மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு
ஒரு சாமனியனின் மடல். சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் ஆளுமை நிறைந்த முதல்வர் நீங்கள் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது. வாழ்க்கையின் ஏதோ ஒரு திசையில் பயணித்து பின் புரட்சித் தலைவரோடு திரைப்படங்களில் நடித்து அதன் நீட்சியாக அரசியலில் ஈடுபட்டு இன்று அவர் உருவாக்கிய அனைந்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தன்னிகரற்ற தலைவியாய் நீங்கள் வீற்றிருக்கிறீர்கள். இது ஓரிரு வாக்கியத்தில் நான் எழுதியதைப் போலவோ அல்லது வெறுமனே வாசித்து கடந்து விடுவதை போலவோ எளிதானது அல்ல...!
ஆணாதிக்கம் இச்சமூகத்தில் மிகுந்து கிடந்த காலச்சூழலில் யாதொரு பின்புலமும் இல்லாமல் அரசியலில் மேலேறி வருவது எவ்வளவு கடினம் என்பது சாமனியனின் கற்பனைகளுக்கு எட்டாத விசயம். அதுவும் சுதந்திர இந்தியாவில் அந்த சுதந்திரத்துக்காக போராடிய ஒரு அசுர சக்தியான காங்கிரசை வீழ்த்திய திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெருங்கட்சியினை எதிர்த்து அரசியல் செய்யும் வலிவினை பெற்ற அதிமுக என்னும் பெருங்கப்பல் எம்.ஜி.ஆர் என்னும் வசீகரத்துக்குப் பின் நொறுங்கிப் போய்விடும் என்ற கணக்குகளை எல்லாம் துவம்சம் செய்துதான் நீங்கள் 1991ல் மிருக பலத்தோடு ஆட்சிப் பொறுப்பில் ஏறினீர்கள். ஜெயலலிதாவால் எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்ப முடியுமா என்று கேள்வி கேட்டவர்கள் யாவரும் பின்னொரு நாளில் கேள்விக் குறிகளுக்குள் அடைபட்டுப் போனார்கள்.
1996ல் மீண்டும் தமிழகத்தில் நடந்த ஆட்சிமாற்றம் உங்கள் வாழ்க்கைக்குள் மீண்டும் ஒரு போரட்டக் களத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சரிகளும் தவறுகளும் ஒருபக்கம் இருந்தாலும் அந்த அசாதரண சூழலை நீங்கள் எதிகொண்ட விதமும், நிலைகுலையாமல் வலிகளை தாங்கிக் கொண்டதும் நம் சமூகத்தில் இன்று பிறந்த பெண் குழந்தைகளும் உற்று நோக்கிக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள். 1989ல் சட்டசபையில் உங்கள் மீது நடந்த தாக்குதல்களும் அந்த வடுக்களை எல்லாம் சுமந்து கொண்டு நீங்கள் தேர்த்தலில் களமாடி வென்றெது எல்லாம் வரலாறு அம்மா...!
மீண்டும் தமிழகத்தின் முதல்வராய் தமிழ் மக்கள் உங்களை அமர்த்திப் பார்த்திருக்கிறார்கள். எத்தனையோ இன்னல்களையும், காலத்துயரங்களையும் எங்களைப் போன்ற சாமனியர்கள் சுமந்து கொண்டு நகர்ந்தாலும் ஒரு தனி மனிதராய் நீங்கள் வீறு நடை போட்டுக் கொண்டிருப்பதை ரசிக்காதவர்கள் என்று யாருமில்லை.
இதோ வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவினை எடுத்து தமிழர் நெஞ்சில் நீங்கா தீபமாகி இருக்கிறீர்கள்...! சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரையும் விடுதலை செய்ததோடு மட்டுமில்லாமல் இத்தனை ஆண்டுகளாய் கலங்கி நின்ற அற்புதத் தாய்க்கு மீண்டும் தன் மகனை மீட்டும் கொடுத்திருக்கிறீர்கள்...!
நாங்கள் தமிழர்கள்.....உங்களை எண்ணி பெருமையடைகிறோம்...! எங்கள் நன்றிகளை உங்கள் வெற்றியாக்குவோம்....!
மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு மூவரையும் விடுதலை செய்யா விடில் தமிழக அரசு விடுதலை செய்யும் - தமிழக முதல்வர்.
கழுகு
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
2 comments:
நாம் தமிழர் தலைவர் சீமான் செல்வி. ஜெயலலிதாவை 'ஈழத்தாய்' என்று கூறியதில் தவறில்லை போல் தெரிகிறது. அவருக்கு தனக்குள்ள அதிகாரங்களை தேவைப்படும் போது பாவிக்கும் துணிச்சல் இருக்கிறது. பிரதமராகா வேண்டும் என்ற விருப்பமிருந்தும், தமிழ்நாட்டுக்கு வெளியே பெரிய எதிர்ப்புகள் வருமென்று தெரிந்தும், தன்னுடைய அதிகாரத்தைத் துணிச்சலுடன் பயன்படுத்தி, தமிழ்நாட்டுக்கேன்றொரு தனித்துவம் உண்டு, இந்திய அரசியலமைப்பில் மாநிலங்களுக்கும் உரிமைகள் உண்டு, அதை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை துணிச்சலுடன் காட்டியிருக்கிறார். அந்த துணிச்சலுக்காக மட்டுமே, நாற்பது தொகுதிகளையும் செல்வி. ஜெயலலிதாவிடம் கொடுக்கலாம்.
//எங்கள் நன்றிகளை உங்கள் வெற்றியாக்குவோம்....//
இது மிகவும் கேவலமான கருத்தாகபடுகிறது. சில நாட்களுக்கு முன் இவர்தான் நளினியை பரேலில் விட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆகிவிடும் என்று வாதிட்டவர். இன்று வேறு வழியே இல்லாமல் செய்த ஒரு காரியத்திற்காக அவரை புகழ்வது என்பது.....
அபத்தத்திலும் அபத்தம்!
Post a Comment