Wednesday, March 30, 2011

சாலை விதிகளை மதிக்கிறோமா???? ஒரு விழிப்புணவு பார்வை!


வாழ்க்கையின் எல்லா பாகங்களிலும் விழிப்புணர்வோடு இருந்தாலும், பிறரின் மயக்க நிலைகளும், பொறுப்பில்லா தன்மையும் நம்மை பாதிக்கச் செய்துவிடும் அபாயமும் இருக்கிறது. இதில் முதன்மையானது சாலை விபத்துக்கள்...

சாலை விபத்துக்களின் மூலம் என்ன? எப்படி தடுக்கலாம்? என்ற ரீதியில் செல்லும் கட்டுரைக்குள் செல்வோம் வாருங்கள்....
 

தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு மட்டும் 12 ஆயிரத்து 36 ஆயிரம் பேர்! ஓட்டு மொத்த இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 14 பேர்! இதெல்லாம்  ஏதோ சாதனை செய்பவர்களின் புள்ளி விபரம் அல்ல! இந்த புள்ளி விபரங்கள் அனைத்துமே நம் நாட்டில் சாலை விபத்தில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை! இதை செய்தி தாள்களிலோ அல்லது கேள்விப்ப்படும்போதோ நமக்கு இது செய்தியாக மட்டுமே கடந்து போகும்.. ஆனால் இது கணவனை.. ஒரே மகனை.. குடும்பத்தை இழப்பவர்களுக்கு வாழ்நாள் வலி! விபத்துகள் விட்டு செல்லும் வடு கொடுமையானது! கண நேர அலட்சியம் நம் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திவிடும் அபாயமுண்டு! முதலில் நம் நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்களை பற்றி பார்ப்போம்!


 உலகிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் இந்தியாவில்தான் ஏற்படுகின்றன.  இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 14  பேர் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர். இது உலகிலேயே அதிகம். தினமும் 250 பேர் பலியாகின்றனர். தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 12 ஆயிரத்து 36 பேர் பலியாகின்றனர். இதில் 85 சதவீதம் ஆண்கள். இவர்களில் 70 சதவீதம் பேர் சம்பாதிக்கும் திறனுள்ள 30- 59 வயதுள்ளவர்கள். சாலை விபத்துக்களால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கியின் கணிப்புப்படி வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. இத்தொகையானது வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தரும் மேம்பாட்டு உதவி நிதியை காட்டிலும் இருமடங்கு அதிகம். ஆண்டுதோறும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிர்ப்பலிகள் எட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. உலகில் ஏற்படும் பத்து சாலை விபத்து சாவுகளில் ஒருவர் இந்தியர் என்பது அதிர்ச்சி தரும் புள்ளிவிபரம்.நாட்டின் மொத்த வாகன விபத்துக்களில் தமிழகத்தில் 14.1 சதவீதம், மகராஷ்டிராவில் 12.4 சதவீதம் நடந்துள்ளன.(தமிழகம் வளர்கிறது!)


நம் நாட்டில் சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது! இது தனக்கு மட்டும் அல்ல.. மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தானது! அடுத்து செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது.. இந்த வகை விபத்துகள் இப்பொழுது அதிகரித்து வருகிறது! அடுத்து தலைக்கவசம்(ஹெல்மெட்) இல்லாமல் ஓட்டுவது.. ( இதைப்பற்றிய தெளிவு அரசாங்கத்திடம் கூட இல்லாதது நம் துரதிஷ்டம்!) மற்றும் ஓய்வில்லாத பணிசுமை.. இப்படி விபத்துக்களுக்கு காரணங்கள் பலவகை! ஆனால் முடிவு ஒன்றுதான்.. உயிர்ப்பலி! இவற்றைப்பற்றிய சரியான விழிப்புணர்வு நம் மக்களிடம் இல்லை.. அனைவருமே எண்ணுவது நமக்கெல்லாம் அது நடக்காது என்று! நடக்காதவரை சந்தோசமே.. நடந்துவிட்டால் நம்மை நம்பி உள்ளவர்களின் கதி? இதை நினைத்தாவது நாம் விழித்துக்கொள்ளவேண்டும்!


போக்குவரத்து விதிகளை சரியாக மதித்து நடந்தாலே விபத்துக்கள் பாதியாக குறைந்து விடும்! ஆனால் அனைவருக்குமே அவசரம்... பொறுமை இல்லை..  வாழ்வதர்க்குகூட! நம் நாட்டில் ஓட்டுனர் உரிமசீட்டு வழங்கும் அடிப்படையே தவறு! உரிமசீட்டு வைத்துள்ள எத்தனைபேர் விதிகளை பற்றி சரியான புரிதலில் உள்ளனர்? அனைத்துமே முகவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது! முகவரை தவிர்த்து நீங்கள் உரிமம் எடுக்க நினைத்தால் அதை அந்த RTO கூட விரும்புவதில்லை! இதுதான் நம் நாட்டின் இன்றைய நிலைமை! உரிமம் எடுக்கும் முறைகளில் ஆதிகாலம் தொட்டு ஒரே முறைதான் பின்பற்றப்படுகிறது! இந்த முறையில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே உரிமம் எடுக்கலாம்! (பணமிருந்தால்!) இதை மறுத்தாலும் இதில் உண்மை இல்லையென்று சொல்லமுடியுமா? போக்குவரத்து காவலர்களின் பங்கு அதற்குமேல்! அவர்களுக்கு தேவை லஞ்சம்! நான் அனைவரையும் சொல்லவில்லை.. இதிலும் இட்ட பணிக்காக வெயில் மழை பாராமல் தூசியில் நடுரோட்டில் நின்றுகொண்டு பணிசெய்யும் பலபேரை பார்த்திருக்கிறேன்! அவர்களுக்கு என் சல்யூட்! விதிகளை மீறும் யாரும் தண்டனைக்கு பயப்படவில்லை! மாட்டினால் ஐம்பது அல்லது நூறுதானே என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்! மாறாக அவர்களை அபராதங்களை நீதிமன்றத்திலோ அல்லது மற்ற அரசாங்க அலுவலகங்களிலோ கட்டும் முறைகளை கொண்டுவந்தால் கால விரயங்களுக்கு பயந்தாவது விதிகளை மதிக்க முயற்சி செய்வார்கள்! ( இதில் நீதிமன்றத்திற்கு செல்லும்முறை ஏற்க்கனவே உள்ளது..ஆனால் அந்த அளவுக்கு யாரும் செல்வதில்லை மாமூலாக முடித்து விடுகின்றனர்!)


இப்போதுள்ள இளைய தலைமுறைகளுக்கு சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்! இனி வரும் தலைமுறையாவது விதிகளை மீறாத தலைமுறையாக இருக்கவேண்டும்! ஆனால் இதுவும் கனவாக போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது.. காரணம்..கடந்த ஆண்டில் சாலை விதிகள் பின்பற்றுவதன் அவசியத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டது! இதற்காக   வல்லுனர்கள், போலீசார் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி  புதிய பாடத்திட்டத்தை ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சமூகவியல் பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தார்கள்! ஆனால் இது இன்றளவும் அறிவிப்பாகவே உள்ளது!


பிரச்சனைகளை மட்டும் அலசி விட்டு தீர்வுகளை சொல்லாமல் விட்டால் எப்படி? எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரிய வில்லை.. ஆனால் கண்டிப்பாக சாத்தியமாக்க வேண்டிய சில தீர்வுகளை முன்வைப்போம்! இதில் திருத்தங்கள் இருந்தால் நீங்களும் சொல்லுங்கள்! தட்டுங்கள் திறக்கப்படும் என்பதுபோல்..

  1. போக்குவரத்து காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.. இவர்களை தலைவர்கள் வரும் பாதையை மட்டும் சரிபண்ண பயன்படுத்தாமல் மக்களுக்காகவும் பயன்படுத்தவேண்டும்!
  2. இரவு நேர காவலர்களுக்கு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் கருவிகளை வழங்க வேண்டும்! இப்போது உள்ளதுபோல் மருத்துவமனையே நம்பியிருப்பது கேலிக்கூத்தானது!
  3. மேலை நாடுகளில் உள்ளதுபோல்..விதிகளை மீறுபவர்களுக்கு புள்ளி அளவுகளை கொண்டுவந்து தண்டனையை கடுமை ஆக்குவது! உரிமம் ரத்தாகும் பயத்தை அவர்களுக்கு உண்டாக்குவது!
  4. தலைக்கவசம் பற்றிய தெளிவான ஒரே கொள்கையை நாடு முழுவதும் கொண்டுவருவது!
  5. வேகத்தை கண்காணிக்கும் கருவிகளை விரைவு சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் பொருத்துவது!
  6. அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி வரும் வண்டிகளை கண்காணித்து அவற்றின் உரிமங்களை ரத்து செய்யலாம் அல்லது தண்டனையை கடுமையாக்கலாம்!
  7. ஓட்டுனர் உரிமம் பெறும் விதிகளை இன்னும் கடுமையாக்கலாம்.. இதில் உள்ள முகவர் தொல்லைகளை ஒழிக்கவேண்டும்!

இப்பொழுதெல்லாம் பள்ளி குழந்தைகள் அதிகமாக இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்க்கிறோம்! அவர்களுக்கு வாகனங்களை வாங்கித்தரும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய விஷயம் இது! அல்லது அரசாங்கம் இதை கவனத்தில் கொண்டு உரிமம் பெறும் வயதுவரம்பை தளர்த்தலாம்! ஏனென்றால் போன தலைமுறையில் பதினைந்து வயதுவரை மிதிவண்டி ஓட்டுவதே பெரிய விஷயம்! ஆனால் இப்பொழுது அப்படி இல்லை! இதை மனதில் வைத்து உரிமம் பெறும் வயதை பதினெட்டில் இருந்து பதினைந்தாக குறைக்கலாம்! பழைய சட்டங்களையே பிடித்து தொங்க வேண்டிய அவசியமில்லை! அப்படி சட்டம் இருந்தாலும் அவர்கள் சட்டங்களை மீறுவதை யார் கட்டுப்படுத்துவது? எனக்கு தெரிந்து ரோந்து போலீசார் கூட அவர்களை நிப்பாட்டுவதில்லை! அப்படி அவர்களும் உரிமம் எடுக்கமுடியும் என்றால் சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வை அந்த பள்ளிகளிலே அவர்களுக்கு கொடுத்து உரிமங்களையும் அந்த பள்ளி நிர்வாகமே அவர்களுக்கு எடுக்க உதவலாம்!

அரசாங்கம் என்னதான் முயன்றாலும் மக்களாகிய நம் மனதில் மாற்றம் வரவேண்டும்! விபத்துகளை செய்திகளாக கடந்து செல்லாமல் அவற்றிலிருந்து படிப்பினைகளை கற்றுக்கொள்ளவேண்டும்! நம் வீட்டு வாசல் வந்து தட்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்! விபத்தில்லா உலகம் படைக்க சாலை விதிகளை காப்போம்! நம் உயிர் நம் குடும்பத்திற்கு முக்கியம்!


கழுகுகுழுமத்தில் இணைய....


கழுகிற்காக
வைகை  


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
  

5 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முதல்ல செல்போன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டுற அயோக்கியனுகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யணும்..

Chitra said...

போக்குவரத்து விதிகளை சரியாக மதித்து நடந்தாலே விபத்துக்கள் பாதியாக குறைந்து விடும்! ஆனால் அனைவருக்குமே அவசரம்... பொறுமை இல்லை.. வாழ்வதர்க்குகூட! நம் நாட்டில் ஓட்டுனர் உரிமசீட்டு வழங்கும் அடிப்படையே தவறு! உரிமசீட்டு வைத்துள்ள எத்தனைபேர் விதிகளை பற்றி சரியான புரிதலில் உள்ளனர்? அனைத்துமே முகவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது! முகவரை தவிர்த்து நீங்கள் உரிமம் எடுக்க நினைத்தால் அதை அந்த RTO கூட விரும்புவதில்லை! இதுதான் நம் நாட்டின் இன்றைய நிலைமை! உரிமம் எடுக்கும் முறைகளில் ஆதிகாலம் தொட்டு ஒரே முறைதான் பின்பற்றப்படுகிறது! இந்த முறையில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே உரிமம் எடுக்கலாம்! (பணமிருந்தால்!) இதை மறுத்தாலும் இதில் உண்மை இல்லையென்று சொல்லமுடியுமா? போக்குவரத்து காவலர்களின் பங்கு அதற்குமேல்! அவர்களுக்கு தேவை லஞ்சம்! நான் அனைவரையும் சொல்லவில்லை.. இதிலும் இட்ட பணிக்காக வெயில் மழை பாராமல் தூசியில் நடுரோட்டில் நின்றுகொண்டு பணிசெய்யும் பலபேரை பார்த்திருக்கிறேன்! அவர்களுக்கு என் சல்யூட்! விதிகளை மீறும் யாரும் தண்டனைக்கு பயப்படவில்லை! மாட்டினால் ஐம்பது அல்லது நூறுதானே என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்! மாறாக அவர்களை அபராதங்களை நீதிமன்றத்திலோ அல்லது மற்ற அரசாங்க அலுவலகங்களிலோ கட்டும் முறைகளை கொண்டுவந்தால் கால விரயங்களுக்கு பயந்தாவது விதிகளை மதிக்க முயற்சி செய்வார்கள்! ( இதில் நீதிமன்றத்திற்கு செல்லும்முறை ஏற்க்கனவே உள்ளது..ஆனால் அந்த அளவுக்கு யாரும் செல்வதில்லை மாமூலாக முடித்து விடுகின்றனர்!)


.....இந்த ஒரு பத்தியிலேயே எல்லாம் தெளிவாக - விரிவாக சொல்லியாச்சு.... மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் ethics இருந்தாலே போதுமே.

வடுவூர் குமார் said...

சாலை “விதி” என்று ஒன்று இருக்கா?
விதியே என்று இருக்கு. சமிக்கைகள் எப்போது வேலை செய்யும் என்று தெரியாது, ஒரு வழியில் வாகனத்தை அனுமதிக்கும் சமிக்கை இருந்தாலும் மேலும் ஒரு சாலையில் இருந்து நுழையும் வாகனங்களுக்கும் இடம் இருக்கும்.

சகாதேவன் said...

சாலை விதிகள் திருத்தப்பட வேண்டும். நீங்கள் சொன்ன மாற்றங்கள் நடந்தால் நல்லது. சாலை பாதுகாப்பு வாரம் தலைப்பில் என் பதிவைப் பாருங்களேன்.
சகாதேவன்

balaji said...

Anna pattaiya killapuga. Balaji

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes