Wednesday, March 09, 2011

சுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....!ஒரு வழிகாட்டும் தொடர்..III

நாமும் ஒரு முதலாளியாவோம்............என்ற கனவுகள் அனைவருக்கும் இருக்கும் தொழில் தொடங்கி விடுவோம் ஆனால் நம் பொருட்களை எப்படி சந்தைபடுத்துதல் என்றல் நமக்கு தெரியாமல் இருக்கும் இதோ சந்தைபடுத்துதல் மற்றும் தொழில் முறை பற்றிய கட்டுரையில் பார்ப்போம்  

சென்ற பாகம் வெளிவந்த பிறகு, அதற்கு வந்த பின்னூட்டங்களிலும், தனிமடல்களில் வந்த கருத்துக்களிலும், நிறைய பேர் என்னென்ன தொழில்தொடங்கலாம், அதற்கான வழிமுறைகளை விபரமாகச் சொல்லவும் என்ற ரீதியில் கேட்டிருந்தார்கள். தொழில் செய்வதைப் பற்றிய ஒருகட்டுரையோ, தொடரோ அல்லது இதழ்களோ வந்தால், அதில் ஆர்வமுள்ளவர்கள் பலரின் டெம்ப்ளேட்டான கேள்வியோ எதிர்பார்ப்போஇப்படியாகத்தான் இருக்கின்றது.

ஆனால் நாம் இங்கு அதற்கு முற்றிலும் மாறுபட்டதொரு பார்வையில் தான்,  சுயதொழில் செய்வதைப் பற்றி அணுகப்போகிறோம். என்னென்ன தொழில் செய்யலாம், அதற்கான வழிமுறைகள் மற்றும் திட்ட அறிக்கை எல்லாம், சென்னை - கிண்டியிலுள்ள தொழிற்பேட்டையில், மாவட்ட தொழில் மையம் வளாகத்தில், இதற்கென உள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் செய்கின்ற தொழிலில் 'வெற்றியடைய' வேண்டுமெனில் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். இறுதி பாகங்களில் என்னென்ன தொழில், எப்படிச் செய்யலாம் என்பதையும் விரிவாகப் பார்த்து விடுவோம். 

சென்ற பாகத்தில் விட்ட இடத்திலிருந்து தொடங்குவோம். முப்பெரும் தொழில் பிரிவுகளில் முதலில் வணிகம் அதாவது டிரேடிங் பற்றி இப்பொழுது பார்ப்போம். 

'கல் தோன்றி மண் தோன்றா காலத்து... மூத்த குடி' என்ற வரையறைக்குள் கட்டுப்படுத்த இயலாத நீ...ண்ட வரலாற்றுப் பின்னனிக்கு சொந்தக்காரர்களான நம் தமிழ் இனம், கிடைக்கப் பெற்றுள்ள வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலே, சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, வாணிபத்தில்... அதிலும் கடல் கடந்த அண்டை நாடுகளிடையேயான வர்த்தகத்தில் சீனர்களுக்கு நிகராக ஈடுபட்டுக் கொண்டிருந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. 

அதனால் இயற்கையாகவே நம் தமிழர்களுக்கு பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வர்த்தகம், வணிகம் அல்லது டிரேடிங் (பங்குச் சந்தையில் உள்ள டிரேடிங் அல்ல) என்று அழைக்கப்படும் வினியோகத் தொழில் ரத்தத்திலேயே ஊறிப்போன ஒரு பாரம்பரியமிக்க தொழில் வகையாகும். 

வணிகம் என்பதை ஒரு பொருளை எடுத்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக பார்ப்போம். உதாரணத்திற்கு கடலை மிட்டாய் என்ற அனைவருக்கும் சுலபமாக புரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கும் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.  

இந்த கடலை மிட்டாயை உருண்டைகளாகவோ, சதுர அல்லது வட்ட வடிவ கேக்குகலாகவோ, ஏலக்காய் அல்லது நறுமணமூட்டப்பட்ட வகையினதாகவோ, சாதாரணமான ஜவ்வுதாள் என்று அழைக்கப்படும் பாலிதீன் பேக்கிங்கிலோ அல்லது கிரேவியர் பிரிண்ட் செய்யப்பட்ட லேமினேடட் பவுச் பேக்கிங்கிலோ... இப்படியாக நிறைய வகைகளில் அல்லது ஏதாவது ஒரு வகையில் உற்பத்தி செய்வது என்பது முதல் கட்டம். 

அடுத்து, இந்த கடலை மிட்டாய் என்பது 100 சதவிகித மக்களுக்கும் நன்கு அறிமுகமான ஒரு உணவுப் பொருள். அதனால் பொருளைப் பற்றிய அறிமுகம் மக்களுக்கு தேவையில்லை. ஆனால் சந்தையில் ஏற்கனவே நிறைய போட்டியாளர்கள் இப்பிரிவில் களத்தில் இருக்கும் நிலையில், நம்முடைய நிறுவனம் தயாரிக்கும் கடலை மிட்டாய் வகைகளை ஒரு நாமகரணம் சூட்டி சந்தையில் ஒரு பங்களிப்பை (சதவிகிதத்தை) நமக்கென உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது இரண்டாம் கட்டம்.  

இறுதியாக, சந்தைப்படுத்தப்பட்டு, ஒரு குறிப்பிட்ட சதவிகித சந்தைப் பங்களிப்பைப் பெற்று, மக்களுக்கும் பரிச்சயமாகியிருக்கும் நம்முடைய நிறுவன கடலை மிட்டாய்களை ஒரு நாட்டில் ஆரம்பித்து, அதிலுள்ள மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுக்காக்கள், நகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்கள் வரை கொண்டு சேர்க்கும் வேலை இருக்கிறதே அதுதான் வர்த்தகம் எனப்படும் வணிகம் அல்லது டிரேடிங் வகையைச் சார்ந்த மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாகும். 

இப்பொழுது வர்த்தகம், வணிகம் அல்லது டிரேடிங் என்று அழைக்கப்படும் தொழில் வகை என்பது என்ன? அதில் உள்ள வாய்ப்பு என்பது எவ்வளவு நீ..ண்டது என்பது ஓரளவிற்கு புரிய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். 

இந்த வர்த்தகப் பிரிவு தொழில் முறையை இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்ப்போம். உலகலாவிய நிலையில் இயங்கும் ஒரு நிறுவனம் ஒரு பொருளை (உதாரணத்திற்கு பிஸ்கட் என்று வைத்துக் கொள்வோம்) உற்பத்தி செய்கிறது. சந்தைப்படுத்துதல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு நிறுவனம் அந்த பிஸ்கட்டை உலக அளவில் சந்தைப்படுத்தி இந்தியாவிலும் பட்டி தொட்டி வரை கொண்டு சேர்க்க களம் இறங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். 

இந்த இடத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது வர்த்தகத் துறையில் ஈடுபட நினைக்கும் ஒரு நிறுவனம் அல்லது தனிநபரின் வேலை. 

அந்தப் பொருள், இந்திய மக்களிடம் ஓரளவிற்கு விளம்பரம் மற்றும் பல வழிகளில் பரிச்சயமாக்கப் பட்டிருக்கிறது, அது சந்தைக்கு வந்து, தமக்கு அருகே உள்ள கடைகளில் கிடைக்குமாயின் ஒருமுறை வாங்கி உபயோகிக்கலாம், பிடித்திருந்தால் தொடர்வதைப் பற்றி யோசிப்போம் என்ற மனநிலைக்கு, ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள், அதாவது ஐந்திலிருந்து பத்து சதவிகிதம் பேர் வந்திருந்தாலே..., அப்பொருளை விநியோகம் செய்யும் நீநீநீ....ண்ட வாய்ப்புகளில் நம்முடைய கையிலிருக்கும் முதலீட்டிற்கு தகுந்தாற்போல் அதற்குண்டான இடத்தில் நம்மையும் இணைத்துக் கொண்டு ஒரு சுய தொழில் முனைவோராக மாறலாம்

அது என்ன நீநீநீ...ண்ட வாய்ப்புகள்? அதிலும் நம் கையிருப்பிற்கு தகுந்தாற் போன்ற இடத்தில் சேர்வது...? என்பதெல்லம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? அதையும் பார்த்து விடுவோம். 

அந்த உலகலாவிய சந்தைப்படுத்துதல் (Marketting Company) நிறுவனம், இந்தியாவில் நுழைய முடிவெடுத்த உடனேயே, இந்திய அளவில் அந்த பிஸ்கட்டை விநியோகம் செய்ய தகுதி வாய்ந்த ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, தங்கள் நிறுவனத்திற்கான, இந்தியாவின் C & F ஏஜெண்டாக அதாவதுClearing & Forwarding Agent ஆக நியமிப்பார்கள்.

இதில் எதிர்பார்க்கப்படும் வியாபாரம் அதிகம் என்றால், இந்தியச் சந்தையை இரண்டு அல்லது மூன்று மண்டலங்களாகப் பிரித்து தனித்தனியாகக் கூட நியமிப்பார்கள்.  இதுதான் முதல் வாய்ப்பு. இதிலிருந்து ஆரம்பமாகின்றன அடுத்தடுத்த எண்ணிலடங்கா வாய்ப்புகள். 

இதில் நம் கையிருப்புக்கு, அதாவது முதலீட்டிற்கு தகுந்தாற் போன்ற இடத்தில் இணைவது என்றால் என்ன?

உதாரணத்திற்கு இந்த பிஸ்கட் கம்பெனியின் ஆண்டு விற்பனை அளவு, இந்தியாவில் 100 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் வருகிறது. அந்த ஒரு மாத சரக்கிற்கான தொகை மற்றும் மேலும் இரண்டு மாதங்களுக்கான முன்பணத்திற்கு பதிலாக வங்கி உத்திரவாதம் (Bank Guaranty) கொடுக்க வேண்டும். அதாவது 9 கோடி ரூபாய் ரொக்கமும், 18 கோடி ரூபாய்க்கான சொத்துப் பிணையமோ அல்லது ரொக்கமோ வங்கியில் வைத்திருக்க வேண்டும். சில சந்தைப் படுத்தும் நிறுவனங்கள் வைப்புத் தொகை கேட்பார்கள்
ஆனால் அதற்கு ஈடாக சரக்கை கடனாகப் பெற்றுக் கொள்ளும் வசதியும் இருப்பதால் நாம் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 

மேலே கூறிய 27 கோடியும் முதல் நிலை முதலீடு. இதற்கும் மேல் ஒரு மாத சரக்கை எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்திருக்கும் அளவிற்கான குடோன், மற்றும் நாடு முழுக்க அனுப்பும் பணிகளை நிர்வகிக்க குறைந்த பட்சம் 10 லிருந்து 20 பணியாளர்கள் வேலை பார்க்கக்கூடிய அளவிலான அலுவலகம் மற்றும் உபகரணங்கள், கட்டிட வாடகை, டெலிபோன், மின் கட்டணங்கள், ஊழியர் சம்பளம் இவையெல்லாம் போக, கட்டிடங்களுக்கான முன்பணம், தொழிலை சம்பந்தப் பட்ட அரசுத் துறைகளில் பதிவு செய்து கொள்வதற்கான கட்டணங்கள் மற்றும் ஃபார்மாலிட்டிகள்,  இத்தியாதிகள் என்று உத்தேசமாக இரண்டு கோடி ரூபாயும், மூன்று மாத செலவினங்களுக்கான  கையிருப்பாக ஒரு கோடி ரூபாயையும் சேர்த்து மொத்தமாக 30 கோடி ரூபாயில் வந்து நிற்கிறது இந்த முதல் வாய்ப்பில் நம்மை இணைத்துக் கொள்வதற்குத் தேவையான நமது முதலீடு! 

நம் கையில் 30 கோடி ரூபாய் இருக்கிறது என்றால், நாம் சுய தொழிலில் இறங்க இந்த முதல் வாய்ப்பிலேயே இணைந்து கொள்ள முயற்சிக்கலாம். இது படிப்படியாக பல நிலைகளைக் கடந்து, நம் கையில் வெறும் 25,000/- ரூபாய் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட, இதே விநியோக சங்கிலியின் கடைசி வளையமாகக் கூட நம்மை இணைத்துக் கொண்டு, "நானும் தொழில் முனைவோர் தான்" என்று கூறி நம்முடைய வளர்ச்சியின் முதல் படியில் காலை ஊன்றிவிடலாம்!


இந்த விநியோக சங்கிலி எப்படி ஒவ்வொரு நிலையாக இறங்கி நூற்றுக் கணக்கான புது தொழில் முனைவோருக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கின்றது என்பதை அடுத்த பாகத்தில் தொடர்ந்து பார்ப்போம். 


கழுகுகுழுமத்தில் இணைய....

கழுகிற்காக



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

7 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

start

எஸ்.கே said...

தொடர் மிக அருமையாக செல்கிறது. பல சந்தேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகின்றன!

MANO நாஞ்சில் மனோ said...

மிகவும் பயனுள்ள பதிவு....

ADMIN said...

"நானும் தொழில் முனைவோர் தான்"...! பயனுள்ள பதிவு..! நன்றி வாழ்த்துக்கள்..!

Suresh said...

I hope people really find it beneficial. Please keep on continue this. It is useful to me now.
Suresh.

Unknown said...

nice
http://www.abctradelinks.com

Unknown said...

Nice very goood
http://abctradelinks.com

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes