Tuesday, September 07, 2010

தேனம்மையுடன் ஒரு நேர்முகம்....



கழுகு கொஞ்சம் லேட்டாக வந்ததற்கு முதலில் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டே சொன்னது... எல்லா நேரமும் ஃப்ரியா இருக்க முடியுமா? சில நேரங்களில் வேலைப்பளு அதிகம் சலித்துக் கொண்டது கழுகு அதன் பிண்ணனியில் உண்மை அதிகம்... ஜில்லென்று பருகிய குளிர்பானத்துக்கு பிறகு... சும்மா உக்காந்துகிட்டு இருக்காம... சும்மா ஜம்முனு பேட்டியை போடுங்க.. சும்மா கலக்கலா இருக்கும் பாருங்க.. பேட்டியை வாங்கி சும்மா பார்த்தோம்.............



கவிதைகளிலும் கருத்துக்களிலும் தெளிவான பார்வை கொண்ட...தேனம்மை லெக்ஷ்மணன் .. தன்னுள் பரவியிருக்கும் கருத்துக்களை ஒரு மகிழ்ச்சியின் செய்தியாய் மனிதர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்...! எல்லோரையும் குறைவில்லாமால் நேசிக்கும் தேனம்மையின் கவிதைகள் எல்லாம் எப்போதும் நேர்கோட்டில் பயணிப்பவை. புதியாய் வந்து எழுதுபவர்கள் கண்டிப்பாய் தேனம்மையின் தளத்தில் கற்றுக் கொள்ள நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை... தேனம்மையின் பேட்டி இதோ உங்களுக்காக...

1 )
சும்மானு எப்படி ஒரு தலைப்பு வச்சீங்க...உங்க வலைப்பக்கத்துக்கு ?

சும்மா வீட்டுல வெட்டியாதானே இருக்கோம்னு சிம்பாலிக்கா வைச்சேன் கழுகாரே.


2) சந்தோசமான தருணங்களில் என்ன செய்வீர்கள்?
பாட்டுப் பாடுவேன்.. டான்ஸ் ஆடுவனான்னு கேக்காதீங்க..

சின்னப் பிள்ளைகளைக் கொஞ்சிக் கொண்டிருப்பேன்..




3) உங்கள் கணவர் உங்கள் பதிவுகளைப் பற்றி என்னசொல்லுவார் ?
படிச்சாதானே சொல்றதுக்கு..:)) எப்பாவாவது படிக்க நேர்ந்தால்.. ( அதாவது நாம லாப்டாப்பை கண்ணுக்குக் கிட்ட கொண்டு காமிச்சால் ) நல்லா இருக்கு என்பார்..:))




4) பெரும்பாலும் உங்கள் கவிதைகளுக்கு கருவாக இருப்பது எது ?


அன்பு., காதல்., பாசம்., வெறுப்பும் விரக்தியும் கூட



5) சமுதாய கோபங்கள் ஏதேனும் உங்களுக்கு இருக்கிறதா ?


தவறான தகவல் பரப்பும் ஊடகங்கள்., அழகிகள் கைது என வரும் ஃபோட்டோக்கள்.. (அப்ப அழகன்கள் படங்களையும் போடவேண்டியதுதானே..)., மேலும்., பார்த்தாலே வளைந்து விடுவது போல் இருப்பவர்களை.. சம்பந்தமே இல்லாத கேஸில் சாராய கேன்களோடு உக்கார வைத்து படம் போடுவது..
., அடுத்தவர்கள் படுக்கை அறைவரை சென்று விஷயம் பரப்பும் மீடியாக்களும் அதை ஆதரிக்கும் பொது மக்களும
Justify Full6) நகர வாழ்க்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


கிராம வாழ்க்கை ஆனந்தம் என்றால்.. நகர வாழ்க்கை முன்னேற்றம் என நினைக்கிறேன்



7) பெண் பதிவர்களை கிண்டல் செய்து பதிவு வருகிறதே அதை பற்றி?


எழுதுமுன் யோசிக்க வேண்டும்.. மிதமான கிண்டல் படைப்புகள் பற்றி என்றால் பரவாயில்லை.. தனி மனித தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.


8) பெண் பதிவர்கள் என்றால் சமையல் குறிப்பு கவிதை இது மட்டுதான் எழுத வேண்டுமா?


ஏன் ரோஹிணி சிவா மருத்துவப் பதிவுகள் எழுதுகிறார்.. துளசி கோபால் சுற்றுலாபற்றி., விக்னேஷ்வரி இண்டீரியர் டெக்கரேஷன் மற்றும் ஃபாஷன் பற்றி., ஜெசி விதம் விதமான இடங்கள்., மர வீடுகள் மரங்கள் பற்றி ., ராமலெஷ்மி ஃபோட்டோகிராஃபி பற்றி பகிர்கிறார்கள்..

ஒவ்வொருவரின் ஆர்வத்தைப் பொறுத்தது .




9) பூ பற்றி நிறைய எழுதி இருக்கீங்க.... இப்போ ஒரு கவிதை சொல்ல முடியுமா கழுகை பற்றி ?

ராஜாளி.,
உயர்வின் சிறப்பை உணர்ந்து ...
உயர உயர பறந்து..




10) பதிவுலகில் பெண்களின் நிலை பற்றி உங்கள் கருத்து ?


நல்ல ஆரோக்கியமாதான் இருக்கு.




11) செட்டி நாடு பகுதியை சேர்ந்தவர் நீங்கள்.....அது பற்றிஒரு கேள்வி...பெரிய பெரிய வீடுகள் கட்டி விட்டு இன்று அவை இன்று யாரும் இல்லாமல் வெறுமனே கிடப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?


வருத்தம் தரும் நிகழ்வுதான்,, என்ன செய்ய,, வேலை காரணமாக., அல்லது வறுமை காரணமாக விட்டுச் செல்லப்படும் வீடுகள் அன்றைய பெருமையின் சாட்சியாக.
வீடுகள் மட்டும் தனித்து விழித்து இருக்கின்றன.... உயிரோட்டம் இல்லாமல்.




12) கவித்துவமாய் இருக்கும் நீங்கள்...எதார்த்த வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கிறீர்கள் ?



எல்லாம் இலகுவாகவே அமைந்து விட்டது.. எந்தப் போராட்டமும் இல்லாமல்...
ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற தூண்டுதலால் இப்போதுதான் சிறிது சிரமப் படுகிறேன்




13) மனித வாழ்க்கையில் நீங்கள் வெறுப்பதும் ரசிப்பதும் என்ன?


வெறுப்பது அன்பற்ற தன்மை.. ரசிப்பது ., ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பதுதான்.




14) புத்தகம் வலைபதிவு இரண்டையும் நீங்கள் எப்படி பார்ப்பீர்கள் ?


புத்தகம் அதிகம் பேரை சென்றடைகிறது.. வலைப்பதிவு என்றைக்கு இருந்தாலும் பார்க்கப்படும் ஒரு சௌகர்யத்தில் உள்ளது..( நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்)



15) தனியாக ஒரு பெண்களுக்கான இதழ் ஒன்று நடத்துவதாக அறியப் பெறுகிறோம்....அது பற்றி கொஞ்சம் கூறுங்கள்?


நான் நடத்தவில்லை.. பெண்களுக்கான இதழான லேடீஸ் ஸ்பெஷல் என்ற மாதந்திரி திருமதி கிரிஜா ராகவனால் நடத்தப் படுகிறது.. அதில் சில விஷயங்கள் என் பொறுப்பாக இருக்கிறது.. அவ்வளவே.. அதில் நம் வலையுலக சகோதரிகளை அறிமுகப்படுத்துதல்... ஷேர் மார்க்கெட் சம்பந்தமான பேட்டி., யங் லேடீஸ் கவிதைப்போட்டி., ருக்மணி அம்மாவின் திருக்குறள் கதைகள்., புதுக்கவிஞர்களை அறிமுகப்படுத்துதல்.. என ..



16) பொதுவாக பெண் பதிவர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?


ஏகப்பட்ட பேர் நல்லா எழுதிக்கிட்டு இருக்காங்க.. எனவே எந்த சந்தர்ப்பத்திலும் எழுத்தைமட்டும் விட்டுடாதீங்கன்னு சொல்ல நினைக்கிறேன்



17) கல்லூரி காலங்களில் கவிதை எழுதியதுண்டா...ஆம் எனில் ஒன்று சொல்லுங்கள்....
நிறைய..
பயணம்..
*************
அரிக்கேன் விளக்கு...
யாருடன்
யாருக்காக .,
யாரிடம் நோக்கி.,
ஏன் பயணிக்கிறோம்
என்பது புரியாமல்.,
ஒற்றை அரிக்கேன் விளக்கு..
எந்தக் கரத்திலோ
வளையமாய்த் தொற்றிக்கொண்டு.,
எந்த மாட்டுவண்டியிலோ
எதிர்க்கூதலில் ஆடிக்கொண்டு.,
இருளைத்தேடி..
இருளைத்தேடி..
முன்னே பரவும்
வெளிச்ச வட்டத்தைப் பிடிக்க...
பாலைவன மண்வீச்சுகளுக்குள்..
சிகப்பு வளையமாய்..
தூரப்புள்ளியாய்..
செவ்வாய்க் கோளாய்..
திரிக்குள் ஒளிரும்.,
கண்ணாடிக்குள் ஜ்வல்லிக்கும்
ஒற்றை அரிக்கேன் விளக்கு..
யாருடன்.,
யாருக்காக.,
யாரிடம் நோக்கி.,
ஏன் பயணிக்கிறோம்..
என்பது தெரியாமல்...



18) சமையல் செய்வது என்பது பெரும்பாலும் பெண்கள் சார்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது...இது சரியா?
வீட்டில் மட்டும்தான் பெண்கள்.. விருந்து வைபவங்களில் ஆண்கள்தானே சமைக்கிறார்கள்..

ஆண்கள் கற்றுக் கொண்டால் அவர்களுக்கு நல்லது..:))




19) எழுத்துலகில் உங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்?


ஜோசியம் சொல்லதெரியவில்லை..
இதே போன்ற மொக்கைகளை முடியும் வரை வழங்கிக் கொண்டிருப்பேன் என உறுதியளிக்கிறேன்



20) உங்களின் ஒரு ஆசை நிறைவேற்றப்படும் என்ற வரம் கிடைக்கிறது எனில் எதை வேண்டுவீர்கள்
?



ஒரு குடும்பத்தலைவியா என் பிள்ளைகள் சிறப்பா நீடூழி வாழணும்னு வேண்டிப்பேன். ஒரு வலைப்பதிவரா என்னுடைய கவிதைகள் புத்தகங்களா வந்து பலரையும் சென்றடையணும் வெற்றியடையணும்..என்று வேண்டிக்குவேன்.


(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)

Saturday, September 04, 2010

அறிவிவோமா...கொஞ்சம் அறிவியலும்....!

அறிவியல் ....எப்போதும் ஒரு மனிதனுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டும். எல்லா எண்ணங்களையும் புரியவைக்க ஒரு அளவுகோல் விஞ்ஞானம். அறிவியல் விழிப்புணர்வு இன்றிதான் இன்று ஓராயிரம் மூட நம்பிக்கைகள் நம்மை சுற்றி காற்றில் மிதக்கும் கழிவுகள் போல புரையோடிப் போயிருக்கின்றன. அறிவியல் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கும் தம்பி கணேஷ் எல்லோரும் அறியப்படவேண்டிய ஒருவர்....அவரின் விஞ்ஞான விளசல்களில் ஒன்று இதோ.....
அருகில் இருந்த நண்பனிடம் முந்தைய நாள் இரவில் படித்த Doppler effect பற்றி கொஞ்சம் பேசலாம் என்று எண்ணி அவனிடம் "நேற்று Doppler effect பற்றி கொஞ்சம் படித்தேன் ரெம்ப ஆர்வமாக இருந்தது" என்றேன்.





அவனோ அன்று காலையில் கொஞ்சம் தாமதமாக வந்ததால் அவன் தினமும் பார்க்கும் அவன் காதலியை பார்க்க முடியாத சோகத்தில் இருந்தான். அவள் ஒன்றும் காதலி இல்லை..இருந்தும் அவனுக்கு அவ்வளவு கவலை..கடந்த ஒருவருடமாக அவளை பின் தொடர்ந்து...சில இடங்களில் காத்திருந்து அவளின் தரிசனம் பெற்று இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கின்றது. ஆனால் அவளை தனது காதலி என்று சொல்லிகொள்வான்.

அவளும் அப்படித்தான் கடந்த ஒருவருடமாக இவனை கடைக்கண் பார்வையால் சுத்தவைத்து கொண்டு இருப்பவள்.



அன்று இவன் கொஞ்சம் தாமதமானதால் அவளை காண முடியவில்லை....அதனால் அவன் கொஞ்சம் கோபத்தில் இருந்தான்.


அந்த நேரத்தில் தான் எனது இந்த DOPPLER EFFECT விஷயத்தை சொன்னேன்...


அதற்கு அவன் “இன்று காலை நான் அவளை பார்க்கவில்லை அதான் எனக்கு ரெம்ப கஷ்டம இருக்குடா" என்று ஏதோ உலகமே அழியப்போவது போல வருத்தமாக சொன்னான்.....
இந்த நேரத்தில் ..இந்த சம்பந்தமில்லாத விஷயத்தை இப்ப எதுக்கு சொல்லுறே என்றான்"..சோகமாய்.




“யார் சொன்னது இது உனக்கு சம்பந்தம் இல்லாதது என்று....இந்த உலகத்தில் Doppler effect இல்லாமல் எந்த ஒரு காதலும் இல்லை” என்றேன்.


அவன் சற்று ஆச்சர்யமாக “அது எப்படி..அப்படின்னா என் காதலிலும் இது இருக்கா என்ன? அப்படின்னா அந்த Doppler effect பற்றி கொஞ்சம் சொல்லேன்” என்றான்.

நான் அவனிடம் “அதை நான் உனக்கு சொல்வதைவிட அதை உன்னை அனுபவிக்க வைத்து அதற்கு பிறகு அதை உனக்கு புரிய வைக்கிறேன்” என்றேன்.

அவன் ஆர்வமாக “அப்படின்னா எனக்கு இபோதே அதை சொல்” என்றான்.நான் அதற்கு மறுத்து “இன்று மாலை வரை கொஞ்சம் பொறுத்து இரு அப்போது உனக்கு செயல் முறை விளக்கத்தோடு சொல்றேன்” என்று சொல்லிவிட்டேன்.

மாலை நேரம் வந்தது..வழக்கம் போல அவன் அவளை பார்ப்பதற்கு அவன் எப்போதும் நிற்கும் இடத்தில நின்று இருந்தேன்..


நான் அவனருகில் சென்று நின்றேன்..அவன் என்னை பார்த்தவுடன் “இப்பவாது சொல்லேன் என்றான்”...”சரி இரு உன் காதலி இந்த வழியாக கடந்து போன பிறகு உனக்கு சொல்கிறேன்” என்றேன்.
அவன் சற்று கோபமாய் “அவளுக்கும் நீ சொல்ல போவதற்கும் என்ன சம்பந்தம்..எங்களுக்குள் எதாவது குழப்பம் செயய்துவிடதே”...எனறான்.




சற்று தொலைவில் அவள் வந்தாள்..அவளோடு சேர்ந்து அவளது நான்கு தோழிகளும் வந்தார்கள்...இதை அவன் பார்த்தவுடன் கொஞ்சம் பரபரப்பானான்...எங்களோடு பேசுவதை நிறுத்தி விட்டு அவளின் மீது பார்வையை செலுத்தினான்.

அவள் இவனை கடக்கும் சமயத்தில் ஒரே ஒருமுறை மட்டும் தலையை நிமிர்ந்து பார்த்துவிட்டு சென்றாள்.

இப்போது கேட்டான்...”சொல் அவள்தான் போய்விட்டாளே..Doppler effect க்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று” ..என்றான் என்னிடம்.


“சரி சொல் அவள் இப்போது உன்னை கடந்து போனாள்..அப்போது உன் இதயம் எப்படி துடித்தது..அல்லது அந்த நேரத்தில் உன் மனது எந்த நிலையில் இருந்தது” என்றேன்...

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”...என்றான்

“நீ முதலில் சொல் அதற்க்கு பிறகு நான் என்னவென்று சொல்கிறேன்” என்றேன்...

“அதை நான் எப்படி சொல்வது” என்றான்.

“சரி நான் கேட்க்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு” என்றேன்.

“அவளை சற்று தூரத்தில் பார்த்தவுடன் உனக்குள் எப்படி இருந்தது? உன் இதயம் எப்படி சாதரணமாக துடித்தாதா? என்ன” என்றேன் அவனிடம்.

“‘ஒ!!!! அதை கேட்கின்றாய? ஆமாம் அது என்னவோ அவளை பார்க்கும்போதே என் இதயம் கொஞ்சம் பதட்டதோடு வேகமாகத்தான் துடிக்கின்றது” என்றான்.

“சரி மீதியை நான் சொல்கிறேன்” என்று நான் அவனிடம் சொல்ல ஆரம்பித்தேன்.

“அவள் சற்று துரத்தில் வரும்போது அவளை பார்த்தவுடன் உன் இதயம் கொஞ்சம் வேகமாக துடிக்க ஆரம்ப்பிக்கும் அப்படித்தானே”...

அதற்க்கு அவன் “ஆமாம்” என்றான்.

“ பின் அவள் உன் அருகில் வரும்போது இன்னும் படபடப்பாக இருக்கும் இன்னும் வேகமாக துடிக்கும்....

ஆமாம் “இது எப்படி உனக்கு தெரியும்..நீதான் யாரயும் காதலிக்கவில்லையே?” என்றான்

“இதற்க்கு கதாலிக்கவேண்டிய அவசியம் இல்லை..காதலைப்பற்றிய கொஞ்ச புரிதலே போதுமானது என்று அவனிடம் சொல்லி தொடர்ந்தேன்.

அவள் எப்போது உன் நேரே கடந்து செல்கின்றளோ அப்போது உன் இதயத்துடிப்பு உச்சத்தில் இருக்குமே..அதுவும் அந்த கடைக்கண் பார்வை பார்க்கும்போது.......


அவள் உன்னை கடந்து போன பிறகு உன் இதயம் அப்படியே மெதுவாக சாந்தியடைந்து படிப்படியாக குறையும்... அப்படித்தானே...என்றேன்..

ஆமாம் இதெல்லாம் சரிதான்,..நீ சொல்லுகின்ற இதுக்கும் நீ சொல்ல வரும் Doppler effect க்கும் என்ன சம்பந்தம் என்றான் . சரி சொல்லுகின்றேன்... ஒலி காற்றில் எப்படி பரவும் என்று உனக்கு தெரியுமா என்றேன். "எப்போதோ படித்தது என்றான்"..தனக்கு தெரியாததை சொல்ல முடியாமல்..


சரி சரி நானே சொல்லுகின்றேன் என்று அவனை சமாதானப்படுத்தி...பொதுவாக ஒலி ஆனது காற்றில் அலையாக(WAVES) பரவும். அப்படி அலையாக பரவும்போது இரண்டு அலைகளுக்கு இடையே உள்ள தூரம் WAVE LENGTH என்று சொல்வார்கள். அந்த இரண்டு ஆலைகளுக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை FREQUENCY என்பார்கள்.இந்த இரண்டும்த்ன் காற்றில் ஒலி பயணிக்க முக்கிய காரணிகள் என்று நான் சொல்லி முடிக்கும் போது அந்த வழியாக சென்ற இரண்டு மாணவிகளை இவன் கண்கொட்டாமல பார்த்துகொண்டு இருந்தான்.


நீ நான் சொல்வதை கேட்கின்றையா? இல்லை வழியில் போறவர்களை பர்க்கின்றையா? என்றேன். சரி சொல்லு சொல்லு என்று என் பக்கம் திரும்பினான்.


இந்த FREQUENCY ன்னு சொல்றங்கல்லா இது கொஞ்சம் அதிகமாக இருந்தால் அந்த நேரத்தில் WAVE LENGTH ஆனது குறைவாக இருக்கும் அதே நேரத்தில் FREQUENCY குறைவாக இருந்தால் WAVE LENGTH அதிகமாக இருக்கும் என்றேன்.

DOPPLER EFFECT என்பது இதுதான்.....ஒலியானது நிலையான இடத்தில இருந்து வெளிப்பட்டால் அது சாதரணமாக சமமாக பரவும் அங்குள்ள காற்றின தன்மைக்கு ஏற்ப.....அதே நேரத்தில் ஒலி வெளிப்படும் இடம் நகர்வதாக இருந்தால் அப்போது WAVE LENGTH ஆனது நகரும் பொருளின் வேகத்தால் முன்னோக்கி தள்ளப்பட்டு அங்கு ஏற்ப்படும் WAVE LENGTH ஆனது மிக நெருக்கமாக இருக்கும்.

ஏற்க்கனவே சொல்லி இருக்கின்றேன் WAVE LENGTH குறைவாக இருந்தால் அது விரைவாக பரவும்...அதே நேரத்தில் WAVE LENGTH அதிகமாக இருந்தால் அது சென்று அடையும் திறன் குறைவாக இருக்கும்..


இதுதான் இங்கு நடக்கின்றது..ஒலி வெளிப்படும் இடம் (CAR) முன்னோக்கி நகர்வதால்... அந்த இடத்தில WAVE LENGTH ஆனது குறைகின்றது அதனால் நகரும் பொருளுக்கு முன்னாடி இருப்பவர் (A) அதில் இருந்து வெளிப்படும் ஒலியை அதிகமாக அல்லது விரைவாக கேட்கமுடியும்..அதே நேரத்தில் அந்த நகரும் பொருளின் பின்னாடி இருப்பவர் (B) அங்கு இருக்கும் அதிக WAVE LEGTH காரணமாக ஒலியை குறைவாக அல்லது மெதுவாக் கேட்கமுடியும். இந்த மற்றதுக்குத்தான் DIOPPLER EFFECT என்று பெயர்.






எல்லோரும் சொல்வது போல சொல்வது என்றால் ஒரு siren பொருத்திய வண்டி உன்னை நோக்கி வருகிறது என்றால் அது முன்னால் இருக்கும் உனக்கு நல்லா கேட்க்கும் ..அதே நேரத்தில் அந்த வண்டிக்கு பின்னால் நான் இருந்தால் உனக்கு கேட்க்கும் அளவை விட எனக்கு குறைவாகவே கேட்கும்...





ஏனென்றால் அந்த வண்டியின் முன் செல்லும் வேகத்தால் அங்கு wave length ஆனது சுருக்கப்படுகின்றது அதனால் முன்னால் இருக்கும் உனக்கு விரைவாக அதிமாக ஒலி கேட்கும்......அதே சமயம் பின்னால் ஏற்ப்படும் அதிக wave length காரணமாக எனக்கு குறைவாக மெதுவாக அந்த ஒலி கேட்க்கும்......இப்படி அந்த வண்டி சற்று தூரத்தில் தொடங்கி உன்னை முழுவதும் கடந்து போகும்போது ஏற்ப்படும் ஒலியின் மாற்றம்தான்..Doppler effect.


இதை சொல்லி முடிக்கும் போது ..அதெல்லாம் சரி இதுக்கும் என் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்றான் வேகமாக.


அந்த வண்டிதான் உன்னை நோக்கிவரும் உன் காதலி...அவளின் பார்வைதான் அந்த ஒலி...இப்போது சொல் அவள் உனக்கு சற்று தொலைவில் வரும்போது உனக்குள் ஏற்ப்பட்ட மாற்றம்..,உன் அருகில் வரும்போது ஏற்பட்ட மாற்றம்.. அவள் உன்னை கடந்து போனபோது உனக்குள் ஏற்ப்பட்ட மாற்றம்..போன்றவைகள்.. மேலே நான் சொன்ன DOPPLER EFFECT உடன் ஒத்துபோகின்றதா இல்லையா? என்றேன்.


அதற்க்கு அவன் என்னை முறைத்தபடியே “ஆமாம்” என்றான்..”இதை சொல்லத்தான் இவ்வளவு அறிவியல் பேசினியா? என்றான்.





“ஆமாம்” என்றேன்.




(இங்கு நான் சொல்லி இருப்பது Doppler effect ஒலியில் எப்படி என்றுதான்..Doppler effect அறிவியல் உலகில் மிக முக்கியமான ஒன்று..இது பொதுவாக எல்லா துறைகளிலும் பயன் படுகின்றது..விண்ணியல் (RED SHIFT & WHITE SHIFT),மருத்துவம்,ராணுவம்..போன்ற துறைகளில்..)



கழுகிற்கா
கணேஷ்

(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)


Friday, September 03, 2010

எங்கே மனிதம்?





கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்கு தக.........என்ற வாசகத்தினை மறந்து போனது மானுடம்...! அடிப்படையில் வாழ்வில் கற்கும் எல்லாமே கல்வி...அந்த அனுபத்தை பின்பற்றாமல்....மனிதம் மிருகமாவதினைப் பற்றி தோழி பிங்க் ரோஸின் கருத்துக்கள் இதோ



மாநகர பேருந்து...
பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள்,அவர்களின் அறிவுக்கண்ணை திறந்து விட்ட ஆசிரியர்கள்,அலுவலகம் சென்று வீடு திரும்பும் பட்டதாரிகள் என நிரம்பி வழிகிறது. ஒரு இளம் தாய்,தோளில் மூன்று மாத சிசுவுடன் கைகளில் சுமக்க மாட்டாத பாரத்துடன் ஏறுகிறார். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஒரு விரக்தியுடன் கால்களுக்கிடையே கை பாரத்தை வைத்து விட்டுகம்பியை ஒற்றைகையாலும் மறு கையால் குழந்தையை பிடித்துக்கொண்டும் பயணிக்கிறார்...



சாலையோரம்...
பைக்கில் சென்றுக்கொண்டிருந்த ஒருவரை ஒரு மூதாட்டி நிறுத்தி ஏதோ கேட்கிறார்.பதிலுக்கு கோபத்துடன் பைக்கில் வந்தவர் ஏதோ சொல்கிறார்.இதற்கிடையே பின்னால் வந்த தண்னீர் லாரிக்காக வழி விட பைக்கை நகர்தியவர் கவனக்குறைவினால் பக்கத்தில் எதற்காகவோ தோண்டிய குழியில் சரிந்து விடுகிறார் அது ஒன்றும் பெரிய பள்ளமல்ல சமாளித்து எழுந்தவர் ஓங்கி அந்த மூதாட்டியின் கன்னங்களில் அறைந்து விட்டு கிளம்பிவிட்டார். ”ஏன் பாட்டி வழில போறவர நிறுத்துனீங?”ன்னு கேட்டதுக்கு அந்த பாட்டி சொன்ன பதில்
“அவன் என் புள்ள தான்ப்பு பாத்து ரொம்ப நாளாச்சேன்னு..”.


பெரிய பதவியில் இருக்கும் கணவனும், சமூக சேவகியான மனைவியும் வசிக்கும் வீடு... பத்து வயது சிறுமிகள் இருவர். பள்ளி செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த ஒருத்திக்கு உதவி செய்துக்கொண்டும்,சிறு பையன் ஒருவனை கண்காணித்துக்கோண்டும் மற்றவள். கணவனிடம் மனைவி”டியர், வேணி நல்ல டைப்பா தெரியுரா அவளுக்கு உடம்பு சுகமில்லைன்னு பொண்ண அனுப்பி வச்சுருக்கா பாருங்கலேன்”....பள்ளிக்கு கிளம்பிய குழந்தை மற்றவளிடம் “ நீ இன்னிக்கு ஸ்கூல் போகலியா?”வென கேட்க, ”ம்ஹூம் அம்மாக்கு முடியல அதான்”னு ஏக்கமாக சொல்கிறது



இது போன்ற நிகழ்வுகளை கடக்கும் போதெல்லாம் ரவுத்திரம் பழகு ரவுத்திரம் பழகுன்னு சொன்ன பாரதிய புற்ந்தள்ளி தெரசாவோட புன்னகையை எடுத்தது தப்போன்னு மனசு நொறுங்கி கூழாங்கல்லாயிடும்.சமூகத்தின் சட்டையைப் பிடித்து உலுக்க வேணுமாய் மனம் சாட்டை சுழற்றும்,

ஆனால் ..
சமூகம் என்பது யார்?
நான் தானே... நானும் என் போன்றவர்களும் தானே...
அப்படியென்றால் நான் என்னைதான் உலுக்க வேண்டுமா ?!
இத்தேடலில் எனக்கு கிடைத்தவைகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்!



உலக உயிரினங்களில் சிறந்தவன் மனிதன் ஏனென்றால் அவனிடம் மட்டுமே பகுத்து ஆராயும் ஆறாம் அறிவு இருக்கிறது.இப்படிதான் நாம நம்மை பெருமையா நினைத்துக்கொள்கிறோம்.ஆனால் அடிப்படையில் இந்த அறிவு ஜீன்களில் இருந்தாலும் அதை சரியான வழியில் வெளிக்கொணர்வது சூழ்நிலையும், வாழ்வியலும்தான்.அதற்காகத்தான்,கல்வி என்ற மாபெரும் புதையல் மனிதனுக்கு கிடைத்திருக்கிறது.



ஒரு தலைமுறையினர் தாம் அறிந்தது ,ஆராய்ந்தது ,தெரிந்தது,தேடியது என வாழ்வியலுக்கு தேவையான அனைத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கின்றனர்.இவ்வாறாகத்தான் கல்வியின் துறைகள் பல்கிப்பெருகியது,மனிதப்பண்புகளை சீராக்கி,அவனது எண்ணங்களை, சிந்தனைகளை சரியான வழியில் இட்டுச் சென்றது கல்வி.

ஆனால் இன்றைய கல்வி...


முதல் வகுப்பில், அறம் செய விரும்பு என சொல்லிக்கொடுக்கிறார்கள்
கற்றுக்கொடுப்பவர்களுக்கு நிர்வாகத்தில் அல்லது தலைமையிடத்தில் “குட்’ வாங்க வேண்டும்.கற்றுக்கொள்பவனுக்கு முழு மதிப்பெண் பெற்று பெற்றோரிடமும் ,ஆசிரியர்களிடமும் குட் வாங்க வேண்டும்.
அதற்காக அழகாக உச்சரிக்க, பிழையில்லாமல் எழுத என பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது


வெறும் அழகாக உச்சரிக்கவும், பிழையில்லாமல் எழுதவும், குட் வாங்கவும் மட்டும் தானா இவை?
புரிந்துக்கொள்ளவும், புரிந்ததை தம் வாழ்வில் பதித்து செம்மையாக்கவும் இல்லையா?
கல்வியின் நோக்கமே, அதைக் கற்று, அதன் படி செயல்பட்டு, தன்னால் இயன்றளவு பிறருக்கும் கற்றுக்கொடுத்து, ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குதல் தானே. முதல் வகுப்பில் ஆத்திச்சூடி என ஆரம்பித்து போகப்போக எத்தனையோ நல்ல நல்ல் வாழ்வியல் தத்துவங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் அவையெல்லம் வெறும் மதிப்பெண்ணுக்காக என்றாகி விட்டது.



கேட்டால் இது போட்டிகள் நிறைந்த உலகம் என்று பதில் சொல்லப்படுகிறது. அறிவியல் வளர்ச்சி நம்மை இப்படி ஆக்கி விட்டதொ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகெளெல்லாம் மங்கி தக்கன தப்பிப் பிழைக்கும் என்ற டார்வினிஸம் அல்லவா நம்மில் பதிந்து விட்டது. நகம் வெட்டும் நகவெட்டி விரலையும் சேர்த்து வெட்டிக்கொண்டிருக்கிறதோ?! எதிர் வருபவற்றை ஏறி மிதித்து ஓடும் ஓட்டத்தில் நாம் மனிதத்தை அல்லவா குழி தோண்டி புதைத்துக்கொண்டிருக்கிறோம்...




போகட்டும் இது வரை எப்படியோ இனிமேலாவது விழித்துக்கொள்வோம் நண்பர்களே!
இல்லையெனில், அதோ அந்த இளம்தாய்க்கு ஏற்பட்ட விரக்தி, அம்மூதாட்டிகு ஏற்பட்ட வேதனை, அக்குழந்தைக்கு ஏற்பட்ட ஏக்கம்
ஒட்டுமொத்த சமூகத்தின் புற்றாகி விடும். இப்புற்று இருக்கும் கொஞ்ச நஞ்ச மனிதத்தயும் தின்ற,சமூகத்தை சவக்காடாக்கும் முன் விழித்துக்கொள்வோம் தோழர்களே.


ஏழிலிருந்து பதினைந்து வயதிற்குள் ஒருவனில் விழும் எண்ணங்களின் விளைவுகளாய்த்தான் பெரும்பாலும் அவனது எஞ்சிய வாழ்விருக்கும் என்றிருக்கிறார்கள்.எனவே தான் நாம் இந்த கால கட்டத்தை கல்விகூடங்களில் செலவழிக்கிறோம்.எனவே



கற்பிக்கும் பொழுதும் நாம்மொழிப்பாட இலக்கியங்களின் நல்ல நல்ல கருத்துக்களை உள்வாங்கப் பழகுவோம்; அறிவியலின் ஆக்கங்களை ஈர்த்து,அழிவுகளை புறந்தள்ளப்பழகுவோம்; வரலாறுகளில் வெற்றிக்கும்,வீழ்சிக்குமான காரணங்களை நம் வாழ்வோடும் பொறுத்திப் பார்க்கப் பழகுவோம்;.




இது ஆரோக்கியமான மனிதப்பண்புகளை உருவாக்கலாம்
இப்பண்புகள் செழுமையான சமூகத்தை உருவாக்கலாம்
இச்சமூகம் வலிமை மிகு நாடுகளை உருவாக்கலாம்
உலகம் முழுதும் இப்படிப்பட்ட வலிமைமிகு நாடுகளாய் இருக்க வேண்டுமென்ற பிராத்தனையுடன்



கழுகிற்கா
பிங்கி ரோஸ்



(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)

Thursday, September 02, 2010

காந்திய சிந்தனை வெல்லுமா?




சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும்
காந்திதாத்தானு சொல்லும் ஆனா...அவரின் சிந்தனைகள் என்ன என்பது இன்றையநிலையில் மிகைப்பட்ட பேருக்கு தெரியாது. காந்திய சிந்தனையில் முதுகலை பட்டம் பெற நண்பர் வசந்த் உங்க உறவுக்காரன் என்ற பெயரில் வலைப்பூ நடத்தி வருகிறார்...காந்திய சிந்தனைகள் பற்றி வசந்த் என்ன சொல்கிறார்.... இதோ...


காந்தியின் சிந்தனைகள் எல்லாம் நடைமுறை சாத்தியம் அற்றது; பயனற்றது; அவையெல்லாம் பழுப்பேறிய பக்கங்களை கொண்டபடி புத்தக வடிவில் மட்டுமே நூலகங்களில் தூசி படிந்து இருக்க வேண்டியவையே அன்றி வாழ்க்கைக்கு உபயோகப்படாது; இப்படி தானே நிறைய மக்கள் சொல்லி கொண்டு திரிந்துகொண்டிருக்கிறோம்.



இன்றைய சூழ்நிலை என்ன? நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள் 626. அதில் நக்ஸலைட் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் காணபடும் மாவட்டங்கள் 220. வன்முறை நிகழ்வுகள் வளர்ந்து கொண்டே போகின்றன.

கையறு நிலையில் மக்கள்! பட்டினி சாவுகள், விவசாயம் நொடித்து போனதால்,
விவசாயிகளின் தற்கொலைகள்! வறுமையை விரட்ட, பெற்ற மகள்களையே விபச்சார வியபாரிகளுக்கு விற்கும் கொடுமை! இரத்தம், சிறுநீரகம் என்று தன் அங்கங்களையே பணத்துக்காக விற்க வேண்டிய சூழ்நிலை! ஊர் விட்டு ஊர்; மாநிலம் விட்டு மாநிலம்; நாடு விட்டு நாடு என்று வேலைக்காக அலையும் அவலம்.


ஒரு இடத்தில் செல்வம் குவிவதும், மற்ற இடங்களில் எல்லாம் வறண்டிருப்பதும்! என்ன ஒரு ஜனநாயக நாடு! சுதந்திரத்திற்க்காக எத்தனை எத்தனை இன்னல்களை தாங்கி கொண்ட பாடுபட்டனர் நம் தேச தியாகிகள். அவர்கள் இந்த இழிநிலையை, நம் தேசம் அடவதை தான் காண கனவு கண்டனரா?

சரி காந்தியின் சிந்தனைகள் என்று சொல்கிறாயே, அவைகள் என்ன?

1 கிராமிய பொருளாதாரம்


2 தொழில்களில் தர்மகத்தா முறை


கிராமிய பொருளாதாரம்

இன்றும் கூட பெரும்பான்மை இந்தியா கிராமங்களில் தான் வாழ்கின்றது. ஆனால் அந்த பெரும்பான்மையினரின் வாழ்க்கை தள்ளாட்டம் நிறைந்ததாக உள்ளது. தன்னம்பிக்கை அற்று, பயமும் பீதியுடன், ஒவ்வொரு நாளும் நாளை கழிப்பதே பெரும் பாடாக உள்ளது. வருமை அவர்களின் வாழ்க்கையை விட்டு அகலாது உடன் இருந்தே கொல்லும் நோயாக உள்ளது

பின் மதிப்பு கூட்டி பல மடங்கு விலைக்கு விற்கபடுகிறது. விவசாயி நெல்லை
விற்கும்போது கிலோ ஒன்றுக்கு, 2 அல்லது 3 ரூபாய்க்கு விற்கிறான். ஆனால் அது அரிசியாகி சந்தைக்கு வரும்போது கிலோ 35, 40 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

கூடி வாழ்வோம் என்கின்ற சிந்தனை இல்லை. காந்தி சொன்னது கிராமங்களை வலுசேர்க்க வேண்டும் என்பது. கிராம சுயராஜ்ஜியம் என்பதே அவரின் மந்திர சொல்லாக இருந்தது


அவர் சொல்லுவது, இயந்திரமயம் என்பது மனித சமூகத்திற்கு சாபகேடு. இயந்திரமயம் இருக்குமானால், பொருட்களின் பெருக்கத்தால், அவைகளை சந்தைபடுத்துவதற்காக, பல நாடுகளின் சந்தைகளை அழிக்க வேண்டிய நிலை தான் வரும் என்பது தான்


உழைக்க கைகள் இருக்கிறது, பாடுபட நிலவளமும் நீர்வளமும் இருக்கிறது. ஆனால், அவர்கள் குழுக்களாக இயங்க ஒரு கட்டமைப்பு வசதியும், சிறிது முதலீடும், இல்லாமல் இருக்கிறது. 63 வருட காலமாக இந்த வசதிகளை செய்து கொடுக்க தவறிவிட்டதன் விளைவே மேற்சொன்ன பல அவலங்களுக்கும் காரணம்


பெரிய பெரிய தொழிற்சாலைகள், நிறுவணங்கள் என்று, பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து ஆரம்பிக்கபடுகின்றன. அவைகளில் எத்தனை பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க படுகிறது என்று பார்த்தால் நகைப்புக்கும் திகைப்புக்கும் உரிய செய்தியாக் இருக்கிறது. சில நூறு பேர் அல்லது சில ஆயிரம் பேர்கள் என்று சொற்ப எண்ணிக்கையிலேயே வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.


ஆனால் கிராமங்களில் சில கோடி ரூபாய்களை கொண்டே பல ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பினை நல்கிட முடியும். சிறு குறுந்தொழில்கள், குடிசை தொழில்கள், மனித வளம் அதிகம் பயன்படும் தொழில்களென்று பார்த்து பார்த்து ஊக்கபடுத்த தவறிவிட்டனரே.இதை தான் காந்திய சிந்தனை சொன்னது. கேட்டார்களா அதிகாரத்தில் இருந்தோர்?


தொழில்களில் தர்மகத்தா முறை

இதில் தர்மகத்தாவாக முதலாளி இருப்பார். முதலாளிகள் தங்களின் தாழ்ந்த குணங்களான பேராசை, பொருள்பற்றை விட்டு அவரும் தொழிலாளர்களோடு, தோளோடு தோள் கொடுத்து செயல்படும் ஒரு உயர்ந்த ஆன்மீக நிலை.


இது கற்பனைக்கும் அப்பாற்பட்டது; நடைமுறையில் சாத்திய படாதது என்று சொல்வோர், நமது நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியை சிறிது திரும்பி பார்க்க வேண்டும். விலங்கோடு விலங்காக மனிதன் வாழ்ந்தான். அவனிடம் நீதி, நேர்மை எல்லாம் கிடையாது. விலங்குகள் தம்முள் என்ன நீதி நேர்மை கடைபிடித்தனவோ, அதை தான் அவனும் கடைபிடித்தான்


ஆனால் மெல்ல மெல்ல விலங்கு நிலையில் இருந்து மாறி, மனிதன் நாகரீக பாதையில் அடியெடுத்து செல்ல செல்ல, வலுபெற்றவன் வலுவற்றவனை துன்பபடுத்த கூடாது, அவனின் சுதந்திரம் பறிக்கபட கூடாது, அவனுக்கும் வாழும் உரிமை உண்டு என்கின்ற உயர்ந்த ஒரு நிலைக்கு வந்தான். இந்த வரலாற்றை கொண்டு பார்க்கும் போது, காந்தியின் தர்மகத்தா முறையை கூட செயல்படுத்தி இருந்திருக்க முடியும். அது உலகத்திற்கே புதுமையான ஒரு நாகரீகமாக இருந்திருக்கும்.


சில தொண்டு நிறுவனங்களில் இந்த அன்பு பிணைப்பு கொண்டு செயல்படும் நிலையை நான் கண்கூடாக பார்த்திருக்கின்றேன். அந்த நாகரீகம் எல்லா இடங்களிலும் பரவி இருக்குமானால் ஒட்டுமொத்தம் இந்தியாவே சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி இருந்திருக்க முடியுமே!


இப்போது சொல்லுங்கள்! காந்திய சிந்தனைகள் - குறிப்பாக அவரின் பொருளாதர
சிந்தனைகள், உண்மையான விடுதலையை மனித குலத்திற்கு நல்கி இருக்குமா, இருக்காதா?

அவரின் சிந்தனைகள் நிறைய இருக்கிறது. அவைகள் எல்லாம் மனிதனை தெயவ நிலைக்கு கொண்டு செல்லும் உயர்வு நிலையாகும். கழுகு திரும்பவும் சந்தர்ப்பம் கொடுக்குமானால் அவைகளை பற்றியும் எழுதுகின்றேன்.


கழுகிற்காக
என்னது நானு யாரா?
(கழுகு இன்னும் ....உயர பறக்கும்).




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes