Wednesday, May 30, 2012

குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்! பெற்றோர்களே உஷார்...

 
 
 
கோடைவிடுமுறைகள் முடிந்து குழந்தைகள் பள்ளிக்கு திரும்பும் காலம் வந்துவிட்டது! நேற்றுவரை வீட்டில் ஆடி ஓடிக் கொண்டிருந்த பிஞ்சுகளை கூட பள்ளிகளில் சேர்க்க மும்மரமாய் இருப்பார்கள் பெற்றோர்கள்! கால்கடுக்க வரிசையில் நின்று பல பெரிய மனிதர்களின் சிபாரிசினைப் பிடித்து,ஆயிரக்கணக்கில் நன்கொடைகொடுத்து எப்படியாவது நல்ல பள்ளியில் சேர்ப்பது ஒன்றே அவர்களது நோக்கமாகக் இருக்கும்! கவனிக்கவும் இங்கே பெற்றோர்களை பொருத்தமட்டில் நல்ல பள்ளி என்பது குழந்தைகளை வறுத்தெடுத்து அவர்களை மதிப்பெண் வாங்க வைக்கும் தொழிற்கூடம்தான்! 

ஆனால் அந்த பள்ளியில் அவர்களது குழந்தைகள் பாதுகாப்பாக படிக்கிறார்களா என்றால் அவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாது! இந்த அறியாத்தனம் மெத்தப்படித்தவர்களிடம் இருந்து கடைக்கோடி மக்கள் வரை ஒரே மாதிரி இருப்பதுதான் வேதனை! அரசாங்க அதிகாரிகளுக்கும் உங்கள் குழந்தைகளை பற்றி கவலைப்பட நேரம் இல்லை! குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் கீழே உள்ள இரண்டு சம்பவங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்!
 
ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் பிறக்கும் போதும் அந்த கருப்பு ஜூலையின் பதினாறாம் தேதி வந்து கண்முன்னே காட்சியாகின்றது! ஒன்றா? இரண்டா? 94 பிஞ்சு மொட்டுக்கள் கரிக்கட்டையானதை யாரால் மறக்கமுடியும்? கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில் பலியான குழந்தைகளை பற்றி சொல்லுகிறேன்! அதுவும் ஆயிற்று... எட்டு  வருடங்களை கடந்து வந்து விட்டோம்! ஒவ்வொரு வருடமும் அஞ்சலி செய்திகளை பகிர்ந்துவிட்டு.. அதிகபட்சம் இரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றி விட்டு அந்த நாளை அமைதியாக கடந்து சென்று விடுகிறோம்! ஆனால் அந்த பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் இதயத்தில் வருடம் முழுதும் எரிந்து கொண்டிருக்கும் தீயை யார் அணைப்பது? அதுகூட வேண்டாம்... அந்த விபத்தில் இருந்து அரசாங்கம் என்ன பாடம் கற்றது? நம் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு செய்து கொடுத்திருகிறது இந்த அரசாங்கம்?

அரசாங்கத்தின் அலட்சியத்தையும் பண முதலைகளின் பணப்பசியையும் நமக்கு எடுத்துச்சொல்ல தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நம் தெய்வங்கள் அந்த குழந்தைகள்! சம்பவம் நடந்த கொஞ்சநாட்களுக்கு பரபரப்பாக இருந்த பத்திரிக்கைகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஏனோ அதற்குப் பிறகு அவர்களை பற்றி நினைவே வரவில்லை? இது விபத்து இல்லை..படுகொலைகள்! ஆனால் செய்தவர்களை ஏனோ இதுவரை தண்டிக்க முடியவில்லை நம் அரசாங்கத்தால்! அல்லது மனமில்லை!

புதிதாக ஒரு பள்ளி துவக்க வேண்டுமெனில் கட்டடத்துக்கு ப்ளான் அப்ரூவல், காற்றோட்டம், இடவசதி, குடிநீர்,சுகாதாரம் என பல்வேறு அரசு துறைகளில் அனுமதி பெறவேண்டும்! அதுபோக தீயணைப்பு துறையில் இருந்து தடையின்மை சான்றிதழ், பொதுப்பணித்துறை பொறியாளரிடமிருந்து கட்டட உறுதி சான்றிதழ் மற்றும் தாசில்தாரிடம் இருந்து  பொது கட்டிட உரிமம் இப்படி அனைத்துமே இருந்தால்தான் அந்த பள்ளிக்கு கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க முடியும்! அதுமட்டும் இல்லை.. உரிமம் வாங்கியதற்கு பிறகு நடக்கும் முறைகேடுகளை களைய உதவி தொடக்க கல்வி அலுவலர் கண்காணிக்கவேண்டும்! 

மேலும் சுகாதார அலுவலர், தாசில்தார், தீயணைப்புத்துறை அதிகாரி இப்படி அனைவருக்குமே கண்காணிக்கும் பொறுப்பு உள்ளது! பள்ளியில் ஒரு குழந்தைக்கு ஒன்பது சதுர அடி இடம் இருக்கவேண்டும்! இது நம்மில் எத்தனை பேர் கவனிக்கிறோம்? அதிகாரிகள் கவனிக்கிறார்களா? இத்தனையும் அந்த பள்ளியில் சரியாக கடைபிடிக்கப்பட்டதா? இல்லையென்றால் ஏன் அந்த அதிகாரிகளையும் தாளாளரையும் தண்டிக்க முடியவில்லை? 94 குழந்தைகளை தங்கள் அலட்சியத்தால் கொலை செய்தவர்களை ஏழு வருடங்களாக தண்டிக்க முடியவில்லை என்றால் உங்கள் அரசாங்கமும் நீதிமன்றமும் எங்களுக்கு எதற்கு?

சரி..இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையாவது கிடைத்ததா? அதுவும் இல்லை பத்து லட்சம் என்று அறிக்கை விட்டு கருணை தொகையாக ஒரு லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டது! காயமடைந்த பிள்ளைகளுக்கு ரூபாய் 25 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டது! எது எதற்குதான் நாங்கள் போராடவேண்டும்? குழந்தைகளை கொன்றவர்களை தண்டிப்பதற்கா? இல்லை அரசாங்கத்தின் அலட்சியத்துக்கு கொடுக்கும் நஷ்டஈட்டை கூட போராடித்தான் வாங்க வேண்டுமா? 

நீங்கள் கொடுக்கும் பணம் எங்கள் குழந்தைகளுக்கு ஈடாக்காதுதான்..ஆனால் எங்கள் குழந்தைகள் விட்டு சென்ற கனவுகளை நனவாக்கவாது அது உதவட்டுமே? இப்போதுக்கூட பல ஊர்களில் வீதிதோறும் நர்சரி பள்ளிகள்! இதையெல்லாம் யார் அனுமதிக்கிறார்கள்? பெற்றோர்களும் இதை கவனிக்கவேண்டும்! நம் குழந்தைகளின் உயிர் இந்த அரசாங்கத்திற்கு தேவை இல்லை! ஏனென்றால் அவர்கள் அவர்களுக்கு வாக்களிக்க போவதில்லை.. ஆகவே கூடுமானவரை நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்!

இந்த கொடூரம் அரங்கேறியதும் நீதிபதி சம்பத் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் வைத்தார்கள்! கண்துடைப்போ...என்னவோ? ஆனால் அந்த கமிட்டி தன் விசாரணையின் முடிவில் சில பரிந்துரைகளை வைத்தார்கள்! அதையாவது இந்த அரசு காப்பாற்றியதா? அதிகாரிகள் கவனித்தார்களா? இல்லை..இல்லை..... அப்படி அதை நடைமுறைப்படுத்தியிருந்தால்.. சில வருடங்களிலே வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் அந்த வேன் விபத்து நடந்திருக்குமா? யாருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா? 20 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியரை ஏற்றி சென்ற வேன் ஒரு குட்டையில் கவிழ்ந்தது! ஒன்பது குழந்தைகளும் குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்த ஆசிரியரும் இறந்தனர்! இதுவும் அனைவரின் அலட்சியத்தால் செய்யப்பட்ட படுகொலைகள்தான்!

இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகுதான் அந்த பள்ளிக்கு ஆங்கீகாரம் இல்லையென்றே கண்டுபிடித்தார்கள்! என்ன ஒரு கண்டுபிடிப்பு?  அதுபோக அரக்கபரக்க வேலை செய்த அதிகாரிகள் மாவட்டத்தில் இதைத் தவிர அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பத்துப் பள்ளிகளை கண்டுபிடித்தனர்! அதன்பிறகுதான் அவற்றை மூடுவதற்கு உத்தரவிட்டார் நாகை கலெக்டர் முனியநாதன்! இந்த சம்பவத்தில் மேலோட்டமாக பார்த்தால் ஓட்டுனர் போனில் பேசிக்கொண்டு ஒட்டியது தவறு எனலாம்..

ஆனால் குற்றம் செய்தவனை காட்டிலும் குற்றத்திற்கு காரணமாக இருந்தவனுக்குதான் தண்டனை அதிகம் கொடுக்கவேண்டும்! அப்படி பார்த்தால் அந்த பள்ளியின் தாளாளர் பேர்தான் முதலில் வர வேண்டும்! ஏன் என்று கேட்டால்? அந்த கலைவாணி மெட்ரிக் பள்ளி அதற்க்கு முன்பு தேவி மழலையர் பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வந்திருக்கிறது. அங்கீகாரம் இல்லாத பள்ளி...மேலும்... பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துவரும் பொறுப்பை தனியாரிடம் கொடுத்திருக்கிறார் அந்த தாளாளர்! இதனால் வேன் எப்படியிருக்கிறது என்பதை அவர் கவனித்ததே இல்லை. 

பத்தாண்டு அனுபவம் மிக்க டிரைவர், வேனில் இரண்டு அவசர வழிகள், மஞ்சள் பெயின்ட், சரியான உரிமம் என அரசின் அத்தனை நிபந்தனைகளும் மீறப்பட்டிருக்கின்றன. வேனின் அனைத்து டயர்கள் கூட  மொழுமொழுவென இருந்ததாக அந்தச் சமயத்தில் மக்கள் கூறினர்! ஆக...எல்லாவற்றுக்கும் காரணம் அந்த பள்ளியின் தாளாளர்தான்!

ஆனால் அரசாங்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததே வேறுமாதிரி!.இந்தக் கொடூரத்தை திசை திருப்பும் வகையில்... வேன் டிரைவர் முதல் குற்றவாளி, வேன் உரிமையாளார் இரண்டாவது குற்றவாளி, பள்ளி தாளாளர் மூன்றாவது குற்றவாளி என வழக்குப் பதிந்திருக்கிறார்கள். அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியின் காரணமாக இப்படி கீழே உள்ளவர்களைத் தண்டித்து மேலே உள்ளவர்களைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறது. இத்தனைக்கும் அந்தப் பள்ளியின் தாளாளர் ஆசிரியராகப் பணியாற்றும்போது தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். இந்த அரசாங்கத்திற்கும்  அதிகாரிகளின்  அலட்சியங்களுக்கும் புரியவைக்க இன்னும் எத்தனை பிஞ்சுகள் தங்கள் உயிரை விடவேண்டும்? படித்த பாடங்கள் போதாதா?

ஒவ்வொரு துயரக் கொடூரம் நடந்த பிறகும்... அதிலும் அனைத்து ஊடகங்களாலும் அம்பலப்படுத்தப்பட்டால் மட்டுமே கவனிப்பதும் பெயருக்கு நடவடிக்கைகள் அறிவிப்பதும் அரசு மற்றும் அதிகாரிகளின் வழக்கமாகிவிட்டது. அந்த நேரத்தில் நாகை மாவட்டத்தில் மட்டுமே பத்துப் பள்ளிகள் அங்கீகாரம் அற்றவை என கலெக்டர் கண்டுபிடித்திருக்கிறார். அப்படியென்றால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் அங்கீகாரமற்ற பள்ளிகளே இல்லையா? அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல் கொடூரங்கள் நிகழ்ந்து மழலைச் செல்வங்கள் பறிபோன பிறகுதான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ஒரு பக்கம் தீயை அணைக்க நீரில்லாமல் மடிந்த குழந்தைகள்.. இன்னொரு பக்கம் தண்ணீரிலே மடிந்த குழந்தைகள்! 

அதிகாரிகளே நீங்கள் விழித்துக்கொள்வதற்க்கு இன்னும் எதில் எதிலெல்லாம் எம் பிள்ளைகள் மடியவேண்டும்? இந்த உலகத்தில் நீங்களும் உங்கள் குழந்தைகள் மட்டும் வாழ்ந்துவிட்டு எதைக்கொண்டு செல்லப்போகிறீர்கள்? ஒவ்வொரு பள்ளியிலும் உங்கள் குழந்தைகளோ அல்லது உங்கள் உறவுகளோ படிக்கிறார்கள் அல்லது படிப்பார்கள் என்று நினைத்து பார்த்து நடவடிக்கை எடுங்கள்!

நன்றி : வைகை

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
 

4 comments:

நாய் நக்ஸ் said...

கும்பகோணம் தீ விபத்தினால்...நான் ஒரு மாத காலம்
மனநிலை பாதிக்க பட்டிருந்தேன்....

எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்....
அந்த பிஞ்சு குழந்தைகளின் அலறல் என்னை தூங்கவிடாமல்...
அனேக நாட்கள் எண்ணி பாடாய் படுத்தியது....புலம்பிக்கொண்டே இருந்தேன்....

நம்மில் யார் திருந்த போகிறோம்....?????

நமக்கு வேண்டியது மதிப்பெண் தானே....???????

saidaiazeez.blogspot.in said...

அவசியமான, இப்போதைக்கு அனைவருக்கும் தேவைப்படும் ஒரு மிக முக்கிய விழிப்புணர்வை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல கோடி

கோவை நேரம் said...

என்னால் மறக்க முடியாத சம்பவம் அது.எனக்கு திருமணம் முடிந்து தலை ஆடி அன்று நடந்த இந்த கொடும் நிகழ்ச்சி..

Shankar M said...

நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றி....இதைப் பார்த்துவிட்டாவது திருந்துமா சமூகம் ?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes