Monday, June 20, 2011

விழித்தெழுவோம் தோழர்களே...!

 முறையான கல்வி மட்டுமல்ல கல்வி கற்க ஆரோக்கியமான சூழ்நிலைகளையும் எம் பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். காலங்களாய் அரசுப் பள்ளிகளின் வசதிகளும், தரங்களும் தனியார் பள்ளிகளை விட தாழ்ந்து போய்த்தான் கிடக்கின்றன. சாதகமான ஒரு சூழலை உருவாக்க நாமெல்லாம் இன்றே போர்ப்பரணி பூண்டு...கல்வியின் தரமும், கற்கும் சூழலின் தரமும் அரசு பள்ளிகளில் மேம்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை அரசின் செவிக்கு கொண்டு சேர்ப்போம்..!

விரிவான எமது விழிப்புணர்வுப் பாதையில்...அரசுப் பள்ளிகளின் தரத்தை எப்படியெல்லாம் உயர்த்தலாம் என்று யோசித்த போது இந்த கட்டுரையாக விரிந்தது எமது சிந்தனைகள்...!அரசுப்பள்ளிகளின் குறை நிறைகள், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் வேண்டும்/வேண்டாம், இவை எல்லாவற்றையும் பேசிப் பேசித் தீர்த்து விட்டோம். இந்த இணையத்தில், சோஷியல் தளங்களில் இயங்கும் பெரும்பான்மையான நண்பர்கள், அனைவருக்கும் மற்றவரோடு ஒரு சில மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், அடிநாதமாக அனைவருக்கும் இருப்பது சிறிதளவேனும் பொதுநலம். அதனால் தான் இவ்வளவு விவாதிக்கிறோம்.


நாமும் ஒன்றிணைந்து எத்தனையோ பிரச்சனைகளுக்குப் போராடியிருக்கிறோம். இலங்கைப் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, ஊழலுக்கு எதிராக… என பல்வேறு காரணங்களுக்காக நம் கைகள் ஒன்றினைந்து இருந்திருக்கிறது. இன்றும் அப்படியே. இணையத்தில் இயங்கும் நம் அனைவருக்குள்ளும் சிற்சில மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், தமிழன் தலை போகிற பிரச்சனை என்று வரும் போது, எல்லோரும் ஒன்றினைவதைப் பார்க்கிறோம். இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது, இன்னும் ஒற்றுமை உணர்வும், தீமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் உணர்வும் இன்னும் தமிழனை விட்டுப் போகவில்லை என்பதையே காட்டுகிறது.


ஒவ்வொரு முறையும் சமுதாயத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் போது பேசுகிறோம். அப்பிரச்சனைக்கான தீர்வுகளை அலசி ஆராய்கிறோம். அதை ஒட்டியும், வெட்டியும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, விவாதிக்கிறோம். இதுவும் ஒரு ஆரோக்கியமான விசயமே…

இருப்பினும் இங்கு நிறுத்தி நாம் நமக்குள்ளாக ஒரு கேள்வியைக் கேட்டு வைப்போம்.  நம்முடைய அடிப்படைத் தேவையான கல்வி, சுகாதாரம், நாம் கொடுக்கும் காசுக்குத் தகுந்த தரமான பொருள்கள், அடிப்படை மருத்துவ வசதி, இவற்றுக்காக ஒன்றினைந்து இதுவரையில் போராடியிருக்கிறோமா? சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. ஏன்?


ஏனென்றால் ஓரளவேணும் பணம் படைத்தவர்களாகிய நாம் நல்ல கல்விக்கு தனியார் பள்ளிகளை நாடி சரி செய்து கொள்கிறோம். சுகாதாரமான தண்ணிக்கு நம்மிடம் காசு இருக்கிறது. வாங்கிக் கொள்கிறோம். இவை அனைத்தையும் சிறப்பாக செய்து தர வேண்டும் என்று தான் அரசாங்கத்தை நாம் நமக்காகத் தேர்ந்தெடுத்தோம். செய்கின்றதா? எது தேவையோ அவற்றுக்கு பணம் செலவழிப்பதில்லை..


ஆனால் கொள்ளை நடக்கும்...

வீண் செலவுகள் நடக்கும்...


ஆனால் வீட்டு வரி, ரோட் டாக்ஸ், VAT, இப்படியாக குறைந்தபட்சமாக இத்தனை வரிகளை எம்மிடமிருந்து பிடுங்கிக் கொள்ளும் இந்த அரசு.. எம் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியும், பயில ஒரு சுகாதாரமான சூழலையும் கொடுக்காது... சிறந்த கல்வி வேண்டும் எம் பிள்ளைகளுக்கு... அது எம் தார்மீக உரிமை... குறைந்தபட்சம் இதற்காகவாது ஒன்றினைந்து போராடலாம். இல்லை நம் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கும் அளவுக்கு நம்மிடம் பணம் இருக்கிறது.  என்னடா இது... நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்க மாட்டீர்கள்.


ஏனெனில் நாம் அனைவரும் பொதுநலம் விரும்பி தானே நம்முடைய பிளாக்குகளிலும், பஸ்ஸிலும், இன்னபிற சோஷியல் தளங்களிலும் நம் கருத்துக்களை ஆணித்தரமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.  எனவே இப்பொழுது, அடிப்படை உரிமையாம் கல்வி, அனைவருக்கும் தேவையாம்.. இதை முன்னிறுத்திக் குரலெழுப்ப ஒன்றிணைவோம் தோழமைகளே…அட நம் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்றாலும், நம்மை வளர்த்தெடுத்த, இந்த மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நாம் கடன் பட்டிருக்கிறோமே… அதற்கேனும் அவர்களுடைய பிள்ளைகளுக்கேனும், இந்த பணியை நாம் மேற்கொள்ளலாம்


தரமான கல்வி வேண்டிப் போராடுவோம். அரசுப்பள்ளிகளின் அடிப்படை வசதிக்காகப் போராடுவோம். நன்றாக இயங்கும் அரசுப் பள்ளிகளைப் பாராட்டுவோம். அரசுப்பள்ளிகளுக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச கட்டிட வசதி, சுகாதாரம், தேவையான ஆசிரியர்கள்... இவை கிடைக்க வேண்டும் என்று எழுத்தின் மூலமாக மட்டுமல்லாமால், ஆன மட்டும் தங்கள், தங்கள் ஊரில் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள இத்தகைய பள்ளிகளை அடையாளம் கண்டு வீடியோ எடுத்து அதன் தேவைகளை எழுதி, தினமும் நம் வலைத்தளத்திலும் இன்னபிற சோஷியல் தளங்களிலும் வெளியிட்டு நாம் ஒரு தொடர் போராட்டத்தை செய்யலாம். வெளிநாடுகளில் இருந்தாலும், நம் உறவினர்களின் மூலமாக, நம் ஊரில், நம் வீட்டிற்கு அருகாமையில் இருக்கின்ற அப்பள்ளிகளுக்கு நேரில் சென்று, அரசுப் பள்ளிகளின் நிலை பற்றிப் புகைப்படங்கள் எடுத்தும், அதன் அவலங்கள் பற்றியும், தொடர்ச்சியாக நம் வலைத்தளங்களில் வெளியிடலாம்.


இதுவரை அரசுப்பள்ளிகளின் குறை நிறைகளைப் பற்றிப் பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம். இனி நுட்பமாகவும் தெரிவிப்போம். நமது கண்டனங்களையும், நம் தேவைகளையும், அரசின் காதுகளுக்குச் செல்லுமாறு உரக்கக் கூவிக் கொண்டே இருப்போம். விடியும் ஒருநாள்… மாற்றம் வர வேண்டும். வரும் என்று நம்புவோம். நமக்கு இருக்கும் அலுவல்களுக்கு இடையே தானே, நம்முள் இருக்கும் பொதுநலத்தையும் கருத்துக்கள் விவாதங்கள் மூலமாக வெளிப்படுத்துகிறோம். இனி அதனை நுட்பமாகவும் செய்வோம்.


பெரும்பாலான செய்தித்தாள்கள், டீவிகள், ரேடியோக்கள், இப்படியான ஊடகங்கள் அனைத்தும் அதனதன் தர்மங்களை மீறி, சுயநலமாகவும், ஒரு சார்புடையதாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, அவற்றில் உள்ள செய்திகளை மேற்கோள்கள் காட்டி, அவன் சொன்னது சரியா.. இவன் சொன்னது சரியா என விவாதித்து, விவாதித்து நம் காலத்தை தள்ளியது போதும். நம்மிடமே இன்று இணையம் எனும் மிகப்பெரும் சக்தி உள்ளது. இனி நாம் ஒவ்வொருவரும் ஒரு பத்திரிக்கையாளன். ஒரு ஊடகம். முரண்களை நம் எழுத்தின் மூலமும், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலமும்… பத்திரிக்கைகள் செய்யத் தவறியதை நாம் செய்வோம். 

அதன் முதல் படியாக… அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்குத் தேவையான முழக்கங்களை எடுப்போம். அரசுப் பள்ளிகளின் அவலங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோம். எதிர்காலத்தில் இணையம் ஒரு மிகப் பெரும் சக்தியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. எனவே நம் உழைப்பும், நம் எழுத்துக்களும், நம் சமுதாய எண்ணங்களும் வீண் போகாது. அதை வீண் போகாமல் இருப்பதற்கான முயற்சிகளையும் கைக்கொள்வோம்.


கழுகிற்காக மகேஷ்வரி

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

1 comments:

ஷர்புதீன் said...

கொவிச்சிக்கிடலேனா ஒன்னு சொல்லுறேன்.,

எந்த எளவு ஸ்கூல் படிச்சாலும் முதல்ல அப்பா அம்மா கொஞ்சம் புள்ளைங்கள ஒழுங்கா கவனிச்சா அவன் பெரிய புத்திசாளியாத்தான் வருவான்., ( படிக்காத பெற்றோர் மிக குறைவுதான் , அவங்கள விட்டுடலாம்) அப்படி செய்தாலே பாதி பிரச்சன தீர்த்திடும்...

இஸ்கூலுக்கு அனுப்பிட்டு/கூப்பிட்டுட்டு வந்தாக்க போதுமா., இஸ்கூலே எல்லா எழவையும் கத்து கொடுக்கனும், நாம ஜாலியா டிவிய பார்துகுட்டு காலத்த ஓட்டனும்....

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes