Friday, June 03, 2011

கே.ஆர். பி செந்திலுடன் ஒரு சந்திப்பு!


பதிவர்களின் பேட்டியை எடுத்து வாசகர்களுக்கு யாம் கொடுத்துக் கொண்டிருக்கும் தொடர்ச்சியில் கே.ஆர்.பி செந்திலிடம் பேட்டி எடுத்த போது ஏற்பட்ட அனுபவம் அலாதியானது. வலையுலகில் அவர் எழுத வந்தது மட்டுமே அனுபவம் என்று நினைத்தால் அது தவறு, வாழ்வில் அவரின் அனுபங்களும் சந்தித்த மனிதர்களும் ஏராளம். யாம் கழுகு வலைப்பூ தொடங்கிய போதே எமக்கு ஆதரவுகளையும் உத்வேகத்தையும் கொடுத்து அவ்வப்போது எமது பயணத்திற்கு தேவையான ஆலோசனைகளையும் கொடுத்து வரும் ஒரு பொது நலம் விரும்பி.

சிவப்பு சிந்தனையுள்ள கே.ஆர்.பி.செந்தில் என்று கூறியவுடன் சே குவராவின் பிம்பம் நமது முன் வருவது தடுக்க இயலாதது. சேவின் புரட்சி சிந்தனைகளை தமது எழுத்திலும் கொண்டு வரும் செந்தில் அரசியல் கட்டுரைகளும் சமுதாய பார்வைகளும் தகிக்கும் நெருப்பாய்தான் இருக்கும். சூடுகளுக்கு நடுவே கவிதைகளிலும் தனது முத்திரை பதித்த செந்தில்.. பதிவர் என்ற நிலை கடந்து இன்று புத்தக ஆசிரியர், பதிகப்பக உரிமையாளர், என்று பன்முகம் எடுத்துள்ளார். 

அவரின் பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களையும் தெளிவுகளையும் கேள்விகளாக கேட்க வேண்டும் என்ற எமது உத்வேகத்திற்கு தோளில் கை போட்டு எதார்த்தமாக அவர் அளித்த பதில்களை கழுகு வாசகர்களுக்காக தொகுத்திருக்கிறோம். செந்திலுக்கு நன்றிகள் கூறியபடி அவரின் பேட்டி.. இதோ...
1) செந்தில் என்றவுடன் சேகுவரா படம்தான் எல்லோருக்கும் நினைவில் வரும். சே உங்கள் மனதை ஆக்ரமித்தது எப்போது? ஏன்?


தன் இனம், மொழி, நாடு என்கிற பேதம் பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்காக போராடும் மனிதனாக சே எனக்கு புத்தக வடிவில், என்னுடைய 28 - வது வயதில் அறிமுகமானார். அதன்பிறகு அவரை மேலும் மேலும் அறிந்துகொண்டபோது அந்த ஆளுமை என்னை அடித்துப்போட்டது. அவர் மாதிரியே இனம், மொழி, நாடு கடந்த சில விசயங்களை நண்பர்களுடன் யோசித்துகொண்டிருக்கிறோம். காலம் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம்.. 


2) தொடர்ச்சியாக பல வருடங்கள் எழுதி வருகிறீர்கள்... எதை நோக்கி உங்கள் பயணம்?


1998 சிங்கப்பூரில் இருந்தபோது அங்கு வெளியாகும் தமிழ் முரசு நாளிதழில் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் என் கவிதைகள் வெளிவரும். அப்போது முதலாக எழுதினாலும், பதிவுலகம் வந்தபின்னர்தான் தொடர்ந்து எழுதுகிறேன். எதிர்காலங்களில் வியாபாரம் சம்பந்தமான துறை சார்ந்த விசயங்களை மட்டுமே எழுதுவேன் என நினைக்கிறேன். அதற்காக  நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.


3) சிவப்பு சிந்தனையுள்ள உங்களை சமகால அரசியல் எப்படியெல்லாம் சிரமப்படுத்துகிறது?


சிவப்பு சிந்தனை என்பது தற்காலங்களில் வெகுவாக பின்னுக்கு தள்ளபட்டுவிட்டதாக பலரும் என்னிடம் சொல்கிறார்கள். ஆனால் உலகம் மீண்டும் சிவப்பு சிந்தனையால்தான் ஒழுங்கமைக்கப்படும் என ஆணித்தரமாக நம்புகிறவன் நான். சமகால அரசியல் நிகழ்வுகள் அருவருப்பாக இருந்தாலும் மாற்றத்திற்கான விதை இப்போது முளைவிட்டிருக்கிறது என நம்புகிறேன்.
4) உங்களின் அரசியல் பார்வைகள் பதிவுலகில் படுபிரபலம்...அதனால் இந்த கேள்வி....


தமிழ் இனம் என்ற ஒன்றை சுட்டிக்காட்டி அரசியல் செய்வது வெற்றியைக் கொடுக்குமா?


கண்டிப்பாக இல்லை. காரணம் நாம் அனைவருமே இந்தியர்கள் என்கிற மனப்பான்மை கொண்டவர்கள். மிகுந்த வேற்றுமைக்கிடையே நாம் வாழ்ந்தாலும், ஒட்டு மொத்தமாக நாம் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைந்துதான் இருக்கிறோம். 
 ஆனால் ஈழம் பற்றிய பார்வையில் அங்கு நாம் இனம், மொழி சார்ந்துதான் பார்க்கவேண்டும். தமிழர்களைப் பொறுத்தவரைக்கும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் தங்களுக்கான சுய உரிமைகளுடன் வாழும்போது. சிங்களர்கள் ஒன்றரைகோடி பேர் இருந்துகொண்டு தமிழர்களை கொன்றுகுவித்ததை நாம் எதிர்த்துதான் ஆகவேண்டும்.


எனவே காலத்திற்கேற்ப, சூழ்நிலைகேற்ப நமது அரசியல் நிலைபாடுகளை முன்னெடுப்பதுதான் தேர்ந்த அரசியலாகும்.  
 5) பணம் என்ற விசயம் பற்றி புத்தகம் எழுதிய நீங்கள் பணம் சுத்தமாக இல்லாமல் இருந்திருக்கிறீர்களா?

அப்போது இருந்த உங்களின் மனோ நிலை என்ன?பணம் சுத்தமாக இல்லாமல் நிறையதடவை இருந்திருக்கிறேன். ஆரம்ப காலங்களில் பதட்டம் இருக்கும். இப்போது அப்படி இல்லை. காரணம் நான் எப்போதுமே செலவு செய்யும் அளவிற்கு அதிகமாக சம்பாதிக்கும் எண்ணம் கொண்டவன், இன்றுவரை வீட்டில் பட்ஜெட் போட்டு செலவு செய்ததில்லை. கடைசி ஒரு ரூபாய் வரைக்கும் செலவழிக்கும் ஆசாமி நான். நண்பர்கள் அதிகம் என்பதால் பணப் பிரச்சினைகள் வரும்போது எளிதாக பணம் கிடைத்துவிடும்.

6) கிராமப்புற வாழ்க்கையில் வளர்ந்த நீங்கள் பட்டணத்து வாழ்க்கையை எப்படி பார்க்கிறீர்கள்?


இப்போதும் கிராமத்தானாக தான் இருக்கிறேன். ஆனால் தற்போதைய கிராமத்து இளைஞர்களை, மக்களை பார்க்கும்போது அந்த வெள்ளந்தித்தனம் இல்லாமல் இருக்கிறார்கள் . நகரத்தில் அப்படி இல்லை . இங்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் நமது சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. அதனால் இப்போது நகரத்து வாழ்க்கை என்னை ஈர்க்கவே செய்கிறது.


எதிர்காலத்தில் விவசாயம் பெரிய அளவில் செய்வதற்கான கட்டமைப்புகளை இப்போதே துவங்கியிருக்கிறேன். அப்போது மீண்டும் கிராமத்து வாழ்க்கைதான். 


7) ' ழ ' பதிப்பகம் உருவான விதம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?


நண்பர்கள்  ராஜா, கேபிள் சங்கர் இருவருடனும் பேசிக்கொண்டிருந்தபோது தோன்றிய எண்ணம் இது . உடனே கைவசம் தயாராக வைத்திருந்த கேபிளின் 'மீண்டும் ஒரு காதல் கதை புத்தகத்தை அச்சிட்டோம். ஆறே மாதத்தில் பெரும்பான்மை புத்தகங்கள் விற்றுவிட்டன.


அடுத்தடுத்து இந்த வருடம் நூறு புத்தகங்கள் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். இதில் விரும்பும் அனைவரையும் பங்குதாரர்களாக கொண்டு வந்து தமிழகம் முழுதும் நூறு கடைகள் திறந்து எங்கள் பதிப்பக புத்தகங்களோடு அனைத்து பதிப்பக புத்தகங்களையும் விற்க தீர்மானித்து இருக்கிறோம்.


குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளிநாடுகளில் இருந்து தருவித்து விற்பதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறோம்.


கூடிய விரைவில் பங்குதாரர்கள் சேர்ப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.


8) புத்தகங்கள் வெளியிட என்ன மாதிரியான தர நிர்ணயம் வைத்துள்ளீர்கள்?


கதையோ, கட்டுரையோ, கவிதையோ அதனை காசு கொடுத்து வாங்கிப் படிப்பவருக்கு உபயோகமாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.
9) ஒரு வலைப்பதிவர் தனது பதிவுகளை புத்தகமாக்க விரும்பினால் அவர் உங்களை அணுகலாமா? என்ன விதிமுறைகள் உள்ளன?


வலைப்பதிவர் என்னையோ, கேபிளையோ தொடர்பு கொள்ளலாம். விதிமுறைகள் பெரிதாக இருக்காது. பதிவர்கள் எழுதிய படைப்புகள் தரமாக இருந்தால் வெளியிடலாம்.  


10) அச்சிட்ட புத்தகங்களை மார்கெட் செய்யும் போது எந்த மாதிரியான புத்தகங்களுக்கு வரவேற்பு இருக்கிறது?


இப்போதைக்கு non fiction வகை புத்தகங்களுக்கு மிகுந்த வரவேற்ப்பு இருக்கிறது. ஆனால் புத்தகங்கள் சென்னை தாண்டி சில பெரிய நகரங்களை தவிர பரவலாக கிடைப்பதில்லை. பதிப்பகங்களும் ஆன்லைன் வியாபாரத்தைத்தான் விரும்புகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் புத்தகம் வாங்கிய கடைக்காரர்கள் அதற்கான பணத்தை ஒழுங்காக தருவதில்லை.


நாங்கள் ஆரம்பிக்கவிருக்கும் கடைகளில் இந்தக்குறை இருக்காது. புத்தகம் விற்றவுடன் அது எந்தக்கடையில் விற்கப்பட்டது, எத்தனை பிரதிகள் விற்கப்பட்டது என்கிற தகவல் பதிப்பாளருக்கு போய்விடும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று விற்கப்பட புத்தகங்களுக்கான பணம் பதிப்பாளருக்கு கொடுக்கப்பட்டுவிடும் என்கிற மாதிரியான விசயங்களை வைத்திருக்கிறோம்.  
11) பிஸினஸ் கன்சல்டண்ட் ஆன நீங்கள் புதிதாக தொழில் முனைய விரும்புவோருக்கு  என்ன கூற விரும்புகிறீர்கள்?


எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதனைப்பற்றிய முழுமையான அறிவு இருந்தால் மட்டுமே துவங்கவேண்டும். குறைந்த முதலீட்டில் துவங்கி படிப்படியான வளர்ச்சியை அடையக்கூடிய தொழிலாக இருப்பது நல்லது. மேலும் முழுமையான அர்ப்பணிப்பு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.


இந்தியா மாதிரியான தேசத்தில் உணவுக்கான தேவை மிக அதிகம், அதனால் உணவகங்களுக்கு பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. 


12) சமீபத்திய தேர்தல் முடிவுகளை வைத்து மக்கள் தெளிந்திருக்கிறார்கள் என்று கருதுகிறீர்களா?


இது வேறு வழியில்லாமல் எடுத்த முடிவு. ஜெயலலிதா சரியான தேர்வு இல்லை என்றாலும் இப்போது தான் சரியான தேர்வுதான் என ஜெயலலிதா காட்ட முனைகிறார். தி.மு.க போன்ற தவறான தலைமையினால் நடத்தப்படும் கட்சிக்கு மூன்றாம் இடமும். பா.ம.க, வி.சி.க போன்ற சாதிகட்சிகளுக்கு ஆப்பும், காங்கிரசுக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை என்று காட்டியிருக்கிறார்கள்.


இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.


13) இந்தியாவின் சாபக்கேடு என்ன? வரம் என்ன?


வரம் மக்கள் தொகை சாபமும் அதுதான்
14) உங்களின் எழுத்தை புத்தகமாக எழுத்தில் பார்த்த போது என்ன தோன்றியது?


மிகுந்த சந்தோசமாக இருந்தது. ஒரு குழந்தை பிறக்கும்போது தகப்பனுக்கு இருக்கும் சந்தோசம்தான். தன் எழுத்தை முதல் புத்தகமாக பார்க்கும் எழுத்தாளனுக்கும்.


 15) 'ழ' பதிப்பகத்தின் அடுத்த வெளீயீடுகள் என்ன? எப்போது..?


அடுத்ததாக "ஈழம் ஒரு பெண்ணின் வலி" என்ற தலைப்பிலான ரதியின் புத்தகம், மற்றும் ஆறு புத்தகங்களுக்கான வேலைகள் நடக்கிறது. ரதியின் புத்தகம் முன்னரே வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் அண்ணன் 'காசி ஆனந்தன்' அவர்களின் மதிப்புரைக்காக தாமதம் ஆகிவிட்டது.


அனேகமாக ஜூலையில் இந்த புத்தகங்கள் வெளிவரும்.


கழுகு குழுமத்தாருக்கும், பதிவுலக, வாசக நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)9 comments:

புதுகை.அப்துல்லா said...

well done.

தமிழ் அமுதன் said...

13) இந்தியாவின் சாபக்கேடு என்ன? வரம் என்ன?
வரம் மக்கள் தொகை சாபமும் அதுதான் ///


அருமை..!

Jackiesekar said...

கேஆர்பியிடம் நேரில் பேசினால் இப்படி எல்லாம் அதிகம் நான் பேசி பாத்தது இல்லை... ஒரு இண்டலக்சுவல் பார்வைகள் எல்லா பதிலிலும் இருக்கின்றது....

ஷர்புதீன் said...

வரம் மக்கள் தொகை, சாபம் ஒன்று மட்டும் அல்ல., அரசியல், பொது புத்தியில் உள்ள குறைகள், மதம், இன்னும் சில....

Anonymous said...

///இந்தியாவின் சாபக்கேடு என்ன? வரம் என்ன?
வரம் மக்கள் தொகை சாபமும் அதுதான் /// யதார்த்தம் .....;-(

Kousalya Raj said...

பதிப்பகத்தை பற்றிய தகவல்கள், அரசியல் பார்வை,விவசாயத்தின் மேல் இருக்கும் ஆர்வம்...இப்படி அனைத்தையும் பற்றிய அருமையான வெளிப்படையான பதில்கள் !

தோழருக்கு வாழ்த்துக்கள் + பாராட்டுகள்

சிறப்பான பேட்டி வெளியிட்ட கழுகுக்கு நன்றிகள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

செந்தில் அவர்களின் பார்வையின் பகிர்தல் அருமை..!

கழுகிற்கு வாழ்த்துக்கள்..!

வினோ said...

14 வது கேள்விக்கான பதில் அருமை...
செந்தில் அண்ணா அப்படியே பதில்களில்..

அப்பாதுரை said...

சுவையான பேட்டி.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes