Monday, November 28, 2011

சுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...? ஒரு அலசல்..!

நம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...?? பத்து சதவீதத்தினர் மட்டுமே நினைத்து பார்ப்போம். நாம் வசிக்கும் தெருவில் பத்து நாட்களாய் கழிவு நீர் வடிந்துகொண்டிருக்கிறது. எத்தனை பேர் மாநகராட்சி அலுவலகத்தில் சென்று புகார் கொடுத்திருப்போம்..?! யாராவது புகார் கொடுப்பார்கள் என்று அந்த இடத்தை விட்டு கடந்து சென்று விடுவோம்.  இதே நமது வீட்டில் இப்படி நடந்தால் விட்டு விடுவோமா..?? நேராக மாநகராட்சி அலுவலகம் சென்று கையோடு ஆட்களை அழைத்து வந்து சரி செய்வோம்.


 பூமியில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் காடுகளை அழிப்பதுதான். பூமியில் வெப்பம் அதிகமாவதால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டுமென்கிறார்கள். என்னை கேட்டால், பூமியில் பிறந்ததற்கு ஒரு மரத்தையாவது வளர்த்து விட்டுப்போக வேண்டும் என்பேன். நாம் எந்த ஒரு பெரிய சாதனையையும் செய்து விட வேண்டாம். ஒரு மரத்தை நன்கு பராமரித்து வளர்த்தாலே போதும். பூமியில் குறைந்து கொண்டு வரும் ஆக்ஸிஜன் அதிகரித்து விடும். 


அமெரிக்காவில் விஷக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் ஒன்றே கால் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது, வாகனங்களுக்கு வருடம் தோறும் புகைப்பரிசோதனை செய்யப்படுகிறது. சுற்றுப்புற தூய்மைக்கெல்லாம் அபராதம் போட்டால்தான் செய்வேன் என்றால் நமக்கு பின்வரும் சந்ததியினர் குறைகளோடுதான் பிறப்பார்கள். 


நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது தண்ணீர். எப்படி தாய் பாலில் கலப்படம் செய்தால் அதற்கு பயன் இல்லையோ, அதே போல் குடி தண்ணீரில் கலப்படம் செய்தாலும் பயன்படுத்த முடியாது. மூன்று விழுக்காடு தண்ணீர் இருக்கும் பூமியில் ஒரு விழுக்காடு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அந்த தண்ணீரையும் மாசு படுத்தி வருகிறோம். நொய்யல், காவேரி, பாலாறு போன்ற நதிகளை சாயப்பட்டறை மூலமாக மாசு படுத்தி விட்டோம். இருபது வருடங்களுக்கு முன்பு சிறப்பாக பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த நதிகளை எல்லாம் இப்பொழுது பார்க்க முடிவதில்லை. மணல் கொள்ளை மூலமாக மணல்களை எடுப்பதால் நிலத்தடி நீர் ஆழம் இன்னும் அதிகமாகிக் கொண்டு போகிறது. மேலும் தண்ணீர் தொழிற்சாலை மூலமாக பல்லாயிரக்கணக்கான அடிகள் தோண்டி நிலத்தடி நீரை எடுத்து வெளிமாநிலத்திற்கு அனுப்பி பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்.


காடுகளை அழித்து பணம், நிலத்தடி நீரை எடுத்து பணம் என்றிருந்தால் கடைசியில் வெறும் பணம் மட்டுமே மிஞ்சும். வருங்கால சந்ததியினர் இருக்க மாட்டார்கள். புவி வெப்பமயமாவதை தடுப்பதற்கு மழை நீர் சேகரிப்பு அவசியமாகிறது. வருடாவருடம் மழை நீர் சேகரிக்கும் குழாய்களை சரி பார்க்க வேண்டும். தமிழக அரசு மழை நீர் சேமிப்பு திட்டம் செயல் படுத்திய போது அனைவரும் செயல் படுத்தினர். ஆனால், இப்பொழுது அனைவரும் மறந்த நிலையில் தான் உள்ளோம்.  

எல்லாவற்றிற்கும் அரசு சட்டம் இயற்றி கட்டாயப்படுத்த வேண்டும் என நினைக்காமல் நமக்கான வாழ்வாதார பிரச்சனை அதை நாம் தான் சரி செய்து கொள்ள வேண்டும். அனைவரும் தெரிந்தே பூமியை மாசு படுத்துவதில்லை. தொண்ணூறு சதவீதத்தினர் தெரியாமல் தான் புவியை மாசு படுத்திகொண்டிருக்கிறோம். அதன் வீரியத்தையும்,விளைவுகளையும் நாம் அறிந்திருக்கவில்லை. நாம் பயன்படுத்திய குப்பையில் போடும் பிளாஸ்டிக் பொருட்கள் 200 ஆண்டுகள் அப்படியே அழியாமல் இருக்கும். முடிந்த வரை பிளாஸ்டிக் பயன் படுத்துவதை தவிர்க்கலாம், தேவைஏற்பட்டால் மட்டுமே பிளாஸ்டிக் பயன் படுத்தவேண்டும், டீ குடிக்கவும் தண்ணீர் குடிக்கவும் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தாமல் காகிதம் கண்ணாடி போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். அதி வேகமாய் பூமியை மாசு படுத்தி விட்டோம். அதை விரைவில் சரி செய்து விட முடியாது. சிறுக சிறுக தான் சரி செய்ய முடியும், இதில் அரசாங்கம் என்ன செய்யும என்று நினைக்காமல் நம்மால் முடிந்த விஷயங்களில் பூமியை பாதுகாப்போம்.
சுற்றுப்புறத்தை காக்க நம்மால் முடிந்தவை...

குப்பைகளை குப்பை தொட்டியில் போடவேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பையில் போடவேண்டும்.

கழிவுநீர் வடிந்து கொண்டிருந்தால் நாமே நேரடியாக சென்று புகார் தரலாம்.  

சென்னை மாநகராட்சியிடம் புகார் கொடுக்க : 1913 / எஸ்.எம்.எஸ்.978995111125381651/ 25384530 / 9445150999 

  
வாகனத்தில் அதிக புகை வந்தால் உடனே கவனிக்க வேண்டும்.


மணல் கொள்ளையை தடுப்போம். முடித்தால் வழக்கு தொடரலாம் மணல் எடுக்க கூடாதென்று.

தண்ணீரை சிக்கனமாய் பயன் படுத்துவோம். எங்காவது தண்ணீர் வீணாக போய் கொண்டிருந்தால் அதை சரி செய்வோம்.

மழை நீரை சேகரிப்போம்.

நம்மால் முடிந்தவரை எத்தனை மரம் வளர்க்க முடியுமோ அத்தனை மரங்கள் வளர்ப்போம்.

இன்றே உறுதி மொழி எடுத்து கொள்வோம். ஆளுக்கு ஒரு மரம் நட்டு வைத்து அதை பராமரிப்போம்... நமது வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அவர்கள் நினைவாக ஒரு மரம் நட்டு வைத்து, அந்த குழந்தைக்கு மரம் வளர்ப்பதன் அவசியத்தை சொல்லி சொல்லியே குழந்தைகளுக்கு இயற்கை மற்றும் மரங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 

இப்படி சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே மேலும் வெப்பமயமாவதிலிருந்தும், மாசடைவதிலிருந்தும் பூமியை காப்பாற்றிவிடலாம். 
கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
5 comments:

saidaiazeez.blogspot.in said...

//அதி வேகமாய் பூமியை மாசு படுத்தி விட்டோம்//
இதில் அரசாங்கங்களின் பங்கு மிக அதிகம்.
எதிர்கால நோக்கு இன்றி ஏரிகளில் வீடு கட்டியது, ஆறுகளை மாசுபடுத்தியது மற்றும் மணல் கொள்ளைகளை அனுமதித்தது.
பக்கிங்காம் கால்வாயும் கூவம் ஆறும் சென்னை மாநகருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். ஆனால் அவையே இன்று சென்னையின் பேரைக்கெடுக்கும் மிக முக்கிய சாபமாகிவிட்டது.
உலகின் நீண்ட கடற்கறைகளில் இரண்டாம் இடத்திலுள்ள மெரினா கடற்கறையில் கூவம் சங்கமிக்கும் இடத்தில் உள்ள மாசு, உலக பிரசித்தம்.
//சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே மேலும் வெப்பமயமாவதிலிருந்தும், மாசடைவதிலிருந்தும் பூமியை காப்பாற்றிவிடலாம்//
நிச்சயம் உறுதி எடுப்போம்!
நம் உலகை நாம் காப்போம்!!

ஷர்புதீன் said...

சென்னையை நான் பார்த்தபார்வையில் சொல்வதானால் மிக குப்பையும்,கூளமுமாக இருக்கிறது !

யாரேனும் மணி கட்டுவார்களா?

SURYAJEEVA said...

நம்ம வீடு என்றால் லஞ்சம் கொடுத்து அழைத்து வருவார்கள், பொது பிரச்சினைக்கு எவன் லஞ்சம் கொடுப்பான்? லஞ்சம் கொடுக்காமல் இங்கு காரியம் நடக்காது.. இப்படி இந்த பிரச்சினையின் ஆணிவேர் எங்கோ உள்ளது...

இருந்தாலும் சில விழிப்புணர்வு விஷயங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

நாய் நக்ஸ் said...

அவசியமான பதிவு ....
எல்லாரும் ஒத்துழைக்கணும் ....
செய்வார்களா ???

துரைடேனியல் said...

Arumai Sago. Appave TM 4 poten. But comment anuga mudiyala.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes