Monday, May 28, 2012

வெடிக்கட்டும் கருத்துப் புரட்சி....! ஒர் கழுகு பார்வை...!


சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளின் தீர்வுகள் முடங்கிக் கிடப்பது மனித மனங்களில் என்று நாம் உணர்ந்த போது ஜனித்த குழந்தைதான் கழுகு. வலைப்பூக்களில் கழுகின் மூலம் என்ன செய்ய முடியும் என்ற ஒரு சந்தேகமோ கேள்வியோ நம்மிடம் எப்போதும் எழவில்லை என்றாலும் எழுதி என்ன செய்து விட முடியும் என்ற கேள்வியை நம்மிடம் தொடுத்துப் பார்க்காத ஆட்களும் இல்லை..

வரலாற்றின் மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் முதலில் ஜனித்த இடம் ஒரு தனி மனித மூளை. அவை எழுத்து வடிவமாகவோ அல்லது பேச்சு வடிவமாகவோதான் பரவி ஆக வேண்டும். மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படும் கருத்துக்கள் கேட்பாரற்றுக் கிடக்கலாம் அல்லது ஏளனப்படுத்தப்பட்டுப் பார்க்கலாம்? யார் நீங்கள் என்று ஓராயிரம் கேள்விகள் எம்மை துளைத்தே எடுக்கலாம்..? சலனங்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் சென்றடைய வேண்டிய இலக்கின் தூரங்கள்தான் அதிகப்பட்டுப் போகும்...

கடந்த 50 வருட சமூக அரசியலால் என்ன சாதிக்க முடிந்தது? ஜனநாயகப் போர்வையில் நாம் சுழன்று கொண்டிருந்தாலும் அதிகாரம் எல்லாம் ஒரு இடத்தில் குவிந்துதானே கிடந்து போகிறது. அதிகார வர்க்கம் எப்போதும் தனது ஆக்கிரமிப்பு கால்களை கொண்டு நம்மை நசுக்கி மிதிக்கத்தானே செய்கிறது.

மாறி மாறி வாக்களித்து வாழ்க்கையில் என்ன செழிப்பினை நாம் இதுவரையில் கண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா அவலத்திற்கும் ஏதோ ஒரு காரணத்தை கையில் பிடித்த படி நாளுக்கு நாள் இறுகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் அங்கத்தினன் என்பதை விட வேறு என்ன மிகப்பெரிய மாற்றங்களை நாம் சந்தித்து விட்டோம்.?

மாற்றங்கள் என்று நாம் சுட்டிக் காட்டுவது எல்லாம் உலக வளர்ச்சியில் ஒரு சதவீதம் கூட கிடையாது என்பதை வசதியாய் மறந்து போய்விடுகிறோம். வாழ்க்கையில் எப்போதும் நம்மை உயர்த்திக் கொள்ள நமக்கும் மேலே இருப்பவர்களை நாம் பார்த்து அந்த அளவிற்கு நம்மை உயர்த்திக் கொள்ள நாம் உழைக்க வேண்டும், கஷ்டங்கள் வரும் போது நமக்கு கீழே இருப்பவர்களைப் பார்த்து நாம் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் இருக்கும் தொழில் நுட்பரீதியான அணுகுமுறையையும், மனநலத்தையும், சுத்தத்தையும், ஒப்பிட்டுப் பார்த்து அந்த நிலைமைக்கு எம் மக்களைக் கொண்டு செல்ல வேண்டிய அரசாங்கம் நம்மை விட வளர்ச்சியில் குறைவாக இருக்கும் நாடுகளோடு ஒப்பிட்டு நம்மை திருப்திப் பட்டுக் கொள்ளச் சொல்கின்றன. ஆக்கப்பூர்வமான திட்டமிடல்களை ஒருபோதும் செய்யாத மத்திய, மாநில அரசுகளுக்கு எல்லாம் தத்தம்கட்சிகளை எப்போதும் காட்சிப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டியே ஒரு கவர்ச்சி அரசியலைத்தான் எப்போதும் செய்து கொண்டிருக்கின்றன.

இந்த நாட்டில் இனியும் அரசியல்வாதிகள் மாறுவார்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருப்பதும் அவர்கள் மாற வேண்டும் என்று தெருவில் இறங்கி கோசங்கள் போடுவதும், போராட்டங்கள் என்ற பெயரில் சாமனியர்களின் அன்றாட வேலைகளைத் தடைப்படுத்திக் கொண்டு தெருவில் நின்று வாழ்க, ஒழிக கோசம் போடுவதும் தோற்றுப் போன வழிமுறைகளானாலும் ஆட்சேபணையை தெரிவிக்கும் வழியாக இதை செய்யத்தான் வேண்டி இருக்கிறது.

உதவிகளைப் பொருளாகச் செய்து, செய்து ஒரு சோம்பேறித்தனமான சமுதாயத்தை உருவாக்கி விட்டது அரசியல்வாதிகளுக்கு வசதியானதாய் இருக்கலாம் ஆனால் சமுதாயத்திற்கு? கடந்த தலைமுறையான நமது பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகள் எல்லாம் ஏதோ ஒரு சமப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்து சென்று விட்டனர். அப்படியான ஒரு சூழலை கடந்த தலைமுறை தலைவர்களும், வழிகாட்டிகளும், சூழல்களும் செய்துவிட்டிருந்தனர்.

சரியாய் நமது காலத்தில் புரையோடத் தொடங்கியிருக்கும் இந்த குருட்டு அரசியலையும், அதன் விளைவுகளையும், புறச்சூழல் பற்றிய தெளிவுகளையும் கைக்கொண்டு நாம் நகர வேண்டியது, அதுவும் போர்க்கால அடிப்படையில் நாம் இயங்க வேண்டியதின் அவசியத்தின் பின்னால் யார் நிற்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

" நமது பிள்ளைகள்....."

நமது பிள்ளைகளுக்கு அரசியலும், அதன் சுயநல போக்குகளும், மக்களின் பொறுப்பில்லாத சுயநலங்களும் கூடி கொடுக்கப்போகும் பரிசு என்ன தெரியுமா?

தண்ணீர் பற்றாக்குறை
மின்சாரமின்மை
சாதி & மத அரசியல்
வறுமை
நெரிசல்
சுகாதாரமின்மை
பெயரிடப்படாத நோய்கள்
வறட்சி

இப்படியாக தொடர்ந்து கொண்டே போய் சுவாசிக்க நல்ல காற்று இல்லாமலும், மாரல் வேல்யூஸ் என்றால் என்ன என்று அறியாமலும், கடவுள், சாமியார், மூடநம்பிக்கைகள் என்றெல்லாம் தொடர்ந்து சின்னா பின்னப்பட்டு வறுமை சூழ அந்த வறுமையைப் போக்க, பணம் சேர்க்க பல வழிகளையும் கையாண்டு அப்படியான ஒரு ஓட்டத்தில் உறவுகள், பாசம், என்று எல்லாவற்றையும் தொலைத்து ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாய் தனிமைப் பட்டுப் போய்....

நினைத்துப் பார்க்கவே கொடூரமாய் இருக்கும் விளைவுகளை பற்றி நாம் மேற்கொண்டு பேசபோவதில்லை...நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

இவற்றுக்கெல்லாம் எங்கே போய் போராடுவீர்கள்? யாரைக் குறை சொல்வீர்கள்? தெருவிலே குப்பையைக் கொட்டுவதும், அதை அள்ளிச் சென்று துப்புரவு செய்யமால் இருப்பதும் அரசாங்கத்தின் பிரச்சினை என்று எடுத்துக் கொண்டோமானால்.....விளைவுகள் எல்லாம் யாரின் பிரச்சினைகள்?

பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதால் வரும் விளைவுகளைக் கொண்டு நொந்து கொள்கிறீர்களே அந்த பிரச்சினைகளின் மூலகர்த்தா நீங்கள்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? வாகனத்தினை பழுதுபார்க்காமல் காசு கொடுத்து தேர்ச்சி செய்து வாகனத்தினை ஆர்.டி.ஓ ஆபிசில் புதுப்பித்துக் கொள்கிறோமே....எவ்வளவு பெரிய தீமையினை சமுதாயத்தில் விதைக்கிறோம் என்று அறிந்துதானே செய்கிறோம்...?

சமூகம் என்பது மனிதர்களின் கூட்டம். மனிதர்கள் எல்லாம் நீங்களும் நானும்...நம்மைச் சுற்றியிருப்பவர்களும்....! நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் நம்மால் ஆன கருத்துக்களைப் பரப்புரை செய்வதும், ஏதோ ஒரு கட்சிக்கு விசுவாசமாய் இருக்கும் போக்கினை விட்டு சமுதாயத்திற்கு நல்லவை செய்யும் கட்சியையும், மனிதர்களையும் சூழலுக்கு ஏற்றார் போல ஆதரிக்கும் சுதந்திர மனப்பான்மையை விதைப்பதும்....

நம்மையும் நம்மைச் சுற்றியும் எப்போதும் சுகாதரத்தை பேணுவதின் அவசியத்தையும், பிள்ளைகள் பெற்றுக் கொள்வதிலும் அவர்களை வளர்ப்பதிலும் இருக்கும் மிகப்பெரிய கடமை உணர்ச்சியையும், பொருள் ஈட்டுவதில் காட்ட வேண்டிய நேர்மையினையும், தனக்கு வசதி என்று லஞ்சம் கொடுத்து வேலைகளை முடித்து விடுவதால் அதை வழமையாகக் கொள்ளும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உருவாகி விடுகிறார்கள் அதனால் அதனை முறித்துப் போடுங்கள் என்ற உண்மையினையும்,

சட்டத்தை மதிக்க வேண்டியது அரசு மட்டுமல்ல பொதுமக்களாகிய நாமும்தான் என்றும், மதங்கள் எல்லாம் மனிதனை வழிநடத்த மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள்தான், தனியே கடவுளர் என்று யாரும் கிடையாது உங்களின் மன வலிமையும், கருணையும்தான் கடவுளர்கள் என்ற கடவுள் தன்மைகள் பற்றிய உண்மையையும், சாமியார்கள் என்று பணம் கேட்பவர்கள் எல்லாம் சாகடிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களால் உங்கள் வாழ்க்கையை எள் அளவும் மாற்ற முடியாது என்றும்....

திரும்ப திரும்ப கூறுங்கள். இப்படியெல்லாம் கூற பணம் தேவையில்லையே...? பொருள் தேவையில்லையே....? கூட்டம் தேவையில்லையே....? இயக்கம் தேவையில்லையே....?இப்படியெல்லாம் நாம் நகர்கையில் பெரியவர்கள் சொல்லிச் சென்ற எல்லா நல்ல கருத்துக்களையும் நமக்குள் தேக்கி நகர்கையில் தனிப்பட்ட நமது சித்தாந்தம் இதுவென்று நாம் சொல்லிக் காட்ட வேண்டியதும் இல்லையே....

எங்கே எப்போது யார் நல்லது பகின்றாலும், எந்த புத்தகம் உண்மை சொன்னாலும் எந்த மதம் சத்தியம் பகின்றாலும் எடுத்துக் கொண்டு நகர்கையில் நாம் வலுவானவர்களாகத்தானே ஆவோம்...?

எந்த செயலையும் செய்யும் போது ஏன் செய்கிறோமென்ற உணர்வோடு உணர்ந்து செய்வதுதானே விழிப்புணர்வு....? ஆமாம் கழுகு இதைத்தான் இப்போது எழுத்து வடிவில் செய்து கொண்டிருக்கிறது. கழுகு என்பது ஏதோ பத்தோடு பதினொன்றாவது வலைப்பூ அல்ல, கழுகு குழுமமும் அப்படியே....

கழுகு என்பது ஒரு அமைப்பு அல்லது தனி நபர் வலைப்பூ என்பதெல்லாம் கிடையாது. கழுகு சமூக விழிப்புணர்வு கொண்டவர்கள் மேலும் அவற்றை எல்லோருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரையும் கழுகாகத்தான் பார்க்கிறது. சமுதாயத்திற்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் ஏதோ ஒன்றைப் பகிரவேண்டும் என்று எண்ணுபவர்களை எல்லாம் ஒருமித்து கருத்துக்களை பகிரும் ஒரு களமாகத்தான் அது இருக்கிறது.

கழுகு வலைத்தளத்தினை நீங்கள் வாசியுங்கள்.....! கழுகு பற்றி அறியுங்கள்....! கழுகோடு இணைந்திருங்கள்....! உங்களின் மனசாட்சிகள் சரி என்று சொன்னால்...கழுகு குழுமம் என்னும் விவாதக் களத்தில் இணையுங்கள்....!

சமுதாயத்திற்கான சேவை என்பது பொருள் கொடுப்பது மட்டுமல்ல.. தோழர்களே....! நமது அறிவைக் கொடுப்பதும், அனுபவத்தை பகிர்வதும் மிகப்பெரிய சேவைகளே....! இந்தச் சேவை முதலில் சிந்திக்கும் நண்பர்களுக்கு  திருத்தத்தையும் பலனையும் கொடுத்து பின் சமூகத்திற்கு பங்களிப்பாக திகழ்கிறது!

ஒன்றிணைவோம்...செயல்படுவோம்....தெளிவான, செழுமையான சமுதாயத்தின் அங்கமாவோம்!!!!

கழுகுடன் இணைந்து கொள்ளவும், தொடர்பு கொள்ளவும் - kazhuhu@gmail.com



(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)



9 comments:

Shankar M said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு...//எங்கே எப்போது யார் நல்லது பகின்றாலும், எந்த புத்தகம் உண்மை சொன்னாலும் எந்த மதம் சத்தியம் பகின்றாலும் எடுத்துக் கொண்டு நகர்கையில் நாம் வலுவானவர்களாகத்தானே ஆவோம்...? // இந்த புரிதல் போதுமானது. வலு - கருத்தில் வேண்டும். விழிப்புணர்வு - உணர்வது. எதன் மூலம் உணர்கிறோமோ அது விழி.

positivekarthick said...

Aamma

rajamelaiyur said...

நீங்கள் சொன்ன அனைத்தும் மிகவும் உண்மை ..

rajamelaiyur said...

கண்டிப்பாக இணைந்து செயல்படுவோம்

ராவணன் said...

எத்தனை பெயர்களில் வந்தாலும் வினவு கும்பலை யாரும் ஆதரிக்கமாட்டார்கள். அதிலும் அந்த நாய் மருதய்யனை யாரும் ஆதரிக்க முன்வரமாட்டார்கள்.

பொரட்ச்சியும் வராது..ஒரு புண்ணாக்கும் வராது.

நிகழ்காலத்தில்... said...

@ ராவணன் ஏற்கனவே ஒரு முறை வினவு தளத்தோடு எங்களோடு இணைத்து பேசி இருக்கறீர்கள். இப்போதும் நாய் என்ற ஏக வசனம். வேறு., நாகரீகமான விமர்சனஙளை வையுங்கள். வரவேற்கிறோம். இணையத்தில் எல்லோரும் எங்களுக்கு நண்பர்கள் என்ற மனப்பான்மையோடு இயங்கிவருகிறோம்.


புரட்சி வராது என்ற நம்பிக்கை உங்களுக்கு சரி என்றால் அதோடு விட்டுவிடுங்கள். :))
எங்கள் நம்பிக்கையில் குறுக்கிட வேண்டாம் ......

அடுத்த முறை இது போன்ற கமெண்ட் வராது என நம்புகிறோம்.

Ungalranga said...

நல்ல பகிர்வு,, இன்னும் இன்னும் விரியட்டும் கழுகின் சிறகு..!!

@ராவணன்,

கழுகு வினவின் பகுதி அல்ல.. புரட்சி ஏற்படும், என்ன அதில் உமது பங்கு எதுவும் இருக்காது..அவ்வளவுதான்..!!

saidaiazeez.blogspot.in said...

நண்பர் ராவணரே
புரட்சி என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்?
ஆயுதம் ஏந்துவதா, இல்லை.
நிச்சயமாக இல்லை.
நேற்றுவரை என் முந்தைய தலைமுறை படிக்கவில்லை, நானும் என் அடுத்த தலைமுறையும் அப்படி இருக்கமாட்டோம் என்று எண்ணி அதற்கான முயற்சியில் ஈடுபடுவது புரட்சி.
நேற்று வரை நான் வாடகை வீட்டில குடியிருந்தேன், இன்று முதல் இதற்கு ஒரு முடிவு கட்டி வெகு விரைவில் சொந்த வீடு வாங்குவேன்/கட்டுவேன் என்று எண்ணி செயல்படுவதும் புரட்சியே!
இன்றுமுதல் நான் கண்ட இடத்தில் குப்பையை கொட்டமாட்டேன் என்று முடிவெடுப்பதும் புரட்சியே!
நாளை முதல் கிரிக்கெட்டில் என் வாழ்வை முடக்கமாட்டேன் என்பதும், டிவி தொடர்களை பார்த்து நேரத்தை கொல்லமாட்டேன் அல்லது வேறெந்த போதைகளுக்கும் அடிமைபட்டு என் வாழ்வையும் என்னை நம்பியவர்களின் வாழ்வையும், மேலும் முக்கியமாக இந்த சமுதாயத்தையும் திக்குமுக்காடச் செய்யமாட்டேன் என்று உறுதி எடுப்பதுமே ஒரு புரட்சிதான் நண்பரே!
மேலும் இது போன்று பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட ஒரு புரட்சி ஏற்படாது என்று நீங்கள் சாபமிடுகிறீர்கள்.
பார்ப்போம் உங்களின் சாபம் பலிக்கிறதா அல்லது எங்களின் முயற்சி வெல்கிறதா என்று?

Unknown said...

BEST EFFORT.The joined effort CAN MOVE even mountains also.
VAAZHTHUKKAL.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes