Thursday, June 30, 2011

இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை...!

நம்மைச் சுற்றி ஓராயிரம் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் அவற்றின் மூலமும் ஆழமும் நாம் அறிவதே இல்லை. தெளிவான ஆராய்தலுக்குப் பின் நமக்கு கிடைக்கும் செய்திகளோ சுவாரஸ்யமான செய்திகலை அசுவாரஸ்யப்படுத்தி விடும் அசுவாரஸ்யமான செய்திகளை சுவாரஸ்யப்படுதியும் விடும்.

மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மார்க் எனப்படும் அரசு மதுபானக் கடைகளுக்கும், இலவச அரிசிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். இந்த கட்டுரையை வாசித்து முடிக்கும் போது இப்படி கேட்க மாட்டீர்கள் பாருங்களேன்....!
 


அனைத்து தமிழகத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் நம்ம அரசாங்கம் மாசம் 20 கிலோ அரிசியை இலவசமா கொடுக்குதே, எம்புட்டு பெரிய விஷயம் இது? ன்னு நம்ம அரசாங்கத்த நெனச்சி அப்பப்ப புல்லரிச்சி போயிடுவேன். இத இப்படியே கொஞ்சமா நிறுத்திக்கிட்டு என்னோட ரெண்டு நண்பர்களை உங்களுக்கு சின்னதா அறிமுகம் பண்றேன். அவங்கள அறிமுகம் செய்யிறதுக்கும், மேல நான் சொன்ன விஷயத்துக்கும் ஒரு முடிச்சி இருக்கு!! அதான்!

ரங்கன் - ராக்கி, இவங்க ரெண்டுபேரும் தாங்க அந்த ஃப்ரெண்ட்ஸ். எந்த மேட்டர்னாலும் ரெண்டு பேருக்கும் ஒத்தே வராது. கடைசில சண்டைல தான் முடியும். ஆனா, ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பிரியாம எங்க போனாலும் சேர்ந்தே போவாங்க. எனக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா? ஒன்னியும் கிடையாது. சொல்லப்போனா அவங்களுக்கு என்ன தெரியவே தெரியாது!! ஆனா நான் எப்ப ஃப்ரீயா ஆனாலும் அவங்க எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டு அங்கபோய் அவங்களுக்கு தெரியாம உட்கார்ந்துடுவேன்.

அவங்க பேசுறத கேக்க எனக்கு ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். பொழுது போறதே தெரியாது. நேத்து சாயந்திரமா ரொம்ப போர் அடிக்கவே, நம்ம ராக்கி - ரங்கனை பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினேன். அவங்க நம்ம ஊரு மெயின் பஜார் அம்மன் கோவில் பக்கத்துல இருக்குற டாஸ்மாக் பின்புறமா இருக்குற ஓப்பன் பார்ல ஒக்காந்து தண்ணி அடிச்சிகிட்டு இருந்தாங்க. இந்த மது வகைகள் வாசம் எல்லாம் எனக்கு பிடிக்காதுன்னாலும்(!) பேச்சு சுவாரஸ்யமா இருக்குமேன்னு அவங்க பக்கத்துல் போயி உட்கார்ந்தேன்.

அப்ப ரங்கன் சொன்னான், மாப்பி.. நாம நாள் தவறாம ஒரு குவாட்டராவது பிராந்தி சாப்ட்டா தாண்டா நம்ம அரசாங்கம் மக்களுக்கு எல்லாம் இலவசமா மாசம் 20 கிலோ அரிசி தரமுடியும் என்று! முதல் ரௌண்டு பாதில இருந்த நம்ம ராக்கிக்கு ஒண்ணுமே புரியல. "நீயும் இப்பத்தானடா ஆரம்பிச்ச அதுக்குள்ள ஏண்டா உளருரே?" ன்னு கேட்டான். நீ இப்படி கேப்பன்னு தெரிஞ்சிதான் முதல் ரவுண்டுலயே பேச்சை ஆரம்பித்தேன் என்றான ரங்கன். மாப்பி எதோ விவரமாத்தான் பேசப்போறான்னு புரிஞ்சிகிட்டு நம்ம ராக்கி, மீதி ரவுண்ட ஒரே இழுப்புல உள்ள தள்ளினான்.

ரங்கனும் அடுத்த ரவுண்ட ஸ்டார்ட் பண்ணிக்கிட்டே ஆரம்பித்தான் கலாட்சேபத்தை!

நம்ம அரசு விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல்லை பத்து ரூபாய் ஐம்பது காசுக்கு வாங்குகிறது. அதை வாங்குவதற்கான குடோன் மற்றும் நிர்வாகச் செலவு 50 காசு, அதை மில்லுக்கு கொண்டு செல்ல டிரான்ஸ்போர்ட் 50 காசு. ஆக மில்வரையிலும் ரூபாய் 11.50 ஆகிவிடும். அரவைக் கூலி ஒரு ரூபாய் ஐம்பது காசு, அதை திரும்ப அரசு குடோனுக்கு எடுத்துவர ஐம்பது காசு ஆக 13.50 ஆகிறது.

இன்னுமொரு அதிர்ச்சி... ஒரு கிலோ நெல்லை அரைத்தால் தவிடு, நொய் எல்லாம் போக அரை கிலோ அரிசி தான் தேறும்! அப்படியானால் ரூபாய் 13.50 என்பது அரைகிலோ அரிசிக்கான விலை மட்டுமே.

அப்ப ஒரு கிலோ அரிசியின் விலை 27 ரூபாய் அடக்கம் ஆகிவிடும். அதை திரும்ப ரீடெல் (ரேஷன்) கடைகளுக்கு கொண்டுவர, அந்த அலுவலர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவு எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு கிலோ அரிசியின் அடக்கவிலை 30 ரூபாய் ஆகிவிடும். ஆக தமிழ் நாட்டில் ஒரு குடும்ப அட்டைகு 600 ரூபாய் வரையிலும் மாதாமாதம் இலவசம் (அரிசிக்காக மட்டும்) தரப்படுகின்றது.

இப்பத்தான் நம்ம மேட்டருக்கே வருகிறேன். ஒரு குவாட்டர் 70 ரூபாய் என்றால் அதில் கிட்டத்தட்ட 30 ரூபாய் வரையிலும் அரசுக்கு வரியாகக் கிடைக்கின்றது. அதில் நிர்வாகச் செலவு போக 20 ரூபாய் நிகரமாகக் கிடைத்தால் கூட ஒரு கார்டு அரிசிக்கான விலையை ஈடு செய்ய 30 குவார்ட்டர் விற்க வேண்டும். அதாவது ஒரு குடும்பத்தலைவன் ஒரு மாதம் முழுவதும் ஒரு நாள் தவறாமல் ஒரு குவார்ட்டர் அடித்தால் தான் அவன் குடும்பம் இலவசமாக வாங்கி சாப்பிடும் அரிசி ஜீரணமாகும்!!

அதாவது தமிழ்நாட்டுல 1.85 கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. அத்தனை கார்டுக்கும் இலவச அரிசி ஒதுக்கப்படுகின்றது. (வாங்கினாலும் வாங்காவிட்டாலும்). ஆக 1.85 கோடி பேர் நாள் தவறாமல் ஒரு குவாட்டர் அடிக்க வேண்டும். எல்லோராலும் தொடர்ந்து எல்லா நாளும் குடிக்க முடியாதுங்கறதுனால, ஒவ்வொருத்தரும் மாதத்துக்கு 15 நாள்ங்கிற வீதம் 3.7 கோடி தமிழக தமிழர்கள் ஒரு குவாட்டர் பிராந்தி சாப்பிட்டால் கணக்கு டேலி ஆகிவிடும்! மக்களுக்கும் இலவசம் தந்த மாதிரி ஆகிவிடும், அரசாங்கத்திற்கும் உதவின மாதிரி ஆகிவிடும்!

ஒரு மனிதன் சுவாசத்தில் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை இழுத்துக் கொண்டு, அவனுக்குத் தேவையான் ஆக்ஸிஜனைக் கொடுப்பதற்கு 20 மரங்கள் வேண்டுமாம். அதே மாதிரிதான் நாமும்! தினமும் ஒரு குவாட்டருக்கு மேல அடிப்பதால இனிமே நம்ம பொண்டாட்டியெல்லாம் குடிச்சிட்டு வீட்ட கவனிக்காம இருக்கோம்னு நாக்குல பல்ல போட்டு பேசிடப்பூடாது என்று நம்ம ராக்கி ஒருவித மந்தகாசப் புன்னகையுடன் கூறினான்.

இவர்கள் பேச்சை மனதில் அசைபோட்டுக் கொண்டே ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். சாப்பிட்டு படுக்கும் போது, தங்கமணியிடம், ராக்கி - ரங்கன் சம்பாஷணையைக் கூறி, அரசாங்கம் செய்வது சரியா? தவறா? என்ற எனது சந்தேகத்தைக் கேட்டேன். பல சமயங்களில் நம்மைவிட அவர்கள் புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக எனக்கு ஒரு நம்பிக்கை! துணிகளையெல்லாம் மடித்து வைத்துக் கொண்டே என் மனைவியும் பேச ஆரம்பித்தார்.

ஏங்க, அஞ்சு வருஷம் முன்னாடி, நம்ம வீட்டு தோட்டத்தை சுத்தம் செய்யணும்னா, ஒரு தொழிலாளிக்கு நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய் வரையிலும் கூலி தருவோம். ஆனா இன்னக்கி என்னா தற்றோம்? 250 ரூபாய்க்கு குறைவாக யாருமே வேலைக்கு வருவதில்லை. அதுவும் முன்பு செய்ததில் பாதி வேலை தான் செய்கிறார்கள். அதனால் அடுத்த நாளும் செய்யச் சொல்லி மொத்தமாக அதே வேலைக்கு 500 ரூபாய் செலவாகிறது.

ஒரு நாளைக்கு 250 சம்பாதிக்கும் அந்த தொழிலாளியின் அன்றைய செலவு என்ன? 4 நபர்கள் கொண்ட அவன் குடும்பதுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியை அரசாங்கம் இலவசமாகவே தந்துவிடுகிறது. அன்றைக்கு நல்லமுறையில் குழம்பு வைக்க 25 ரூபாயும் காய்கறி 25 ரூபாயும் அதிகபட்சமாக செலவாகிறது. மற்ற திண்பண்டங்கள் இத்தியாதிகளுக்காக 50 ரூபாய் என்றால் 100 ரூபாயில் அன்றைய சாப்பாட்டுப் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிடுகின்றது. மிச்சம் 150 ரூபாய்.

மாதம் 20 நாட்கள் மட்டுமே அவன் வேலை செய்வதாக வைத்துக் கொண்டாலும் மாதம் 3000 ரூபாய் அவனுக்கு சேமிப்பாகிறது. வருடத்திற்கு 36000 ரூபாய். அதில் இரு குழந்தைகளுக்கான கல்வி மற்றும் மருத்துவ செலவுகள், துணிமணிகள் எல்லாம் முடித்துக் கொள்ளலாம். வருடத்திற்கு 120 நாட்கள் சும்மாயிருக்கின்றானே, அந்த நாட்களில் ஒரு 50 நாட்கள் வேலை செய்தால் கூட தீபாவளி, பண்டிகைகள், பொழுது போக்குகள் அனைத்தையும் சீராகக் கொண்டாடி விடலாம்.

250 ரூபாய் கூலி வாங்கும் ஒரு தொழிலாளி கூட இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து, மனைவியை குடும்பத் தலைவியாக மட்டுமே வைத்துக் கொண்டு சந்தோஷமான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அதே தினக்கூலி தொழிலாளி இந்த ராக்கி - ரங்கன் போல் குடித்து விட்டு வெட்டி நியாயங்களும், வியாக்கியானங்களும் பேசிக்கொண்டிருக்காமல், வேறு கெட்ட பழக்கங்கள் இல்லாமலும் இருந்து, தன் முன்னேற்றத்தில் கருத்தாக இருந்தாலே போதும், ஒரு வருடத்திலேயே, பயிற்சி பெற்ற தனித்திறமை தொழிலாளியாக, அதாவது ஒரு டிரைவர், கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீஷியன், கம்பி கட்டுதல், வெல்டிங்... இப்படியாக மாறி விட நிச்சயமான வாய்ப்பு இருக்கிறது.

அப்படி ஆகும் பட்சத்தில் அவனுடைய ஒரு நாள் சம்பளமே 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் என்றாகிறது!

ஒரு ஆவேசம் வந்தவராய் இத்தனையும் பேசி விட்டு கடகடவென்று தண்ணீரைக் குடித்த தங்கமணியை ஒருவித ஆயாசையுடன் பார்த்தேன். எனக்கு அந்த ராக்கி - ரங்கன் சொல்றதும் சரின்னு படுது, தங்கமணி சொல்றதும் சரிதானோன்னு யோசிக்க வைக்குது, என்ன ஒரு மனது எனக்கு? புதுசா நாமளும் ஏதாவது யோசிக்கணுமோ?!



கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


8 comments:

Unknown said...

பயனுள்ள புதிய தகவல்கள்.. அருமை

Thiruneelakandan said...

நல்லது கேட்டது எது நடந்தாலும் treat கேக்கும் கலாச்சாரம் இங்கு நிலவுது


தங்கமணி சொல்வது போல் எல்லோரும் யோசித்தால் நன்றாகதான் இருக்கும்

சேலம் தேவா said...

மதில் மேல் பூனை,இருதலைக் கொள்ளி எறும்பு இந்த உவமை எல்லாம் ஞாபகத்துக்கு வருது...ரெண்டு பேர் சொல்றதும் சரியாதான் படுது. :)

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல விரிவான அலசல்...

ஷர்புதீன் said...

அட தெரிந்த கதைதான், இதை எழுதும் நீங்களும், படிக்கும் நானும் வோட்டே போடுவதில்லை,அப்படி போட்டால்லும் ஒன்றுதான் போடுவோம், இது குறித்து விவரம் அறியதெரியாத அந்த நல்லவன் மூணு வோட்டு போடுவானே ...

Jayadev Das said...

டிவிட்டரில் யாரோ இதை ஒரு வரியில் சொல்லியிருந்தார்கள். அதுசரி, அரிசியை மட்டும் தான் கணக்கில் எடுத்துள்ளீர்கள், மிக்சி, கிரைண்டர், லேப் டாப், ஆடு மாடு எல்லாம் தரப் போராங்களாமே, அதுக்கு எல்லாம் செத்து எவ்வளவு அடிக்கணும்னு ஒரு கணக்குப் போட்டு சொன்னால் நம்ம குடி மகன்களுக்கு அரசைக் காப்பாற்ற உதவியாய் இருக்குமே!! கூலித் தொழிலாளிகளுக்கு தினமும் வேலை கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை, விவசாயக் கூலிக்கு யாரும் இப்போது வருவதே இல்லை என்பதெல்லாம் கவலையளிக்கும் விஷயங்கள்.

அம்பாளடியாள் said...

வணக்கம் அன்பு உறவே எனக்கு தங்களின் இந்த
ஆக்கத்தை வாசிக்கும்போதே விட்டில்ப் பூச்சிகள்தான்
என் கண்ணெதிரே தோன்றி மறைந்தன!.....இன்றைய
சமூகம் ஏமாற்றுவதிலும் ஏமாருவதிலும் முன்னணியில்
இருப்பதுதான் இதுபோன்ற சம்பவங்கள் மிக அழகாக
நகரக் காரணம்.....
பகிர்வுக்கு மிக்க நன்றி

நிகழ்காலத்தில்... said...

கட்டுரையில் இலவசத்தின் அவலத்தை நன்கு சுட்டிக்காட்டி இருக்கறீர்கள்.

வாழ்த்துகள்

நிகழ்காலத்தில் சிவா

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes