Monday, May 21, 2012

சோதனையான ஒரு வருட அதிமுக ஆட்சி....மிரட்சியில் மக்கள்...! ஒரு அலசல்!

 
 
 
ஒரு வருடத்தை கடந்து போகையில் செய்ய வேண்டியவைகளை செய்யாமலும், செய்தவைகளை விளம்பரப்படுத்தி தம்மைத் தாமே பாராட்டிக் கொள்வதும்தான் சரி என்னும் மனப்போக்கினை இனி எக்காலத்தில் அரசியல்வாதிகள் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்களோ அன்றுதான் அது மக்களின் சாதனையாகும். ஆட்சியில் இருக்கும் கட்சி... மக்களைப் பற்றி கொஞ்சமேனும் சிந்திக்கின்றது என்று பொருள்.

குருட்டாம் போக்கில் அடித்த அதிர்ஷ்டத்தில் மாற்றுக்கு வழியில்லாமல் வாக்குப் பெட்டியில் அதிமுகவின் பொறி அழுத்தப்பட்டதை ஜெயலலிதா அவர்கள் இன்றும்கூட உணரவில்லை என்பது போலத்தான் தெரிகிறது. கருணாநிதியின் ஆட்சி நல்ல ஆட்சியோ, கெட்ட ஆட்சியோ ஆனால் சாமானிய சடுகுடுகளால் கூட எந்த கருத்தினையும் கூறி விமர்சிக்க முடியும் என்ற ஒரு சூழல் இருந்தது. ஆட்சி மாறி அம்மா அரியணை ஏறியவுடன் ஓங்கி, ஓங்கி கருணாநிதி அன் கோ-வை விமர்சித்த நடுநிலையாளர்கள், அதே வேகத்தோடு அம்மாவை எதிர்க்க முடியாமல் போயிருப்பதின் பின்னணியில் ஒளிந்திருப்பது கையாலாகாதத்தனமும் அம்மையார் மீதிருக்கும் பயமும்தான் காரணம் என்று நாம் கூறும் அதே நேரத்தில் இந்த ஆட்சியில் ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற ஏக்கத்திலும் பலர் மெளனமாய்  இருப்பதாகவே படுகிறது.

நிறைகளைச் சொல்லி அதைச் சாதித்த ஜான்சி ராணியாய் ஜெயலலிதாவைத் துதிபாடும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசிகளுக்கும், அமைச்சர்களுக்கும், அறிஞர் அண்ணாவைப் பற்றியும் திராவிடத்தைப் பற்றியும் இது வரையில் யாரும் சரியாக பாடம் நடத்தாதின் விளைவு....இன்று சட்டசபையில் துதி பாடும் பஜனைக்காட்சிகளாக விரிந்து கொண்டிருக்கிறது.

ஆட்சியிலேறிய நாள் முதலாய் அதிரடி என்ற பெயரில் அம்மாவின் ஆட்சி எடுத்த முடிவுகள் எல்லாம் நீதிமன்றங்களால் நறுக் நறுக் என்று குட்டப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டதை எல்லாம் சாதனைப்பட்டியலில்  ஏன் சேர்க்கவில்லை என்று அதிமுகவினரைப் பார்த்து கேளுங்கள் தோழர்களே...! சட்டமன்ற கட்டிடத்தையும், நூலகத்தையும் முந்தைய ஆட்சியில் உள்ளவர் கட்டிவிட்டாரே என்று அதனை மாற்றியமைக்க ஆணையிட்ட காழ்ப்புணர்ச்சிகள் கொண்டவரை எப்படி பரந்த மனப்பான்மை கொண்டவராக ஏற்றுக் கொண்டீர்கள் எம் மக்களே....?

இலவசத்தின் பெயரை விலையில்லாதது என்று மாற்றி கடந்த ஆட்சி அடித்த அதே ஜல்லியை வர்ணமடித்து விற்பனையை தன்னுடைய கண்டுபிடிப்பாக செய்தவர் இன்னமும் செய்ய முயன்று கொண்டிருப்பவர், இவர் எப்படி மாற்றத்தினை உண்டு பண்ணியவராவார்? மின்சாரப் பிரச்சினையை நாகரீகமாக நாம் ஒதுக்கி விடுவோம்...அது கடந்த காலத் தவறுகளின் நீட்சி.. அதற்கு யார் காரணமென்ற பஞ்சாயத்தை பிறகு வைத்துக் கொள்வோம். எது எப்படியாயினும் மின்சாரப் பற்றாக்குறைக்கு தீர்வு கூடங்குளங்களின் மூலமும் இன்ன பிற திட்டங்கள் மூலமாகவும் தீர்க்கத்தான் பட்டுவிடும். 

இதை முழுமையாக அறிந்து வைத்திருந்த ஜெயலலிதா மூன்று மாதத்தில் மின் பற்றாக்குறையை சரி செய்வேன் என்று தனது தேர்தல் பரப்புரையில் கூறியதை  ஏற்கனவே இருளில் விரக்தியில் கிடந்த நாம் இவர் ஏதேனும் செய்து விடமாட்டாரா என்று நம்பி நமது நம்பிக்கைகளை வாக்குகளாக மாற்றிப் போட்டோம், ஆனால் என்ன நிகழ்ந்தது...? ஆட்சி மாற்றத்தில் தலையாய மாற்றமாய் தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்த மின்சாரப் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கைகளை எடுத்ததா அதிமுக அரசு...? 

இல்லையே....!!!!

மின்வெட்டு இன்னமும் அதிகரித்துப் போனதை விட.. அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களால் வெகுண்டெழுந்த மக்கள் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வீதிகளில் இறங்கி போராடவேண்டிய சூழல்தான் ஏற்பட்டது. நியாயமாய் மின்பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்க செயல் திட்டங்களை தீட்டுவது மற்றும் மக்களுக்கு தாங்கள் பிரச்சினையை தீர்க்க என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கத் தவறிய அரசு, விலைவாசிகளை கூட்டியதோடு இல்லாமல், எப்படி தங்களின் விலையில்லாத பொருட்களை கொடுத்து மக்களை வளைப்பது என்றும் யோசித்துக் கொண்டிருந்தது.

இதைக் கொடுத்தேன்,அதைக் கொடுத்தேன் என்று அம்மா சொல்வதும் அதற்கு  அமைச்சர் பெருமக்கள் விடாமல் ஜிங்...சாங் தட்டுவதும் ஏழரை கோடி தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயல்தானே..? இன்னும் சொல்லப் போனால் எப்படி இப்படி எல்லாம் வாய் கூசாமல், மனம் கூசாமல் வாழ்த்துப் பா பாட முடிகிறது என்பன போன்ற கேள்விகள் நியாயவான்களின் தொண்டைகளில் விரக்தியாய் அடைபட்டுக் கிடக்கின்றன.

அரசு என்பது லாப நஷ்டம் பார்க்கும் ஒரு தனியார் நிறுவனம் அல்ல என்று ஒருகாலத்தில் அறிக்கைகள் விட்ட அம்மையார் அரசின் லாபத்திற்காக இன்று மக்களின் கோவணங்களையும் பிடுங்கிக் கொண்டு விட்டு சாதனைகள் படைத்தேன் என்று கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கை தானே? அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற்றி விட்டு அதன் மூலம் வருவாயைப் பெருக்குகிறேன்.... என்று அம்மையார் சொல்வது நாலாவது படிக்கும் மாணவனின் நிர்வாகத்திறனுக்குச் சமமானது.

கஜானா காலி மற்றும் போன ஆட்சியில் எல்லாவற்றையும் கருணாநிதி செலவிட்டு விட்டார் என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டு மக்களிடம் தானே நான் வரவேண்டும், நான் எங்கு செல்வேன்.... ? இது உங்கள் சகோதரியின் அரசு என்று  அம்மையார் பேட்டி கொடுத்ததில் ஒரு நியாயம் இருந்தது....என்றே வைத்துக் கொள்வோம், ஆனால் இப்படி எங்களின் அடிமடியில் கை வைத்து விட்டு உங்களை யார் இப்படி விலையில்லா பொருட்களை எங்களுக்கு கொடுக்கச் சொன்னது என்று யாரேனும் ஒரு மானமுள்ள தமிழன் நாக்கை பிடுங்கிக் கொள்வதைப் போல கேட்க என்ன வழி உண்டு நமது தேசத்தில்...?

பேருந்து கட்டணத்தை உயர்த்தி விட்டு மடிக் கணிணி கொடுக்கிறார், பால் விலையை ஏற்றி விட்டு மிக்ஸியும் கிரைண்டரையும் கொடுக்கிறார், மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டு ஆடுமாடுகள் கொடுக்கிறார், இது என்ன கொடுமை என்று யோசித்தாவது பார்த்திருக்கிறோமா நாம்?

இதுதான் புரட்சியா? இதுதான் மாற்றமா?

சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பேன் என்ற அம்மையாரின் ஆட்சியில்தான் என்கவுண்டர் கொலைகள் நடந்தேறின என்பதை எம் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். என்கவுண்டர் சரியா இல்லையா என்பதை விட்டு விடுவோம்...ஆனால் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், செயின் பறிப்பு திருடர்களும் கடந்த ஒரு வருடத்தில் ஆங்காங்கே எந்த பயமுமின்றி சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறார்களே.....

சட்டம் ஒழுங்கு என்ன சம்மணமிட்டு தியானத்தில் இருக்கிறதா?

நிதானமில்லாத ஒரு நிர்வாகிதான் சரியில்லாத வேலையாட்களை எப்போதும் நியமிக்கிறான். தடுமாற்ற புத்தியால்தான் தனது செயல்களில் தானே நம்பிக்கை அற்றுப் போய் அவர்களை அடிக்கடி மாற்றவும் செய்கிறான். ஆட்சிப் பொறுப்பில்  ஏறியதிலிருந்து எத்தனை முறை அதிகாரிகளையும் அமைச்சரவையையும் அம்மையார் மாற்றியிருக்கிறார் என்பதையும் சாதனைப்பட்டியலில் நாம் சேர்த்தே ஆகவேண்டும்.

அன்பான தோழமைகளே.....!!!!

இந்தக்கட்டுரையைக் கூட கடந்த ஒரு ஆண்டில் அம்மையாரின் ஆட்சியில் இருக்கும் குறையை எடுத்துரைக்கும் ஒரு நேர்மையான பார்வையாக கருதாமல் எமக்கும் ஏதோ ஒரு கட்சியின் கரைவேட்டியை கட்டிவிட்டு விமர்சிக்க சிங்கநிகர் கூட்டம் அலைமோதும்.... ஆனால் தத்தம் மனசாட்சியை தொட்டுப்பார்த்து நாம் சுட்டிக்காட்டியிருக்கும் விடயங்களை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பரிசீலித்துப் பார்க்கட்டும்.... அப்போது சர்வ நிச்சயமாய் எமது கருத்துக்களோடு அவர்களும் உடன்பட்டுத்தான் ஆக வேண்டும்.

பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சி பொறுப்பேற்ற ஒரு முதலமைச்சர் ஒரு வருடத்திற்குள்ளாக வந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற பாகீரத பிரயத்தனம் செய்கிறார், அமைச்சர்களை எல்லாம் தொகுதிக்கு அனுப்பி அங்கேயே வாசம் செய்யச் சொல்லி தனது ஆள், அம்பு பரிவாரங்களின் மூலம் வெற்றியை எப்படியேனும் எட்டிப்பிடித்து விடவேண்டும் என்று அரசு இயந்திரங்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு முயன்று வெற்றிப் பெறுகிறார் என்றால்....

அவரின் திராணி என்னவென்று மக்களாகிய நமக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

அ.தி.மு.க. அரசு ஓராண்டு கடந்து விட்ட நிலையில் எந்த மாதிரியான தாக்கங்கள் கொடுக்கும் மாற்றத்தையும் மக்களிடம் கொடுக்கவில்லை என்று மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் தெளிவாய் கூறுகின்றன. பொருளாதாரமும் இன்ன பிற சுகாதார, மற்றும் மருத்துவ தேவைகளும் இன்னமும் பூர்த்தி செய்யப்படாமலேயே கண்ணீர்க் கதையாக எம் மக்களின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கையில் கொடநாடு எஸ்டேட்டுக்களை தீக்கிரையாக்கினால் என்ன என்றுதான் சமூக கோபம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் சிந்திப்பான்.

மேம்போக்கான மக்களைக் கவரும் கவர்ச்சிகர திட்டங்களை ஆங்காங்கே செய்து விட்டு அது தமிழக மக்களின் விடியல் என்று கூறுவதும், 2023ல் ஏழைகளே தமிழகத்தில் இருக்க மாட்டார்கள் என்று கூறுவதும் சுத்த வடிகட்டின முட்டாள்தனம் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்களின் தேவைகளை மக்களோடு மக்களாக நின்று தீர்க்க முடியாத எந்த ஒரு தலைவனும் சமூகத்தின் நலனுக்கு அப்பாற்பட்டவனே... இதற்கு ஜெயலலிதாக்கள் விதிவிலக்கு அல்ல...!

தமிழனின் பூர்வாங்கத் தொழிலான விவசாயத்தை வளப்படுத்தவும், நீர்ப்பிடிப்புகளை அதிகமாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டிருக்க வேண்டும்...ஆனால் அப்படியான அதிரடி மாற்றங்கள் இந்த ஆட்சி மாற்றத்தால் நமக்கு கிடைத்திடவில்லை.

ஏற்கெனவே மின்சாரப்பற்றாக்குறையால் நலிந்து போயிருக்கும் எல்லா தொழில்களும் இன்னமும் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளி விட்டிருக்கின்றன. நியாயமான மக்கள் நலம் விரும்பும் முதலமைச்சர் சசிகலா & கோ-வை வைத்து நாடகங்களை நடத்தி மக்களை திசை திருப்பாமலும், எப்போதும் தமது அமைச்சரவை ஜால்ராக்களின் ஜிங் ஜாங்க்களில் குளித்துக் கொண்டிருக்காமலும்....

தமிழக மக்கள் நலன் என்னும் எதார்த்தத்துக்கு வந்து இனி வரும் வருடங்களிலாவது போலியான கவர்ச்சி அரசியலை விட்டு விட்டு..... மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு வழி வகைகள் செய்வதோடு ஆடம்பர அரசியல் போக்கிற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கவும் வேண்டும்.

அரசின் செயல்பாடுகளும், அதன் விளைவுகளும் இயல்பான ஒரு அரசு செய்யும் கடமையாக பார்க்கப்படவேண்டுமே அன்றி அது ஒரு தனி நபர் செய்த சாதனையாக பார்க்கப்படக் கூடாது.  மாற்றம் விரும்பி வாக்களித்த மக்களின் வாழ்க்கையில், மனோநிலையில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை என்பதை புரட்சித் தலைவிகள் உணர்ந்தால் மீண்டும் அரியணை ஏறலாம்....

இல்லையேல்.......கொடைநாடுகளும், கோர்ட் வாசல்களுமே....தீர்ப்புக்களாய் நாளை மாற்றி எழுதப்படும்...!
 
 
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
 
 
 

7 comments:

போடா வெங்காயம் said...

இத்தாலிய சீ ,,ச்சே ..இந்திய காங்கிரஸ் தலைவி அன்னையை தமிழ் நாட்டின் தலைவலி ..சீ தலைவி ஆக்கி ..டமில் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் வரை இந்த கழுகும் ஓயாது ..எங்கள் தாங்க தலைவன் தானைய தலைவன் ,செம்மொழி கொண்டான் அவர்களும் ஓயமாட்டார்கள் என்பதை இந்நேரத்தில் கூறி கொள்ளுகிறேன் ..நன்றி ..வணக்கம் ..

Unknown said...

மிகச்சரியானதொரு அலசல்... இந்த ஒரு வருட கால ஆட்சியில் அனுபவித்தையும், ஆட்சியாளர்களின் இலவசங்களின் பின்னால் அசடுவழிந்து நம் சுயமிழந்ததையும் கண்முன்னே கொண்டுவந்துவிட்டீர்கள்.....

தமிழக மக்கள் நலன் என்னும் எதார்த்தத்துக்கு வந்து இனி வரும் வருடங்களிலாவது போலியான கவர்ச்சி அரசியலை விட்டு விட்டு..... மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு வழி வகைகள் செய்வதோடு ஆடம்பர அரசியல் போக்கிற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கவும் வேண்டும்.


ஆட்சியாளர்கள் எப்போதுமே மாறப்போவதும் இல்லை மாற்றம் வேண்டி மாற்றம் காண்பிப்பதாய் நினைத்து நாமே ஏமாந்துபோகும் நிலையும் மாறப்போவது இல்லை...

நல்லதொரு வீரியமிக்க பதிவு, எழுதியவருக்கு பாராட்டுகள்...

Shankar M said...

அலசலும் பதிவும் உண்மை. உண்மையை ஒப்புக்கொள்ள தயக்கம் இருக்கும்....சிலரிடம் ; ஒரு பட்சமானது என்று சில அனுதாபிகள் சப்பைக் கட்டு கட்டலாம்.

ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, பதியப்பட்டதில் உள்நோக்கம் இல்லை என்பதை மனதளவில் நிறுத்தி இந்த பதிவை படித்தால், அடுத்தவரின் பார்வையில் நான் எப்படி, எந்த வகையில் என் மேல் எதிர்பார்ப்பு இருக்கிறது, அவற்றை எப்படி ஈடு செய்யப் போகிறேன் என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால், இரெண்டாம் ஆண்டு நிறைவு பெறும் போது, கழுகின் அலசல் அரசு இன்னும் மேம்பட என்ற தலைப்பில் வரும்.

இந்த தகவல், சென்றடைய வேண்டியவரை சென்றடைந்தால், இந்த பதிவின் சாராம்சத்தை சரி செய்வதற்காக செயல்பட்டால் தமிழகத்துக்கு நல்லது

Shankar M said...
This comment has been removed by the author.
Barari said...

எந்த உள்நோக்கமும் இல்லாமல் சரியான தருணத்தில் நேர்மையான அலசல் .கழுகின் சேவை தொடரட்டும் .

தமிழ்வாசி பிரகாஷ் said...

மிகச் சரியான அலசல்கள்.....

இந்த ஓராண்டில் நிறைய விசயத்தில் தமிழன் ஏமாற்றப்பட்டான் என்பதே உண்மை.

ஊரான் said...

அருமை!

‘அம்மா’ இருக்க ‘அய்யன்’ எதற்கு?

http://www.hooraan.blogspot.in/2012/05/blog-post.html

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes