Monday, July 18, 2011

சிறுத்தையே வெளியில் வா...! அரசியல் விழிப்புணர்வு பார்வை....ஜனத்திரளினூடே வழமையான செயல்களை இயற்கைக்குட்பட்டு யாமும் நிகழ்த்தி வருவதால் பத்திலே ஒன்றாய் எம்மையும் தீர்மானிக்க எமது புறமும், சூழலும் மனிதர்களுக்கு நிறைய இடம் கொடுத்திருக்கலாம் ஆனால் அனல் பறக்கும் அக்னியினை நெஞ்சினில் தேக்கி பிரளயத்தை உண்டாக்கும் ஆற்றல்களை எமது புத்தியில் வைத்து யாம் காலத்தை கனிய வைக்க சிம்மக் கூட்டத்தை உருவாக்கி வருகிறோம் என்பது தெளிந்தோர் மட்டுமே அறிந்த விடயம். காலச் சுழற்சியில் அநீதிகள் வீறிட்டு எழும். சத்தியத்தின் பெயரினை தன் முன்நெற்றியில் பச்சை குத்திக் கொண்டு இதோ பாருங்கள் சத்தியம் என்று கொக்கரிக்கும் ஆனால் நிதர்சனத்தில் சத்தியம் இதுவென்று யாரும் சுட்டிக் காட்டத் தேவையில்லை. செயலில் வெளிப்படும் பொருளுக்கு மேடைகள் போட்டு விளக்கக் காட்சிகள் கொடுத்தல் மடைமை என்று நீவீர் அறிவிர்.அரசியல் என்றொரு படிமம் உண்டு. அங்கே சாமானியரும், அமைதியை விரும்புவரும் நுழைதல் கடினம், அரசியல் என்பது சூழ்ச்சிகள் நிறைந்தது, அரசியல் ஒரு சாக்கடை என்பன போன்ற படிமாணங்கள் வளர்ந்து வரும் எம் இளைஞர் கூட்டத்தின் புத்தியில் சமகால முரண்பட்ட அரசியல்வாதிகளால் தொடர்ந்து விதைக்கப்பட்டு தத்தம் தலைமுறையினருக்கு மட்டும் தொடர் வாய்ப்புக்களை வழங்கி அரசியலை பொருளீட்டுக் களமாக மாற்றி வைத்திருக்கிறது. சாமனியனுக்கு அரசியலில் வாழ்க மறும் ஒழிக கோசங்கள் மட்டும் இடும் பணியை மட்டும் பணித்திருப்பது சமகால அரசியலின் சாதுர்யம் எனக் கொள்க;இந்தியாவில் குண்டு வெடித்தால் அதை செய்தவன் ஒரு இஸ்லாமியனாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு பொது புத்தியை விதைத்து வைத்தவனும் இந்த அரசியல்வாதிதானே? முரண்பட்டவர்கள் எல்லாம் ஒரு மதத்திற்குள் மட்டுமா இருக்கிறார்கள்? எல்லா மதத்திலும் தீயவன் அந்த மதத்தின் பெயரை கேடயமாக வைத்துக் கொன்டு எல்லா தீங்கையும் செய்து கொண்டிருந்தாலும் இந்திய அரசியலில் இஸ்லாமியர்களை எப்போதும் குற்றவாளிகளாகப் பார்க்கும் போக்கு திட்டமிட்டு காலங்களாய் செய்யப்பட்ட தொடர் பரப்புரையின் ஒரு அரசியல் விளையாட்டு.இந்திய இளைஞர்கள் உணர்ச்சியின் அடிப்படையில் பிரச்சினைகளைப் பார்க்கிறார்கள் அல்லது அப்படிப் பார்க்கச் சொல்லி பொதுப் புத்தி எப்போதும் இவர்களின் மூளைகளை சீர் கெடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்த வேலையை இந்திய தேசத்தின் ஊடகங்களும், பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படுபவர்களும், சாதி, மதவாத அரசியல்வாதிகளும் குறைவறச் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை இந்த கட்டுரை பகிங்கரமாக வைப்பதோடு இப்படி ஆக்கி வைத்திருப்பதை மாற்ற முனையாமல் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சமுதாயத்திற்கும், ஆசிரியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பெற்றோர்களுக்கும் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது.ஒரு இளைஞன் தெளிவான பார்வைகள் கொண்டவனாக, எல்லா பிரச்சினைகளையும்  மூலத்தையும் அலசி ஆராய்ந்து அதன் பின் தெளிவுகளைப் பெறவேண்டும். இந்திய தேசியம் என்ற மூளைச் சலவையில் இந்திய அரசின் முரண்பட்ட செயல்களை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம். உதாரணமாக இத்தனை வருட காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? ஏன் காஷ்மீரில் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று ஆராய்ந்து அதன் பின் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து கருத்து தெரிவித்தோம் மென்றால் சபாஷ் என்று பாராட்டலாம்.

அப்படி ஏதேனும் நிகழ்கிறதா? இடவலமாய் மூளையை உலுக்கு கேள்விகள் கேட்டுப்பாருங்கள்!இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் என்ன? அண்டை நாட்டின் பிரச்சினைகளை எப்படி அணுகுகிறது? என்றெல்லாம் என்றாவது ஒரு நாள் சிந்தித்துப் பார்க்கும் வாய்ப்பாவது இருந்திருக்குமா என் தேசத்து இளைஞனுக்கு? சுற்றி சுற்றி நாம் வந்து கண்டிருக்கும் நமது தேசத்தின் அரசியலுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையென்று எப்படி ஒதுங்கிச் செல்வது?அரசியல் என்பதை சரியாக பயிற்றுவிக்க, சரியாக உணர்ந்து கொள்ள, வழிகளற்று நம் கண் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கும் அபத்தங்களைப் பார்த்து ஒதுங்கிச் செல்வது  சரியான வழிமுறையா என்ற கேள்வியை இணையத்தை சூழ்ந்திருக்கும் இளைஞர் கூட்டத்தின் முன் வலுவாக இந்தக்கட்டுரை வைக்கிறது? அரசியல் அறிவது இழிவென்று ஒதுங்கிக் கொண்டு தத்தம் வாழ்க்கையை வாழ முற்படும் போது எதிர்ப்படும் பிரச்சினைகளுக்கு அரசியலையும் அரசியல்வாதிகளையும் குற்றம் சாட்டும் கைகளும் மனங்களும் அரசியலில் ஈடுபட்டு புதுத் தெளிவுகளையும், புரட்சிகளையும் செய்யாவிட்டாலும் கூட தெளிவான அரசியல்வாதிகளை உருவாக்கவும் தேர்ந்தெடுக்கவும் கூடவா முடியாது?இந்திய தேசியம் பேசுபவர்களும், தமிழ்த்தேசியம் பேசுபவர்களும் உணர்சிகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு அறிவு சார் பார்வை பார்க்க வேண்டும். கல்வி என்பது பணம் உண்டாக்க ஒரு யுத்தி என்ற நிலை மாறி அது அறிவு சார் ஒரு சமுதாயத்தை படைக்கும் கருவி என்று எம் இளைஞர்களுக்கு உணர வைத்தல் வேண்டும். நிதர்சனங்களிலும் சாந்தத்திலும் அன்பிலும் மட்டுமே சத்தியம் என்ற பூ பூக்கும் என்று  போதித்தல் வேண்டும்.இந்திய தேசத்தின் பொருளாதாரம், தொழில், கல்வி, பண்பாடு, என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாய் அரசியல் என்னும் விடயம் இருக்கும் போது இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல்வாதிகள்தான்...!இந்துத்துவா கொள்கைகளை தன்னுள் அடக்கிக் கொண்டு ஆர்.எஸ்.எஸின் வழி வந்த பாரதிய ஜனதாவும் சரி, மதச்சார்பற்றவர்கள் நாங்கள் என்று பறை சாற்றிக் கொண்டு மத துவேஷிகளை தூண்டி விட்டு அவர்களை குற்றம் சாட்டி அரசியல் நடத்தும் காங்கிரசும் சரி இரண்டுமே இந்திய தேச நலனுக்கு எதிரானவைதான்?இந்த இரு கட்சிகளை விடுத்து மூன்றாவதாக ஒரு தேசிய கட்சி உருவாகாமல் இருப்பதின் பின்புலத்தில் என்ன மாதிரியான மனோ வசியம் எம்மக்களின் மனதில் வைத்து தைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்து அதை கிழித்துப் போடவேண்டும் என் தேசத்து இளைஞனே!வலுவான  ஒரு அரசியல் கட்சியால் தேசத்தின் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க இயலாமல் போனதற்கு காரணம் புரையோடிப் போன பாரபட்சமான போக்குதான் என்பதைத் தெளிந்த அரசியல் பார்வைகள்தானே நமக்கு அறிவுறுத்தும். சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பினைப் பற்றி பேசிய எம் இளைஞர் கூட்டமும், ஊடகங்களும் கோயம்புத்தூரில் ஒரு மனிதனை வீதியில் அடித்து கொன்ற விடயத்தை கவனிக்காமல் விட்டுச் சென்றது ஏன் ?குண்டு வெடிப்பு எவ்வளவு கொடுமையானதோ, வக்கிரமானதோ, அதே அளவு கொடுமையானதுதான் தனி மனிதனை நடு ரோட்டில் அடித்துக் கொன்றதும், எமக்கும் இச்செயலுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று கை கட்டி வேடிக்கை  பார்த்துச் சென்றது எல்லாம் யார்? பொது மக்களாகிய நாம் தானே? ஒரு கணம் யாரேனும் ஒருவர் முன் வந்து அதைத் தடுத்து நிறுத்த இயலாத அளவிற்கு சுயநல நோக்குகளை யாரேனும் ஆதரிப்பீர்களா?

மாட்டீகள்தானே?இதே மாதிரியான போக்குதான் அரசியல்வாதிகளை அட்டூழியங்கள்  செய்ய விட்டு எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அரசியல் ஒரு சாக்கடை என்று நாம் ஒதுங்கிப் போகும் போது நிகழ்கிறது. ஒருவன் சென்று கேட்டால் எதிர்த்து அடிப்பான். இருவர் சென்று  கேட்டால் மறுத்து விடுவான். 10 பேர் சேர்ந்து சென்று அநியாயத்தைத் தட்டிக் கேட்டால் காவல்துறையை ஏவி விடுவான்....

ஆனால்....

7 கோடி பேரில் 5 கோடி பேர் போராடத் துணிந்தால்...அதிகார வர்க்கத்தின் முதுகெலும்பை  உடைத்துப் போட முடியாதா? அக்கிரமங்களை தீயிட்டுக்கொளுத்த முடியாதா? உணர்ச்சியின் பால் சிந்திப்பதை விடுத்து அறிவின்பால் சிந்திக்கும் அறிவு சார் கூட்டமாக உருவெடுக்கும் போது எப்படி தீமைகள் விளையும்? தெளிவான அரசியலை எம் மக்கள் அறிவதோடு, அரசியலில் ஈடுபட்டு, அதிகாரங்களில் ஈடுபடுவது மட்டுமல்ல அரசியல், நம்மைச் சுற்றி நிகழும் உண்மைகளின் மூலங்களை தெளிவாக உணருதலும் அரசியல் என்று அறிதலும் இங்கே அவசியமாகிறது. நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவற்றையும் ஒரு செய்தியாய் உள்வாங்கி அதற்காக கோபமோ, எரிச்சலோ அல்லது சந்தோசமோ பட்டு நகரும் சராசரி நிகழ்வுகளை உதறித் தள்ளிவிட்டு...மனிதநேயம் என்ற ஒற்றை சொல் கொண்டு, அதற்கான கட்டமைப்புகளும், திட்டங்களும் கொண்ட, ஒரு எழுச்சி கொண்ட அரசியலை சமைக்க கற்று கொள்வோம், வருங்கால சந்ததியினருக்குக்  கற்றும் கொடுப்போம். அரசியல் என்பதை எப்போதும் நமக்கு வேறானது அல்ல வேர் ஆனது என உணர்வோம்...!!!அரசியலை கற்றுக் கொள்வோம்...! அரசியல் தெளிவுகளோடு கூடிய புதியதோர் சமுதாயத்தை படைப்போம்..!!!!(எப்படியெல்லாம் அரசியலில் நமது பங்களிப்பை காட்டலாம் என்பதை அடுத்தடுத்த கட்டுரைகளின் மூலம் தெளிவாய் எடுத்தியம்புவோம்!)
 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

1 comments:

'பரிவை' சே.குமார் said...

//அரசியலை கற்றுக் கொள்வோம்...! அரசியல் தெளிவுகளோடு கூடிய புதியதோர் சமுதாயத்தை படைப்போம்..//

சரியான பார்வை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes