Friday, March 04, 2011

சுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....!ஒரு வழிகாட்டும் தொடர்..II

நாமும் ஒரு முதலாளியாவோம்............என்ற கனவுகளோடு இருக்கும் அனைவருக்கும் வழிகாட்டுதல் இருப்பதில்லை. தொழில் முனைவோருக்கு பணம் மட்டுமே முதலீடாக இருக்க முடியாது. சரியான திட்டமிடலும் வழிகாட்டுதலும் அவசியம்....

இதோ கட்டுரை வழிகாட்டுகிறது வார்த்தைகளாய்.....

வணக்கம் நண்பர்களே. இந்த தொடருக்கான முதல் பாகத்திற்கு வந்திருந்த கருத்துரைகள், எனக்குள் ஒரு கூடுதலான பொறுப்புணர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே இனி இத்தொடரின் ஒவ்வொரு பாகமும், நுணுக்கமாகவும் அதேசமயம் ஒருவர் சுயதொழிலில் அடியெடுத்து வைக்கும் பொழுது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களையும் அதற்கான தீர்வினையும் அந்தந்த தளத்திலிருந்து இயல்பாக அமையப்பெற்றதாக இருக்கும் என்ற உறுதியோடு தொடர்கிறேன். 

 எந்திரன் படம் என்பது சுமார் 150 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட வேண்டிய ஒரு ப்ராஜெக்ட். சிலபல பொருளாதார சிக்கல்களால் இத்திட்டம் தடைபட, பிறகு ரஜினியும், ஷங்கரும் இணைந்து கலாநிதி மாறனுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகிறது. அதன் பிறகு ஒரு பிரபல பத்திரிகையில் ரஜினியின் பேட்டி வருகிறது. அவர் சொல்கிறார், ஒரு செயலை நாம் செய்ய ஆரம்பிக்கும் பொழுதே ஆயிரம் தடைகள் அதற்கு முளைத்து விடுகின்றன. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலோ, கேட்டுக் கொண்டிருந்தாலோ, இல்லை அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்தாலோ நிச்சயம் வெற்றியடைய முடியாது. ஒரு முடிவெடுத்து இறங்கி விட்டோம், முடிந்த பிறகு வெற்றியோடு உங்களைச் சந்திக்கிறோம் என்று. 

மூன்று பேரும் ஜாம்பவான்களுக்கே, ஆயிரம் தடைகள் என்றால், ஒரு சராசரி மனிதன் சுயமாக தொழில் செய்யும் பொருட்டு நல்ல திட்ட அறிக்கையோடு களத்தில் இறங்குகிறான் என்றால் எத்தனை தடைகள் வரும்? முதலில் அவன் பெற்றோரில் ஆரம்பித்து, மனைவி, மக்கள், முதல் சுற்று உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர் முதற்கொண்டு பால்காரர், காய்கறி விற்கும் பெண்மனி வரையிலும் சுயதொழில் செய்து தோல்வி கண்டவர்கள் பற்றிப் புதுப்புது உதாரணங்களோடு தடைக்கற்களாக வந்து நிற்பார்கள்!  

இந்த முதல் சடங்கு (தடைகள்) நடக்க ஆரம்பித்து விட்டதா? அப்படியென்றால் நீங்கள் சுயதொழில் செய்வதற்கான பாதையில் முதல் தடத்தை அழுத்தமாக பதித்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்! "இவைகள் எல்லாம் தடைக் கற்கள் அல்ல, அவை உரைக் கற்கள்". ஆம் 'சுயம்' என்று வந்துவிட்டாலே, இனி நாம் தனி தான். அதாவது இனி நாம் தனியாகத்தான் ஒவ்வொரு விஷயத்திற்கும் முடிவெடுக்க வேண்டும். நாம் செய்வது சரியா, தவறா என்று வேறு யாரிடமும் கேட்க முடியாது. சுற்றியிருப்பவர்களின் பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் வைத்து நாமே புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் அவர்களை 'உரைக் கல்' என்றேன். 

சரி இனி முதல் பகுதிக்கு வருவோம். நாம் இங்கு பேசப் போவது முதல் தலைமுறை தொழில்முனைவோரைப் பற்றித் தான். பரம்பரையாக தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு, இதெல்லாம் தேவையிருக்காது.  

ஒருவர், கூடவோ குறைவோ ஒரு தொகையை வைத்துக் கொண்டு இனி தன் வாழ்வில் சுயமாக தொழில் செய்துதான் அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும் என்ற தெளிவான முடிவோடு இருக்கிறார். அவருக்கு சுயதொழில் செய்வது என்பது வாழ்க்கையின் லட்சியமாக இருக்கலாம் அல்லது இனி வேலை தேடி அலையமுடியாது என்ற நிலையில் இந்த முடிவெடுத்திருக்கலாம் அல்லது நூறு பேருக்காவது வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற லட்சியக் கனவோடு வந்திருக்கலாம் அல்லது சுய தொழிலில் தான் மிக அதிகமான வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கலாம்... இப்படியாக எத்தனை 'லாம்' வுடன் வந்திருந்தாலும், அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சங்கல்பம் இது தான். 

"நான் சுயதொழில் செய்வதை மிகவும் விரும்பி மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இதில் எத்தனை தோல்விகளும், இடர்பாடுகளும், இழப்புகளும், அவமானங்களும் வந்தாலும் தளர்வடையாது வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து போராடுவேன்". என்று மனப்பூர்வமாக அடிமனதில் உள்வாங்கி உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படியொரு உண்மையான உறுதியுடன் களம் இறங்குபவர்களுக்கு வெற்றி கிட்டும் வரை எத்தனை சோதனைகள் வந்தாலும் அவையெல்லாமே சாதனைகளாகத் தான் சரித்திரத்தில் இடம்பெறும். 

சரி ஒரு மன உறுதியோடு இறங்கியாயிற்று. அடுத்து என்ன?  
என்ன தொழில், எந்த மாதிரியான தொழில் என்பதை தேர்வு செய்ய வேண்டியது தான். என்ன தொழில்? - சரி, அது என்ன - எந்த மாதிரியான தொழில்? என்ன தொழில் என்பதை அவரவருக்கு உள்ள அனுபவத்தையோ அல்லது அத்தொழில் பற்றிய அறிவையோ அல்லது விருப்பத்தை பொருத்தது . அதைப் பின்னால் பார்ப்போம்

அதற்கு முன் எந்த மாதிரியான தொழில் என்பதைப் பார்ப்போம். தொழிலை உட்பிரிவுகளைத் தவிர்த்து பெறும் பிரிவுகளாகப் பிரித்தால் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. உற்பத்தி (Production), 2. சந்தைப்படுத்துதல் (Marketting), 3. வணிகம் அல்லது வியாபாரம் (Trading). 
இதில் வணிகம் அல்லது வியாபாரம் என்பது சந்தைப்படுத்துதலின் ஒரு உட்பிரிவாகத் தான் வரும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் டிரேடிங் என்பது மிகப் பெரும்பான்மையானவர்களால் நடத்தப்படும் தனி தொழிலாக இருப்பதால் அதையும் ஒரு தனிப் பிரிவாக வைத்துவிட்டேன். இந்தப் பிரிவில் நம் தெரு முனையில் இருக்கும் சாதாரண சிறிய பெட்டிக் கடையிலிருந்து, போத்தீஸ், ஜோஸ் ஆலுக்காஸ் வரையிலும் அடைத்து விடலாம்.  

இந்த மூன்று பிரிவுகளையும், அதில் உள்ள கஷ்ட - நஷ்டங்களையும், அதை வெற்றி கொள்ளும் வழிமுறைகளையும் அடுத்தடுத்த பாகங்களில் விரிவாகப் பார்த்துவிட்டு, பிறகு என்னென்ன தொழில் செய்யலாம், அதற்கான வாய்ப்புகள எப்படி என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக அலசுவோம். அதிகம் இடைவெளியில்லாமல் விரைவாக கொண்டு செல்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுமை காக்கவும்.
 

கழுகுகுழுமத்தில் இணைய....

கழுகிற்காக



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

11 comments:

செல்வா said...

மிகப் பயனுள்ள அவசியமான பதிவு அண்ணா. என்னென்ன தொழில் தொடங்கலாம் என்ற அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் .

எஸ்.கே said...

தொடர் நன்றாக செல்கிறது. இன்னும் பல தகவல்கள் அறிய ஆவலாய் உள்ளோம்!

மாணவன் said...

பயனுள்ள தகவல்களை சிறப்பாக எழுதியிருக்கீங்க....இன்னும் எதிர்பார்ப்புடன்...

Anonymous said...

சுய தொழில் தொடங்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

kobikashok said...

நல்ல ஒரு ஆரம்பம் இது பதிவுலகம் பயணிக்க வேண்டிய பாதயும் இது தான்

kobikashok said...

நல்ல ஒரு ஆரம்பம் இது பதிவுலகம் பயணிக்க வேண்டிய பாதயும் இது தான்

Kousalya Raj said...

தொழிலை தொடங்கும் முன் பலரிடம் ஆலோசனை கேட்கலாம் தவறில்லை...ஆனால் முடிவை நாம் தான் எடுக்கவேண்டும்...

அதனால் மிக கவனம் தொடக்கத்தில் தேவைப்படும்...அவசரம் மட்டும் கூடவே கூடாது... எடுத்தவுடன் அகலக்கால் வைக்காமல் நின்று நிதானித்து ஒவ்வொரு படியாக கடக்கவேண்டும்...இப்படி நிறைய சொல்லலாம்...

சௌமியன் மிக அழகாக இயல்பாய் இருக்கிறது படிக்கும் போது...நிச்சயம் இது ஒரு வெற்றி தொடர். பாராட்டுகள்.

Anonymous said...

வந்து கருத்து சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடர் மிக நன்றாகப் போய்கொண்டிருக்கிறது. PDF கோப்புகளாக மாற்றிக் கொள்ளும் வசதியை தளத்தில் செய்யலாமே? இப்போது இல்லையென்றாலும், பிரிதொரு நாளில் பயன்படக்க்கூடும்....!

Reggie J. said...

மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்!!

Unknown said...

வெறும் சம்பிரதாய கட்டுரைகளாக இல்லாமல் உபயோகமான தகவல்களை எழுதுங்கள். நான் வேலையை உதறிவிட்டு சுயதொழிலில் இறங்க ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.உங்கள் வலைத்தளம் எனக்கு உதவும் என்று நம்புகிறேன்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes