Friday, April 25, 2014

எப்போது நிகழும் எழுவரின் விடுதலை..?



எத்தனை காலங்கள் எங்களை அசுரர்களாகவே ஆக்கிவைத்திருப்பீர்கள்  மனிதர்களே.....? காலமெல்லாம் அசாத்தியத்தை நெஞ்சினில் வைத்துகொண்டு சத்தியம் பேசி நடிக்கும் உங்களையெல்லாம் இன்னும் எத்தனை காலங்களுக்கு தான் நாங்கள் சகித்துத் கொள்வது..?

இதிகாசமென்று  சொல்லி நீங்கள் ஒரு கதை சொல்வீர்கள் அதில் கடவுள் கதாபாத்திரம் உங்களுக்கு குரங்கு பாத்திரம் எங்களுக்கு! அவதாரம் என்ற பெயரில்   எட்டுகட்டி விஷ்தாரிக்கப்படும் பொய்களுக்கு எங்கள் கூட்டமே உங்களுக்கு உதவி நிற்கும். அப்படி உயிர் கொடுத்து உதவி நின்றாலும் நீங்கள் எங்களை வானரங்கள் என்று தான் அழைப்பீர்கள்  என்ன நியாயம் இது? யார் சொல்லி சென்ற  சமமற்ற  சமூக   நீதி இது..?

ராமாயணகாலத்தில் இருந்து திரிக்கப்பட்ட பொய்கள்   இதோ  ராஜிவ்காந்தி கொலை வழக்கு வரை  நீண்டு கொண்டே  இருக்கிறதே.... எப்போது  தான் விடியும்  பாரத கண்டத்தின் தென்கோடி புதல்வர்களில் பொழுது? ராஜிவ்காந்தி கொல்லப்பட்டவுடன்     இறந்து  போனாள்  கொலை செய்த  பெண்.   ஒரு சில  மாதங்களுக்கு    பின்னால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள் கொலைக்கு கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் 

ராஜீவ் கொலை என்னும்  ஒற்றைக் காரணத்தை கையில்  எடுத்துக்கொண்டு லட்சக்கணக்கிலே ஒரு இனமும்  கொன்றழிக்கப்பட்டாகிவிட்டது   குற்றவாளியென கருதப்பட்டவரையும்    கொன்று அவரின் கீழிருந்த விடுதலை  போராட்ட இயக்கத்தையும் அழித்துவிட்டோமென்று கூறிவிட்டீர்கள்... இன்னுமா தீரவில்லை உங்களின்  கொலைவெறி..?

இருபத்தி மூன்று வருடங்களாக  தூக்குக் கயிற்றின்  கீழ்  வாழ்வின் பெரும் பகுதியை கழித்து  விட்டு முறையற்ற விசாரணையினால் கிடைத்த   தண்டனை மிருகம் முழுவதுமாய் தங்களை தின்று  தீர்த்துவிடுவதற்குள் எப்படியாவது சுதந்திர காற்றை சுவாசித்து  நீதி எப்போதும் சாவதில்லை  என்பதற்கு சான்றாகி  சாவோம் என்று எண்ணிக்கொண்டிருந்த  எழுவரின் விடுதலை இதோ அரசியல் தகிடுதித்தம் செய்பவர்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது  

தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனயென்பது பதினான்கு வருடங்கள்தான் ஆதலால் இருபத்தி மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக சிறையில் இருந்தவர்களை மாநிலஅரசு விரும்பினால்  வெளியே விடலாம்  என்று  தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற மாநிலஅரசு மத்தியஅரசோடு  ஆலோசனை செய்து அவர்களை விடுதலை செய்ய சொன்னது. சட்டம் சொல்கிறது மாநிலஅரசின் முடிவை மத்தியரசு கட்டுபடுத்த முடியாதென்று  ஆனால் தென்கோடியில் வாழும் நீங்களெல்லாம்  எங்களை விட இழிந்தவர்கள் என்று கருதி எப்போதும் நம்மை அடக்கும் ஆதிக்க மனபான்மை கொண்ட கூட்டம் சொல்கிறது இது தவறென்று....!  ஆமாம் இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் இருந்த சுவடு தெரியாமல் போகப் போகும் ஆளும் மத்திய காங்கிரஸ்  இத்தாலிய மூளை எழுவர் விடுதலையை எதிர்த்து மனு செய்து மாநில அரசுக்கு முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டதனால் இதோ சட்டமே தடுமாறி ஆதிக்க சக்திகளின்  நிர்பந்தத்திற்கு திணறி நிற்கிறது 

ஏழுபேரை தூக்கு கயிற்றில் ஏற்றிவிடலாம் என்று திட்டமிட்டு வர்ணித்து வஞ்சித்து ஜோடிக்கபட்ட வழக்கு தூக்கு தண்டனையை   கொடுத்த போது  ஒரு போதும்  நினைத்து இருக்காது இந்த ஏழுபேருக்கு பின்னால்  ஏழரை கோடி தமிழர்கள் திரண்டு நிற்பார்களென்று. இப்போது எழுவரின் தண்டனை அந்த  ஏழுபேரோடு மட்டும் தொடர்புடையது மட்டுமல்ல அது ஏழரை  கோடி தமிழர்களின் மானம்!

  இதோ மீண்டும் ஒரு யுத்தத்திற்கு நீதி முழுவீச்சில் தயாராகி விட்டது....  

ஏழரை கோடி தேசிய இனமக்களை தலைமை  தாங்கி  நடக்கும்  தமிழகஅரசிற்கும்  அநீதியை  நிறுவி உயிர் குடிக்க  கோரபற்களை  காட்டி  நிற்கும் காங்கிரஸ் கட்சிக்குமான யுத்தமிது!    ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசனம் அமர்விலும் நீதி நிச்சயமாக வெல்லும் என்ற நமது நம்பிக்கையை  இருபத்தி மூன்று  வருடங்களாக தன் மகனுக்காக  போராடும் அம்மா அற்புதம்மாளுக்கு  ஆறுதாலாய் நாம்  கூறும்  அதே  நேரத்தில்   இறுதிவரை   எழுவரின்  விடுதலைக்கு   தோளோடு  தோள்  நின்று  போராடுவது  ஒவ்வொரு  மானமுள்ள  தமிழனின்  சமூக கடமை  என்பதை  நாம் இங்கு அழுத்தமாய் பதிவு செய்து கொள்கிறோம் 

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்

கழுகு 


(கழுகு  உயரபறக்கும் ) 

Monday, April 21, 2014

வாக்களிப்பீர்....உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கு !!!!












பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் மீது இன்னும் நமக்கு கூடுதல் வன்மம் உண்டு என்பதற்கு ஒரே ஒரு காரணம் ஈழம். ஈழத்தில் நடத்தப்பட்ட கொடுமையான போரை முன்னின்று நடத்தியது காங்கிரஸ் கட்சி என்னும் போது காங்கிரசை ஒரு மானமுள்ள சுயமாரியதைக் கொண்ட எந்த தமிழனும் ஆதரிக்க மாட்டான்.... ஆதரிக்கவும் கூடாது!!!!!

இப்படியான சூழலில் காங்கிரஸ் ஆளவில்லை எனில் வேறு யார் ஆள இருக்கிறார்கள் என்று பார்த்தால் இங்கே நமக்கு இருக்கும் ஒரே மாற்று மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாகட்சி மட்டும்தான்....என்பதற்காக மோடியை ஆதரிக்க முடியுமா என்ன...?

காங்கிரசுக்கு மாற்று பிஜேபி என்று முடிவு செய்து பிஜேபியை ஆதரிக்க கூடாது தோழர்களே மோடி இந்துத்துவா அடிப்படையைக் கொண்டவர். இந்துத்துவா என்பது வேறு இந்து மதம் என்பது வேறு, இந்து மதம் என்பது எளிமையாய் சிக்கலில்லாமல் வாழ பயிற்றுவித்து ஒரு மிகப்பெரிய கலாச்சாரத்தின் புதல்வர்களை இந்த தேசம் முழுதும் காலம் காலமாய் நிம்மதியாய் வாழ வைத்திருந்துக்கிறது.

இந்து என்ற சனாதான தருமம் என்னும் வழிமுறையை அரசியலாக்கிப் பார்க்க,ஆதாயாப் பிழைப்பு நடத்த உருவாக்கப்பட ஒரு போலி வார்த்தைதான் இந்துத்துவா...

மோடியின் ஆட்சியின் கீழ் முழு மூச்சாய் இந்த இந்துத்துவா இந்த தேசம் முழுதும் பிரயோகம் செய்யப்படும். நீங்களும் நானும் இந்து என்று அடையாளத்துக்குள் சிக்க வைக்கப்பட்டு மாற்று மதத்தினரை எதிரியாய் பார்க்க வேண்டிய சூழல்கள் திட்டமிட்டே உருவாக்கப்படும். எல்லா விசயத்துக்கும் மனிதாபிமானத்தின் மூலமும் சட்டத்தின் மூலமும் முடிவெடுக்காமல் மதத்தின் பெயரால் பாகுபாடு அரசியல் வரைமுரையற்று நிகழும்.

இது எல்லாம் நிகழாது என்று நீங்கள் நம்பலாம் ஆனால் பல்லாயிரக்கணக்கான குஜராத் வாழ் இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் கேட்டால் அவர்கள் சொல்வார்கள்...எந்த மாதிரியான பாகுபாடு ஆட்சி அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது அவர்கள் எல்லாம் எவ்வளவு அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், சிறுபான்மையினரை விஸ்வ ஹிந்து பரீட்சீத், ஆர்.எஸ்.எஸ், ராம் தர்பார்ஸ், ராம் தூன்ஸ் போன்ற அமைப்புகள் எப்படி நிர்ப்பந்திக்கின்றன என்பதை எல்லாம் ஒரு ஆய்வு மனோநிலையில் நாம் அணுகிப் பார்த்தால்

மோடி இந்தியாவில் என்னவெல்லாம் செய்வார் என்று தெளிவாய் புரிந்து அதன் மூலம் ஒரு பேரச்சம் நமக்கு ஏற்படுகிறது.

வாஜ்பாய் வேறு மோடி வேறு இதை தெளிவாய் நாம் உணரவேண்டும்.

தமிழ்நாட்டில் நமது வாக்களர்கள் பாரதிய ஜனதா கூட்டணியை ஜெயிக்க வைக்காமல், அதிமுகவிற்கோ அல்லது திமுகவிற்கோ வாக்களிப்பதே நல்லது.

மத்தியில் மோடி வென்றாலும், காங்கிரஸ் வென்றாலும்...மானமுள்ள தமிழர்கள் காங்கிரசையும் பிஜேபியையும் தோற்கடித்தோம் என்றாவது மார்தட்டிக் கொள்ளவாவது செய்யலாம்...!

பின்குறிப்பு: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லது பிஜேபியோடு திமுகவோ அல்லது அதிமுகவோ கூட்டணி வைக்குமெனில்......வரப்போகும் எல்லாத் தேர்தல்களிலும் அவர்கள் எழ முடியாத அளவுக்கு தோல்வியைக் கொடுக்கவேண்டியதும் நமது கடமையாகிறது.

- கழுகு

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்...)


Sunday, April 20, 2014

மோடி என்னும் மாயை.....விழித்துக் கொள்ளுங்கள் வாக்காளர்களே...!


நான் என் குடும்பத்தாரோடு உறங்கிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று  என் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. நிறைய பேர் கூட்டமாய் கத்திக் கொண்டு என் வீட்டு கதவை உடைப்பது போல தட்டி ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டிருக்கின்றனர். பயத்தில் எழுந்து என்ன ஏது என்று யோசிப்பதற்கு முன்பே என் வீட்டுக் கதவு உடைக்கப்படுகிறது.... திபு திபுவென்று கோஷமிட்டபடியே என் வீட்டிற்குள் நுழைந்த கூட்டம் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து இழுத்துச் செல்கிறது. என் குழந்தையை இரும்புக் குழாய் கொண்டு இடது பக்கத் தலையில் ஒருவன் அடிக்கிறான், ஆக்ரோஷமாய் அந்தக் கூட்டம் இதை ஏன் செய்கிறதென்றே என்று எனக்குப் பிடிபடவில்லை.


என் வீட்டை எரிக்கத் தொடங்குகிறது கூட்டம்.... இரண்டு பேர் சேர்த்து என்னைப் பிடித்துக் கொண்டு தாக்கத் தொடங்குகிறார்கள். என் தலை உடைந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. என் வீட்டுக்கு வெளியேயும் பக்கத்து வீட்டிலும் கூட இதுவேதான் நடந்து கொண்டிருக்கிறது. என்னைகீழே தள்ளி மிதித்து முசல்மான் நாயே என்று ஒருவன் கத்தியபடியே என் வலது காலை வெட்டி எறிகிறான்....

கையெடுத்து கும்பிட்டு விட்டுவிடும்படி என் பிள்ளை கதற, ஈவு இரக்கமின்றி பிள்ளை மீது பெட்ரோல் ஊற்றி எரித்தே விடுகிறான் ஒரு பாவி.....

காரணம்.........

கோத்ராவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இந்துப் புனிதப் பயணிகள் 57 பேர் ரயில் பெட்டியோடு எரிக்கப்பட்டு விட்டனராம். அவர்கள் வந்த ரயில் பெட்டியில் எப்படி தீ பற்றிக் கொண்டது என்று விசாரிக்க நேரம் எடுத்துக் கொள்ளாமல் இதைச் செய்யது முஸ்லீம்களாகத்தான் இருக்கவேண்டும் என்று கருதி ஒட்டு மொத்த குஜராத் வாழ் இஸ்லாமியர்களையும்  அடித்துக் கொல்கிறார்கள். படுகொலைகள் செய்கிறார்கள்....அப்போது எதுவுமே அறியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எனக்கோ, அல்லது நம் உறவுகள் யாருக்கோ நான் மேலே கூறிய யாவும் நடந்திருந்தால் அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் நண்பர்களே....?????

ஒரு மாநிலத்தில் இப்படி கட்டுக்கடங்காமல் மதத்தின் பேரால், அனுமானத்தின் பேரால் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் அதுவும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என்றும் பாராமல் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்த போது வேடிக்கைப் பார்த்த அந்த மாநிலத்தின் காவல் துறையையும்,  பாராமுகமாய் இருந்த அந்த மாநில முதலமைச்சரையும், நீங்களும் நானும் மன்னிக்க முடியுமா என் சொந்தங்களே....?

நரேந்திர மோடி......மட்டும் நினைத்திருந்தால் கலவரம் தொடங்கியதில் இருந்து 24 மணி நேரத்திற்குள் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். தனக்கும் தன் மாநில அரசுக்கும் வக்கில்லை என்றால் அவர் இந்திய பெருதேசத்தின் இராணுவத்தின் உதவியைக் கோரியிருந்திருக்கலாம். அவர் அப்படி செய்யவில்லை.  இது நிகழட்டும் என்று அனுமதிக்க விட்ட அவரின் மனோநிலையின் அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு சித்தாந்தம் பெரு நாகமாய் படுத்துக் கிடந்ததே அதற்கு காரணம். 

இன் த நேம் ஆஃப் ஃபெய்த் என்ற டாக்குமென்ட்ரி காணொளியைக் தொடர்ச்சியாய் என்னால் காணவே முடியவில்லை. வெறித்தனமாய் சூறையாடப்பட்ட இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அங்கே வெகு கோரமாய் காணமுடிந்தது. பாலகர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்கள் மழலை மொழியில் அந்த வன்முறைச் செய்திகளைக் கேட்டறிந்த போது கூனிக் குறுகிப் போனேன் நான். ஈழத்தில் நடத்தப்பட்ட வன் கொடுமைகளுக்கு யாதொரு குறைவும் இல்லாமல் குஜராத்தில் ஈனத்தனமான மதவெறியாட்டம் நடந்தேறியிருக்கிறது என்பதை என்னால் தெளிவாக உணர முடிந்தது. இலங்கை வேறு நாடு, வேறு சட்டம், வேறு நோக்கம், என்று அங்கே எல்லவிதமான கொடுங்கோல்களும் நிகழ சாத்தியமான சிங்களப் பேரினவாத அரசு இன அழிப்புக்கு பின்னால் இருந்ததனால் அப்படி நிகழ்ந்தேறியது என்று எண்ணி மனதை ஒரு சமநிலைக்கு கொண்டு வர நமக்கு சாத்தியமிருக்கிறது.


குஜராத் அப்படி அல்ல.... அது இந்திய தேசத்தின் வலப்பக்கத்தில் ஒடுங்கிக் கிடக்கும் ஒரு மாநிலம். அந்த மாநிலத்தில்தான் நம் தேசப்பிதா பிறந்தார். ஒழுக்கம் கெட்ட வேலைகளை அண்டை நாடுகளில் செய்து உலக அரசியல் அரங்கில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளச் செய்யும் ஈன வேலையை இந்திய அரசு இந்தியாவிற்குள் இருக்கும் ஒரு மாநிலத்தில் செய்யாது என்ற நம்பிக்கை வேறு நம்மிடம் நிறைய உண்டு. சாத்வீக பூமி, பாரத மாதா, ஜனநாயகமுள்ள மதச்சார்பற்ற பூமி என்றெல்லாம் சொல்லி மார்தட்டிக் கொள்ள நிறைவே சமாச்சாரங்கள் இருக்கும் இந்த இந்திய தேசத்தில்தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான உச்சகட்ட இனப்படுகொலை நிகழ்ந்தேறி இருக்கிறது.

குஜராத் கலவரத்திற்குப் பிறகு தொடர்சியாய் மோடிஜிதான் அங்கே முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அங்கே வாக்களிக்கும் அத்தனை பேரும் எந்தவித அச்சுறுத்துதலும் இல்லாமல்தான் வாக்களிக்கிறார்களா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்......இவ்வளவு பெரிய ஒரு வன்முறையை நிகழவிட்டு வேடிக்கை பார்த்த நரேந்திர மோடியை எப்படி இந்தியாவின் பிரமராக நாம் ஏற்றுக் கொள்வது என்பதுதான் எனது கேள்வி. சுதந்திர இந்தியாவை அதிக நாட்கள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இந்த தேசத்திற்கு செய்த மிகப்பெரிய அநீதி என்ன தெரியுமா? 

பாரதியஜனதா என்ற மதவாதக் கட்சியை வளரவிட்டதோடு மோடி போன்றவர்களை பிரதமர் பதவிக்கு கொண்டு வந்தால் என்ன என்று சாமனியர்களையும் நினைக்க வைத்ததுதான். ஆமாம்....பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்து நரேந்திர மோடி பிரதமரானால் அதற்கு முழு முதற் காரணம் மோடியின் திறமையோ அல்லது பாரதியஜனதா கட்சியின் சீரிய கொள்கைகளோ காரணமாகாது. காங்கிரஸ் என்னும் களவாணிக் கட்சியில் பெருத்துப் போன முதலாளி வர்க்கம் பாட்டாளிகளைப் பஞ்சப்பரதேசிகளாக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை பெரிய மறுமலர்ச்சியை கொண்டு வந்து நாட்டை சுபிட்சமாக்கி விட்டதைப் போல பறை சாற்றிக் கொண்டிருக்கும் அவல நிலைதான்....இன்றைக்கு பாரதிய ஜனதாவை கொம்பு சீவி வளர்த்து விட்டிருக்கிறது.

சனாதான தருமம் எனப்படும் இந்து மதமும், அதன் பூர்வாங்க தத்துவங்களும் மனிதர்களைப் போற்றவும், மனிதர்களை வழிநடத்தவும், நிம்மதியாய் அவர்கள் வாழவுமே பல சூட்சுமங்களை சட்டதிட்டங்களாய் சொல்லி வைத்திருக்கிறது. யார் தோற்றுவித்தது? எப்போது தோன்றியது...? என்றெல்லாம் ஆருடம் சொல்ல முடியாத தொன்மையான சிந்து வெளிப்பகுதி மக்கள்தான் பிற்காலத்தில் இந்துக்கள் ஆகிப் போனார்கள். கால மாற்றத்தையும், கலாச்சார நகர்வுகளையும் ஏற்று அனுசரித்து காலத்துக்கு ஏற்றார் போல சகமனிதர்களோடு கூடி வாழும் ஒரு மிகப்பெரிய புரிதலைச் சொல்லிக் கொடுத்த சனாதன மார்க்கத்துக்கு இன்று உரிமை கொண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கும், அந்த மார்க்கத்திற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்பதே உண்மை.

இந்து மதம் எப்படி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இன்று முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதே போல இஸ்லாமும், கிறிஸ்தவமும், பெளத்தமும் கூட அந்த அந்த மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன் என்று கூச்சலிட்டிக் கொண்டிருப்பவர்களால் இன்று சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அண்டை வீட்டுக்காரனை நேசி என்று சொல்லிக் கொடுத்தவர்களும், அவரவரின் மார்க்கம் அவரவர்க்கு என்று சொல்லிக் கொடுத்தவர்களும், அன்பே சிவம் என்று போதனையைச் சொன்னவர்களும்.......எப்படி வன்முறை கும்பல்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்...? சதித்திட்டம் செய்து தன்னை அரியாசனம் ஏறவிடாமல் செய்த தாயின் மீது கொண்ட பாசத்திற்காக பதினான்கு வருடம் காட்டிற்கு சென்ற இராமபிரான் என்ற புண்ணியனை தங்களுக்கு அடையாளமாக்கிக் கொள்ள இவர்களுக்கெல்லாம் என்ன அருகதை இருக்கிறது...? குகனோடு ஐவரானோமென்று  சமத்துவம் பேசிய சகாப்தனா கேட்டான் நான் பிறந்த இடத்தில் எனக்கு கோயில் வேண்டுமென்று....? 

பாபர் மசூதி இடிக்கப்பட்டது மனிதக்கோளாறினால்தானே அன்றி தெய்வ விருப்பத்தினால் அன்று!  ஆக்கிரமித்து சகமனிதனை அடக்கி ஆள ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அந்த அடையாளம் சார்ந்த ஒரு கூட்டம் தேவைப்படுகிறது. அந்த கூட்டம் எப்போதும் உணர்ச்சியின் பால் அடிமைப்பட்டுக் கிடக்கவும் அறிவைப் பயன்படுத்தாமல் இருக்கவும் கடவுள் மிக பிரமாண்டமாய் வடிவமைக்கப்பட்டு வெகுஜனத்தின் முன்பு இறக்குமதி செய்யவும் படுகிறார்.

குஜராத்தை இதுவரை ஆண்ட நரேந்திர மோடி அந்த மாநிலத்தை இந்தியாவிலேயே முதல் மூன்று மாநிலம் என்ற அந்தஸ்த்துக்குள் கூட  கொண்டுவர முடியவில்லை. மோடிக்கு காற்றடைத்து கொடுக்கப்பட்டிருக்கும் விஸ்வரூப பிம்பம் பொய்யானது என்பதை வரவிருக்கும் பாரளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டிக் கொடுக்காவிட்டாலும்  ஒருவேளை மோடி பிரதமரானால் அவரின் மோசமான கொள்கைகளால் ஏற்படப்போகும் இந்த தேசத்தின் வீழ்ச்சி அதைத் தெளிவாகக் காட்டிக் கொடுக்கத்தான் போகிறது.


மனசாட்சி உள்ளவர்களே....நியாயமான முடிவெடுங்கள்....!


கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்...)








Saturday, March 08, 2014

வெற்றிக் கொடி கட்டும் கழகம்... உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்!


பாரளுமன்றத் தேர்தலுல் கூட்டணி வியூகத்திற்கான பல்வேறு கட்சிகளின் செயற்பாடுகளை உற்று நோக்கும் போது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பம் முதலே தெளிவான போக்கோடு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருப்பதை நாம் காண முடிகிறது.

40 தொகுதிகளுக்கும் எதேச்சதிகாரமாக வேட்பாளர்களை அறிவித்து விட்டு பிராச்சாரத்துக்கு பிரதமர் கனவோடு புறப்பட்டிருக்கும் ஜெயலலிதா அம்மையார் தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளைப் பற்றிய எந்த ஒரு கவலையுமின்றி தன் மீதிருக்கும் அளவுக்கு அதிகமான நம்பிக்கையின் காரணமாய இயங்க ஆரம்பித்திருப்பது தமிழக மக்களிடையே ஒருவித வெறுப்பையே ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வெறுப்பு சர்வ நிச்சயமாய் பாரளுமன்றத் தேர்தலில் பிரதிபலித்து வெற்றிவாய்ப்புகளின் எண்ணிக்கையை குறைக்கத்தான் போகிறது. 

விஜயகாந்தைப் பொறுத்த வரையில் திமுக கூட்டணியோடு சேர்ந்திருந்தாரேயானால் கணிசமான இடத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது. தற்போது திமுகவின் ஒவ்வொரு அசைவும் ஸ்டாலினின் கூர்மையான பார்வைக்கும், ஆராய்ச்சிக்கும் பிறகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் வியூகத்திலிருந்து இனி ஸ்டாலினின் ஆளுமை திமுகழகத்தை முழுமையாக வழிநடத்தப் போகிறது என்பதை அறியாத விஜயகாந்த், போன ஆட்சியில் கலைஞர் மீதிருந்த இருந்த மக்களின் அதிருப்தியையும், இன்ன பிற ஊழல் வழக்குகளையும் மனதில் வைத்துக் கொண்டு திமுக பக்கம் போகாமல் தவிர்த்திருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. அதனாலேயே இப்போது காங்கிரஸ் எதிர் மனோபாவம் இருக்கும் தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து வெற்றி பெறலாம் என்று  மனப்பால் குடித்தபடியே பாஜக என்னும் மதவாதக் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தியும் கொண்டிருக்கிறார்.

காங்கிரசும், பாஜகவும், இருபெரும் திராவிடக் கட்சிகளின் உதவியின்றி தமிழகத்தில் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்பதே நிதர்சனம். இப்படியான சூழலில் விஜயகாந்த் + பாஜக கூட்டணி ஒன்று சேர்ந்து நிர்ணயிக்கப் போவது அதிமுக மற்றும் திமுகவின் வெற்றி வாய்ப்புகளைத்தானே அன்றி அவர்களின் வெற்றியை அல்ல.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுகவின் செயற்பாடுகள் மீதிருந்த நம்பிக்கையின்மை என்று  எல்லாவற்றையும் மெல்ல மெல்ல சரி செய்து, அழகிரியைக் கட்சியை விட்டு ஓரங்கட்டி வைத்து விட்டு ஒரு மிகப்பெரிய  மாநாட்டினை திருச்சியில் நடத்தி தங்கள் தொண்டர்களின் பலத்தை உறுதி செய்துள்ள திமுகவின் அட்டகாசமான பலத்துக்குப் பின்னால் விசுவரூபமாய் நின்று கொண்டிருப்பது ஸ்டாலின் என்னும் ஒற்றை ஆளுமை மட்டுமே...!

அதிமுகவும் திமுகவிற்குமான நேரடிப் போட்டிதான் இந்த பாரளுமன்றத் தேர்தலிலும் இருக்கப் போகிறது என்றாலும் திமுகவிற்கு 10லிருந்து 15 எம்.பிக்கள் சீட்  கிடைத்தாலும் கூட அது தமிழக ஆளுங்கட்சியின் மீது விழப்போகும் மரண அடி என்பதோடு மட்டும் இல்லாமல், பிரதமர் கனவினால் ஜெயலலிதா அம்மையார் தமிழகத்தில் தன்னுடைய ஆளுமைப் பிடியை மெல்ல மெல்ல இழக்கவும் தொடங்குவார். 

ஸ்டாலின் நேரடியான தலையீட்டோடு இப்போது நகர ஆரம்பித்திருக்கும் திமுகழகம் சமீப காலமாக அந்தக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து பொதுவெளியில் அதிக விமர்சனங்கள் இல்லாமல் தங்களை மிஸ்டர். க்ளீன் இமேஜில் வைத்திருக்கவும் செய்திருக்கிறது. போன தலைமுறைக்கான அரசியலைச் செய்து அந்த ஸ்டண்ட் யுத்திகளை கலைஞர் ஊடக பெருக்கம் நிறைந்த இந்த தலைமுறையினரிடம்  செயற்படுத்திய போது அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டதோடு மட்டுமன்றி கேலிக்குரியதாகவும் இன்றைய இளையர்களால் பார்க்கப்பட்டது. இப்படியான எல்லா சறுக்கல்களையும் கூர்மையாய் கவனித்து ஒரு நீண்ட நெடும் பயணத்திற்காய் தன்னையும் தன் கட்சியினரையும் தயார்படுத்தி இருக்கும் ஸ்டாலினே தற்போதைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் எனர்ஜி டானிக்.  தினந்தோறும் அவர் கொடுக்கும் கவுண்டர் அட்டாக் களை எதிர்கொள்ள முடியாமல் அதிமுக தலைமை தள்ளாடிப் போய்தான் இருக்கிறது. ஸ்டாலின் கொடுக்கும் புள்ளி விபரங்களும் அதிரடி கேள்விகளையும் எதிர் கொள்ளவோ பதிலளிக்கவோ முடியாமல்தான் இருக்கிறார் ஜெயலலிதா அம்மையார்.

தளபதி ஸ்டாலின் இன்றைய தலைமுறை இளையரின் விருப்பம் என்னவென்று அறிந்தவர். அவர் துல்லியமாய் அடுத்த தலைமுறையினரின் நாடி பிடித்துப் பார்த்துதான் திமுகழகத்தில் பலர் காங்கிரசோடு கூட்டணி வைக்கலாம் என்று சொன்ன போதும் பிடிவாதமாக மறுக்கவும் செய்தார். இப்போது தனித்து களமிறங்கி இருக்கும் உதயசூரியனுக்கு இருக்கும் மாஸ் தளபதி ஸ்டாலினின் வழிகாட்டுதலால் நிகழ்ந்தது.


பாராளுமன்றத் தேர்தலின் வெற்றிக்குப் பிறகு மதவாத சக்திகளுக்கு எதிரான நிலைப்பாடு என்று சொல்லி விட்டு காங்கிரசோடு மீண்டும் கூட்டணி வைத்து இப்போது தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கும் நிம்மதிப் பெருமூச்சுக்கு கண்டிப்பாய் ஸ்டாலின் முற்றுப் புள்ளி வைக்க மாட்டார் என்றே நாம் நம்புகிறோம். காங்கிரசை எதிர்த்து தமிழகத்தில் திமுக நிற்பதோடு மதவாதக் கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் நின்று தமிழர் நலனுக்காய் சீறிப்பாயுமெனில்...2016ல் மட்டுமல்ல...ஸ்டாலின் இருக்கும் அவரை அவர்தான் தமிழக முதலமைச்சராக இருப்பார் என்பது மட்டும் உறுதி.


கழுகு


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)






Thursday, February 20, 2014

ஏழு தமிழர்கள் விடுதலை....விஸ்வரூபமெடுத்திருக்கும் தமிழக அரசு..மிரட்சியில் மத்திய அரசு...!



இங்கே ஒரு விசயத்தை நாம் அனைவரும் தெளிவாக உணர வேண்டும். சட்ட சபையில் இவ்வளவு ஆணித்தரமாக மத்திய அரசுக்கு சவால் விட்டு தமிழக முதல்வர் விதி எண். 110ன் கீழ் ஒரு  அறிக்கையை அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு வாசித்தார் என்பதை தயவு செய்து யாரும் சாதரணமாக கடந்து சென்று விடாதீர்கள்...! இதில் அரசியல் இருக்கலாம் ஆனால் மத்திய அரசினை எதிர்த்து சட்டத்தின் போக்கில் போய் நியாயத்தை மனசாட்சியோடு அணுகி அதுவும் மத்திய அரசுக்கு மூன்று நாட்கள் கெடு வைத்து அவர் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு....

சுதந்திர இந்தியாவில் எந்த கொம்பனும் இதுவரையில் செய்யாத ஒன்று. இதற்காக முதலில் நாம் மாண்புமிகு முதல்வர் அவர்களைப் பாரட்டியே ஆகவேண்டும். இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ஏகாதிபத்தியத்தை தன் காலில் அணிந்துகொண்டு செயல்படும் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களில் இருக்கும் ஆதிக்க ஊடகங்களும்.....ராஜிவ் கில்லர்ஸ் என்றுதான் பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றவர்களை இன்னமும் சித்தரித்து விவாதங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 23 ஆண்டுகள் ராஜிவின் மரணத்திற்குப் பிறகு இன்று ஊடகங்கள் அபாரமாய் வளர்ச்சியடைந்து அவற்றின் பரிணாமம் வலுவான சமூக இணைவு தளங்கள் வரை சீறிப்பாய்ந்திருக்கிறது. அதாவது செய்தித்தாள்களைப் பார்த்தும் அரசு வானொலிகளைக் கேட்டும், தூர்தர்சன் செய்திகளைப் பார்த்தும்  ஏகாதிபத்திய மத்திய அரசின் வர்ணிக்கப்பட்ட செய்திகளை மட்டுமே நாம் அறிந்து முடிவெடுக்க வேண்டிய காலச் சூழல் இப்போது கிடையாது. அது எப்போதும் நம்மை அடிமைப்படுத்தி முட்டாளாக வைத்திருக்க காங்கிரஸ் மற்றும் இன்ன பிற கட்சிகளுக்கு தற்காலத்தில் பெரும் பின்னடைவைக் கொடுத்து அவர்களின் பொய் முகமூடிகளை கிழ்த்தெறியவும் செய்திருக்கிறது.

ராஜிவ் கொலை வழக்கு எவ்வளவு அபத்தமாய் செயல்பட்டிருக்கிறது என்பதை இன்றைக்கு அந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் கொடுத்திருக்கும் நேர்காணல் வாக்கு மூலங்களிலிருந்தும், எழுதிய புத்தகங்களில் இருந்தும் தமிழகத்தின் தென் கோடியில் குக்கிராமத்தில் இருக்கும் மனிதர்களும் அறிந்து கொள்ள முடியும். இணையத்தை தட்டி தேடினால் விலாவாரியாக அந்த வழக்கில் எத்தனை பொய்கள், பேட்டரி வாங்கிக் எதற்குக் கொடுத்தோம் என்று தெரியாத ஒரு அப்பாவி இளைஞன் எப்படி தூக்கு கொட்டடி வரை கொண்டு வரப்பட்டான் என்பதை எல்லாம் இன்று நாம் அகில உலக ஊடக வளர்ச்சியின் உதவியினாலேயே அறிந்து கொன்டோம். பேரறிவாளனிடம் வாக்குமூலம் வங்கிய புலனாய்வுத் துறை அதிகாரியே சொல்கிறார் நான் பொய் வாக்குமூலம் எழுதினேன் பேரறிவாளன் குற்றம் செய்தேன் என்று ஒத்துக் கொள்ளவில்லை என்று....

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு கை கட்டி வாய் பொத்தி கேளாதது போல் இயங்கும் மத்திய ஏகத்திபத்திய காங்கிரஸ் அரசு இன்று தமிழக அரசின்  7 பேர்களையும் விடுதலை செய்யும் முடிவுக்கு கண்டம் தெரிவித்திருக்கிறது. இது சட்டத்தை மீறிய செயல் என்று வாய் பேசத்தெரியாத கைப்பாவையாய் 10 வருடம் ஆட்சி செய்த இந்தியப் பிரதமர் சொல்கிறார். ராகுல் காந்தி கொந்தளிக்கிறார்.....தமிழக காங்கிரஸ்காரர்கள் லபோதிபோவென்று குதிக்கிறார்கள், பச்சைத் தமிழன் ப.சிதம்பரம் அவர்களை நீதிமன்றம் இன்னும் விடுவிக்கவில்லையே என்று தன் எட்டப்ப கொம்பினை மெல்ல நீட்டுகிறார்....

என்னதான் நடக்கிறது இந்தியாவில்...? 

இதுவரையில் போதனை செய்யப்பட்ட மூளைச்சலவை செய்யப்பட்ட மிருகமாய் நாம் எல்லோம் வாழ்ந்து விட்டோமா? இந்தியம் என்பதே நம்மை அடிமைகளாக வைக்க ஆதிக்க சக்திகள் போட்டு வைத்த பெருந்திட்டமா? வட இந்தியர்கள் ஏன் செலக்டிவாக பேசுகிறார்கள்? 23 வருடம் சிறையில் அடைத்து வைத்திருந்தற்குப் பெயர் தண்டனை இல்லாமல் என்ன புடலங்காய்? குற்றம் செய்கிறோம் என்று தெரிமலேயே ஒரு சூழலுக்குள் இருந்தவர்களை மிரட்டி மிரட்டி எழுதப்பட்ட தீர்ப்புகள் ஏன் இன்னும் தீக்கிரையாக்கப்படவில்லை....? யார் சந்திராசுவாமி? சுப்ரமணிய சுவாமிக்கும் இதற்கும் என்ன தொடர்பு? ராஜிவ் கொல்லப்பட்ட போது ஏன் வேறு முக்கிய தலைவர்கள்  சொல்லி வைத்தாற் போல அவருடன் இல்லாமல் போனார்கள்...? இப்படியான கேள்விகள் எல்லாம் உங்களுக்கும் எனக்கும் எழுந்தால் நாம் மடையர்கள்....நாம் முட்டாள்கள்...கேள்வி கேட்க திரணியற்ற ஜந்துக்கள்  என்று கருதிக் கொள்ளுங்கள்.

தமிழக முதல்வர் பிப்ரவரி 18 ஆம் தேதி கூறப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிர்க்குப் பிறகு சட்ட வல்லுனர்களோடு  கலந்தாய்வு செய்து தமிழக அரசு விரும்பினால் விடுதலை செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றப் பரிந்துரையை ஏற்று, காலம் தாழ்த்தி காங்கிரஸ் அரசும் மீண்டும் நீதிக்கு குழி தோண்டிவிடுமோ என்ற ஒரு அச்சத்தில் மத்திய அரசுக்கு கெடு வைத்து ஒரு உன்னதமான முடிவெடுத்து அதை ஏழரை கோடி தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் மன்றத்தில் அறிவித்திருக்கிறார்....

தமிழக முதல்வராய் வேறு யாரேனும் இந்தச் சூழலில் இருந்திருந்தால் ஜெயலலிதா எடுத்த முடிவை எடுத்திருப்பார்களா  அல்லது மாட்டார்களா என்பதை எல்லாம் தமிழக மக்களின் மனசாட்சிக்கே விட்டு விடுவோம். இந்தியா என்னும் நாடு காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானது அல்ல தோழர்களே.... , அது நேரு குடும்பத்தின் பெருஞ்சொத்தும் கிடையாது, இந்தியா பல்வேறு பிராந்தியங்களின் தொகுப்பு. இப்படி இருந்தால் நன்றாயிருக்கும் என்றெண்ணி பல பிராந்தியங்கள் ஒன்றிணைந்து இருக்கும் ஒரு சுதந்திர குடியாட்சி கொண்ட பெரும்நாடு. அது ஏன் எப்போதும் ஒரு கட்சிக்கும், ஒரு குடும்பத்திற்கும் ஆதரவாகவும் அவர்களை அண்டியும் இருக்கும் படி மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் நமது கேள்வி...?

மத்திய அரசினை எதிர்த்து செயல்படுகிறோம்....அதுவும் வட இந்திய ஆதிக்க முதலைகளையும், தமிழர் விரோத மனிதர்களையும் எதிர்த்து நாம் ஒரு அறிவிப்பு வெளியிடப்போகிறோம்....இதனால் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றெண்ணிதான் ஒரு உறுதியான முடிவினை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா எடுத்திருக்கிறார்...! மூவர் தூக்கிற்காக பலர் போராடி இருக்கிறார்கள் இதில்  என்ன ஜெயலலிதா மட்டும் பெரிதாய் செய்திருக்கிறார் என்று கேள்வி கேட்கும் நெஞ்சங்களே......

போராடியது அனேகர். அதை செயற்படுத்தி அதற்கான முழு முதற் விளைவுகளையும் எதிர் கொள்ளபோவது தமிழக முதல்வரும், நாம் தேர்ந்தெடுத்திருக்கிற இந்த தமிழக அரசும்தான் என்பதைக் கவனத்தில் கொள்க; ஏழு பேரின் விடுதலை சரியாய் செயல்பட்டு அவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்களேயானால் அதன் பலனை அறுவடை  செய்யப் போவது அதிமுக அரசுதான் என்னும் அதே வேளையில்....

இதனால் ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு அதற்கான விளைவுகளையும் பெறப்போவது ஜெயலலிதா அம்மையாரும் அவருடைய கட்சியும்தான் என்பதையும் உணர்க;

அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் கடந்து தமிழர் விடுதலைக்காக, நீதிக்காக தமிழக அரசு மத்திய அரசுடன் ஒரு யுத்தத்தை தொடங்கி இருக்கிறது என்று கருதி அதற்கு தமிழர்களாகிய நாம் இந்த அரசின் தோளோடு தோள் நின்று அவர்களின் முயற்சிகளுக்கு எல்லாம் ஆதரவு தெரிவித்து அப்பாவி தமிழர்கள் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்வோம்...! 

இது தமிழனாய் பிறந்த நம் அத்தனை பேருக்கும் இருக்கும் தலையாய கடமை என்பதை அழுத்தம் திருத்தமாக கழுகு பதிவு செய்து கொள்கிறது.


       கழுகு
 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Wednesday, February 19, 2014

நாங்கள் தமிழர்கள் உங்களை எண்ணி பெருமையடைகிறோம்...!



மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு
ஒரு சாமனியனின் மடல். சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் ஆளுமை நிறைந்த முதல்வர் நீங்கள் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது. வாழ்க்கையின் ஏதோ ஒரு திசையில் பயணித்து பின் புரட்சித் தலைவரோடு திரைப்படங்களில் நடித்து அதன் நீட்சியாக அரசியலில் ஈடுபட்டு இன்று அவர் உருவாக்கிய அனைந்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தன்னிகரற்ற தலைவியாய் நீங்கள் வீற்றிருக்கிறீர்கள். இது ஓரிரு வாக்கியத்தில் நான் எழுதியதைப் போலவோ அல்லது வெறுமனே வாசித்து கடந்து விடுவதை போலவோ எளிதானது அல்ல...!

ஆணாதிக்கம் இச்சமூகத்தில் மிகுந்து கிடந்த காலச்சூழலில் யாதொரு பின்புலமும் இல்லாமல் அரசியலில் மேலேறி வருவது எவ்வளவு கடினம் என்பது சாமனியனின் கற்பனைகளுக்கு எட்டாத விசயம். அதுவும் சுதந்திர இந்தியாவில் அந்த சுதந்திரத்துக்காக போராடிய ஒரு அசுர சக்தியான காங்கிரசை வீழ்த்திய திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெருங்கட்சியினை எதிர்த்து அரசியல் செய்யும் வலிவினை பெற்ற அதிமுக என்னும் பெருங்கப்பல் எம்.ஜி.ஆர் என்னும் வசீகரத்துக்குப் பின் நொறுங்கிப் போய்விடும் என்ற கணக்குகளை எல்லாம் துவம்சம் செய்துதான் நீங்கள் 1991ல் மிருக பலத்தோடு ஆட்சிப் பொறுப்பில் ஏறினீர்கள். ஜெயலலிதாவால் எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்ப முடியுமா என்று கேள்வி கேட்டவர்கள் யாவரும் பின்னொரு நாளில் கேள்விக் குறிகளுக்குள் அடைபட்டுப் போனார்கள்.

1996ல் மீண்டும் தமிழகத்தில் நடந்த ஆட்சிமாற்றம் உங்கள் வாழ்க்கைக்குள் மீண்டும் ஒரு போரட்டக் களத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சரிகளும் தவறுகளும் ஒருபக்கம் இருந்தாலும் அந்த அசாதரண சூழலை நீங்கள் எதிகொண்ட விதமும், நிலைகுலையாமல் வலிகளை தாங்கிக் கொண்டதும் நம் சமூகத்தில் இன்று பிறந்த பெண் குழந்தைகளும் உற்று நோக்கிக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள். 1989ல் சட்டசபையில் உங்கள் மீது நடந்த தாக்குதல்களும் அந்த வடுக்களை எல்லாம் சுமந்து கொண்டு நீங்கள் தேர்த்தலில் களமாடி வென்றெது எல்லாம் வரலாறு அம்மா...!

மீண்டும் தமிழகத்தின் முதல்வராய் தமிழ் மக்கள் உங்களை அமர்த்திப் பார்த்திருக்கிறார்கள். எத்தனையோ இன்னல்களையும், காலத்துயரங்களையும் எங்களைப் போன்ற சாமனியர்கள் சுமந்து கொண்டு நகர்ந்தாலும் ஒரு தனி மனிதராய் நீங்கள் வீறு நடை போட்டுக் கொண்டிருப்பதை ரசிக்காதவர்கள் என்று யாருமில்லை.

இதோ வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவினை எடுத்து தமிழர் நெஞ்சில் நீங்கா தீபமாகி இருக்கிறீர்கள்...! சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரையும் விடுதலை செய்ததோடு மட்டுமில்லாமல் இத்தனை ஆண்டுகளாய் கலங்கி நின்ற அற்புதத் தாய்க்கு மீண்டும் தன் மகனை மீட்டும் கொடுத்திருக்கிறீர்கள்...!

நாங்கள் தமிழர்கள்.....உங்களை எண்ணி பெருமையடைகிறோம்...! எங்கள் நன்றிகளை உங்கள் வெற்றியாக்குவோம்....!

மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு மூவரையும் விடுதலை செய்யா விடில் தமிழக அரசு விடுதலை செய்யும் - தமிழக முதல்வர்.


கழுகு

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Tuesday, January 28, 2014

கலைஞரின் அதிரடி.....அஞ்சாநெஞ்சனுக்கு விழுந்த அடி..!




கட்சியை விட்டு அழகிரியை நீக்கி குடும்ப அரசியல், வாரிசுகளுக்கு இடையேயான பதவிச் சண்டை போன்றவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் கலைஞர். கடுமையான சவால்களை சமாளித்து வெற்றி வாகை சூடி திமுக என்னும் பெருங்கப்பலை செலுத்திக் கொண்டிருக்கும் கலைஞருக்கு இது எல்லாம் ஜுஜுபி மேட்டர்தான் என்றாலும் அழகிரியை வைத்தே பல சூழல்களில் கலைஞரையும் திமுகவையும் கடுமையாய் விமர்சித்து வந்த அத்தனை பேரையும் இந்த செய்தி தேளாய் கொட்டி திருடர்களாய் துடிக்க வைத்தது என்பதும் உண்மைதான்.

தென்மாவட்டங்களில் அழகிரிக்கு செல்வாக்கு இருப்பது என்னவோ உண்மைதான் என்றாலும் அந்த செல்வாக்கின்  அடித்தளம் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் இல்லாத அழகிரி செல்வாக்குள்ள ஒரு மனிதர் என்பதைக் கடந்து வேறு எந்த ஒரு ஆளுமையையும் தமிழக அரசியலில் செலுத்தி விட முடியாது. அந்த செல்வாக்கும் அவரது அப்பாவான கலைஞர் என்பவரால் ஊதி பெரிதாக்கப்பட்ட செல்வாக்குதான்.

அழகிரி எந்த சூழலிலும் தன்னை ஸ்டாலினோடு ஒப்பிட்டுக் கொள்ள முடியாது. ஸ்டாலின் தன்னை திமுகழகத்தின் அடிமட்டத்திலிருந்து உயர்த்திக் கொண்டவர். தமிழக மக்களிடையே கலைஞரின் மகன் என்ற ஒரு உறவுத்தொடர்பையும் கடந்து அரசியல் அனுபவம் கொண்டவர் என்ற ரீதியிலும் அறிமுகமாகி இருப்பவர். ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டு அழகிரி பெருந்தன்மையோடு கட்சியில் தொடர்வாராயின் திமுகவிற்கு அது இன்னும் பலத்தைக் கூட்டும் என்றாலும் அழகிரி இல்லாவிட்டால் மிகப்பெரிய இழப்பு ஒன்றையும் அந்தக் கட்சி அடைந்து விடாது.

இன்னமும் கலைஞர் செய்து கொண்டிருக்கும் ஒரே தவறு ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவிக்காததுதான். ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவித்து அவரின் கையில் கட்சியை முழுமையாக ஒப்படைக்கும் பட்சத்தில் அதிரடியாக பாரளுமன்றத்தில் நினைத்ததை விட அதிக இடங்களை பெற திமுகவால் முடியும். ஏனெனில் சமகால மக்களின் தெளிவான விருப்பங்களை புரிந்தவராய் ஸ்டாலின் இருக்கிறார். காங்கிரஸ் கூட கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதமாய் நின்றவர் ஸ்டாலின்....அதே போல தேமுதிக என்னும் ஓட்டைப் பிரிக்கும் கட்சியை சாதுர்யமாய் பாரளுமன்றத் தேர்தலில் சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக இடங்களை ஜெயிக்கலாம் என்ற எதார்த்த கணக்கை போட்டவரும் ஸ்டாலின் தான்....

ஸ்டாலினின் திட்டமிடுதலில்  இப்போது ஓரளவிற்கு இயங்க ஆரம்பித்திருக்கும் திமுகழகம் முழுமையா ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பொழுது.... மம்மிக்கள் எல்லாம் டம்மிக்கள் ஆகும் கண்கொள்ளா காட்சிகள் தமிழகத்தில் நடந்தேறும் என்பதே உண்மை...!

நாடகமாயிருந்தாலும் அரசியல் சூழ்ச்சியாய் இருந்தாலும்....அழகிரி நீக்கம் அதிரடிதான்...!


கழுகு
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes