தமிழகத்தின் தலையெழுத்துதான்.. மாறவே மாட்டேங்குது...? எந்த சாமி குத்தமோ...??!!!!! 
பஞ்ச் : 2
துக்ளக் ஆண்டுவிழாவுல சோ சார் பண்ணியிருக்கிற காமெடிய நினைச்சா சிப்பு சிப்பாதான் வருது...

கையெல்லாம் இரத்தக்கறையோட ஒரு மனுசன் அதை டெட்டாயில் போட்டு கழுவிட்டு, சோப்பு போட்டு கழுவிட்டு அதுல சோத்த அள்ளி எல்லோருக்கும் போட்டு போட்டு, வாரி வழங்கி தன்ன கர்ண பிரபுன்னு காட்டிக்க நினைச்சானாம்....ஆனா அவன் எம்புட்டுதான் உதவி செஞ்சாலும் புத்திசாலியா இருந்தாலும் கொலைகாரப் பயடா இவன் அப்டீங்கறது எப்படி மறந்து போகும்?  இருக்கற கட்சியோட கொள்கை இந்துத்துவான்ற ஒரு கேவலமான மதவாதம்.அப்படி இருக்கையில மோடி நல்லவரா இருக்கட்டும் வல்லவரா இருக்கட்டும், எப்புடி வேணா இருக்கட்டும்...இருக்குற எடம் சாக்கடையாச்சே....அவர பிரதமர் வேட்பாளர் ஆக்கணும்னு சோ அண்ணாச்சி அத்துவானிக்கி ரெக்கமண்டேசன்....

ஒருவேளை மதவாத கட்சின்னு நினைச்சு யாரும் ஆதரவு தெரிவிக்கலேன்னா (அது என்ன ஒருவேளை...அது மதவாத கட்சிதானே சோ....சார்...???!!!!) அப்போ டாக்டர். புரட்சித்தலைவி, அம்மா. செ. செயலலிதாவ இந்திய பிரதமராக்க உதவி செய்யணும்ன்னு அவர் சொல்லியிருக்காரு...

தமிழ்நாட்ல ஏற்கெனவே 3 மணி நேரமா இருந்த மின்வெட்ட இப்போ 5 மணி நேரமா அம்மா மாத்தி சாதனை செஞ்ச மாதிரி, தலைமைச் செயலகத்த ஆஸ்பத்திரியா மாத்துன மாதிரி, லைப்ரேரிய குழந்தைகள் மருத்துவமனையா மாத்த சட்டம் போட்ட மாதிரி....பலப்பல அஜால் குஜால் திட்டங்கள செஞ்சி இந்தியா முழுக்க மாத்தணும்னு சோ சார் ஆசைப்படுறாரு போல....

நடக்க அலுப்பு பட்டுகிட்டு சித்தப்பன் வீட்ல பொண்ணு கேட்டானாம்ன்ற கதையாவுல்ல இருக்கு...???!!!!

பஞ்ச் : 3

எஸ்.எம். கிருஷ்ணாவ அனுப்பி தமிழர்கள் புனர்வாழ்வுக்கு இந்திய மகா தேசம் ரொம்பவே ஒதவுறதா காட்டிகிட முடிவு பண்ணி ஐயாவ இத்தாலிய தேசிய (இந்திய தேசியம் எல்லாம் போச்சு சாமி..)காங்கிரஸ்  அப்போ அப்போ ஒரு குத்தாட்டம் போடும்...! கிருஷ்ணா இந்தியாவுல இருந்து இலங்கைக்கு போற வரைக்கும் நீயூஸ் புளீச் புளீச்னு ப்ளாஷ் ஆகும்.. 

துரை அங்க போயி எறங்குன உடனே.. ஒண்ணியும் தெரியாது....! ராசபக்சேய சந்திச்சு கைய குலுக்கிகிட்டு பப்பரப்பான்னு சிரிச்சுக்கிட்டு ஒரு போட்டாவ போடுவாய்ங்க பேப்பர்ல...அம்புட்டுதான்...

என்னா தமிழர்களுக்கு வாழ்க்கை கொடுத்தாய்ங்க? எத்தனை வீடு கொடுத்தாய்ங்க? மக்கள் எப்படி இருக்காங்க? ஊரு எப்படி இருக்கு? அங்க இருக்க புள்ளக் குட்டிய எல்லாம் படிக்கிறதுக்கு என்ன ஏற்பாடுன்னு எல்லாம் ஒண்ணியும் சொல்ல மாட்டாய்ங்க.. தமிழர்கள் இருக்குற எடத்துக்கு சர்வதேச பத்திரிக்கையாளர்களயும் உள்ள விடுறது கிடையாது...

இவிங்க நடத்துற கூத்த நாம பாத்துட்டு நல்ல நாடகம்டான்னு உச்சு கொட்டணும்...எல்லாம் காலக் கொடுமை...!

தைரியம் இருந்தா சானல் 4 தொலைகாட்சிய தமிழர்கள் இருக்கும் ஏரியாக்குள்ள விடுவானா இந்த ராஜபக்சே..? அதை ஆதரிக்குமா இந்திய தேசிய (ஹி ஹி ஹி) ஆளும் காங்கிரஸ்...?
பஞ்ச் : 4

இயற்கைய தவிர வேறு யாராலும் கலைஞர் ஐயாவ அசைக்க முடியாது, அந்த ஆண்டவன தவிர வேறு யாராலயும் செயலலிதா அம்மாவ அசைக்க முடியாது, உலகமே எதுத்து நின்னாலும் சோனியா காங்கிரச அசைக்க முடியாது, உயிரே போனாலும் பா.ஜ.க-வ அசைக்க முடியாது, விளையாட்டுக்கு கூட விஜயகாந்த அசைக்க முடியாது....ஏன் இன்னும் சொல்லப் போனா தலை கீழ நின்னாலும் ராமதாஸ் ஐயாவ அசைக்க முடியாது...

இது எல்லாம் ஏன் தெரியுமா..?

எவன் அசைச்சாலும் அசைஞ்சு அசைஞ்சு கொடுத்துட்டு, எல்லா கட்சியிலயும் இருக்குற அயோக்கியத்தனங்கள தங்களோட வசதிக்காகவும் வாழ்க்கை சூழ்நிலைக்காகவும் வசதியா மறந்துட்டு வாழ்க.....ஒழிக கோசம் போடுறானே தொண்டன் அவன் இருக்கறதாலதான்....

ஐயாவும், அம்மாவும் அடிச்ச கொள்ளைகள் கொஞ்ச நஞ்சம் இல்லைன்னு ரெண்டு கட்சியில இருக்க ஆளுகளுக்கும் தெரியும். தெரிஞ்சே கொடி புடிக்க,கோஷம் போட நீங்க இருக்கும் போது......

எந்த அரசியல்வாதியையும் யாராலையும் அசைக்கவே முடியாதுதான் சாமி...!


பஞ்ச் : 5
  
ஊரை அடிச்சு கொளுத்திப்புட்டு, புண்ணுக்கு மருந்து நாங்க கொடுக்குறோம்னு ஒருத்தன் சொல்றான்னு வச்சுக்கோங்க நாம அதுக்கு நன்றி சொல்வோமா இல்லை ஏண்டா எங்களை நீ அடிச்சன்னு கேப்போமா?

ஈழத்துல இருக்குற தமிழர்கள எல்லாம் கொத்து கொத்தா கொன்னு அழிச்சப்ப கைய கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்தா கூட சரி போடா போய்த்தொலைன்னு விட்டுடலாம்...ஆனா அப்படி கொல்றதுக்கு உடந்தையாவும் இருந்துட்டு இப்போ இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு ஒதவும்னு சொல்றவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லங்கறது நமக்குத் தெரியும்....

ஆனா.. தமிழர்களையும் அவனோட புத்தியையும் எவ்ளோ கேவலமா கணிச்சு, முட்டாப்பயலுகளா நினைக்கிறான் பாருங்க..அதுதான் கொடுமையிலும் கொடுமை...!


கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Thursday, January 12, 2012

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (12.1.2012)



பஞ்ச் :1

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியன் படுகொலை செய்யப்பட்டதின் எதிரொலியாய் அவரது இறுதி ஊர்வலத்தின் போது கடுமையான வன்முறையை தூத்துக்குடி நகரம் சந்தித்து இருக்கிறது. வன்முறை என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் எந்த நியாயத்திற்கு வந்தாலும் அது தவறுதான்.

தனது தலைவர் கொல்லப்பட்டதற்கு தெருவில் போவோர் வருவோரை எல்லாம் பிடித்து அடிப்பதும், கடைகளை கொளுத்துவதும், அலுவலகங்களை அடித்து நொறுக்குவதும் எப்படி தீர்வாகும்? மிக மிக நுண்ணிய உணர்வுகளை தூண்டி விடக்கூடிய பிரச்சினைதான் சாதிப் பிரச்சினை...

என் நியாயம் உன் நியாயம் என்று பேசுவதை விட்டு விட்டு....மனிதநேயத்தோடு மக்கள் வாழ தகுந்த சூழலை அரசு மட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் உருவாக்க வேண்டும்..! கொலைவெறியாட்டம் ஆடும் ரவுடிகளை தடுக்க முயலுகையில் துப்பாக்கி சூடு நடத்தும் போலிசாரையும் நாம் தான் திட்டுகிறோம்....சாதாரண முறையில் தடுக்க முயன்றால் போலீசுகாரன் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறான்டா என்றும் கூறுகிறோம்....!

வன்முறையில்லாத சமுதாயத்தை ஒரு அரசால் மட்டும் படைக்க முடியாது...மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
 
பஞ்ச் :2

நக்கீரன் கோவாலுவோட வரலாற எடுத்து பாத்தீங்கன்னா மூணு இல்லை நாலு லைன்ல அது முடிஞ்சு போயிடும். அம்மாவை எதுத்து காரசாரமா எப்பவும் எழுதி அடிவாங்குற மாதிரி கைது பண்ணி உள்ள போற மாதிரி போயி பத்திரிக்கையோட சர்க்குலேசன ஏத்துற வேலைய அம்மா ஆட்சியில தவறாம செய்வாப்ல...,

அப்புறம் வீரப்பன வைச்சு நல்லா காசு பாத்தாப்ல, பாரிஸ்ல பஸ்ல ஏறி தி.நகர்ல எறங்கி ரெங்கநாதன் தெருவல சரவணா ஸ்டோர்ல போயி துணி எடுக்குறது கணக்கா பொசுக்கு பொசுக்குனு இவுரு போயி காட்டுல பேட்டி எடுத்துட்டு வந்தப்ப இந்தியாவோட இறையாண்மையும் போலிஸியும் தெருவுல பலிங்கி வெளையாடிகிட்டு இருந்துச்சு..., அம்மா ஆட்சியில வீரப்பன கொன்னு போட்டதோட நக்கீரனோட பிசினசையும் சேத்தே கொண்டு புடிச்சி...

ஈழத்தமிழர் ஆதரவு போர்வையை போத்திகிட்டு போட்டோ வீடியோன்னு காசு பாத்திகிட்டு  இருந்த கோவாலுக்கு அதுலயும் ஒரு லெவலுக்கு மேல போக முடியலை... ஏன்னா கலைஞர் ஐயாவோட ஆட்சியில வாலு ஆடாம இருந்துச்சுனா ஐயா கடுப்பாயிட்டாருன்னா.. நக்கீரரு ரெண்டு கட்சியையும் பகைச்சுகிட்டு வெளையாட முடியாது...!

சாமியாரு நித்தி வெவகாரத்துல டவுசரு கிழியறதுக்கு முன்னாடி முந்திகிட்டு.. மாட்டுகறி மாமின்னு கவர் ஸ்டோரி போட்டு எஸ்கேப் ஆகலாம்னு பாத்தாரு....ஆனா ஆபிச ஒடைச்சு சாணிய கரைச்சு ஊத்தினதோட அம்மா கட்சி ஆளுகளுக்கு சைலண்ட்டா இருக்க ஆர்டர் போட்டுடுச்சு போல....நக்கீரன் கோவாலு அடுத்து என்ன செய்றதுன்னு யோசிச்சிகிட்டு இஞ்சி தின்ன கொரங்காட்டமா இப்போ முழிச்சுகிட்டு இருக்காரு...!

அம்புட்டுதேன் நக்கீரரு கதையிங்க..!

பஞ்ச் :3
 
எதிர்கட்சி தலைவரு பயங்கர கோவமா இருக்காராமுங்க...! ஆமாம் சினிமாவுல கிளிசரின் போட்டிகிட்டு கண்ண செவக்க வச்சிகிட்டு..(அவுருக்கு கண்ணு செவக்க வேற காரணம் இருக்கு..ஹி ஹி ஹி) கையித்த கட்டி தூக்குவானுவோ.. இவரு பறந்து பறந்து காலாலேயே அடிப்பாரு..., வசனகர்த்தா எழுதி கொடுக்கிற டயலாக்க தொண்டைய அனத்திக்கிட்டு பேசி கைதட்டல வாங்கி தேசப்பற்று இருக்குற ஹீரோவா ஆகிப்புட்டாரு...

அரசியல் என்ன அம்புட்டு ஈசியாங்க....... மக்க சினிமாவ பாத்துபுட்டு ஓட்டு போட்டுருச்சுக.. ஆக்சுவலி சார்க்கு இப்போ என்ன செய்யிறதுன்னு ஒண்ணியும் புரியாம...என்ன பேசினாலும் இந்த சனம் நம்மள மதிக்க மாட்டேங்குது.. சினிமாவுல ஹீரோவா இருந்த நம்மள நெசவாழ்க்கையில் ஜீரோவா பாக்குதகளேன்னு ரெண்டு மூணு ரவுண்டு ஆனதுக்கப்புறம் கண்ணு செவக்க டெய்லி கோவப்படுறாராம்...

பொங்கல் கொண்டாட கரும்பு, அரிசி, வெல்லம் எல்லாம் கொடுக்கப்போறதா வேற சொல்லிக்கிறாய்ங்க.. ஆனா விசயகாந்த் எந்த அரிசி கொடுத்தாலும் சரி அவரு பருப்பு தமிழ்நாட்ல வேகாதுன்றது பாவம் அவருக்கு எப்புடி தெரியும்...?

பஞ்ச் :4

இராமேஷ்வரத்துக்கு சாமி கும்பிட வந்த ராஜபக்சேயோட மைத்துனர தேடிப் போயி, நம்ம தமிழர் கட்சிக்காரவுகளும், மதிமுக..காரவுகளும்....அடிடா.....அவனை ....உதைடா அவனைன்னு ஒரே ரகளையாமுங்க...

ஏய்யா..சோனியா வந்துட்டுப் போனிச்சி, ராகுல் வந்துட்டுப் போனாரு, பிரதமர் ஐயா வந்துட்டு போனாரு...அப்போ எல்லாம் ஏதாச்சும் போராட்டம் பண்ணினா பிரயோசனம் இருக்கு...! ராசபக்சே வீட்டு வேலைக்காரன அடிச்சு நமக்கு என்ன ஆகப் போகுது சாமி..? மறுக்கா அவெங்களும் அப்பாவிகள அங்க அடிக்க ஆரம்பிச்சா என்னாகும்..?

ஆளும் காங்கிரஸ் கட்சியோட மந்திரிமாருகளை குறிப்பா சிதம்பரம் ஐயா மாதிரி ஆளுகள தமிழ்நாட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு போராட்டம் பண்ணுங்க.. பிரோயோசனமா போகும்..

துரோகிய ஊருக்குள்ள வைச்சிகிட்டு.. எதிரி வீட்டு ஓணான பிடிச்சு அடிக்கிறதுதான் இனத்தோட வீரமா என்ன?
 
பஞ்ச் :5 

விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அம்மா இன்று தொடங்கி வச்சது எல்லாம் சரிதான்....

கஜானால காசு இல்லாம அல்ரெடி விலைவாசிய ஏத்தி எங்க குரல்வளைய நெறி நெறின்னு நெறிச்சுக்கிட்டு இருக்கையில இப்படி  விரிவான திட்டம், அபாரமான திட்டம்னு எதுக்கு காச கண்ட மேனிக்கு செலவு பண்றாங்க? உங்க தேர்தல் அறிக்கைய நிறைவேத்த எங்க தலையில கைய வச்சு எங்களுக்கே கொடுங்கன்னு அவுங்கள யாரு கேட்டா...?

ச்ச்சும்மா கையில காசு இல்லாத நேரத்துல இது எல்லாம் தேவை தானுங்களா அம்மா?

#நாடு நமது வீடு..#


கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Thursday, November 24, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (24.11.2011)




 பஞ்ச் : 1

தேர்தல்ல நின்னு ஒட்டு கேக்குறப்பவே கஜானா காலியா இருக்குமா? இருக்காதா? இருந்தா என்ன பண்ணுவோம், இல்லங்காட்டி என்ன பண்ணுவோம்னு சொல்லி ஓட்டு கேட்க துப்பு இல்லாத அரசியல் கட்சிகளை கட்டிக்கிட்டு இந்த சனங்க படுற பாட்ட என்னனு சொல்ல?


சவுடாலா 'ஆட்ட கொடுப்பேன், மாட்டை கொடுப்பேன், கிரைண்டர் கொடுப்பேன், மிக்சி கொடுப்பேன் லேப் டாப்ப கொடுப்பேன்'னு எதிர்த்து நிக்கிறவங்கள விட ஒரு படி மேல ஏறி வாக்குறுதி கொடுத்த அம்மணி.......திடு திப்புனு சொல்லுது மத்திய அரசு நிதி கொடுக்கல கஜானா காலி...ஏற்கனவே இருந்தவங்க கடன வச்சுட்டு போய்ட்டாங்கன்னு...
ஒண்ணு கடன வச்சுட்டு முறையில்லாம ஆண்டுட்டு போய்ட்டாங்கன்னு சட்ட ரீதியா நடவடிக்கை எடுங்க...இல்ல...உங்க நிர்வாகத் திறமையால வேற எங்கனாச்சும் ஏதாச்சும் செஞ்சு சமாளீங்க....ஓட்டு கேக்கவும் எங்க கிட்டதான் வந்து கையேந்துறீங்க...நீங்க கவர்மெண்ட் நடத்தவும் எங்க கிட்டதான் வந்து கையேந்துறீங்க....

பொழைக்கிறது பிச்சைகார பொழப்பு இதுல உங்களை எல்லாம் பாத்து சனங்க பயப்படணும்...! ஆயிரம்தான் சொன்னாலும் இவ்வளவு தூரம் பேருந்து கட்டணத்தை உயர்த்தினதும்......பால் விலைய உயர்த்தினதும்....எம்புட்டு தூரம் சாதாரண மக்களை பாதிச்சு இருக்கும்னு நினைச்சுப் பார்க்க கூட துப்பில்லாத ஒரு கவர்மெண்ட்க்கு கீழதான் நாம இருக்கோம்னு நினைச்சுப் பாக்கையிலயேஇந்த பொழப்பே எதுக்குன்னு தோணுதுங்க .

பஞ்ச் 2 

உண்ணாவிரதம் இருக்குற தென்னாட்டு அன்னா ஹசாரே விஜயகாந்த்  நினைச்சா கண்ணுல தண்ணி வருதோ இல்லையோ....ஆனா ஊன்னா உண்ணாவிரதம் இருந்து காந்தி தேசத்துக்கு பெருமை சேக்குற இந்திய பெருங்குடி மக்களை நினைச்சா... ரொம்ப பொறாமையா இருக்கு போங்க...

கூட்டணி வச்சு ஓட்டு கேட்டு ஜெயிச்சு சட்டசபையில எதிர்கட்சியா உட்காரவரைக்கும் இவருக்கு அந்தம்மாவ பத்தி ஒண்ணியும் தெரியாது... அந்த அம்மாளுக்கும் இவர பத்தி ஒண்ணியும் தெரியாது. ஏற்கெனவே இருந்த களவாணிக கிட்ட இருந்து தப்பிச்சு கொள்ளைக்காரங்க கிட்டயா போயி தமிழ் நாட்டு சனம் மாட்டணும்...?

விலைவாசி அதிகமாயிருக்குனு சொல்லி கட்சியில இருக்க அம்புட்டு எம்.எல்.ஏக்களையும், தான் உள்பட ராஜினாம செஞ்சுட்டு..... அதிமுக வோட கூட்டணி போட்டு நின்னு ஜெயிச்ச இந்த பதவி வேணாம்னு சொல்லிட்டு தனியா நின்னு போராடுவாரா விஜயகாந்த்  சாரு...?


உண்ணாவிரத ட்ராமா எல்லாம் யாருக்கு வேணும்னு கேளுங்க மக்கள்ஸ்!

பஞ்ச் 3 

முல்லை பெரியாறு அணை விவகாரத்துல உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காம கேரள கவர்மெண்ட் அடிக்கிற லூட்டியவே சகிச்சுக்க முடியலை....இந்த லட்சணத்துல மண்ணின் மைந்தர் சோகன்ராய் சம்பாரிச்ச பணத்தை எல்லாம் வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாம டேம்999னு ஒரு படத்தை ஹாலிவுட் குழுவின் துணையோட எடுத்து இந்தியா முழுசும் வெளியிட இருக்கார்....

ஒரு அணை உடைஞ்சு போற மாதிரியும் அதுனால ஏகப்பட்ட சனங்க செத்து பெரிய இழப்பு ஏற்படுற மாதிரியும் கருவ மையமா வச்சு இவுரு செதுக்கியிருக்க படம் மூலமா முல்லை பெரியாறு அணை ரொம்ப டேமேஜா இருக்கு அதை கட்டி கொள்ள நாளு ஆயிடுச்சு.....அதனால எங்க கேரள கவர்மெண்ட் சொல்ற மாதிரி புது அணைய கட்டுனா நல்லது....இல்லங்காட்டி அணை ஒடைஞ்சு சனம் எல்லாம் செத்து சிவலோகம் போயிடுவாங்கன்னும் சொல்ல வர்றாரு நம்ம சோகன் ராய் அண்ணாச்சி...

அணை பழுதா இருக்கு உடையும் மகா ஆபத்தா இருக்குன்னு எந்த நிபுணர் குழுவும் சொல்லாத போது உச்ச நீதி மன்றம் சொன்ன மாதிரி 142 கன அடி தண்ணீர தேக்கி வச்சு தமிழ்நாட்டுக்கு கொடுக்குற தண்ணீர கொடுக்கறத கொடுக்காம இருக்குற கேரள கவர்மெண்டும் சரி...இப்படி படம் எடுத்து தவறான செய்திய பரப்புற கேவல டைரக்ட்டரும் சரி...வன்மையா  நம்மால் கண்டிக்கப்பட வேண்டியவர்களே...!

பஞ்ச்: 4

ஒவ்வொரு முறையும் உதைத்து விளையாட மக்கள் நலப் பணியாளர்கள் என்ன கால்பந்தான்னு ஆளும் அதிமுக அரசைப் பாத்து உயர் நீதி மன்றம் கேள்வி கேட்டு இருக்கு....! 
அதெல்லாம் தெரியாது சார் நாங்க ஒத்துக்கிட மாட்டோம்...மக்கள் நலப் பணியாளர்களை நாங்க உதைச்சுதான் விளையாடுவோம்....ஏன்னா மக்கள் எல்லாம் எங்களை உதைச்சு உதைச்சு விளையாடுறாங்களே அது ஏன்? போன அஞ்சு வருசம் திமுககிட்ட கொடுத்துட்டாங்க...அப்ப எங்க போச்சு இந்த நீதி மன்றங்கள்...எல்லாம்...? உச்ச நீதிமன்றம் சேத்துக்கிட சொல்லிடுச்சேன்னு எல்லாம் எங்கம்மா பொரட்சித் தலைவி சேத்திக்கிட மாட்டாங்க.....கிளியூர் சோசியர் சொல்லி இருக்காரு மக்கள் நலப் பணியாளர்களை எல்லாம் சேத்துக்கோங்க அம்மா...நீங்க மகராணி மாதிரி இருப்பீங்கன்னு அது கோசாரம்தான் ...சேத்துக்கிடுறோம்....

அதிமுக அரசாகிய நாங்க கோர்ட்டு சொல்லிடுச்சுன்னோ...இல்ல மக்கள் மேல இரக்கப்பட்டு மறுக்கா மக்கள் நலப்பணியாளர்களை சேத்துகிட்டோம்னு கனவுலயும் நெனச்சுடாதீங்க...ஆமா..!

பஞ்ச் : 5

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் அவரோட போர் முரசுகள் எல்லாம் தமிழ் நாட்லதான் இருக்குறாங்களா? இல்லை வேற எங்கிட்டாச்சும் போய்ட்டாங்களா? கலைஞர் ஆட்சியில மட்டும் தமிழர்கள் எல்லாம் ஒண்ணா ஆகணும் மண்ணா போக கூட்டாதுன்னு தொண்டை நரம்பு புடைக்க பேசி பேசி .......பேசி...கிட்டே இருந்தவரு...
அம்மா ஆட்சிக்கு வந்த உடனே கப்சிப்னு இருக்கறதா பாத்தா இப்டிதாண்டா தமிழனா இருக்கணும்னு சொல்லாம சொல்றாங்களோ? பரமக்குடியில சுட்டு கொன்னப்போ..., சட்ட சபைய ஆஸ்பத்ரியா மாத்தினப்போ, சமச்சீர் கல்வியே கூடாதுன்னு சொன்னப்போ...நூலகத்தை இழுத்து மூடிட்டு குழந்தைகள் ஆஸ்பத்திரியா மாத்தப் போறேன்னு சொன்னப்போ...இப்ப பால் விலை, பேருந்து கட்டணம் எல்லாம் உயர்ந்து மக்கள் சீரழிஞ்சு கிட்டு இருக்கப்போ

இவுங்களையெல்லாம் பாத்தா தமிழர்களா தெரியலையா சீமான் சார்? ம்ம்ம்ம் ஒரு வேளை ஏதாச்சும் எதித்துப் பேசுனா...அம்மா ஹேண்டில் பண்ற விதம் ஐயா மாதிரி ஸ்மூத்தா இருக்காதுன்ற பயமா சார்? இவுங்க வீரம் இவ்வளவுதானா !

கழுகிற்காக
 தேவா 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Thursday, November 03, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)

பஞ்ச் 1:
கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்கள சீர்குலைக்கிறதும் அதுவும் பிரமாண்ட வசதிகளோட கட்டப்பட்ட கட்டிடங்களின் பயன்பாடுகளை மாற்றியமைக்கிறதுன்னு சொல்லிகிட்டு மீண்டும் தனது அல்லி தர்பாரின் கொடியினை நாட்டத் தொடங்கிவிட்டார் தமிழக முதல்வர்.

சாக்கடையில்லாத அளவுக்கு குறைஞ்ச பட்சம் நகரங்களையாவது மாத்தலாம், சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வினை கொண்டு வரலாம், அடிப்படை வாழ்வாதாரங்களையும், வசதிகளையும் மக்களுக்கு கொடுக்கலாம்..இப்படி ஓட்டுபோட்ட மக்களுக்கு, தேவையானத செய்யத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறோம் அப்படிங்கிறத முழுசா மறந்திட்டு தலைமைச் செயலகத்த மாத்துறேன், குழந்தைகள் மருத்துவமனை அமைக்கிறேன்னு சொந்தப்பகையத் தீர்க்கரதா நெனச்சிட்டு சின்னப்புள்ளத்தனமா நடந்துகிட்டா....என்ன அர்த்தம்..அஞ்சு வருசத்துக்கு ரொம்ப தூரம் இருக்குன்ற தைரியமா என்ன?


பஞ்ச் 2:

கோயம்புத்தூருக்கு அத்துவானி வருவாரு, பாலத்துக்கு கீழாப்ல குண்டு வெடிக்காம கிடக்கும். வச்சது யாருன்னு கேட்டா பகுருதீன், பாட்சா, மாலிக்கு இப்படி சொல்லுவாய்ங்க...

காலத்துக்கும் திருந்தாம இந்த காங்கிரசும், பாஜகவும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை குறி வச்சு நடத்துற இந்த தீவிரவாத நாடகங்களை இனியும் மக்கள் நம்பக் கூடாது. ஏன் குண்டை பகுருதீன் தான் வச்சு இருக்கணுமா? காங்கிரசோட களவாணித்தனமான உளவுத்துறை வச்சிருக்க கூடாதா?
என்னங்கய்யா....இது...?



பஞ்ச் 3:
  
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் அடுத்த இடத்துல இருக்குறதே பெரிய தகுதியா விஜயகாந்த் சார்? நீங்க ஜெயிச்சதுக்கு மட்டும் இல்ல மேல சொன்ன ரெண்டு கட்சிகளும் இன்னமும் ஜெயிச்சுகிட்டு இருக்கறதுக்கே காரணம் மக்களோட வீக்னெஸ்தானே தவிர உங்க மேல உள்ள பெரிய அபிமானம் இல்லன்னு வெளங்கிக்கோங்க...!

முதல்ல நீங்க எதுக்கு கட்சி ஆரம்பிச்சீங்க? என்ன செய்யப் போறீங்க? உங்க கொள்கை என்னனு மக்களுக்கு வெளக்கிச் சொல்லுங்க...அப்புறம் வந்து இடம் பிடிக்கலாம்...! ஓட்டுப் போட வேற ஆளு இல்லாம ஓட்டுகளை  வாங்கிகிட்ட ஆளுக எல்லாம் இந்த நாட்ல மொதலமைச்சர் ஆகும் போது நீங்க எதிர்கட்சி தலைவரானதுல ஒரு மண்ணாங்கட்டி ஆச்சர்யமும் இல்லன்றதுதான உண்மை!



பஞ்ச் 4:
  
சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் தி.நகர்ல இருக்குற கடைக்காரங்க எல்லாம் பண்ணிருக்க தவறு மன்னிக்கவே முடியாது மக்களே...! இவுங்க எல்லாம் மோடி மஸ்தான் மாதிரி இத்தனை பெரிய கட்டிடங்களை பொது வெளியில கட்டிப்புட்டு அதிகாரிங்க கண்ணுல படாத மாதிரி இம்புட்டு நாளு மறைச்சு வச்சு இருக்காங்க மக்களே...ஆமாம்....

இப்ப அம்மா ஆட்சிக்கு வந்து பூசாரிய வச்சு கோடாங்கி அடிச்சு பாத்து அம்புட்டையும் கண்டு புடிச்சு, எல்லா கட்டிடத்துக்கும் சீல் வச்சி.. அதிகாரிகளையும் கைது பண்ணி இருக்காங்க!!! இந்த மாதிரி கண்கட்டு வித்தைகளை எல்லாம் அடிச்சு ஒதைச்சு கண்டு பிடிச்சு தண்டிச்சு இருக்குற கவர்மெண்டை பாராட்டியே ஆகணும்....!

ஏன்யா தெரியாமத்தான் கேக்குறேன் கடந்த ஒரு அஞ்சு வருசமா ஒரு போலிஸ்காரன், அரசியல்வாதி, நீதிபதி ஒருத்தர் கூடவா ரெங்கநாதன் தெரு பக்கமே போகல? இல்ல ரெங்கநாதன் தெரு என்ன காஷ்மீர் பார்டர்ல இருக்கா?



பஞ்ச் 5: 
  
உலகில் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியல்னு சொல்லிட்டு ஒரு 70 பேர போர்ப்ஸ் அப்டீன்ற ஒரு மேகசீன் வெளியிட்டு இருக்கு அதுல சோனியாகாந்தி அம்மா, அப்புறம் மன்மோகன் சிங் ஐயா பேரு எல்லாம் வந்து இருக்கு. சோனியா அம்மா அவுட் ஆஃப் 70 பேர்ல 11 வது இடத்துல இருக்காங்களாம்...! முதலிடம் ஒபாமாவுக்கும் (ஒசாமா இல்ல ஓய்....ஒபாமா!!!!) இரண்டாமிடம் விளாடிமிர் புதினுக்கும் கொடுத்து இருக்காங்களாம்..!

ஆக்சுவலா இது தப்புன்னு யாருக்கும் தெரியலை. சட்டப்படி, தர்மப்படி, நியாயப்படி பாத்தா சோனியா அம்மாவுக்குத்தான் முதலிடம் கொடுத்து இருக்கணும். ஆமாங்க இலங்கையின் வடபகுதியில் தமிழர்கள் அழிக்கப்பட்டதையும், சேனல் ஃபோர்ன்ற சேனல் வெளியிட்டுள்ள வீடியோவையும் அந்த பத்திரிக்கைகாரங்க சரியா பாக்கல அப்டி பாத்து இருந்தா 

உலகின் சக்தி வாய்ந்தவர்னு முதலிடத்தை சோனியா அம்மாவுக்கும், அடுத்த இடத்தை அரக்கன் ராஜபக்சேக்கும் கொடுத்து இருப்பாங்க...!கொஞ்ச நஞ்சப் பேரையா கொன்னு இருக்காங்க....அவுங்கள போய் 11வது இடத்துக்கு தள்ளியது வன்மையாக கண்டிக்கத்தக்கது தானேங்க?


கழுகிற்காக
 தேவா 



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Thursday, October 13, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (13.10.2011)



பஞ்ச்: 1
 

இடைத்தேர்தல்னு சொன்னாலே அங்க ஆளும் கட்சிதான் அடிச்சு விளையாடும்ன்றது தமிழ் நாட்ல எழுதப்படாத விதின்னு சொல்லலாம். திருச்சி மேற்கு சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஜரூரா தொடங்கிருச்சு, திமுக மற்றும் அதிமுகவோட நேரடி போட்டி இருக்குறதனால தொகுதி முழுதும் ரொம்ப பதட்டமாத்தான் இருக்கும்.


ஆளும் கட்சியே ஜெயிச்சா தொகுதிக்கு உதவியா இருக்கும்னு மக்கள் நினைக்கிறாங்கன்னும் சொல்லிக்கலாம் ஆனா திமுக ஜெயிச்சா அதிமுகவுக்கு சங்கு ரெடின்னு சிம்பாலிக்கா இல்லை பகிரங்கமாவே சொல்லிக்கலாம்.

வெயிட் பண்ணி பார்ப்போம்...!


 பஞ்ச்: 2
 

தங்கபாலு தமிழ் நாடு காங்கிரஸ் கட்சிய சுத்தமா தொடச்சி அழிச்சு மண்ணோட மண்ணா ஆக்கணும்னு ஒரு வெறியோடத்தான் இருக்காரு. ஆமாம், தமிழ் நாட்ல இனி எந்த தேர்தலா இருந்தாலும் காங்கிரஸ் தனிச்சுதான் போட்டியிடும்னு சவாலா சொல்லி இருக்காரு.


எப்டி இருந்தாலும் ஒரு தமிழர்தானே அவரு... தமிழருக்கு எதிரான காங்கிரஸ் மேலிட நடவடிக்கைகள அழிக்க அந்த கட்சியின் தமிழ்நாட்டு தலைவனா ஊடுருவி போயி கட்சிய அழிக்க அவருக்கே தெரியாம பெரும்பாடு பட்டுகிட்டு இருக்காரு.

காங்கிரஸ்னு ஒரு கட்சியே இல்லாம ஆக்கிடுங்க தங்கபாலு சார்...ஹேட்ஸ் அப்!!!

பஞ்ச்: 3
 

கலிஞர் ஐயா மத்திய அரசுக்கு கடிதாசி எழுதினப்பா ஜீமான் ஐயா மாதிரி ஆளுங்களும் இன்னும் வெகு ஜன ஊடகங்களும் வெகுண்டெழுந்து அட என்னய்யா இது மீனவன் சுடப்படுறான் நீ பாட்டுக்கு லெட்டர் எழுதிட்டு இருக்கியேன்னு கேட்டாங்க..அப்போ


இப்போ பொரட்சித் தலைவி அம்மாவும் அதே கடுதாசிய எழுதி பிரதமருக்கு அனுப்பிகிட்டு இருக்காங்க. வர்ற மொதலமைச்சருங்க எல்லாம் மத்திய அரசோட டர்பன் பிடிச்சு உலுக்கு கேக்குறதுக்கு அதிகாரம் கிடையாது போல கடிதாசி எழுதமட்டும்தான் முடியும் போல. அவரால முடியல இவரால முடியும்னு சொல்றது எல்லாம் நம்மள ஏமாத்ததானோ

மாநில சுயாட்சி அப்டீன்றத முறையா கொண்டு வந்து மாநில அரசுகளுக்கு சுயமா முடிவெடுத்து தத்தம் மாநிலங்களோட சில வீரியமான சென்சிட்டிவ் பிரச்சினைகளை தீர்த்துகிற அதிகாரத்தமத்திய அரசு கொடுக்கணும். அது வரைக்கும் யாரு வந்தாலும் கடிதாசிதான் எழுத முடியும். சிதம்பரத்த காப்பத்தறக்கே நேரம் பத்தமாட்டீங்கிது. அவங்க எங்க இதப் பத்தி எல்லாம் நினைக்கப்போறாங்க....

பஞ்ச்: 4
 

அதிமுகவுக்கு சப்போர்ட் உள்ளாட்சித் தேர்தல்ல கொரலு கொடுக்குறதா இளைய தளபதி விஜயோட அப்பா சந்திரசேகர் அறிவிச்சு இருக்காரு. ரசிகப் புள்ளைங்க எல்லாம் கவனமா கேட்டுகிட்டு இளைய தளபதி சாரோட அப்பா சொல்லு படி வேலை செஞ்சு கழகத்துக்கு அரும்பணி ஆற்றுங்கப்பா....!!!!


கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம். சினிமாவுல நடிச்சே இன்னும் ஒன்ணும் கிழிக்க முடியலையாம் அதுக்குள்ள அரசியல்ல வழிகாட்டியா இருக்காறாம் ரசிகர்களுக்கு...ச்ச்சே..ச்ச்சே தொண்டர்களுக்கு...


ரசிகர்களை தொண்டர்களாக மாற்றும் அல்லது மாறும் அயோக்கியத்தனம் என்னிக்கு தமிழ்நாட்ல ஒழியுமோ தெரியலை போங்க!

பஞ்ச்: 5
 

தமிழ் நாட்ல எதை வேணும்னாலும் நிர்ணயம் பண்ணிடலாம் போல இருக்கு ஆனா இந்த ஆட்டோ கட்டணத்தை யாராலும் நிர்ணயிக்க முடியாது போல..., ஆட்டோ ஓட்டுறவங்கள கேட்டா அரசு நியாயமா ஒண்ணும் செய்யறது இல்லை சார், அவுங்க பிக்ஸ் பண்ணின ரேட்ட வாங்கினா பெட்ரோல், டீசல் போடவே காசு பத்தாது சார்.. அதான் நாங்க ரஃப்பா ஒரு அமொண்ட் வாங்குறம்னு சொல்லிட்டு மினிமம் 50 ரூபாய் வாங்குறாங்களாம்...


வெளியூர்ல இருந்து பொழப்பு  தேடி சென்னை மாதிரி ஊர்களுக்கு வர்றவங்ககிட்ட ரேட்டுன்னு சொல்லி கேக்குறதுக்கு ஒரு அளவே கிடையாது. ஆளு எப்டி இருக்கான்னு பாத்துகிட்டு அதுக்கு ஏத்தாப்ல இரண்டு மடங்கோ மூணு மடங்கோ கொடுத்து போக வேண்டிய சூழல்ல உண்டு பண்ணிடுறாங்க...! சைதாப் பேட்டைல இருந்து தி.நகர் போறதுக்கு 200 ரூபாய் கொடுத்து போன கதைகள கேக்குறப்ப....


ஏன் இந்த கவர்மெண்ட் முறையா ஒரு மீட்டர வச்சு அது பொது மக்களுக்கும் பாதிக்காம ஆட்டோ டிரைவர்களையும் பாதிக்காம இருக்குற மாதிரி பாத்துக்க கூடாது? இது என்ன அம்புட்டு குதிரைக் கொம்பா? டெக்னாலாஜி முன்னேறி இருக்குற இந்த காலத்துல ஆட்டோ மீட்டர்களை சரியா வைச்சு ஒழுங்க நடத்த ஏதாச்சும் நடவடிக்கை எடுங்கப்பா? காலத்துக்குமா இப்படி...???




கழுகிற்காக



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


Thursday, October 06, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (6.10.2011)





பஞ்ச்: 1


சட்ட மன்றத் தேர்தல் கூட்டணி சந்தர்ப்பாவாத கூட்டணி அப்டீன்னு விஜகாந்த் சார் சொல்லியும் ஜெயலலிதா அம்மாவும் சொல்லித் தெரிய வேணாம். ஆட்டோமேட்டிக்கா மக்களுக்கே தெரியும். இதுல விஜகாந்த் சார் பெருமை வேற நேத்து ஒரு ஆள் இன்னிக்கு 29 ஆள்னு வாய்ச்சவடால் வேற, ரெண்டு கட்சிய சேந்த ஆளுகளும் சேந்து போட்ட ஓட்டுல ஜெயிச்சிருக்கோம் அதுக்கு காங்கிரஸ் எதிர்ப்பும், திமுக ஆட்சியின் அதிருப்தியும் சேந்து உதவுனுச்சுன்னு இவுங்களுக்கு எல்லாம் தெரியும இல்லை தெரியாத மாதிரி ஆக்டிங்கா?

தனிப்பட்ட முறையில சினிமாவுல நடிச்சத தவிர வேறு எதை அரசியல் அடையாளமா விஜயகாந்துக்கு சொல்ல முடியும்? கொஞ்சம் அடக்கி வாசிங்க விஜகாந்த் சார் குறைஞ்ச பட்சம் உள்ளாட்சித் தேர்தல் முடியுற வரைக்கும்...முதல்வர் சீட் ரொம்ப பக்கத்துல இருக்குற மாதிரி நீங்க நினைச்சுகிட்டு இருக்கறது தப்புன்னு மக்கள் சீக்கிரம் புரிய வைப்பாங்க!

பஞ்ச்: 2

போன ஆட்சியில மின்வெட்டுக்கு காரணம் திமுக அரசுன்னு குத்தம் சொன்ன மக்கள் இப்போ தொடரும் அதே மின்வெட்டுக்கு அதிமுக அரசுதான் காரணம்னு சொல்லிகிட்டு இருக்காங்க, போன ஆட்சியில இது அதிமுக அரசியல் செய்ய உதவுனுச்சு ஆனா இப்போ திமுகவுக்கு  குத்திக்காட்ட உதவுது.

ஆக மொத்தம் மொத்தமா மின்வெட்ட போக்குறதுக்கு என்ன வழின்னு தெரியாம விழி பிதுங்கி நிக்குது தற்போதைய அதிமுக அரசு. வெளிச்சந்தையில மின்சாரத்த வாங்கப் போறதா அறிவிச்சு இருக்குற அரசு, தெலுங்கான போராட்டதுனால ஆந்திராவுல இருந்து கிடைக்கவேண்டிய மின்சாரமும், மழை பாதிப்பால ஒரிசாவுல இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரமும் கிடைக்கல அதனால 1026 மெகாவாட் மின்சாரம் குறைவா கிடைக்குதுன்னு மூக்கை சிந்த ஆரம்பிச்சு இருக்கு.மின்சாரப் பற்றக் குறைய நிரந்தரமா தீத்து வச்சுதுன்னா கண்டிப்பா அது மக்கள் மனசுல ஏத்தி வச்ச விளக்கா அடுத்த எலக்சன்ல கூட ஜெயிக்கிறதுக்கு உதவும்...

பார்க்கலாம்...அடிப்படை மக்கள் பிரச்சினையை ஆளும் அதிமுக அரசு எப்டி சமாளிக்குதுன்னு!

பஞ்ச்: 3

பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீருக்குள்ள 11 ஆயிரம் சீனப் பாதுக்காப்பு படையினர் முகாமிட்டு இருகாங்களாம். பாகிஸ்தான் அங்க நிறைய கட்டிட வேலைகள் எல்லாம் செஞ்சுகிட்டு இருக்காம் அதுக்கு உதவ சீனா தன்னோட பொறியாளர்களை அனுப்பி வச்சு இருக்காம். அந்த பொறியாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பா பாதுகாப்பு படை வீரர்களையும் அனுப்பி இருக்காம்.

நம்மாளுங்க எல்லாத்தையும் வேடிக்கை பாத்துகிட்டே இருப்பாங்க. ஏன்னா நாட்டுக்குள்ள இவனுக இருக்க முடியாம பண்ணி வச்ச வேலைய பாக்குறதுக்கே நேரம் பத்தலையே....! ராச தந்திரம், ராச தந்திரம்னு சொல்லி மேல இருக்குன சீனாக்காரனயும் கவனிக்கிறது இல்லை, பக்குதுல இருக்குற பாகிஸ்தான் காரனையும் கவனிக்கீறது இல்லை, காலுக்கு கீழ இருக்க இலங்கைகாரனையும் வளத்து விட்டாச்சு...!  மூணு பேரு சுத்தி வளச்சு  அடிக்கப் போறானுக அப்ப என்ன பண்ணும் நம்ம பாதுகாப்பு அமைச்சகம்னு பாக்கணும்...?

கொசுறு: சிதம்பரம் ஐயா தேக்கடியில இருக்காப்ல, ஒய்வெடுத்துகிட்டு...!

பஞ்ச்: 4

திராவிட  மற்றும் தேசிய கட்சிகளோடு இனி கூட்டு இல்லைன்னு ராமதாஸ் ஐயா சொல்லியிருக்கிறத பாக்கும் போதும் கொஞ்சம் ஓவராவே புல்லரிக்குது. மக்கள் மத்தியில பாட்டாளி மக்கள் கட்சின்ற ஒரு கட்சிக்கு நம்பிக்கை வர இன்னும் அதிக நாள் ஆகும் ராமதாஸ் சார். அதோட இல்லாம வட மாவட்டங்கள்ள குறிப்பிட்ட சாதிய  வச்சு நீங்க பண்ற அரசியல விட்டு கொஞ்சம் வெளில வர்றதோட மட்டும் இல்லாம மொத்த தமிழகத்தையும் நீங்க கவர் பண்ண தென் மாவட்டத்துக்கு எல்லாம் அடிக்கடி வரணும்...

ஏதோ ஒரு புதிய மாற்றுக் கட்சி வராதன்னு துடிச்சுகிட்டு இருக்குற தமிழனுக்கு யாராச்சும் தீனி போட மாட்டங்களான்ற ஆசை இருக்குற வரைக்கும் உங்களுக்கு சான்ஸ் இருக்கு பட்... அடுத்த எலக்சன்ல நீங்க திமுக கூடவோ அதிமுக கூடவோ கூட்டு வைக்காம இருக்கணும்? அம்புட்டுதேன்..!

பஞ்ச்: 5

அதாவது ஊழ்வினைப் பயன் அப்டீன்றது ஏதோ மறு ஜென்மத்துல வந்து உறுத்தும் அப்டீன்ற மாதிரி எல்லோரும் நினைச்சுகிட்டு இருக்காங்க ஆனா அப்டி எல்லாம் இல்லை உடனே உடனே உறுத்தும்ன்றதுக்கு சாட்சியா காங்கிரஸ் கட்சிய நாம சொல்லலாம்.

திருச்சி மாநகராட்சி மேயர் வேட்பாளரா சுஜாதான்னு ஒரு அம்மாவ தங்கபாலு அறிவிச்சு முடிச்ச் உடனே அந்தம்மா கேக்குதாம் யார கேட்டு என்ன அறிவிச்ச? நான் தான் விருப்ப மனுவே கொடுக்கலையேன்னு...! சரின்னு சொல்லிட்டு இப்போ விஜயா சேகர்னு ஒரு அம்மாவ இப்போ வேட்பாளரா அறிவிச்சு நிறுத்தி இருக்காங்க..., இதுல என்ன காமெடின்னா இந்த அம்மாவும் விருப்ப மனு கொடுக்கலையாம்...

ஆக மொத்தம் விபரம் தெரிஞ்ச காங்கிரஸ்காரங்களே இந்த தேர்தல் விட்டு ஒதுங்கி இருக்கறது நல்லதுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல...ஆனா தங்கபாலு சார் மட்டும் கண்ண மூடுனா மீண்டும் காமரஜார் ஆட்சியை அமைப்போம்ன்ற காங்கிரசோட தார்மீக கனவ கண்டுகிட்டு இருகாரு போலா...!

கொசுறு: ஆமா...சத்தியமூர்த்தி பவன்ல ஏதோ சண்டையாமே....தங்ஸ் சார்?



கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Thursday, September 29, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (29.9.2011)


பஞ்ச்: 1

வரலாறு காணாத அளவுல ஒரு பன்முகப் போட்டி இருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு வகையில் பாத்தா சில முக்கியமான தடயங்களை தேர்தல் முடிவுகளோட விட்டுத் தரும்னுதான் சொல்லணும்...!

கடந்த 25 வருட அரசியல்ல அதிமுக மற்றும் திமுக இந்த ரெண்டு கட்சியும் தமிழர்கள் வாழ்க்கையில நிறைய தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பது நமக்கு நல்லாவே தெரியும். ஆனா, முதல் தடவையா இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியா களம் காணுவதின் விளைவு இவற்றின் சொந்த பலம் என்ன அப்டீன்னு இந்த முறை தெளிவா காட்டிடும். 

இது ஒரு அவசியமான நிகழ்வுன்னு கூட சொல்லலாம்...! பார்க்கலாம் வெல்லப்போவது அதிமுகவா? திமுகவா...?இல்லை தேமுதிக கூட்டணியா அப்படின்னு?


பஞ்ச்: 2

இந்த ப. சிதம்பரம் இருக்காரே அவரு நல்லவரா? இல்லை கெட்டவரான்னு பிரதமர் மன்மோகன் சிங் கிட்ட கேட்டா.. தெரியலையேப்பான்னு டர்பன கழட்டி வச்சுட்டு தலைய சொறியிறாராம். உள்ள ஒக்காந்து கிட்டு ராசா ஒண்ணு ஒண்ணா எடுத்து விட இங்க சிதம்பரம் ஐயா டவுசர் கொஞ்சம் கொஞ்சமா கிழிய ஆரம்பிச்சு இருக்கு.

நம்ம பிரதமர் ஐயா நியூயார்க்ல இருந்துகிட்டு பேட்டி கொடுக்குறாங்க. சிதம்பரம் அப்பழுக்கற்றவர். அவரைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். அட... பிரதமர் ஐயா எங்களுக்கும் அவரைப் பத்தி நல்லா தெரியும். உள்ள இருக்காரே ராசா அவருக்கும் நல்லா தெரியும், ஆனா எதுக்கு இவர் டெண்டருக்கு அப்ரூவல் கொடுத்தாருன்னுதான் கேக்குறோம்..?

என்னமோ போங்க... பூசணிக்காய சோத்துல மறைக்க ட்ரை பண்ணினா கூட பரவாயில்லை. வெறும் பூசணிக்காய வச்சுகிட்டு இது சோறுன்னு சொல்லி 125 கோடி பேர முட்டாளாக்க பாக்குறீங்களே...நல்லா இருக்குங்கய்யா உங்க ஜனநாயகம்!

பஞ்ச்: 3

ஜீ தொலைகாட்சியில் வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில ஒவ்வொரு குடும்பத்துல இருக்குற பிரச்சினைகளையும் அந்தந்த குடும்ப உறுப்பினர்களை வச்சே தீர்த்து வைக்கிறாங்க. திருமதி.நிர்மலா பெரியசாமி (சன் டிவில நியூஸ் சொல்லுவாங்களே....அவுங்களேதான்) மிக சாமர்த்தியமா பேசி அருமையா ஒத்துப் போக வைக்குறாங்க.

திரும்ப திரும்ப வரும் பிரச்சினை என்னனு பாத்தீங்கன்னா, காதல் கல்யாணம் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம், பெத்தவங்க சப்போர்ட்டும் இல்லாம, புருசனும் சண்டை போட்டு வெறுத்து, இந்த பொண்ணு வேண்டாம்னு விட்டுட்டு வேற ஒருத்தி கூட தொடர்பு வச்சிக்கிட்டு போற மாதிரியேதான் இருக்கு.

ஒட்டு மொத்தமா பார்த்தீங்கன்னா காதல் சரின்னு நாம ஒத்துக்கிட்டாலும் தனிப்பட்ட முறையில ஆணோ அல்லது ஒரு பெண்ணோ தனித்தனியா ஒருத்தர் இல்லேன்னா கூட ஒருத்தர் நிக்க முடியும் அப்டீன்ற ஒரு ரேஞ்ச்ல இருந்தா காதல் பண்ணுங்க. பெத்தவங்கள விடுங்க. கல்யாணம் பண்ணிக்கோங்க. ஏன்னா... குடும்ப உறவுகள எதிர்த்து கல்யாணம் பண்ணிகிட்டு தன்னோட துணை துரோகம் செய்றப்ப ரொம்ப கஷ்ட படுற சூழல் உருவாகிடுது. இதுல பெரும்பாலும் பெண்கள் நிறைய பாதிக்கப்படுறாங்க..!

இந்த விசயத்துல எல்லோருக்கும் விழிப்புணர்வு வேண்டும். ஒரு செயலைச் செய்யும் போது நாம என்ன செய்றோம்? ஏன் செய்றோம்? செய்றது சரியா? இப்டி பல தடவை தன்னை உற்றுப் பார்த்துக் கொள்வதோடு அனுபவஸ்தர்களின் அறிவுரையையும் கேட்டு நடந்தால்.. தெளிவான ஒரு சமுதாயத்தின் அங்கமா நாம இருப்போம். காதலுக்கு கண் இல்லைன்றது சரியாதான் இருக்கு...

பஞ்ச்: 4


மன்மோகன் சிங் ஐயாவுக்கு திரு. கருணாநிதி அவர்கள் திசைகாட்டும் விளக்காக இருக்காராம். சிங் ஐயா பொறந்த நாளைக்கு நம்ம ஐயா வாழ்த்து சொன்ன உடனே சிங் ஐயா ரொம்ப குஜாலா சொல்லியிருக்காரு..! பாராளுமன்றத் தேர்தல் வருது. திமுக உள்ளாட்சித்தேர்தல்ல கழட்டி விட்டுடுச்சு. ஏதாச்சும் சொல்லி கில்லி தேத்தி வைப்போம். பின்னால 40 சீட்டுக்கு உதவும்னு இப்பவே தூபம் போட ஆரம்பிச்சுட்டாங்க..ஒருவேள இப்படியும் இருக்குமோ? எப்படியும் எந்தக் கட்சியும் தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டி வரப்போறதில்ல. திமுகவுக்கும் வெற்றி வாய்ப்பு குறைவா இருந்தா பழையபடியே உறவ புதுப்பிச்சிக்கிலாம்னு இவரும் வாழ்த்து சொல்லி இருக்கலாம். யாரு கண்டது..?



பின்குறிப்பு: சோனியா அம்மா ஒரு வேளை செயலலிதா அம்மாதான் வழிகாட்டும் வெளக்குன்னு சொன்னாலும் சொல்லுமோ? சொல்லும் சொல்லும் யாரு கண்டா...?! 

பஞ்ச்: 5

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தில சந்தனக்கட்டை வச்சு இருக்காங்கன்னு சந்தேகப்பட்டு ஒரு ஊரையே அடிச்சு துவம்சம் பண்ணி 18 பெண்களை கற்பழிச்சுட்டாங்கன்னு சொல்லி 269 காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மேல குற்றம் சாட்டப்பட்ட வழக்கோட தீர்ப்பு இன்னிக்கு சொல்லப் போறாங்க...


கிட்டத்தட்ட 19 வருசம் இந்த கேச விசாரிச்சு விசாரிச்சு, குற்றம் சாட்டப்பட்ட 269 பேர்ல 54 பேர் செத்து வேற போய்ட்டாங்க... ஏன்யா இந்தியாவுல மட்டும் நீதி கிடைக்க இவ்ளோ லேட்டாகுது..? ஒரு கேசுல குற்றம் சுமத்திட்டு மறுபடி பொறந்து வந்துதான் நியாயம் கேக்கணும் போல இருக்கே..?!


இது போன்ற சம்பவங்கள் நீதி வழங்கல் விசயத்துல தொடர்ந்து நடக்குறது ஏன்? சரி தப்புன்னு தெரிய கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்குறது சரி... அதுக்குன்னு.......இப்டியா? இந்தியனா பொறந்து மூளையில ஏறி ஒக்காந்து ஒத்துக்கிட முடியாத வேதனையான விசயம் இதுதான்!


  
கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes