Monday, June 06, 2011

சமச்சீர் கல்வி....! குறை நிறைகள் பற்றிய ஒரு பார்வை!

புதிய அரசு பொறுப்பேற்ற கணம் முதல் இன்று வரை சமச்சீர் கல்வி பற்றிய பல் வேறு செய்திகளை நாம் வாசித்து விட்டோம். சமச்சீர் கல்வியில்  இருக்கும் சாதக பாதகங்களையும் சமச்சீ கல்வி பற்றிய ஒரு பார்வையையும் கழுகு தனது வாசகர்களுக்கு இந்த கட்டுரையின் மூலம் தெளிவாக்குகிறது
சமச்சீர் கல்வி என்றால் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டம். இது CBSE மற்றும் இண்டெர்நேசனல் சிலபஸ் etc… இவைகளுக்கு இது பொருந்தாது.

சமச்சீர் கல்வி திட்டத்தின் நிறைகளும் குறைகளுமாக கருதப்படுவது:

இதில் உள்ள நன்மைகள் என்னவெல்லாம், என்று பார்த்தோமானால் சமச்சீர் என்ற வார்த்தையிலே இனிமை இருப்பதோடு மட்டுமல்லாமல் இதனால் மெட்ரிக்குலேசன் மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் இஸ்டம் போல் புத்தகங்களுக்கு கட்டணம்  வசூலிக்கமுடியாது. பாடத்திட்டத்தையும் ஒரே அடியாக குறை சொல்ல முடியாது என்பதும் உண்மை. கற்றலின் இனிமைஇதையே தாரக மந்திரமாகக் கொண்டு இப்பாடத்திட்டங்கள் பல்வேறு அறிஞர்கள் கருத்தரங்குகள் நடத்தியும், நேரடி ரிப்போர்ட்கள் செய்தும் தயாரிக்கப்பட்டதே… இதற்காகவும் அரசுப்பணம்(மக்கள் பணம்) செலவழிக்கப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்க பின்னர் உதவும்.

இதன் குறைகளாக நம்மில் ஒரு பகுதியினர் சொல்வது என்னவென்று பார்த்தோமானால் சமச்சீர் என்று சொல்லி கல்வியின் தரத்தையும் பாடத்திட்டதின் தரத்தையும் குறைத்து விட்டார்கள் என்றும் சில அரசியல் உள்நோக்கமும், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதை இந்த வருடம் தடை செய்து இருக்கிறார்கள் என்று…

உண்மையான காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் ஒரு நாட்டின் குடிகளுக்கு சிறந்த தரமான கல்வியை இலவசமாக அளித்தால் தானே ஒரு நல்ல தலைமுறை உருவாகும். இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் இதற்கும் தடையாக நம் நாட்டின் மக்கள் தொகை இருக்கிறது என்கிறார்கள். இருக்கட்டுமே…. எத்தனை கோடிகள் அநாவசியமான வழிகளில் எம் மக்களின் பணம் சூறையாடப்படுகிறது. எங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல் பிரதிநிதிகளே… அப்பொழுதெல்லாம் இந்த தரமான கல்வி வழங்குவது பற்றியும், அதற்குத் தேவைப்படும் பணம் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்.


முதலில் நம் நாட்டில் ஒரு முரண் கண்ணுக்குப் புலப்படாமல் காலங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பக் கல்வியை நல்ல தரத்துடன் கொடுக்கப்படல் வேண்டும். அதிக நிதி உதவியும் ஆரம்பக் கல்விக்கும் செலவழிக்கப் பட வேண்டும். அதாவது, ஐஐடி, ஐஐம் போன்ற அரசின் உதவியுன் நல்ல தரத்தில் இயங்கும் உயர்கல்வி பல்கலைக்கழகங்களுக்கு செல்ல ஏதுவான வகையில் உள்ள பாடத்திட்டத்துடன் கூடிய சிறந்த பள்ளிகளை ஒவ்வொரு மாநிலத்திலும் அரசின் மூலமாக உருவாக்கப்பட்டால் ஏற்றத்தாழ்வுகள் குறையும். மாநில அரசு வைத்துள்ள பாடத்திட்டத்தின் மூலமாக படித்து வெளிவரும் எம் கிராமத்துப் பிள்ளைகளுக்கு இது ஏன் இவ்வாறு எட்டாக்கனியாக இருக்க வேண்டும்.


அது எப்படி ஆரம்பக்கல்விக்கு குறைந்த அளவில் உதவித் தொகையும் உயர்கல்விக்கு மட்டும் ஒவ்வொரு ஐஐடிக்கும் ஆண்டுக்கு 100 கோடிகள் உதவித் தொகை. அதுவும் நன்றாகப் படித்து வெளிவரும் பிள்ளைகளுக்கு, இந்த மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத நிலை. இங்கு ஒரு ஏற்றத்தாழ்வு நிலையே உள்ளது. இல்லையெனில் சமச்சீர் கல்வி முறை வேண்டாம், என் பிள்ளையும் கார்ப்பரேசன் பிள்ளையும் ஒரே பாடத்திட்டத்தில் படிப்பதா என்று பொங்கும் பணக்காரர்களுக்கே இந்த மாதிரியான உயர்கல்வி நிறுவனங்கள் அளிக்கும் கல்வி கிடைக்கும்.


காலங்காலமாகவும் இது அப்படித் தான் இருக்கிறது. கோடிக்கணக்கில் அரசின் உதவி(அனைத்து மக்களின் வரிப்பணம்) பெறும் இக்கல்வி நிறுவனங்களுக்கு எம் கிராமத்து பிள்ளைகள் செல்லவே கூடாதா? காரணம் ஒன்றும் மாணவர்களின் தரத்தில் இல்லை. அரசு இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கைகளே காரணமாக உள்ளது.

அத்தகைய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சென்று படிக்கும் வகையில் தரமான, அவர்களுக்குத் தேவையான பாடத்திட்டங்கள் கொண்ட தரமான பள்ளிகளை அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவ வேண்டும். மாநில அரசும் ஆரம்ப கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பாடத்திட்டங்களில் நல்ல மாற்றத்தையும் கொண்டு வந்து, ஆசிரியர்களின் கற்று கொடுக்கும் திறத்தையும் அதிகப் படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் பண உதவித்தொகையை வழங்க வேண்டும்.


ஏன் அத்தகைய கல்லூரிகளுக்கு மட்டும் இத்தனை கோடிகளில் அரசு உதவித் தொகை?… அதிக பணம் வசூலிக்கப்படும் கோச்சிங் (2 laksh per annum) செண்டர்களில் இருந்து பயின்று IIT-JEE எழுதி செல்லும் குழந்தைகளுக்குத் தானே இத்தகைய கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கிறது. பெரும்பாலும் யாருடைய பிள்ளைகள் இத்தகைய முறைகளில் பயின்று கோடிகளில் அரசின் உதவி பெறும் ஐஐடிக்கு செல்கிறார்கள்… இந்த ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டாமா?
ஏன் ஐஐடிகளுக்கு மட்டும் இத்தகைய உதவிகள் என்று கேட்டால் உலகக் கல்வித் தரத்திற்கு இணையாக நம் நாட்டிலும் குறைந்த எண்ணிக்கையிலாவது இத்தகைய கல்லூரிகள் இருக்க வேண்டாமா என்பார்கள்… இருக்கட்டும். நியாயமே… ஆனால் அரசின் எந்தவொரு திட்டமும் அனைத்து மக்களுக்கும் சமத்துவமான முறையில் பயன்பட வேண்டாமா?

மாநில அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறை, அதன் குறைகள் களையப்பட்டு(அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் தவிர்த்து) CBSE பாடத்திட்டங்களுக்கு இணையான தரமான பாடத்திட்டங்களுடன் கொண்டுவரப்பட்டால் இந்நிலை மாறும். இது முடியவில்லை என்றால் குறைந்த பட்சமான எண்ணிக்கையிலாவது, ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு செல்லத் தேவையான தகுதியுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

இதற்கெல்லாம் பணத்துக்கு எங்கே செல்வது போன்ற காரணங்களை சொல்வார்களேயானால் அது நகைப்புரியதாகவும், எம்மை ஏமாற்ற நீவிர் சொல்லும் ஒரு காரணமாக அமைந்துவிடும். ஏனெனில் ஏதோ சில காரணங்களுக்காக 1000 கோடிகளில் கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடம், 200 கோடி செலவில் உற்பத்தி செய்யப்பட்ட சமச்சீர் கல்விப் புத்தகங்கள், இத்திட்டத்தை உருவாக்க செலவழிக்கப்பட்ட பணமும்… பழைய பாடத்திட்டத்தின் படியே, இன்னும் 200 கோடி செலவாகும் பணமும் எங்களின் வியர்வைப் பணமே… என்பதையும் நினைவுறுத்தி எம் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவீர்களா என்ற ஏக்கத்துடனே இக்கட்டுரையை யாம் முடிக்கிறோம்.

கழுகிற்காக
 மகேஷ்வரி

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

2 comments:

Kousalya Raj said...

ஏன் என்ற கேள்விகள் நிறைய யோசிக்க வைக்கிறது

//இந்த தரமான கல்வி வழங்குவது பற்றியும், அதற்குத் தேவைப்படும் பணம் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்.
//

சிந்திப்பார்களா ??

தரமான கல்வி வேண்டும் என்ற ஆணித்தரமான கருத்துக்கள் கட்டுரையின் முழுவதும் பரவி இருக்கின்றன...

சமச்சீர் கல்வியில் குறை இருக்கிறது என்கிறவர்கள், குறைகளை களைந்து ஒரே விதமான கல்வியை அனைவருக்கும் கிடைக்க செய்யவேண்டும் என்ற ஆதங்கம் நிரம்பிய பதிவிற்கு... நன்றி மகேஸ்வரி.

கழுகின் புதிய டெம்பிளேட் நன்றாக இருக்கிறது.

Anonymous said...

கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் மகேஷ்வரி.

ஒரு நிலத்தில் கட்டிடம் எழுப்பும் முன்பாக நிலத்தை முதலில் சமன் செய்து பிறகு அஸ்திவாரம் தோண்டி கட்டிடத்தை எழுப்புவதைப் போலத்தான், ஐஐடி, ஐஐஎம், நோக்கி நம் குழந்தைகள் அனைவரையும் ஒரு சேர கொண்டு செல்ல படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும்.

முதல் படியாக மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கலாச்சாரத்திலிருந்து (இப்பொழுதெல்லாம் கணக்குப்பாடத்தையே மனப்பாடம் செய்து தான் எழுதுகின்றார்கள்) மாணவர்களை முற்றிலுமாக மாற்றி புரிந்து கொண்டு படிக்கும் நிலையை உருவாக்கி அதில் பழக்கப்பட்டவுடன் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் படிப்படியாக சிலபஸ் ஏற்றி தரம் உயர்த்த வேண்டும். இப்பொழுது கொண்டுவரப்பட்ட திட்டம் அந்த அடிப்படையில் தான் அமைந்திருந்தது. துரதிருஷ்டவசமாக தவறு நடந்து விட்டது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes