தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளால் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை மட்டுமே பெரும்பான்மையான மனிதர்கள் கவனத்தில் கொள்கிறார்கள். ஒரு அரசு ஆட்சி நடத்தும் போது அறிவிக்கும் திட்டங்களையும், அவர்களின் வரவு செலவு கணக்கு திட்டங்களையும் பற்றி அதிக சிரத்தை எடுத்துக் கொள்வது கிடையாது...என்பது நிதர்சனமான உண்மை.
அரசினால் அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு பொருளாதர மண்டல திட்டத்தைப் பற்றிய கழுகின் கண்ணோட்டம் இதோ..
சிறப்பு பொருளாதார மண்டலம் (Special Economic Zone) என்ற திட்டம் முதன் முதலில் அறிவிக்கப்பட்ட போது, என்னவோ காதில் தேன் வந்து பாய்வது போல் இருந்தாலும், அதனால் யாரெல்லாம் பயன்பெறுகிறார்கள் என்றால்.. உறுதியாக நம்ம கிராமத்துக் குப்புசாமியோ இல்லை குருவம்மாளோ இல்லை. இம்மக்கள் அனைவரும் நிலவரி, வீட்டுவரி, VAT.. என சகல வரிகளும் கட்ட வேண்டுமாம்…. ஆனால் குறைந்த விலைக்கு நிலங்களைக் கையகப் படுத்திக் கொண்டு, அதில் 25 சதவீகிதம் மட்டும் தொழில் சார்ந்தவைக்கும், 50 சதவீகிதம் நிலத்தைப் பெரிய பெரிய அளவில் அடுக்குமாடிக்கட்டிடங்களைக் கட்டி கொள்ளை லாபம் பெறும் பெரிய நிறுவனங்களுக்கு அநியாயமான வரிவிலக்குகள்.. என்ன கொடுமை இது..
இவர்களுக்கு முதல் 5 வருடங்களுக்கு சகல விதமான வரிவிலக்குகள்… உதாரணமாக உற்பத்தி வரி, ஏற்றுமதி இறக்குமதி வரி, கலால் வரி, குறைந்த மின்சாரக் கட்டணம், குறைந்த விலையில் நிலங்கள்... அதில் விவசாய நிலங்களும் அடக்கம். கேட்டால் தொழில்வளம் பெருக்குவதற்கும் அந்நிய முதலீட்டை இங்கே கொண்டுவருவதற்கும், உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கும் என்று கூறினார்கள்.. ஆனால் நடந்தது என்ன? அறிவித்ததில் ஐந்தில் ஒரு பங்கு கூட இவர்கள் வேலை வாய்ப்பை அளிக்கவில்லை… சிறந்த உதாரணம் கேரளாவில் உள்ள SEZ. இது பெரிய ஏமாற்றம்... ஏனென்றால் இவர்கள் அடிப்படை நோக்கம் இதுவல்லவே… எம் தேசத்து மக்களிடமிருந்து 1000 ரூபாய்க்கு எமது நிலங்களை வாங்கி விட்டு ஐம்பது லட்சமாக மாற்றும் உங்கள் வியாபார தந்திரங்களைக் கூட யாம் குறை கூற வில்லை… ஆனால் எமது கேள்விகள் எல்லாம் வீட்டு வரி, நில வரி VAT என்று சகலமும் எங்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளும் அரசே… ஏன் எம் கிராமத்து பட்டதாரி இளைஞன் சுயதொழில் தொடங்க சலுகைகளும் வழிவகைகளும் செய்யக்கூடாது? அப்படியே தொடங்க வேண்டும் என்றால் அதற்கு வழி இல்லை இங்கு.. ஆயிரத்தெட்டு தடைகள்… வங்கியில்கடன் வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது…
சிறப்பு பொருளாதார மண்டலம் மூலமாக வேலைவாய்ப்புகள் யாருக்கு இங்கே கிடைக்கின்றன என்று பார்த்தோமானால் பெரும்பாலும் அதிகம் படித்தவர்களுக்கே… நல்லது தான்… ஆனால் நம் நாட்டில் இருக்கும் மக்கள் தொகையின் படி பார்த்தோமானால் யாருக்கு உண்மையிலேயே வேலைவாய்ப்பைப் பெருக்கி கொடுத்தால் சமநிலையில் நாடு முன்னேறும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை…
கிராமங்களில் அடித்தட்டில் வாழும் மக்களுக்கே தேவை அதிகமாயிருக்கிறது… ஏனென்றால் இந்தியா அநேக கிராமங்களைக் கொண்ட நாடு… இந்த வகையான மக்களின் சதவீதமே அதிகம்.. அதனால் அரசு ஏன் டாஸ்மாக் கடைகள் நடத்துவது போல் உணவகங்கள் போன்ற சில தொழில்களை அனேக இடங்களில் திறந்து இளைஞர்களுக்கு அதை நடத்துவதற்கு அனுமதியும் அளித்து லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கினை அரசுக்கும் செலுத்துமாறும்… இவர்களுக்கு சிற்சில வரிச்சலுகைகளும் கொடுத்தால் தேசத்தின் வேர்களான இவர்களில் அநேகருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்குமே… இதை விடுத்து ஏற்கனவே கொள்ளை லாபம் பெறும் பணக்கார கம்பெனிகளுக்கு ஏன் இத்தனை வரிச்சலுகைகள் என்ற இலவசங்கள்…
ஆம் மக்களே…. வாக்குறுதிகள் என்ற பெயரில் அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசங்களை எதிர்க்கும் நாம், நம் கண் எதிரே நம் நிலங்களையும் சூரையாடி…. விளை நிலங்களாய் இருந்த எம் வாழ்வாதரங்களையும் பறித்துக் கொண்டு அந்நிலங்களையே பாலிஸ் போட்டு ரியல் எஸ்டேட் என்ற பெயரில் மறுபடியும் எம்மிடமே… கொண்டு வந்து கொடுக்கும் கொடுமைகளையும் அவர்களுக்கு இந்த அரசு அளிக்கும் வரிச்சலுகைகள் என்ற இலவசங்களை நாம் எதிர்க்க வேண்டும்….
இவர்களுக்கு தடையில்லா மின்சாரமாம்… ஆனால் சிறு தொழில்கள் எனப்படும் எம்மவர்கள் நடத்தும் சிறு கம்பெனிகளுக்கு.. அடிக்கடி மின்தட்டுப்பாடு… ஏன் சரியான சாலை வசதிகள் கூட இருப்பதில்லை… உதாரணம் அம்பத்தூர்… பாருங்கள் எப்படி ஒரு முரண் நிகழ்கிறது இங்கே…எம் மக்களின் நிலங்களைப் பெறும் பொழுது அவர்களுக்கு சந்தையின் விலையைப் போல் அன்றி மேற்கு வங்கத்தில் இருப்பது போல் 152 சதவீகிதம் விலை நிர்ணயிக்க வேண்டும்… அவர்களுக்கு மாற்று நிலங்களும்…. அவர்கள் கல்வி அறிவுக்கு ஏற்றவாரு வேலையும் கொடுக்க வேண்டும்… இல்லையென்றால் சீனாவில் இருப்பது போல் இவர்களைப் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும்…
ஆனால் இங்கு நிலைமை தலைகீழ்…. இந்த SEZ ஐ மாநில அரசும் கட்டுப்படுத்த முடியாதாம்… தொழிலாளர் நலன் என்பதைப் பற்றி எல்லாம் பேசவே முடிவதில்லை…. ஜனநாயக நாட்டுக்குள் இப்படி ஒரு நிலை… இறுதியாக எம் ஆதங்கம் எல்லாம்… அரசே…. எம் கிராமத்து இளைஞனுக்கு தொழில் வாய்ப்பை அதிகமாக ஏற்படுத்திக் கொடு… பட்டதாரி இளைஞர்கள் தொழில் துவங்க வங்கியில் லோன்களும், சலுகைகளும் வரிவிலக்குகளும் கொடுங்கள்… தேவை உள்ளவனுக்கு கொடுப்பதை விட்டு விட்டு பணக்காரர்களையே மேலும் மேலும் பணக்காரர்களாய் ஏற்றி விட்டால் இந்தியா வல்லரசாகி விடுமா?... மிகப்பெரிய மனிதவளம் உள்ள நாட்டில் அத்தனை மனித வளத்தையும் முறையான வழியில் பயன்படுத்துவதே உண்மையான தேசநலனாக அமையும்.
கழுகிற்காக
மகேஷ்வரி
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
7 comments:
மிகச் சரியாக சொன்னீர்கள். மேல் நாட்டு கம்பெனிகளில் தொழிலாளர் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. கிடைத்தவரை இலாபம் என்ற நிலையிலேயே இரு சாராரும் (முதலாளி, தொழிலாளி) செயல்படுகிறார்கள்.
நல்ல பதிவு.
இந்த தொழிற்சாலைகள் அந்த சலுகை காலம் முடிந்தவுடன் போட்டு விட்டு ஓடி விடுவார்கள். பாண்டிச்சேரியில் அப்படித்தான் நடக்கிறது.
சிறு தொழில்கள் வந்தால் தான் நடுத்தர ஊர்கள் முன்னேறும். மக்களிடமும் பணப்புழக்கம் இருக்கும்.
நன்றி.
சிறப்பு பொருளாதார மண்டலங்களால் நன்மையும் உண்டு :-) திருப்பூரில் கட்டப்பட்டுள்ள நேதாஜி பின்னலாடை பூங்காவில் அநேகம் பேர் பயனடைகின்றனர் தொலிழாளியாக :-) ஆனால் உண்மையில் அதிக அளவில் பயனடைவது பெரும் பணக்காரர்களே.
முக்கியமாக வரிவிலக்குகள் குறைக்கப்படவேண்டும் என்பது உண்மை . ஆனால் சுயதொழில் தொடங்குவோருக்கு வட்டி விகிதத்தைக் குறைத்துக் கொடுக்கும் திட்டங்களும் உள்ளன :-)
இந்த வருட மத்திய அரசின் பட்ஜட்ல இந்த மாதிரியான தொழில்களுக்கு ஒரு லட்சம்கோடி வரைக்கும் வரிச்சலுகை கொடுத்திருக்காங்க. அத்தனையும் மிகப்பெரும் தொழில் நிறுவனங்களுக்கு போய்ச்சேரப்போகுது. சாமனியனுக்கு ஒரு பயணும் இல்ல.
பன்னாட்டு நிறுவனங்கள் நமது அரசாங்கத்தை நன்றாக ஏமாற்றுகின்றன... உதாரணம் சென்னையில் உள்ள MEPZ( Madras Export Processing Zone)- ஐ எடுத்துக்கொள்வோம்.... இங்கு உள்ள நிறுவனங்களுக்கு வரிவிலக்கு..தடையில்லா மின்சாரம் போன்ற வசதிகள் உண்டு..ஆனால் ஒரு நிறுவனம் இரண்டு வருடங்களுக்குமேல் இருப்பதில்லை... காரணம் நட்டமல்ல.. ஒரே முதலாளி இன்னொரு நட்ட கணக்கு காண்பித்து இன்னொரு நிறுவனத்திடம் விற்றதாக கணக்கு காட்டி( ஆனால் ஒரே நிறுவனம் வேரு பெயரில் வாங்கும்) அரசாங்கத்திடம் வாங்கிய கடனையும் கட்டாமல்.. புது நிறுவனம் பெயரில் புதிதாக வேரு வாங்குவார்கள்.. இதற்க்கு அதிகாரிகளும் உடந்தை.. அங்கு சிலகாலம் வேலை பார்த்த காரணத்தால் எனக்கு இது தெரிய வந்தது! இந்த மோசடி இன்னும் தொடருவதுதான் சோகம்!
நல்ல விழிப்புணர்வு பதிவு..!! :)
மகேஸ்வரி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. உண்மைகளை எடுத்து வைத்திருக்கிறீர்கள்.
Post a Comment