Wednesday, May 23, 2012

தேர்ச்சி என்னும் எமன்........! +2 தேர்வு முடிவுகள் மற்றும் பொதுப்புத்திகளுக்கு ஒரு சவுக்கடி..!


ஒட்டு மொத்த சமூகத்தின் ஓட்டமும் ஏதோ ஒன்றை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் எப்போதும் ஒரே திசையை நோக்கி தான் ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்வியலில் எதை முதன்மைப்படுத்துகிறோம்? ஏன் முதன்மைப்படுத்துகிறோம் என்று தெரியாமலும், தெரிந்து கொள்ள முயலாமலும் பொது புத்திலிருந்து தீர்மானங்களை பொறுக்கி எடுத்துக்கொள்ளும் மிகைப்பட்ட மனிதர்களுக்கு கடும் கண்டனங்களைக் கூறிக் கொண்டு இக்கட்டுரையை தொடர்கிறோம்.

நேற்று வெளியான +2 தேர்வு முடிவுகள் என்றில்லை, காலம் காலமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதும் மாநில, மாவட்ட, வட்ட, ஊராட்சி, கிராமப்பஞ்சாயத்து என்று தொடங்கி பள்ளிகள் தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுப்பவர்களை சீராட்டியும் பாரட்டியும் புளகாங்கிதம் அடையும் நமது சமூகமும் ஊடகங்களும், மிகைப்பட்ட குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மற்றும் தேர்வு பெற்றிராத மாணக்கர்களை மனோதத்துவ ரீதியான ஒரு தாக்குதலுக்கு உட்படுத்தி சமூகத்தை விட்டு நிரகாரிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

999.99% பெற்றோர்கள் பிள்ளைகளை அவர்களின் விருப்பப்பாடங்களை எடுத்து பயிலச் சொல்வது கிடையாது. எதுவுமே விருப்பமில்லாத பிள்ளைகளை எது அவர்கள் விருப்பம் என்று கண்டறிய நாம் மருத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் அறிய முற்படுவதுமில்லை. பத்தாம் வகுப்பு தாண்டியவுடன் மிகைப்பட்ட பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மருத்துவராகவும், பொறியாளாராகவுமே பெரும்பாலும் பார்க்க விரும்புகின்றனர். 

இது சமூகத்தை பிடித்திருக்கும் மிகப்பெரிய பிணி.

தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த மருத்துவர்களையும், பொறியாளர்களையும் ஒரு ஆய்வுக்கு உட்படுத்தி அவர்கள் எப்படியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று ஒரு கணக்கீடு எடுத்து பாருங்கள் வாழ்க்கைத் தரம் என்பது எப்போதும் பள்ளியிலும் கல்லூரியிலும் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து நிர்ணயம் செய்யப்படுவதில்லை என்ற உண்மை நமக்கு உரைக்கும்.

+2வில் 650 மதிப்பெண் பெற்று தேர்வு பெற்ற ஒரு மாணவனையோ மாணவியையோ இந்த சமூகம் பார்க்கும் பார்வை இருக்கிறதே அது ஓராயிரம் முறை தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டியது. ஒரு மாணவன் நன்றாகப்படிக்கிறான் என்பதற்கு நாம் வைத்திருக்கும் அளவீடு மனோதத்துவ ரீதியில் பார்த்தோமானால் சர்வ சாதரணமானது....

மனப்பாட சக்தி அதிகமாயிருக்கும் மாணக்கர்ளையே நமது கல்விமுறை எப்போதும் முதல் மாணவன் என்று கூறி சிறப்பித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மனப்பாட சக்தி அதிமாயிருந்தாலும் 95% பாடங்களை தெளிவாக நெட்டுரு போட்டிருக்கும் ஒரு மாணவனுக்கு கிடைத்திருக்கும் கேள்வித்தாளில்  மிச்சமுள்ள 5% பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின் தர்க்க ரீதியாக அவன் தோல்வியைத் தழுவுகிறான். இப்படியான சிக்கலான கல்வி முறையும், சிக்குப் பிடித்த மனிதர்களின் மனோநிலையையும் வைத்துக் கொண்டு குறைந்த  மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், தேர்வு பெறாத மாணவர்களையும் அங்கீகரிக்காமல் போவது மிகப்பெரிய சமூகக் குற்றம்.

கல்வியைக் கற்பிக்கும் கூடங்கள் எல்லாம் தற்போது ஏதோ இயந்திரங்களை தயாரித்து வெளியிட்டு அதன் வெற்றியை பறைசாற்றி மேலும் தங்களைக் கெளவரப்படுத்திக் கொள்ளவோ அல்லது மாணவர்கள் சேர்க்கையின் மூலம் வருமானத்தை பார்க்கவோ தான் முயன்று கொண்டிருக்கின்றன. கல்வி என்பது கற்பிக்கப்படும் போதே ஒரு குறிப்பிட்ட பாடம் ஏன் கற்பிக்கப்படுகிறது? என்றும் அப்படி கற்பதால் வாழ்வியலில் அது எங்கு பயன்படும்? என்றும் எத்தனை ஆசிரியர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்...?

ட்ரிக்னாமேட்ரியையும், அல்ஜிப்ராவையும் விவாசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறைலிருந்து வரும் பிள்ளை பயிலும் போது அதை ஏன் பயில வேண்டும் என்ற கேள்வி அடிமனதில் ஒளிந்துதான் கிடக்கிறது. நம்மில் மிகைப்பட்டவர்கள் பள்ளியிலும் கல்லூரியிலும் எடுத்து படித்த பாடங்கள் நமது விருப்பத்தின் பேரிலா நிகழ்ந்தது நண்பர்களே...?

இல்லையே...!

நமது கல்வி என்பது பெரும்பாலும் நமது சமூகப் பொதுப்புத்தி நமக்குள் கட்டாயமாய் ஏற்றி விட்டது. இங்கே புத்திசாலிகள் என்று கூறிக் கொண்டு முதல் மாணக்கர்களைப் புகழ்ந்து அவர்களைப் பற்றிய செய்தியைப் பேசிப் பேசி மிச்சமுள்ள பிள்ளைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை நாம் விதைக்கிறோமா இல்லையா?

நமது தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு மருத்துவமும், பொறியியலும் பயில முடியாமல் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்குள் செல்லும் மாணவர்களில் 90% சதவீதம் பேர் குற்ற உணர்ச்சிகளோடும் தாழ்வு மனப்பான்மைகளோடுமே செல்கிறார்கள். இதை நமது சமூகம் அறிந்தோ அறியாமலோ குறைவரச் செய்து விடுகிறது.

மனப்பாடத் திறன் அதிகமாயிருப்பது சிறப்பு என்றும் மனப்பாடத் திறன் அறவே இல்லாதது சிறப்பு இல்லை என்றும் எவன் சொன்னது...? ஒவ்வொரு வருடமும் ஆகச்சிறந்த அறிவாளிகளாக அறியப்படும் அதிக மதிப்பெண் எடுத்த பிள்ளைகள் அடுத்த, அடுத்த வருடங்களின் என்னவாகிறார்கள்..? அவர்களின் மனப்பாடத் திறன் வாழ்க்கைக்கு எந்த அளவில் உதவுகிறது என்பதை பற்றியெல்லாம் நம் சமூகம் எப்போதும் கவலைப்பட்டதே இல்லை.

ஒரு மாணவன் தான் அதிக மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக குற்ற உணர்ச்சியைக் கொள்கிறான் அல்லது தற்கொலை முயற்சியைச் செய்கிறான் என்று சொன்னால் அதற்கு சரியான புரிதல் இல்லாத சிதிலமடைந்த மனம் கொண்ட நமது சமூகம்தான் காரணம்.

மிகைப்பட்ட கிராமப்புறங்களைக் கொண்ட தமிழகத்தின் மாணவர்கள் வயலுக்குச் சென்று தன் தாய், தகப்பனுக்கு உதவி செய்து விட்டும், பால் பண்ணையில் பாலை ஊற்றி விட்டும், வெறும் காலோடு சைக்கிள் மிதித்து அரசுப்பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களின் தேர்ச்சி என்பது எதைச் சார்ந்து இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாக இருக்கிறது என்ற கருத்தினை இங்கே ஆழமாகப் பதிகிறோம்.

வாழ்வியலின் அடிப்படைச் சூழல்கள் எப்படியான தாக்கத்தைக் கொடுக்கிறதோ அல்லது எதை முக்கியத்துவப்படுத்துகிறதோ அதைப் பொறுத்தே மனித மனதின் விருப்பங்கள் அமைகின்றன. பள்ளி செல்லும் மாணவர்களின் தனித்திறனை ஆசிரியர்கள் மனோதத்துவ ரீதியாக அறிந்து அவர்களின் ஈடுபாட்டினைக் கேட்டு அதற்கேற்றார் போல கல்வி கற்கும் முறைகள் நமது தேசத்தில் வடிவமைக்கப்பட வேண்டும்.

நன்றாகப் பாடத் தெரிந்த ஒரு மாணவனுக்கு உற்சாகமாய் பேசவராது, உற்சாகமாய் பேச வரும் மாணவனுக்கு அருமையாய் ஓவியம் வரையத் தெரியது, நன்கு ஓவியம் வரையத் தெரிந்த மாணவனுக்கு விளையாட்டில் விருப்பம் இராது, விளையாட்டில் வெற்றி வாகைகள் சூடும் மாணவனுக்கு சுத்தமாய் படிக்க வராது. படிக்கும் மாணவனுக்கும் இதே கதைதான் ஒருவனுக்கு வரலாறு பிடிக்கும் மற்றையவனுக்கு அறிவியல் பிடிக்கும் இன்னொருவனுக்கு  மேலாண்மை நிர்வாகம் பிடிக்கும்....இப்படியாய் விருப்பங்கள் என்பது தனி மனித ஆழ்மனதில் இருக்கும் தனித்திறனில் இருந்தே பிறக்கிறது.

அதிக மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்களை அவர்களின் மனப்பாட திறனுக்காக நாம் பாராட்டும் அதே நேரத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவர்களை குறை சொல்லி தாழ்மைப்படுத்தும் போக்கினை வன்மையாக கண்டிக்கவும் செய்கிறோம்

இதைச் சரிவர புரிந்து கொண்டு நமது சமூகம் கட்டியமைக்கப்படாததால்தான்....ஒரு ஆகச் சிறந்த அரசியல்வாதி கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராகவும், ஒரு வழக்கறிஞன் டீக்கடை முதலாளியாகவும், ஒரு அறிவியல் விஞ்ஞானி இன்சூரன்ஸ் ஏஜெண்டாகவும் நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு முனை மழுங்கிப் போன ஒரு பங்கெடுப்பினை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவனை பாரட்டவோ, இகழவோ செய்யாமல் சரியான துறையை தேர்ந்தெடுக்க அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு பக்க பலமாய் நின்று வழிகாட்ட வேண்டும்.

மேலும் ஆகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை அடையாளம் கண்டு இதே ஊடகங்கள்..அவர்களிடம் பேட்டிகள் எடுத்து அவர்களின் பெரு விருப்பங்களைக் கேட்டறிந்து அதற்கு உதவிகள் செய்வதோடு அவர்களின் நோக்கங்களுக்காய் பாரட்டப்படவும் வேண்டும்.

மற்றபடி தேர்வு என்பது வெற்றி, தோல்விகளுக்கான ஒரு இடமல்ல அது தேவைகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு களம் என்பதை உணர்ந்து சரியான சமூகத்தை கட்டியமைப்போம்....இந்த தேசத்தின் ஒப்பற்ற குடிமக்களாவோம்...!

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
 

8 comments:

Anonymous said...

....மற்றபடி தேர்வு என்பது வெற்றி, தோல்விகளுக்கான ஒரு இடமல்ல அது தேவைகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு களம்.......

CORE POINT ......

சம்பத்குமார் said...

///தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவனை பாரட்டவோ, இகழவோ செய்யாமல் சரியான துறையை தேர்ந்தெடுக்க அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்கு பக்க பலமாய் நின்று வழிகாட்ட வேண்டும்.///

நெற்றிப்பொட்டில் சுடுகின்ற நிஜம்..

வருங்கால தலைமுறைகளிடம் அவரவர் விருப்பங்களை கேட்டறிந்து அவர்களின் வழியே பயிலச் செய்வதே வளமான சமுதாயத்திற்கான அசைக்கமுடியாத அஸ்திவாரமாகும்..

மென்மேலும் கழுகு உயரப் பறக்கட்டும்.

அமுதா கிருஷ்ணா said...

பெற்றோர்கள் மொத்தமாய் மாறும் வரை பாவம் மாணவர்கள்..

தெய்வசுகந்தி said...

பெற்றோர்களின் மனோபாவம் மாற வேண்டும்!

ராஜ நடராஜன் said...

கடைசி பெஞ்சுல உட்கார்ந்து தலைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் எனக்கு கணக்கு வாத்தியாரே வந்து 100 மார்க் போட்டமாதிரி இருக்கிறது பதிவு.

ஆனால் யாதார்த்தமாக பார்த்தோமானால் நாம் போட்டி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.தகுதி நிர்ணயம் செய்ய ஏதாவது அளவீடு தேவைப்படுகிறது.இந்த போட்டி மனப்பான்மையே ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியக் கல்விக்கான தகுதியையும் உருவாக்குகிறது.

பல கல்வியாளர்களின் படிப்பறிவிலும்,அனுபத்தில்தானே இந்த முதல்,இடை,கடை கட்டமைப்பு உருவாகிறது.எல்லாவற்றையும் கற்றுக்கொள்வதில் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொள்ளட்டுமே என்றுதானே அனைத்துப் பாடங்களும் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன.

அனைத்து மாணவர்களின் மனநிலையையும் என்னால் எடை போட இயலவில்லை.ஆனால் பள்ளியில் முதல்வன் மீதும் கல்லூரி கோல்டு மெடலிஸ் மீதுமான பொறாமையில்லாத கோல்டு மெடலிஸ்டும் கடைசி பெஞ்சும் என்ற ஈகோவையும் தாண்டியே நட்பு என்ற காந்தம் தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது.

பிள்ளையப் பெத்தவங்களுக்குத்தான் குழந்தையின் அக்கறை புரியும்.நல்லாப் படிச்சி நல்ல வேலைக்கு போக மாட்டானா?நல்ல இடத்துல பொண்ணை கட்டிக்கொடுத்திட மாட்டோமா என்றே பெற்ற மனம் நினைக்கும் சமூக சூழலில்தான் நாம் வாழ்கிறோம்.

நாம் கல்வியின் தரம் பற்றி பேசிக்கொண்டுள்ளோம்.இந்தியாவின் சமூக.கல்வி,பொருளாதரத்தில் பின்படுத்துப்பட்ட மாநிலங்கள் என்று முத்திரை குத்தப்பட்டு மாவோயிஸ்ட் ஆயுதம் தூக்கிக் கொண்டு கற்றுக்கொடுக்கும் ஆயுதமேந்திய அலெக்ஸையும் கூட கடத்துவதை எந்த தரத்துக்குள் உட்படுத்துவது என்பதும் கூட கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய அவசியமிருக்கிறது.

அமைதி அப்பா said...

அவசியாமான பதிவு.

rajamelaiyur said...

மகனை மதிப்பெண் பெரும் இயந்திரமாக பார்க்காதீர்கள் . முக்கியமாக அடுத்த மாணவருடன் அல்லது மாணவியுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். அவன் உங்களை அடுத்த குழந்தையின் அப்பாவுடன் ஒப்பிட்டு பேசினால் உங்களுக்கு எப்படி இருக்கும் ?
கடைசியாக , அவன் மதிப்பெண் குறைய அவன் மட்டுமே காரணம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்

rajamelaiyur said...

உங்கள் கருத்தை ஒட்டிய என் பதிவு
மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes