Thursday, November 17, 2011

குடிகாரத் தந்தையே மகளின் கரம் கொய்த கொடூரம்...! ஒரு ரிப்போர்ட்...!

திடுக்கிட்டுத்தான் போனோம் செய்தித்தாளில் இந்த செய்தியை நாம் வாசித்த பிறகு.... எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்த சமுதாயம்? இதன் வேரில் புரையோடிப் போயிருக்கும் குறைகளை யார் நிவர்த்தி செய்வார் என்ற வேதனையில் மனம் துடித்ததை இங்கே எழுத்தாக்கி இருக்கிறோம்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மாணவி தனலட்சுமிக்கு தற்போது முழங்கைக்கு கீழ் மணிக்கட்டோடு கை கிடையாது ...? ஏன் என்று யோசித்து ஒரு வேளை எதிரிகளால் ஏற்பட்ட ஆபத்தாயிருக்குமோ, அறியாமல் ஏற்பட்ட ஆபத்தாயிருக்குமோ, வாகனங்களில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தாயிருக்குமோ, அல்லது சிறுவயதிலேயே ஏற்பட்ட ஏதேனும் ஒரு நோயின் விளைவாயிருக்குமோ என்றுதானே நினைக்கிறீர்கள்...?!



கிடையாது. அவளின் கரம் துண்டாடப்பட்டது...அவளது சொந்த தந்தையால். ஓ ! தகப்பனே ஏன் கையை வெட்ட வேண்டும் என்ற உங்களின் ஆச்சர்யமும் புரிகிறது. சுய நினைவில் ஒரு மனிதன் இருக்கும் போதே கோபத்தின் உச்சத்தில் அவன் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் போது அதிலும் குடி போதையில் இருந்தால்   வேறு என்ன செய்யும்....தன் சொந்த மகளின் கரத்தை வெட்டும் மிருகச் செயலைச் செய்யத்தானே தூண்டும்.?

குடிபோதையில் தன் அம்மாவிடம் சண்டையிட்டு அவளை அரிவாளால் புஜத்திலும், தலையிலும் தோள் பட்டையிலும்  மாறிமாறி வெட்டிய வெறி பிடித்த மிருகத்தை தடுக்கச் சென்ற அந்தச் சிறுமி நினைத்திருப்பாள் தான் பெற்ற மகள்தானே தன்னை ஒன்றும் செய்யமாட்டார் அப்பா என்று....

அவளின் கணிப்பு தோற்றுப் போனது....! போதையின் உச்சத்தில் மனிதனுக்குள் செத்துக் கிடந்த மனித நேயம் தடுக்க வந்த மகளின் கரத்தினையும் கொய்து போட்டது. விளைவு இன்று தனலட்சுமி முழங்கையோடு துண்டு பட்டு நிற்கிறாள்.

மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்துவதின் பின் புலத்தில் இருக்கும் வருமானம் எல்லாம் சரிதான்...! மூலைக்கு மூலை டாஸ்மார்க்குகளில் மதுவினை விற்று விடுவதோடு, தனது பணி முடிந்து விடுவதாக அரசும் நினைக்கிறது. அதே அரசு 'மது வேண்டாம், மது தீங்கானது' என்ற கொள்கையையும் கொண்டிருப்பதால்தான் குடி குடியைக் கெடுக்கும் என்ற மண்டை ஓட்டு அபாயத்தோடு மதுவினை விற்பனையும் செய்கிறது.

ஆனால்... மதுவின் பயன்பாடு பற்றி எந்த ஒரு விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த அரசோ, அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ அல்லது சமூக விழிப்புணர்வு இயக்கங்களோ முயல்வது இல்லை.  இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக மது வேண்டாம் என்றே சொல்கின்றன. மது தீயது என்று கூவி கூவி அறிவிக்கின்றன.

மது வேண்டாம் என்று சொன்னால், மது தீங்கு என்று சொன்னால் லாட்டரி சீட்டுக்களை ஒழித்தது போல கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து ஒட்டு மொத்த தேசத்திலும் மது என்னும் அரக்கனை ஒழிக்க வேண்டும். ஆனால் நடை முறையில் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அது சாத்தியம் இல்லை. தமிழ் நாட்டில் மட்டும் தடை செய்தால் கேரளாவில் இருந்து கள்ள மார்க்கெட்டில் வரும், இந்தியா முழுதும் தடை செய்தால் இலங்கையிலிருந்தோ பாகிஸ்தானிலிருந்தோ திருட்டுத்தனமாக மது கடத்தப்படும். ஆகவே முற்றிலும் ஒழித்தல் என்பது சமகாலத்தில் சாத்தியமாகாது என்று நாம் கூறும் அதே நேரத்தில்....

மேலே நாம் குறிப்பிட்டுள்ள் தனலட்சுமிக்கு நிகழ்ந்த கொடுமையைப் போல மேல் தட்ட வர்க்கத்தில் அதிகம் நடப்பது இல்லை. அப்படியே நடந்தாலும் சதவிகிதத்தில் குறைவு என்பதை ஒத்துக் கொள்வீர்கள்தானே....? காரணம் மது பற்றிய விழிப்புணர்வினை பெரும்பாலும் மேல் தட்டு வர்க்கம் அறிந்தே வைத்திருக்கிறது. ஓரளவிற்கு வெளித் தொடர்புகளும் மது பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களும் அதை சரியான விகிதத்தில் பயன் படுத்திக் கொள்கின்றனர்.

மது பற்றி விழிப்புணர்வின்றி அடித்தட்டு மக்களே பெரும்பாலும் மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். மதுவினை தீர ஒழிக்க வேண்டும் என்று போர்கொடி தூக்கிக் கொண்டு நடைமுறையில் சாத்தியமில்லாத விடயங்களுக்காக போராடுவதை விட அடித்தட்டு மக்களுக்கு மதுவின் பயன்பாடுகளைப் பற்றி விளக்கவும், அதனை குறைவாக பயன்படுத்தினால் என்ன நிகழும்...?! அதிகமாக பயன்படுத்தினால் உடலுக்கும், பொருளுக்கும் உறவுகளுக்கும் என்ன மாதிரியான கேடுகள் வரும் என்பதை விளக்கும் பிரச்சாரத்தை...அரசும், சமூக நல ஆர்வலர்களும் சொல்லலாம் என்பதோடு மட்டுமில்லாமல்...

தனி மனிதர்களாகிய நாம், நமது பகுதியில் இருக்கும் அல்லது நாம் அறிந்த தெரிந்த குடும்பங்களில் இருக்கும் மதுவினை முறையற்றுப் பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமும் இது பற்றிய விழிப்புணர்வை வாய்ப்பு கிடைக்கும்போது பண்போடு எடுத்துக் கூறலாம். இவையெல்லாம் உடனடி மாற்றத்தைக் கொடுக்கா விட்டாலும், முதலில் மதுவைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு, ஏற்பட்டு ஒரு கட்டத்தில் மது வேண்டாம் என்று ஒவ்வொரு மனிதனும் தானே முடிவெடுக்கும் நிலைமை ஏற்படும்....

அந்த பொன்னான நாளில் டாஸ்மார்க்குகள் போன்ற மதுக்கடைகள் வியாபாரமின்றி தன்னிச்சையாக தனது ஷட்டர்களை மூடிக்கொள்ளத்தான் வேண்டும்....! தனி மனித மாற்றம் இந்த சமுதாயத்தை செழுமையாக்கும் என்ற உண்மையை உணர்ந்தால் தனலெட்சுமிகளின் கரங்கள் வெட்டுப்படாமல் இருக்கும் என்பதையும் அறிக;

உதவி செய்யலாமே !

கரம் வெட்டுப் பட்ட தனலட்சுமி தற்போது எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இராமநாத புரம் ஆஞ்சலோ விடுதியில் தங்கியிருக்கும் அவரது பள்ளியின் ஆசிரியர் ஜெபாஸ்டின் வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறார். விறகு சுமக்கும் வேலை செய்யும் தனது தாயாராலும், மில்லில் வேலை செய்யும் தமது சகோதரியாலும் போதிய வருவாய் கிடைக்காமலிருக்கும் தனலட்சுமி தனக்கு நவீன செயற்கை கை கிடைக்க அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார். எதிர்காலத்தில் ஒரு போலிஸ் ஆபிசராகி குடிகாரர்களை திருத்துவதே தனது லட்சியம் என்று கூறும் தனலட்சுமியின் கனவு பலிக்கட்டும் என்றே நாமும் விரும்புகிறோம்.

சகோதரி தனலட்சுமிக்கு மேலதிக உதவிகள் செய்ய விரும்புவோர் கீழ்கண்ட அலைபேசிகளை தொடர்பு கொண்டு உங்களின் உதவிகளைச் செய்யவும்....!

சதானந்தம் - 97867 13264

ஜெபஸ்டின் - 94420 48565.

விழிப்புணவு பெற்ற ஒரு சமுதாயத்தில் மிருகங்களை ஒத்து மனிதர்கள் நடப்பது இல்லை.....! நாம் நிஜத்தில் விழிப்புணர்வு பெற்ற ஒரு சமுதாயத்தின் அங்கம்தானா என்று உங்களின் மனசாட்சியினை தொட்டு கேட்டுப் பாருங்கள்....என்ற வேண்டுகோளோடு கட்டுரையை நிறைவு செய்கிறோம்...!

கழுகிற்காக   
 தேவா 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


9 comments:

Kousalya Raj said...

// எல்லாம் ஒட்டு மொத்தமாக மது வேண்டாம் என்றே சொல்கின்றன. மது தீயது என்று கூவி கூவி அறிவிக்கின்றன.//

இன்னொரு பக்கம், தமிழக அரசின் வருவாயை பெருக்க மாநிலம் முழுவதும் 55 எலைட் ஷாப்கள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. உயர் ரக மது மட்டும் விற்பனை செய்ய படுமாம்.

இப்படி மது பான கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே செல்வது சமூதாயத்தை எந்த நிலைக்கு கொண்டு செல்லுமோ தெரியவில்லை.

மக்களுக்கு பல்வேறு தலையாய பிரச்சனைக்கள் இருக்கிறது அதை களைய முயற்சி எடுப்பதை விடுத்து இது போன்ற மது பான கடைகள் தற்போது அவசியமா ?

மக்களை அதிகம் யோசிக்க விடாமல் இருக்க என்னவும் செய்வார்கள்... அதை நாம் வேடிக்கையும் பார்ப்போம்!!

வாழ்க ஜனநாயகம் !!

Kousalya Raj said...

தனலக்ஷ்மியின் நிலை மிக வருத்தத்திற்கு உரியது...இங்கே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்கிறேன்.

தகவலை பகிர்ந்து, குடியை பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவிட்டமைக்கு நன்றிகள்.

saidaiazeez.blogspot.in said...

அணு உலைகளுக்கு எதிராக ஏற்பட்டுள்ள எழுச்சியைப்போல இந்த சாராய அரக்கனுக்கு எதிராகவும் நாம் எதிர்ப்பை கண்டிப்பாக காட்டியே ஆகவேண்டும். அணு உலைகள் விபத்துக்குள்ளாகும் போது மட்டுமே பாதிப்புகள் ஏற்படுத்தும். அனால் இந்த அரக்கனோ, ஒவ்வொரு முறை நாம் பயன்படுத்தும் போதும் நம்மையும் நம் சமூகத்தையும் பாதித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று பெங்களூருவில் பெண்கள் அமைப்பே சாராயக்கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த விழிப்புணர்வு நம் அனைவருக்கும் ஏற்படவேண்டும். மிகச்சரியான் பதிவு

சேலம் தேவா said...

அரசின் வருவாயை வேறுவகையில் பெருக்க முயற்சிக்கலாம்.மதிகெடுக்கும் மதுவை தொடாதீர்கள்.

SURYAJEEVA said...

தனி மனித சுயநலம் தலை தூக்க தொடங்கி இருக்கிறது... நான், நான் மட்டுமே பிரதானம்... மற்றவர் ஒரு பொருட்டல்ல என்ற மாற்றம் மெல்ல மெல்ல ஆன்மீகத்தால் பரப்பப் பட்டு வருகிறது... அதன் தொடர்ச்சியே இது போன்ற செயல்கள்... சுயநலத்தை வேரோடு அறுக்க, ஊடகங்கள் மதுவின் கேடுகளை உரக்க சத்தம் போட்டு சொல்ல வேண்டும்...
நமக்கு வராது என்ற நம்பிக்கையும், உடல் நலத்துக்கு நல்லது என்ற மிகப் பெரிய பிரச்சாரமும் தான் குடி போதையை வளர்த்து வருகிறது...
பீர் குடிப்பதால் கீழ் முடக்கு வாதம் வரும் என்று பீர் குடிக்கும் எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனை ஊடகங்கள் இதை குறித்து பேசுகின்றனர்...
ஆனால் பீர் குளிர்பானம் என்று கதாநாயகன்கள் பேசும் வசனங்களால்... சிறுவர்கள் சீரழிவதை என்ன என்று சொல்வது? சிறுவர்கள் டாஸ்மாக்கில் எந்த வித தடையும் இல்லாமல் அனைத்து சரக்குகளையும் வாங்கலாம் என்பது எத்தனை பேர் சாடுகின்றனர்?
நல்ல முயற்சி
அடுத்த போராட்டமாக டாஸ்மாக்கை அரசு மூடாது என்ற நம்பிக்கையில் தனி நபர் பங்களிப்பாய் குடிக்காமல் நாமே மூட வகை செய்வோம்...

பாலா said...

என்னங்க சொல்றது? கோபம்தான் வருது.

cheena (சீனா) said...

அன்பின் தேவா - தின மலரில் படித்தேன் - அன்றே மனம் வருந்தினேன் - பகிர்வினிற்கு நன்றி தேவா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Rathnavel Natarajan said...

குடியின் கொடுமையைப் பாருங்கள்.
இவைகளெல்லாம் மனிதர்களா?

துரைடேனியல் said...

Naama pulampurathellam Waste. 2011 la TN GOVT ku Rs.14,000/- Crore profit. Innum solla pona innikku Govt TASMAC moolamathan iyangi kittu irukku.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes