ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்க கூடிய இடமாக இருப்பவை பள்ளிகள். வளர்ந்து வரும் நாளைய தேசத்தின் எதிர்காலங்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் கல்வி முறை எப்படி இருக்கவேண்டும்? என்ன மாதிரியான முரண்கள் இருக்கின்றன? என்பது பற்றி யாருக்கும் அதீத அக்கறை கொள்வது இல்லை.
உலகின் எல்லா பிரச்சினைகளையும் அலசும் அரசியல்வாதிகளும் பொது நல விரும்பிகளும், பெற்றோர்களும், கல்வி முறையைப் பற்றியும், பள்ளிப் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் பாடத் திட்டங்கள் பற்றியும் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். எது சரியான கல்வியாயிருக்கலாம் என்று நாம் யோசித்த போது ஜனித்த கட்டுரையை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.
கற்பதன் நோக்கமும், தேவையும் வேறு வகையான ஒரு நோக்கத்தை நோக்கி போவதாகவே எனக்கு படுகிறது. என்னை சுற்றிலும் உள்ள மாணவர்களின் அறிவுத்திறன் வெறும் மனப்பாடம் என்ற வகையாலேயே அமைந்திருப்பதாக தோன்றுகிறது. இரண்டு வயது குழந்தை ‘அ’, ‘ஆ’ எல்லாம் சரியாக சொல்கிறது என்பதற்காக சந்தோசப்படும் பெற்றோர்களுக்கு குழந்தையின் சுட்டித்தனத்தையோ, குழந்தைத்தனத்தையோ ரசிக்கும் மனோபாவங்கள் போய்விட்டதாகவே கருதுகிறேன். ஏனெனில் கல்வி சம்பந்தமான ‘டேலன்ட்’ மட்டுமே பல பெற்றோர்களுக்கு பிரதானமாக போய்விட்டது.
கல்வி கற்பதன் நோக்கம், அதன் பயன், கற்க வேண்டிய காரணம், கல்லாமல் போவதன் பலன், மற்றும் எது கல்வி என்றதொரு ஆழமான பார்வை நமக்கு தேவைப்படுகிறது. இஸ்லாமியர்கள் எந்த அளவிற்கு கல்வியில் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ளும் ஆற்றல் கூட அவர்களுக்கு இல்லை. கல்வியின் உண்மை முகமும், செயலும் எல்லா சமூகத்தாலும் சரியாக, புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் இக்காலத்தில் குழப்பத்தில் இ°லாமியர்களின் கல்வி குறித்த பார்வை இன்றும் மோசமடைந்திருப்பதில் வியப்பில்லை.
கல்வியின் ‘மொத்தத்’தையும் அலசமுடியாத சூழ்நிலையில் நமக்கு தோன்றுகின்ற கருத்துக்களை, கல்வியின் பயன்களை அறியும் ஆவல் இருப்பவர்களிடம் கொண்டு சேர்த்தல் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாக கருதுகிறேன்.
குழந்தைகளை இரண்டு வயதிற்கு பிறகு ஏதேனும் பாலர் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். வீட்டில் இருப்போரும் (பெற்றோர்கள்தான்) ஏதோ தங்களால் முடிந்த அளவிற்கு தங்கள் குழந்தைகள் எல்லாவற்றையும் சீக்கிரமே கற்றுதேர்ந்துவிட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார்கள். அவ்வாறான அந்த எல்லா திறமைகளையும் கொண்டு பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கத்தான் உபயோகப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஏனெனில் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் இன்றைய சமுதாயத்தின் முக்கியமான குறிக்கோளாகவும், முதன்மை திறமையாகவும் கருதப்படுகிறது. (பணம் என்ற ஒன்று எல்லா சமூகத்தாலும் எந்த அளவிற்கு மற்ற எல்லாத் தகுதிகளையும் விட முக்கியத் தகுதியாக ஒருவனிடம் எதிர்பார்க்கிறது என்பதை பற்றி தனி கட்டுரையே வரையலாம். வகுப்புகள் மாறுகின்றன, பதினைந்து இருபது வருடங்கள் கழித்து நல்ல மதிப்பெண்களுடன், பட்டத்துடன் வெளிவரும் ஒரு மனிதன் நல்லதொரு வேலையை தேடிக்கொண்டு, கல்யாணம் செய்து கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டு, மீண்டும் தன் குழந்தையை பாலர் பள்ளியில் சேர்த்து, என மீண்டும் ஒரு வாழ்க்கை சக்கரம் ஆரம்பிக்கிறது. கல்வி என்ற ஒன்று பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே என்று மனிதனை சுற்றமும் சூழலும் சேர்ந்து நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கட்டாயப்படுத்துகிறது
பத்தாம் வகுப்பில் 80 சதவீதம், 12ம் வகுப்பில் 90 சதவீதம், பட்டப்படிப்பில் 80 சதவீதம் என்று ஒருவன் எடுத்தால் அவனை “கற்றுத் தேர்ந்தான்” என்று கற்றறிந்தவர்கள் முதற்கொண்டு கருதுகிறார்கள். வாழ்கின்ற இடைப்பட்ட காலங்களில் பருவத்திற்கேற்ற வாழ்க்கை முறையில் சரியாக வாழ்வதென்பது எது என்ற சிந்தனையோ, திறனோ அவன் கற்ற பள்ளிக்கூட கல்வியில் இருக்காது. அனுபவம் மற்றும் மற்றவர்களின் அறிவுரையும் சார்ந்த வாழ்வியல் பாடங்கள்தான் இந்த விஷயத்திற்கு உதவும். மேலே கூறிய வழிமுறைகள் தவறு எனில், எது சரி?
கணிதபாடத்தில் 5ம், 5ம் பெருக்கல் செய்து விடை காண்பது எப்படி என்று சொல்லித்தரப்படும். ஆனால் பரீட்சையில் 4கையும், 4கையும் பெருக்கினால் என்ன விடை வருமென்று கேட்கும்பொழுது, இது எனக்கு சொல்லித் தரப்படவில்லை என்று ஒரு மாணவன் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? யாருடைய குறை இது? மாணவனா? ஆசிரியரா? கல்விமுறையா? தர்க்கரீதியாக (logic) யோசிக்கும் மனோபாவம் இருந்தால் மட்டுமே சிலவற்றை படித்து பலவற்றுக்கு விடை காணும் திறன் நமக்கு கிடைக்கும்.இந்திய வரலாற்றை சொல்லித் தரும் ஆசிரியர்கள்*(அல்லது கல்விமுறை) மன்னர்களின் பெயரையும், சம்பவங்களின் வருசங்களையும் வேகமாக சொல்லித் தந்து அதையே விடைத்தாள்களில் பிரதிபலித்தால் போதும் என்று ஆசுவாசம் கொள்கிறார்கள். மொகலாய மன்னர்களின் ஆட்சியால் இன்றைக்கு நமது நாட்டில் என்னென்ன பின் விளைவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை பற்றியோ, அந்த விளைவுகளின் நன்மை தீமை பற்றியோ முக்கியமாக கருதாமல் (BA வரலாற்று பாடங்களில் அதுபற்றி வரும், MA வரலாற்று பாடங்களில் இருக்காது) அக்பர் தொடங்கிய தீன் இலாஹி என்னும் கோட்பாடை தொடங்கினார், அது காலப்போக்கில் அழிந்தது” என்று சொல்லித் தருவதில் என்ன பயன்? ஒரு வேளை அந்த வரலாறு மூலம் பயன் உண்டு என்று வாதிட்டாலும் அதனைவிட முக்கியமாக, சமகாலத்திற்கு தேவையான வரலாற்றை சொல்லி கொடுக்கலாமே?!
3ம் வகுப்பிலேயே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கமுடியுமா என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி, பத்தாம் வகுப்பு வரையிலும் கூட மேலோட்டமான வரலாற்று பாடங்கள் தான் வருகின்றது. அப்படியென்றால் வரலாற்று பாடத்தின் தேவை இன்றைய உலகிற்கு தேவையில்லையா என்பதல்ல நமது வாதம். அறிவியலாகாட்டும், கணிதமாகட்டும் எல்லாவற்றிலும் இதே மாதிரியான பிரச்சனையே இருக்கிறது. வரலாற்று மாணவன் என்ற வகையில் அதிலிருந்து உதாரணம் காட்டினேன்.
எஎது சரியான கல்விமுறை என்று தீர்வு சொல்வதற்காகவோ இதுதான் சரி என்று வாதிடுவதற்காகவோ எழுதப்பட்ட கட்டுரையல்ல இது. பலதரப்பட்ட கண்ணோட்டங்களின் தொகுப்பிலிருந்து உருவாக்கப்படும் ஒரு சட்டம் அல்லது விதி (RULE) பொதுவில் அதிக நன்மை பயக்கும் என்ற நோக்கிலேயே இதை பார்க்க வேண்டும். அது போன்ற கண்ணோட்டங்களில் ஒரு வகையே இது என இக்கட்டுரை பார்க்கப்பட வேண்டும்.மனப்பாடம் செய்த மாணவர்களே ஆரம்ப கல்வியில் (தோராயமாக 12ம் வகுப்பு வரை) அதிக மதிப்பெண் எடுப்பவர்களாகவும், ஏன் புத்திசாலிகளாககவும் கூட இச்சமூக அமைப்பால் கருதப்படுகிறார்கள். அவ்வாறாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடங்களில் தேறிய பல மாணவர்கள் Entrance exam எனப்படும் நுழைவுத் தேர்வில் அதே திறமையை காட்டமுடியவில்லை., காரணம், நுழைவுத் தேர்வில் பாடத்தில் உள்ளது போல் அப்படியே கேட்கமாட்டார்கள். அது மட்டுமல்ல, மேற்கூறிய தேர்வுகளில் பெண்கள் அதிக மதிப்பெண்களும், தேர்ச்சி விகிதாசாரங்களும் பெற்றிருப்பார்கள். ஆனால் நுழைவுத் தேர்வு என்று வரும்பொழுது பெண்களின் மனப்பாட திறமை அங்கு அதே அளவு எடுப்படாமல் போவதை நாம் அறிவோம்
தண்ணீரின் அறிவியல் குறியீடு (H2O) என்று சொல்லி கொடுத்திருப்பார்கள். ஆனால் நீராவியின் அறிவியல் குறியீடு என்னவென்று கேட்கப்படும் பொழுது, மாணவர்கள் கேள்வி கேட்ட ஆசிரியரை கோபித்து கொள்ள கூடும். காரணம், தண்ணீருக்கு சொல்லிக் கொடுத்தார்களே அன்றி நீராவிக்கு என்ன குறியீடு வரும் என்பதை சொல்லித் தரவில்லையென்பார்கள். ஏனெனில் ஏற்கனவே சொன்னதுபோல் தர்க்கரீதியாக (logical) சிந்திக்கும் திறமை நமது கல்விமுறையில் இல்லை என்பதே நமது வருத்தம். (நீராவி தண்ணீரிலிருந்து ஆவியாவது என்பதனால் அதற்கும் H2O) தான்).
கடந்த பத்து பதினைந்து வருடங்களில் கல்வியில் CBSE, மெட்ரிகுலேஷன், மற்றும் ஸ்டேட் போர்டு கல்விமுறை என்று பல வகை அடிப்படை கல்வி முறைகள் நன்கு மக்களிடையே நன்கு பரிச்சியமாயிற்று. நமது பிள்ளைகளை அவரவர் பண வசதிக்கேற்ப (கவனிக்கவும், இங்கும் பணம்தான் ஒரு மாணவனின் கல்விமுறையை தேர்ந்தெடுக்க வைக்கிறது) ஏதேனும் ஒரு கல்விமுறையில் ஆரம்ப கல்வியை படித்துமுடித்து, கல்லூரியில் நுழைகின்ற இருவர் ஒருவருக்கொருவர் தாங்கள் கற்ற ஆரம்ப கல்வி முறையால், அடிப்படை அறிவுத்திறனில் வித்தியாசப்படுகிறார்கள். எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான திறமை இருக்க முடியாததுதான், ஆனால்CBSE யில் படித்த மாணவனுக்கும் state board எனப்படும், மாநில கல்வித்துறையில் படித்த மாணவனுக்கும் அவர்களது அடிப்படை அறிவுத்திறனில் உயர்வு தாழ்வு இருக்கத்தான் செய்கிறது.
குறைந்த கட்டணத்தில் கற்றுத்தரப்படும் பள்ளிக்கூடங்களும், அந்த பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் கல்விமுறையும் ஒரு அறிவுத்திறன் குறைந்த மாணவனையே உருவாக்க முடியும் என்ற நிலை யாரால், எதனால், எப்படி வந்தது என்ற சிந்தனையும் அதற்குரிய தீர்வும்தான் சிறந்த கல்விமுறையை உருவாக்கி தரமுடியும்.வகுப்பறைகளின் தரமும், உடைகளின் தரமும் ஆசிரியர்களின் சம்பள விகிதாசாரங்களும், இன்னும் மற்ற தர உயர்வுகளும், ஒரு பள்ளிக் கூடத்தையோ, கல்விமுறையோ உயர்த்தி காட்டி விட்டு போகட்டும். கற்றுத் தரப்படும் கல்வியின் தரமும், மாணவர்களின் அடிப்படை அறிவுத்திறனும் அந்த உயர்வு தாழ்வில் மாட்டிக்கொள்ள வேண்டாமே, என்பதுதான் நமது விருப்பம்.
எது உண்மையான கல்விமுறை என்பதை கற்றறிந்த அறிஞர்களும், மாணவர்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்து எடுக்கப்படும் ஆலோசனைகளும், இன்னும் இன்ன பிற யோசனைகளும் கலந்தே ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். “வெறுமனே மனப்பாடச் செய்ததை விடைதாள்களில் வாந்தி எடுப்பதை கொஞ்சம் யோசிக்க வேண்டும்” வகுப்புகளில் சொல்லித்தரப்படும் பாடங்கள் வெறுமனே மதிப்பெண்கள் எடுப்பதே பிரதான நோக்கம் என்றில்லாமல் ஆரம்ப கல்வியின் பாதியிலோ, மேல்நிலை வகுப்புகளிலிருந்து பாதியிலோ கல்வி கற்க முடியாமல் சென்றவர்களுக்கு கூட அவர்கள் அதுவரையிலும் கற்ற கல்வி அவர்களது வாழ்க்கைக்கும் பாடமாக இருக்கட்டும்.
பல நல்ல ‘மனிதர்களை’ உருவாக்கும், கல்வி திட்டமாக இனிவரும் காலங்களில் நமது கல்விமுறை இருக்கட்டும். மாற்றம் என்ற ஒன்றை தவிர மற்ற எல்லாமும் மாற்றங்களுக்கு உட்பட்டே தீரவேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை
கழுகிற்காக
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
6 comments:
நிச்சயம் இன்றைய பள்ளிக்கல்வி என்பது மனப்பாடத் திறமையை மட்டுமே மையப்படுத்தி இருக்கிறது என்பது மறைக்க முடியாத உண்மை .
புரியாமல் மனப்பாடம் செய்து அதனை எழுதுவதற்கும் , பார்த்து எழுதுவதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை :-) மதிப்பெண்களை மட்டுமே குறிவைத்து இயங்கும் பள்ளிகளும் , அதனை நம்பும் பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய விசயம்!
//தண்ணீரின் அறிவியல் குறியீடு (H2O) என்று சொல்லி கொடுத்திருப்பார்கள். ஆனால் நீராவியின் அறிவியல் குறியீடு என்னவென்று கேட்கப்படும் பொழுது, மாணவர்கள் கேள்வி கேட்ட ஆசிரியரை கோபித்து கொள்ள கூடும். காரணம், தண்ணீருக்கு சொல்லிக் கொடுத்தார்களே அன்றி நீராவிக்கு என்ன குறியீடு வரும் என்பதை சொல்லித் தரவில்லையென்பார்கள். ஏனெனில் ஏற்கனவே சொன்னதுபோல் தர்க்கரீதியாக (nyhfpcmy;) சிந்திக்கும் திறமை நமது கல்விமுறையில் இல்லை என்பதே நமது வருத்தம். (நீராவி தண்ணீரிலிருந்து ஆவியாவது என்பதனால் அதற்கும் H2O) தான்).//
தெளிவான ஒரு அலசல்.....
பந்தய குதிரையை தயார்படுத்தும் இடம் கல்வி சாலைகள்
நண்பரே என்னை விட மிக ஆழமாகவும், தெளிவாகவும் கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள். வாழ்க்கையில் வெற்றி என்பது நல்ல வேலையில் அமர்ந்து, நிறைய பணம் சம்பாதிப்பது என்றே நிறைய பேர் சொல்கிறார்கள். கல்வி என்பது அறிவுத்தேடலின் தூண்டுகோலாக இருக்க வேண்டும். ஆனால் தற்கால கல்வி மார்க்குகளை குறிவைத்தே இருக்கின்றன.
வணக்கம்
பள்ளி கல்வி பற்றி சரியாக சொன்னீர்கள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
அழகு மிக அழகு தொடரட்டும் உங்கள் பணி
Post a Comment