Friday, July 01, 2011

சவுக்கின் சொடுக்கு....! சவுக்கு சங்கரின் அதிரடி பேட்டி....!!!!


எமது மெளனங்களின் அடர்த்திகள் வெறுமனே போய் விடுவதில்லை மாறாக சீற்றமான அதிர்வலைகளை மனிதர்களின் மனங்களில் பரப்பிப் போடும் என்பதை திண்ணமாக நம்புகிறோம். எங்கே விழுகிறோமோ அங்கே விஸ்வரூபமெடுத்து எழுவது எமது வழமையில் வேடிக்கையாக பழகிப் போன ஒரு வாடிக்கை.

நீங்கள் சிரிக்கலாம் எம்மை கேலி பேசலாம், துன்புறுத்தலாம் சர்வ நிச்சயமாய் நீங்கள் சந்தோஷித்து இருக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாங்கள் பூரண சுதந்திரம் அளிப்பதோடு உமது மகிழ்ச்சிகளும், சோகங்களும் எம்மை வைத்து நிகழாமல் விரைவில் உம்மை வைத்தே நிகழும் வல்லமை வர வேண்டிய பிரார்த்தனைகளையும் தொடருவோம்....ஏனென்றால் எமது இலக்குகளே எமக்கு முக்கியமானவை, வலிகள் எல்லாம் தோன்றி மறையும் மாயைகள் என்றறிந்தே தொடரும் பயணத்தில் இந்த முறை பேட்டிக்காக சந்தித்த மனிதரின் தீர்க்கமான பார்வைகளும் தீட்சண்யமான கருத்துக்களும் சர்வ நிச்சயமாய் அடுத்தடுத்த  தலைமுறைகளை வழி நடத்தும் என்று கழுகு நம்புகிறது...

திரு சவுக்கு சங்கரை பேட்டிக்காக நாம் சந்தித்த போது எதார்த்தமாக பகிரப்பட்ட பதில்களின் பின்னால் சூழ்ந்திருக்கும் அக்னி சர்வ நிச்சயமாய் பற்றிப் பரவ வேண்டியது. இணையத்தில் எழுதி என்ன சாதித்து விடுவீர்கள் என்று கேட்பவர்களுக்கு எல்லாம் ஒரு சாட்டையடியாக சுழலுகிறது இந்த சவுக்கு....
1) சவுக்கு.....உருவான காரணம் என்ன?

தமிழகத்தில் 2008 ஆண்டு இறுதி வாக்கில் இருந்த மிக மிக மோசமான சூழலே சவுக்கு உருவாக காரணம்.    மிகக் கடுமையாக ஊழல்கள் வெளிப்படையாக நடைபெற்றும், அந்த ஊழல்கள் குறித்த ஆதாரங்கள் கையில் கிடைத்தும், அதை வெகுஜன ஊடகங்களில் வெளிக் கொண்டுவர தொடர்ந்து எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவியது மட்டுமல்லாமல், நம்மை காட்டிக் கொடுத்த அவலமும் அரங்கேறியதைத் தொடர்ந்தே, சவுக்கு தளம் தொடங்கப் பட்டது.  சவுக்கு தளம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் மற்றும் சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் செயல்பாடுகளைப் பற்றி பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடங்கப் பட்டாலும், தமிழகத்தில் அனைத்து ஊடகங்களும், கருணாநிதியின் கைப்பிடிக்குள் இருந்த சூழலில் வேறு வழியில்லாமல் தொடங்கப் பட்டது.2) இணையத்தில் எழுதி என்ன சாதித்து விட முடியும் என்று  கேட்பவர்களுக்கு  உங்கள் பதில்என்னவாயிருக்கும்?

இந்தக் கேள்வியில் தொக்கியிருக்கும் அவநம்பிக்கை சவுக்குக்கு இல்லை.   சவுக்கு தளத்தை தொடங்கும் போது, தமிழ் இணைய உலகம், தமிழ் சினிமா நடிகைகளின் புகைப்படங்களிலும், கிசு கிசுக்களிலும் சிக்கியிருந்தது.   சவுக்கு தளம் தொடங்கப் பட்ட காலத்தில் ஒரு நாளைக்கு 100 பேர் பார்த்தால் பெரிய விஷயம்.  சவுக்கு தளத்தை பாருங்கள் என்று சவுக்கின் நண்பர்களிடம் சொன்ன போது கூட, ‘நான் பார்த்த விஷயத்தை ஐபி முகவரியை வைத்து கண்டு பிடித்து விட்டால்’ என்ன செய்வது என்ற ஐயத்தை தெரிவித்தவர்கள் பலர்.  ஆனாலும், தொடர்ந்து, அயராமல், இரவு பகல் பாராமல் உழைத்ததன் பலன் வெளிப்படையாகத் தெரிந்தது.  தொடக்கத்தில் தளத்தை பார்க்கவே அஞ்சியவர்கள், பின்னாளில், கருணாநிதி ஆட்சியில் இருந்த போதே அவரையும் அவர் குடும்பத்தையும் கெட்ட வார்த்தையில் திட்டி பின்னூட்டம் இட்டதைப் பார்க்க முடிந்தது. ஆனாலும், ப்ராக்சி மூலமாக பின்னூட்டம் இட்டவர்களே பிரதானம்.   

எதற்கெடுத்தாலும் மக்கள் மோசம்.  மக்கள் அஞ்சுவார்கள் என்று அவர்களை உதாசீனப்படுத்தி விட்டு போவது என்பது சவுக்குக்கு அறவே பிடிக்காது.  மக்கள் அஞ்சத்தான் செய்வார்கள். அவர்களின் அச்சத்தை போக்குவது நமது பொறுப்பு என்றே சவுக்கு பார்த்தது.   அதன் விளைவுதான் தொடர்ந்து சிறைப் பட்டபோதும் எழுதியது.    இந்த அச்சமற்ற பணி, அதற்குண்டான பலன்களை தரவே செய்தது.  இன்று சவுக்கு தளத்தை ஒரு நாளைக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பார்க்கிறார்கள் என்பதே இணைய தளத்தில் சவுக்கு செய்த பணிக்கு ஒரு சான்று.3) உங்களைக் கவரந்த அரசியல் தலைவர் யார்? ஏன்?

சவுக்கை கவர்ந்த அரசியல் தலைவர் ஒருவருமே இல்லை.    ஒரு பேச்சுக்காக சே குவாரா, மா வோ என்று சொல்லி விட்டுப் போகலாம்.    ஆனால், தமிழகத்தில் ஒரு தலைவர் வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம்.  அது போன்ற தலைவர் தமிழகத்தில் ஒருவருமே இல்லை. 

ஈழம் என்று எடுத்துக் கொண்டால், தேசியத் தலைவர் பிரபாகரனைச் சொல்லலாம்.     அவர் மீது ஆயிரம் குற்றச் சாட்டுகள் உண்டு.    அவர் தனது சக இயக்க தலைவர்களைக் கொன்றார் என்பார்கள்.  எதிரிகளை கொன்று அழித்தார் என்பார்கள். 

இந்த உத்திகளைக் கையாளாத ஒரே ஒரு அரசியல் தலைவரைக் காட்டுங்கள் !!!!   உலகமே போற்றும் ஓபாமா ஓசாமா பின் லேடனை கொல்லவில்லையா ?  ஜார்ஜ் புஷ் சதாமை தூக்கிலிடவில்லையா ?  கருணாநிதி தனக்குப் பிடிக்காதவர்களை பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளவில்லையா ?  தன் கணவரைக் கொன்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு இனத்தையே சோனியா அழிக்க முயலவில்லையா ?  

ஊழல் செய்த தன் மகளின் உடலில் கொப்புளங்கள் வந்து விட்டது என்று அங்கலாய்க்கும் தலைவரையும், தன் சொந்த மகனை இனத்துக்கான போரில் ஈடுபட்டு இறக்க வைத்த தலைவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்க்க இயலவில்லை. 

அந்த  வகையில் தமிழீழத் தேசித் தலைவர் தான் சவுக்கைக் கவர்ந்த தலைவர்.


4) தமிழக அரசியல் என்ற பத்திரிக்கையின் ஆசிரியருக்கும் உங்களுக்கும் இடையே நட்பு உண்டா? ஆம் எனில் என்ன மாதிரியான? எந்த அடிப்படையில்? 

நட்பு உண்டு. தமிழ்ச் சூழலில் இருக்கும் பெரும்பாலான பத்திரிக்கையாள நண்பர்களைப் போலத்தான், தமிழக அரசியல் ஆசிரியருக்கும் சவுக்குக்கும் இடையேயான நட்பு.


5) உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், அதை நீங்கள் எவ்வாறு கொண்டீர்கள்..??

கசப்பான அனுபவங்கள், 17 ஜுலை 2008 கைதுக்குப் பிறகு ஏற்பட்டவையே.... அந்த அனுபவங்களே, சவுக்கு உருவாவதற்கும், வலிமையாக தொடர்ந்து செயல்படுவதற்குமான அடித்தளமாக அமைந்தன.


6) ஆளும் அரசுகளுக்கு எதிராக கடுமையான சாடுதல்களை வைக்கும்  உங்களின்  துணிவின்பலம் என்ன?


சவுக்கின் வாழ்க்கை ஒரு சாதாரண அரசு ஊழியராகத் தான் தொடங்கியது.   ஒரு மெமோ கொடுத்தால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற அரசு ஊழியரின் மனநிலை தான் சவுக்குக்கும் இருந்தது.   ஆனால், காலத்தின் கோலம், சவுக்கை மரணத்தைப் பார்த்து எள்ளி நகையாட வைத்தது.   ஒரு மெமோவுக்கு அஞ்சி தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த நபரை, ஒரு அரசு, விசாரணைக்க ஆட்பட வைத்தது.  கைது செய்தது.  சவுக்கை கைது செய்த போது லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு வந்திருந்த காவல்துறையினரின் எண்ணிக்கை 75.     முதலில் வீட்டில் தொடங்கி இரவு முழுவதும் நிர்வாணப்படுத்தி அடித்தார்கள்.     ஒரு சில குறிப்பிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் மீது பொய் வாக்குமூலம் கொடு என்று அடித்தார்கள். அவர்கள் அடித்த போது, என்ன ஆனாலும், என்னிடம் இருந்து நீங்கள் எந்த விஷயத்தையும் வாங்க முடியாது.  அதற்கு முன் என் மரணம் ஏற்படும் என்ற உறுதி ஏற்பட்டது.   அது, சித்திரவதை நடக்கிறதே என்ற அச்சத்தையும் தாண்டி, நல்ல அதிகாரிகளுக்கு நம்மால் துன்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற உறுதியே..  இறுதி வரை, இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 4 மணி வரை அடித்து, காவல்துறையினரின் கைகள் ஓய்ந்தது தான் மிச்சம்.   அவர்களால் சவுக்கிடம் இருந்து எந்த உண்மையையும் வாங்க முடியவில்லை.     

நீதிபதி ஆணையத்தின் விசாரணை தொடங்கிய போதே சவுக்குக்கு தான் என்றாவது ஒரு நாள் கைது செய்யப் படுவோம் என்பது தெரியும். அதனால், சவுக்கு தனது நண்பரிடம், பத்திரிக்கையாளர்களின் தொலைபேசி எண்களைக் கொடுத்து, தினமும் மாலை 7 மணிக்கு அழைப்பேன்.  அப்படி அழைக்கவில்லை என்றால், நான் கைது செய்யப் பட்டு விட்டேன் என்று அர்த்தம்.  உடனடியாக இந்த 10 பத்திரிக்கையாளர்களையும் அழைத்து நான் கைது செய்யப் பட்டேன் என்ற தகவலை சொல்ல வேண்டும் என்று ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருக்கும் போது, சவுக்கை என்ன செய்து விட முடியும் என்ற ஒரு அசட்டு துணிச்சல். 

அதற்குத் தகுந்தாற் போல, அந்த நண்பர் உடனடியாக பத்திரிக்கையாளர்களை அலர்ட் செய்ததும், அப்போது 2ஜி விவகாரம் ஏதும் இல்லாததால், சிபி.சிஐடி அலுவலகத்திலேயே பத்திரிக்கையாளர்கள் குழுமினர்.    

ஆனாலும், என்கவுண்டரில் சுட்டு விடுவேன் என்று மிரட்டினார்கள்.   சுட்டு விடுவார்களோ என்ற அச்சத்தை விட, இவர்கள் என்ன ஆனாலும் சுட மாட்டார்கள் என்ற உறுதியான நம்பிக்கை ஒரு வேளை அவர்கள் மீதான அச்சத்தை போக்கியிருக்கலாம்.   ஏன் சுட மாட்டார்கள் என்றால், பத்திரிக்கையாளர்களுக்கு கைது விபரம் தெரிந்த பிறகு, தைரியமாக என்கவுண்டிரில் சுட, தமிழகத்தில் ஒரே ஒரு போலீஸ்காரனுக்குக் கூட துணிச்சல் இல்லை என்பது, சவுக்குக்கு 18 ஆண்டுகள் இந்த காவல்துறையோடு பணியாற்றியதில் இருந்து தெரியாதா ? 

அதற்குப் பிறகு, சவுக்கு தொடங்கப் பட்ட பிறகு மீண்டும் என்கவுண்டர் என்றார்கள், ஆள் வைத்து அடிப்பேன் என்றார்கள்... அப்போதெல்லாம் சவுக்கு கலங்கவில்லை.  சவுக்கின் நண்பர்களை தொல்லைக்கு ஆளாக்கினார்கள்.   லஞ்ச ஒழிப்புத் துறையில் சவுக்கோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஒரு ஆண் ஊழியரையும், இரண்டு பெண் ஊழியர்களையும் தூத்துக்குடி, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு அநியாகமாக மாறுதல் செய்தார்கள்.  அதில் ஒரு பெண் ஊழியருக்கு நீதிமன்ற தடையாணை பெற முடிந்தது. ஆண் ஊழியருக்கு பெற முடியவில்லை.  மற்றொரு பெண் ஊழியர் சவுக்கோடு பேச்சை நிறுத்தினார்.  

அதற்குப் பிறகு, அந்த இரண்டு பெண் ஊழியர்கள் வீட்டிலும், கஞ்சா இருப்பதாக சோதனை செய்யலாம் என்று உளவுத்துறையினர், குறிப்பாக, அப்போதைய உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட் மற்றும் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் ஆலோசித்த போது, கடுமையான கோபம் வந்தது.

இவர்களைப் பற்றி தனிப்பட்ட  விமர்சனம், மற்றும் புலனாய்வு மேற்கொள்ளப் பட்டது.  அந்த விஷயங்கள் சவுக்கிலும் அம்பலப்படுத்தப் பட்ட போது, சவுக்கின் நண்பர்கள் மீதான தாக்குதல் குறைந்தது.   

இதற்கு மேல் என்ன செய்து விட முடியும்...... கழுத்தையா சீவி விடுவார்கள்.... அப்படியே சீவினாலும் சீவட்டுமே என்று ஒரு மனிதன் துணிந்த பிறகு, அவனை என்ன செய்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள் ?
7) ஈழம் பற்றிய உங்களின் பார்வை என்ன?

தனி ஈழம் ஒன்றே தமிழர்களுக்குத் தீர்வு.   இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளையாமல் ஒரு தீர்வு என்ற பேச்செல்லாம், கதைக்குதவாத பேச்சு.   ஒரு லட்சம் தமிழர்களை, நிராயுதபாணிகளாக தமிழகர்களை கொன்று குவித்து விட்டு அதை நியாயப் படுத்தியும் பேசி வரும் ஒரு இனத்தோடு, தமிழர்கள் என்றுமே சேர்ந்து வாழ முடியாது. 

தனி ஈழம் ஒன்றே தீர்வு.... புலிகளின் தாகம் மட்டுமல்ல.... உலகத் தமிழர்களின் தாகமும், தமிழீழத் தாயகம்.8) நீங்கள் அரசியலில் ஈடுபடுவீர்களா?

சவுக்குக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.9) உங்களின் பொழுது போக்கு என்ன ?

பொழுது போக்கு, நல்ல திரைப்படங்களைப் பார்ப்பது மற்றும், நல்ல புத்தகங்களை படிப்பது. பல்வேறு வேலைகளின் காரணமாகவும், சவுக்கில் எழுதும் வேலை இருப்பதன் காரணமாகவும், இந்த இரண்டு பொழுதுபோக்குகளுக்கும் நேரம் ஒதுக்குவது சிரமமாகவே உள்ளது.


நாளை வரை காத்திருங்கள்........பேட்டியின்  இறுதி பாகத்திற்கு
 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


11 comments:

Prabu Krishna said...

அருமை. அனல் பறக்கும் பேட்டி.

நிகழ்காலத்தில்... said...

இணையத்தில் எழுதி என்ன சாதித்து விட முடியும் என்று கேட்பவர்களுக்கு உங்கள் பதில்என்னவாயிருக்கும்?

இந்தக் கேள்வியில் தொக்கியிருக்கும் அவநம்பிக்கை சவுக்குக்கு இல்லை\\

இந்த நம்பிக்கையும் உறுதியும்தான் சவுக்கின் வெற்றிக்கு காரணம்.,

அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்

சேலம் தேவா said...

நல்ல பேட்டி..!! தற்போது ஆட்சியில் உள்ளவர்களைப்பற்றி சவுக்கின் நிலைப்பாடு என்ன..?!
சமச்சீர் கல்வி முறையை ஆதரிக்கிறீர்களா..?!
இதுபோன்ற கேள்விகள் நாளை வருமா..?!

Anonymous said...

உண்மையிலே அனல் பார்க்கும் பதில்கள் ...அவற்றில் ஒரு நம்பிக்கை ...

என்னை கவர்ந்த வரிகள் .

///ஊழல் செய்த தன் மகளின் உடலில் கொப்புளங்கள் வந்து விட்டது என்று அங்கலாய்க்கும் தலைவரையும், தன் சொந்த மகனை இனத்துக்கான போரில் ஈடுபட்டு இறக்க வைத்த தலைவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்க்க இயலவில்லை.////

Unknown said...

//தன் கணவரைக் கொன்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு இனத்தையே சோனியா அழிக்க முயலவில்லையா ?//

//மக்கள் அஞ்சத்தான் செய்வார்கள். அவர்களின் அச்சத்தை போக்குவது நமது பொறுப்பு என்றே சவுக்கு பார்த்தது. //

அருமையான பேட்டி.. தொடருங்கள். காத்திருக்கிறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சவுக்கு , சவுக்கை சுழட்டும் விதம் அருமை..

well done

Karthick Chidambaram said...

அனல் பறக்கும் பேட்டி.

Rathnavel Natarajan said...

நல்ல நேர்காணல்.

ஸ்ரீகாந்த் said...

ஒரு மனிதன் தன் வாழ்கையில் ஏற்பட்ட அனுபவங்களிரிந்து பிறக்கிறான்
சவுக்கும் அப்படியே .....அப்படிப்பட்ட மனிதரிடம் வெகு சுலபமாக சமசீர் கல்வி,தற்போதைய c m எப்படி என்று வெறும் கேள்விகளை தொடுப்பது மிகவும் தவறான ஒன்று. எனவே எதிர்பாற்பவைகளை வேண்டுகோளாக வைக்கலாமே தவிர வேறு வித மாக அல்ல

sasikumar said...

arumai

2009kr said...

அருமையான பேட்டி... சவுக்கு சங்கர் துணிச்சலின் மறுபெயர். ஊழல் ஆட்சி அகற்ற அவர் ஆற்றிய பணி வரலாற்றின் பொன்ஏட்டில் பொறிக்கப்படவேண்டிய நல்ல செயல்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes