Monday, April 04, 2011

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......V







ஊடக வரலாறு பற்றிய இத்தொடரில் முந்ய நான்கு பாகங்களில் அச்சு ஊடகங்கள் பற்றி அறிந்தோம். இன்றைய பகுதியில் ஒலி ஊடகமான வானொலி பற்றியும் இந்தியாவில் அன் தொடக்கம் மற்றும் வளர்ச்சி பற்றியும் சுருக்கமாகக் காணலாம்.


வானொலியின் தோற்றம் :



கி.பி.1896 ஆண்டு ஜூன் மாதத்தில் மார்க்கோனி தமது கண்டுபிடிப்பை இங்கிலாந்தில் ( பிரிட்டிஷ் பேடன்ட் எண் : 2039 ) பதிவு செய்தார் . அங்குதான் வானொலி முதன்முதலாக தனது சேவையைத் தொடங்கியது.அன் பின்னர் உலக நாடுகளில் பரவத் தொடங்கியது.  28 ஆண்டுகளுக்குப் பிறகே இந்தியாவில் வானொலி காலடி எடுத்து வைத்தது. தொடக்க காலத்தில் பரிசோதனை முறையில் மிகக் குறைந்த அளவிலான நேரமே நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப் பட்டன. 1924 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் நாள் சென்னையில் முதன் முதலாக ஒலிபரப்புத் தொடங்கப்பட்டது.


வானொலிக் குழுமம் :



1924 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் இந்தியாவில் முதன் முதலாகச் சென்னை நகரில் முதல் வானொலிக் குழு ( Radio Club 0) அமைக்கப்பட்டது. அதே ஆண்டு (1924 ) ஜூலை 31 இல் சென்னை மாகாண ரேடியோ கிளப் என்ற அமைப்பு ஒலிபரப்பைத் தொடங்கியது. அரசின் அனுமதியுடன் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டு இக்குழு நடத்தப்பட்டது. இதற்கு விதிக்கப்பட்ட கட்டுப் பாடுகளும் போதுமான வசதியின்மையும் இதனை முடங்கச் செய்தன. 


அகில இந்திய வானொலி 



All India Radio என்பதைத் தமிழில் அகில இந்திய வானொலி என்று குறிக்கிறோம். இந்திய அரசின் கட்டுப்பாட்டில் நாடு முழுமைக்குமான ஒரே அமைப்பில் இயங்குவதால் இப்பெயர் பெற்றுத் திகழ்கிறது. மைசூர் அரசரின் வேண்டுகோளை ஏற்று " ஆகாசவாணி" என்ற பெயரில் 10.09.1935 அன்று மைசூரில் வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. வானத்திலிருந்து கேட்கப்படும் குரல் என்பதாகக் கருதப்பட்டது. 1936 ஜூன் 8 ஆம் நாள் ( All India Radio ) அகில இந்திய வானொலி என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் அப்பெயரே தொடர்கிறது. AIR என்ற சுருக்கம் காற்று என்பதைக் குறிப்பதாக அமைகிறது. ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையிலும் நாடு முழுமைக்கும் ஒரே பெயராக அமையவேண்டும் என்ற நோக்கிலும் மாநில மொழிகளில் பெயரிடப்படாமல் இன்னும் All India Radio என்றே பெயர் ஒலிபரப்பப்படுகிறது.


தொடக்க காலம் :



இந்தியாவில் அமைப்பு முறையிலான ஒலிபரப்பு ( Oraganized Broadcasting ) 1927 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் நாள் பம்பாயில் தொடங்கப்பட்டது. 1 கிலோவாட் ஆற்றலுள்ள அந்த மத்திய அலைவரிசை நிலையத்தை அந்நாள் இந்திய வைசிராய் இரவின் பிரபு ( Lord Lrin ) தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து கல்கத்தாவில் நாற்பது நாட்களுக்குப் பின்னர் ஒரு நிலையம் அதே அளவு ஆற்றலுடன் தொடங்கப்பட்டது. அன்றைய  வங்காள ஆளுநர் சர் ஸ்டான்லி ஜாக்சன் அதைத் தொடங்கி வைத்தார். அதே ஆண்டு அக்டோபரில் மதராஸ் மாகாண ரேடியோ கிளப் ( The Madras Presidency Radio Club ) கலைக்கப்பட்டது. பின்னர் 1930 ஏப்ரல் முதல் நாள் அன்று சென்னை நகராண்மைக் கழகம் முறையான ஒலி பரப்பைத் தொடங்கியது.




இந்திய வானொலி இப்படித் தொடங்கி நடத்தப்பட்ட நிலையில் பணத்தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது இடைஞ்சல்கள் ஏற்ப்பட்டு வந்தன. ஒலிபரப்புப் பொறுப்பேற்றிருந்த " இந்தியன் ப்ட்கேஸ்ட்டிங் " கம்பனியார் ரூ.15 லட்சம் முதலீட்டை அதிகாரப் பூர்வமாக வைத்திருந்த போதிலும் நிறுவனச் செலவு போகக் கையிருப்பை ஒன்றரை லட்ச ரூபாயே மீதிவைத்திருந்தனர். செலவோ பெருகி வந்தது. எனவே கம்பெனியார் இந்திய அரசினரை நிதி உதவிக்காக அணுகினர். 1930 ஜனவரியில் இந்திய அரசு, தாம் உதவ இயலாத நிலையைத் தெரிவித்து விட்டது. அந்நிலையில் இந்தியன் ரேடியோ டெலிகிராப் கம்பனி உதவிக்கு வந்து மூன்றரை லட்ச ரூபாய் கடனாகத் தந்தது.




மேற்கொண்டு இந்தியாவில் வானொலியின் வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.   







கழுகிற்காக

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

3 comments:

வைகை said...

தொடர்ந்து நல்ல தகவல்களை தரும் செல்வாவுக்கு நன்றி!

Chitra said...

இந்திய வானொலி தோற்றம் - வளர்ச்சி பற்றிய தகவல்களை இன்று தான் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி... தொடருங்கள்.

செல்வா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி :-)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes