Wednesday, May 09, 2012

உடைந்து போன தமிழ் சினிமா மரபுகள்....! வழக்கு எண் 18/9 - ஒரு பார்வை!

 
 
 
தமிழ் சினிமா மரபு... திரைக்குள்ள இருந்து முழுசா வெளில வந்து நிஜமாவே எதார்த்த உலகத்தைக் காட்டும் போது என்ன தோணும் நமக்கு.. ? சினிமா பாக்குற மாதிரியான ஒரு உணர்வே இல்லாம பைக்க ரோட்டோரமா நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுட்டு வேடிக்கை பார்க்குற மாதிரிதானே தோணும்....

அப்டித்தான் தோணுது வழக்கு எண் 18/9 படம் பார்க்கும் போது.., ரொம்ப ரொம்ப தூரம் தமிழ் சினிமாவ ஒரே உதையில நவுத்தி வேற ஒரு தளத்துக்கு கொண்டு வந்ததற்காக இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு ஒரு பிக் ஹக் கொடுக்கலாம். படம் போட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி தன்னோட பிரத்தியோக சினிமா கதாநாயகனோட பேர போடுறதுக்கே கைதட்டி விசிலடிச்சு அல்லோலகல்லோப்படுத்தும் தமிழ் சினிமா ரசிகர்களின் மரபுகள் எல்லாவற்றையும் தூள் தூளாக்கி விடுகிறது படம்...

வட்டிக்கு கொடுப்பவர்கள் எப்படி எல்லாம் மனிதநேயமற்று பேசுகிறார்கள், கொத்தடிமைகளாய் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப எப்படியான சூழல்கள் ஏழைப் பெற்றோர்களுக்கு உந்துதலாய் அமைந்து போகிறது, மொத்தமாய் பணம் கொடுத்து அடிமைகளாய் பிள்ளைகளை வாங்கி பணம் சம்பாதிக்கும் மனிதர்களின் இரும்பு மனம் எவ்வளவு கொடுமையானது..... என்பதை எல்லாம் கோடிட்டு காட்டி இருக்கிறார் இயக்குனர். இவை எல்லாம் நமது சமூகத்தின் மீது படிந்து கிடக்கும் நீங்காக் கறைகள்தான் என்றாலும்... இவற்றை பற்றியெல்லாம் நிறைய திரைப்படங்கள் பேசி இருக்கின்றன என்பதால் இப்படியான காட்சிகளில் நமக்கு ஒரு அழுத்தம் கிடைக்கவில்லை.... என்பதுதான் உண்மை.

ரோட்டுக்கடையில் வேலை பார்க்கும் ஒரு பையன், வீட்டில் வேலை செய்யும் ஒரு வேலைக்காரப் பெண் இவர்களிடையே  ஒரு தலையாய் பையனிடம் பூத்திருக்கும் ஒரு எதார்த்த காதலை சொல்ல இயக்குனர் எடுத்துக் கொண்டிருக்கும் களம் அசாத்தியமானது. பிளாட்பாரத்தில் வாழும் மக்களின் அன்றாடங்களை அவ்வப்போது நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு செல்வதுண்டு...

அங்கே ஒருவிதமான வாழ்க்கை ஓடிக்கொண்டிருப்பதை பெரும்பாலும் நாம் கவனித்திருக்க மாட்டோம். நாம் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை நமக்கு கிடைத்த வசதிகளை வைத்துக் கொண்டுதானே பார்க்கிறோம்....அதே போல நடை பாதை ஓரத்தில் விரிப்பு விரித்து படுப்பவனின் காதலும், நட்பும், எதிர்காலம் பற்றிய கனவும் எப்படி இருக்கும்.....???

இதை இந்த திரைப்படத்தின் இயக்குனர் யோசித்ததோடு மட்டுமில்லாமல் அந்த பாத்திரமாகவே மாறி இருக்கிறார் அதனால்தான் ரோட்டுக்கடையில் வேலை பார்க்கும் பெற்றோரை இழந்து அனாதையாக இருக்கும் வேலு போன்ற பையன்களுக்கு திருமணம் ஆகி குழந்தை குட்டி என்று வாழும் ஒரு மிகச்சாதாரண வாழ்க்கையே பெரும் கனவாய் இருக்கிறது...

திரும்பிக் கூட பார்க்காத கண்ணியமான ஒரு ஏழைப் பெண்ணையும், உறுத்தல் இல்லாமல் காதலிக்குமொரு அனாதைப் பையனையும் காட்டி விட்டு அந்த பையனுக்கு துணையாய் தெருக்கூத்து என்னும் தமிழனின் தொன் கலை மரித்துப் போனதால் பிழைப்புக்காய் எச்சில் தட்டு கழுவும் ஒரு  சின்ன சாமியையும் சேர்த்துக் கொண்டு..... பட்டையை கிளப்புகிறது படம்.

இப்படி ஒரு காதலை சொல்லும் இயக்குனர் அதே ஓட்டத்தில் ஒரு மேல் தட்டுப் பையன் அதுவும், தகப்பன் இல்லாமல் தாய் அப்படி, இப்படி என்று அதிகாரவர்க்கத்தோடு கைகோர்த்து வசதியாய் வளர்த்த ஒரு பையனின் மனோநிலையில் இருந்து பெண்களை எப்படி பார்க்கிறான் என்றும் சொல்கிறார்.

பெண்களிடம் பழகுவது போல பழகி பெண்களை படம் எடுத்து நண்பர்களிடம் காட்டி பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு கலாச்சாரத்தை இந்த படத்தின் சுவாரஸ்யத்துக்காக நாம் பார்த்துக் கொள்ளலாம்....ஏனென்றால் இது பற்றி போதும் போதும் என்னும் அளவுக்கு விழிப்புணர்வு கருத்துகளையும், பத்திரிக்கை செய்திகளையும் நாம் படித்தாயிற்று.....

தன்னுடைய கோல்மால் எல்லாம் தெரிந்த தான் பழகிய பெண்ணை எப்படியும் பழிவாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் வீட்டு காலிங் பெல் அடித்து ஆசிட்டை அவள் முகத்தில் ஊற்ற முயலுகையில் ஜோதி என்னும் வேலைக்காரப் பெண் அதை வாங்கிக் கொண்டு கருகி மருத்துவமனையில் கிடக்கிறாள்....

யார் இதைச் செய்தது என்று விசாரிப்பதாக தொடங்கும் படத்தில் விசாரணைக்காக அவளை ஒருதலையாய் நேசித்த ரோட்டுக்கடையில் வேலை பார்க்கும் வேலுவை காவலர்கள் விசாரிப்பதாய் படம் தொடங்குகிறது....

ஓப்பனிங் ஷாட்டில் இன்ஸ்பெக்டராய் வருபவர் விசாரிக்க ஆரம்பிக்க முதல் கேள்வியை கேட்க தொடங்கும் போதே நடிப்பில் சிக்ஸர் அடித்து விடுகிறார். தமிழ் சினிமாவின் போலிஸ்காரர்கள் எல்லாம் எப்போதும் மிகப்பெரிய அசாகாய சூரர்களாய் இருப்பார்கள்....இல்லையேல்....கேவலமான கையூட்டு வாங்கும் அதிகாரிகளாய், மந்திரிக்கு டைரக்டர் சொல்லிவிட்டாரே என்று கூழைக் கும்பிடு போடும் நடிகர்களாய்த்தான் திரையில் ஜொலிப்பார்கள்...

இந்தப்படத்தில் ஒரு நிஜ போலிஸ் ஸ்டேசனில் ஒரிஜினலாகவே ஒரு இன்ஸ்பெக்டர் முன்னால கேமரா வைத்து விட்டார்களா? என்று ஒரு சந்தேகம் நமக்கு தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை...

ஆ.. ஊ என்று கூச்சல் போடுவதும் பஞ்ச் டயலாக் சொல்லி சூப்பர் மேன்களாக திரையை கதாநாயகர்கள் ஆக்கிரமிப்பதும், பழிவாங்கலும், வெற்றி பெறுதலுமான கதைகள் எல்லாம்....வழக்கு எண் 18/9 போன்ற திரைப்படங்களைப் பார்த்து  விட்டு தடம் மாறி புதிய பரிமாணத்திற்கு சர்வ நிச்சயமாய் வரும்....என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.....

பின்னே.... இங்கே ஸ்டார் கதாநாயக நாயகிகளோ, எகிறும் பட்ஜெட்டோ, அசத்தல் லொக்கேசன்களோ, பிரம்மாண்ட செட்டோ, டாம் டூம் இசையோ இல்லாமல்.....பின்னி பெடலெத்து கலெக்சனிலும் சக்கைப் போடு போடும் ஒரு படத்தை முன்னுதாரணமாக யார்தான் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்...?

வழக்கு எண் 18/9 தமிழ் சினிமா மரபிற்கு ஒரு பெஞ்ச் மார்க் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஜோதியின் அம்மா, தட்டுக்கடை வைத்து நடத்தும் முதலாளி, போட்டோகிராபர், அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி, கஞ்சா விற்பவர், சைக்கிள் பஞ்சர் ஒட்டுபவர், ரோசி அக்கா மாதிரி படம் முழுக்க குவிந்து கிடக்கும் கதை மாந்தர்களில் யாரையும் நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.....அந்த அளவு அழுத்தமாய் மனதில் பதிந்து போகிறார்கள்.

அதுவும் போக.... திரைப்படத்தில் காட்சிகளில் ஆங்காங்கே ரோட்டில் பாட்டில்கள் கிடப்பது போல நிறைய காட்சிகளை சாதாரணமாக நாம் கடந்து சென்றாலும் படம் முடிந்த உடன்...ஆசிட் வீச்சுக்கும்  ரோட்டில் இறைந்து கிடக்கும் பாட்டில்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற ரீதியிலெல்லாம் சிந்திக்க வைக்கிறார்....படத்தின் இயக்குனர்.

எந்த வித தாள வாத்தியங்களும் இல்லாமல் மிக நேர்த்தியாய் மெட்டுப் போடப்பட்ட இரண்டு பாடல்களும்...... படம் பார்த்து வெகு நேரம் ஆகியும் மனதுக்குள் மெலிதாய் ஒரு வலியோடு உலா வருவதை தவிர்க்க முடியவில்லை...

மொத்தத்தில்.....மாயைகளை அகற்றி சினிமா என்பது வெறும் பொழுது போக்கும் சாதனம் மட்டுமல்ல அது வாழ்வறிவிக்கும் ஒரு கலை என்பதை மிக நேர்த்தியாக கூறி....வழமையான சினிமா மரபுகளை உடைத்துப் போட்டிருக்கும் ஒரு திரைப்படம் என்ற வகையிலும், தமிழ் சினிமாவின் தரத்தை எட்ட முடியாத உயரத்திற்கு தூக்கிச் சென்றிருக்கும் ஒரு படம் என்பதிலும் தமிழர்களாகிய நாம் நிச்சமாய் நமது காலர்களைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்
 
 
 (கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
 
 

9 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

படிக்கும் பொழுதே இந்த படத்தை கண்டிப்பாய் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகிறது.. நீங்கள் பார்த்த.. ரசித்த... விஷயத்தை அழகாய் எழுத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி.

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். இந்த படத்தை தியேட்டரில்தான் பார்த்தீர்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். இந்த படத்தை தியேட்டரில்தான் பார்த்தீர்களா?

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு படத்துக்கு அருமையானதொரு விமர்சனம்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அவ்வளவு நல்ல படமா சார்! நிச்சயம் இன்றே பார்க்கவேண்டும் போல் இருக்கே. உங்களின் விமர்சனப் பார்வை அற்புதம். பகிர்விற்கு நன்றி

Anbudan Anand said...

living humans.................,

Unknown said...

வழக்கு எண் :18/9 படத்தை பாராட்டி எழுதிய எல்லா பத்திரிகை நண்பர்களுக்கும் , மீடியா நண்பர்களுக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி . - லிங்குசாமி

கடம்பவன குயில் said...

நிதர்சனமான மனிதர்களையும் உண்மை உலகத்ததையும் திரையில் காட்டிய இப்படிப்பட் படங்களை ஊக்குவிப்பது நம் கடமை. ஓவர் ஃபேன்ட்டசி பார்த்து அலுத்துப்போன நம் கண்களுக்கும் கருத்துக்கும் இந்தப்படம் ஒரு விருந்து என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

rajamelaiyur said...

ஆழ்ந்த விமர்சனம் ..

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes